அத்தியாயம் 68 (தலாக்)மணவிலக்கு

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 68

(தலாக்)மணவிலக்கு

பாகம்: 6

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி : 1

மேன்மைமிக்க அல்லாஹ் கூறினான்:

நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர்களானால், அவர்களின் 'இத்தா'விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, 'இத்தா'வைக் கணக்கிட்டு வாருங்கள். (திருக்குர்ஆன் 65:01)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள 'அஹ்ஸூ' எனும் சொல்லின் வினைச் சொல்லான) 'அஹ்ஸய்னாஹு' எனும் சொல்லுக்கு 'அதை நாம் கணக்கிட்டு மனனமிட்டோம்' என்று பொருள்.

ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமல் (மாதவிடாய் போன்றவற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கிற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) 'தலாக்குஸ் ஸுன்னா' ஆகும். 2

5251. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.

எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) இதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், 'உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தில்) அனுமதித்துள்ள ('இத்தாக்' காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) காலக் கட்டமாகும்'' என்று கூறினார்கள். 3

பகுதி 2

மாதவிடாயிலிருக்கும் பெண்ணுக்கு மணவிலக்கு அளிக்கப்பட்டாலும் அந்த மணவிலக்கு நிகழ்ந்ததாகவே கருதப்படும்.4

5252. அனஸ் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி) கூறினார்:

மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். எனவே, இது குறித்து (என் தந்தை) உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அனஸ் இப்னு சீரீன்(ரஹ்) தொடர்ந்து கூறுகிறார்கள்:

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் '(மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா?' என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரலி) '(தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன?' என்று கேட்டார்கள்.

இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து யூனுஸ் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்துள்ள தகவலில் (பின்வருமாறு) காணப்படுகிறது:

நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் '(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு நீங்கள் கட்டளையிடுங்கள்'' என்று கூறினார்கள். நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் '(மாதவிடாய்ப் பருவத்தில்) செய்யப்பட்ட இந்த மணவிலக்கு) மணவிலக்காகக் கருதப்படுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?' என்று கேட்டார்கள்.

5253. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தபோது நான் அளித்த) அந்த மணவிலக்கை, நான் கூறிய ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது.

பகுதி 3

தம் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர், அதை மனைவியிடமே நேரடியாகத் தெரிவிக்கலாமா?

5254 அப்துர்ரஹ்மான் இப்னு அல் அவ்ஸாயீ(ரஹ்) அறிவித்தார்

நான் முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹாரீ(ரஹ்) அவர்களிடம், '(நபி(ஸல்) அவர்களிடம்) 'நான் தங்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று அவர்களின் துணைவியரில் யார் கூறியது?' எனக் கேட்டேன். அதற்கு ஸுஹ்ரீ(ரஹ்) ஆயிஷா(ரலி) எடுத்துரைத்தபடி உர்வா(ரஹ்) அறிவித்த (பின்வரும்) ஹதீஸைக் கூறினார்கள்.

அல்ஜவ்ன் குலத்துப் பெண் ஒருவரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நெருங்கினார்கள். அப்போது அவர், 'உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறினார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'மகத்துவமிக்க (இறை)வனிடம் நீ பாதுகாப்புக் கோரிவிட்டாய்! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றுவிடு!'' என்று கூறிவிட்டார்கள். 5

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்'' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டாரில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!'' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு'' என்று கூறினார்கள்.

5256 / 5257 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்

நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

5258. யூனுஸ் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். (அது குறித்து மார்க்கம் என்ன தீர்ப்புச் செய்கிறது?)'' என்று கேட்டேன் அதற்கு அவர்கள், 'இப்னு உமர் (அதாவது நான்) யார் என்று உங்களுக்குத் தெரியும்.

நான் மாதவிடாய்ப் பருவத்திலிருந்து என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். எனவே, (என் தந்தை) உமர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு அவளை மணவிலக்குச் செய்ய விரும்பினால் அவளை அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்'' என உத்தரவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (மனைவி மாதவிடாயிலிருந்தபோது தாங்கள் அளித்த மணவிலக்கை) நபி(ஸல்) அவர்கள் 'தலாக்' என்றே கருதினார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?' என்று கேட்டார்கள்.6

பகுதி 4

முத்தலாக் செல்லும் என்று கூறுவோர் (பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கொள்கிறார்கள்:)7

மேன்மைமிக்க அல்லாஹ் கூறினான்:

(திரும்ப அழைக்கும் உரிமையுள்ள) 'தலாக்' இரண்டேதாம். பின்னர் முறைப்படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக் கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்துவிடலாம். (திருக்குர்ஆன் 02:229)8

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்

(மரணப் படுக்கையில் உள்ள) நோயாளி ஒருவர் தம் மனைவியை ('அல்பத்தா' எனும்) ஒட்டுமொத்தத் தலாக் சொல்லிவிட்டால், (அவரின் மறைவுக்குப் பிறகு அவரின் சொத்துக்கு) அவள் வாரிசு ஆவாள் என நான் கருதவில்லை. 9

ஆமிர் இப்னு ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்), 'அவள் தன் கணவனுக்கு வாரிசாவாள்'' என்ற கூறினார்கள்.

''இந்தப் பெண் 'இத்தா'க் காலம் முடிந்த பின் வேறொருவரை மணந்துகொள்ளலாமா?' என்று இப்னு ஷுப்ருமா(ரஹ்) கேட்டார்கள். அதற்கு ஷஅபீ (ரஹ்), 'ஆம். (மணந்துகொள்ளலாம்)'' என்று பதிலளித்தார்கள். உடனே இப்னு ஷுப்ருமா(ரஹ்), 'இரண்டாம் கணவரும் இறந்துவிட்டால் (ஒரே நேரத்தில் அவள் இரண்டு கணவர்களின் சொத்திலிருந்தும் பங்கு பெறுவாளே?') என்று கேட்டார்கள். அப்போது ஷஅபீ (ரஹ்) தம் கருத்தினை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.10

5259. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்

அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர்(ரலி) (தம் குலத்தின் தலைவரான) ஆஸிம் இப்னு அதீ அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் வந்து, 'ஆஸிம் அவர்களே! தம் மனைவியுடன் மற்றோர் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த (அந்நிய) ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால் (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து ஆஸிமே! நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்'' என்று கூறினார்.

எனவே, (ஆஸிம்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சென்று கேட்கத் தொடங்க) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம்(ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று. ஆஸிம்(ரலி) தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது உவைமிர் வந்து 'ஆஸிம் அவர்களே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன கூறினார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம்(ரலி) 'நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்க வைத்துவிட்டாய்;) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு நான் கேட்ட இந்தக் கேள்வி பிடிக்கவில்லை'' என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உவைமிர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (நேரடியாக) இது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்'' என்று கூறியபடி மக்களிடையேயிருந்த அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, 'அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவன் அந்த ஆடவனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால் பழிக்குப் பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்'' என்று கேட்டார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான். எனவே, நீர் சென்று, உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!'' என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள் இருவரும் ('லிஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். அப்போது மக்களுடன் நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். (தம்பதியர்) இருவரும் (லிஆன் செய்து) முடித்தபோது (கணவரான) உவைமிர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) கூறியவனாக ஆகிவிடுவேன்'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை முத்தலாக் சொல்லிவிட்டார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

பிறகு இந்த வழிமுறையே (அவர்களுக்கப் பின்) 'லிஆன்' செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது. 11

5260. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத் தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன். ஆனால், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்'' என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச் சாட்டை அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.)

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீ (உன் பழைய கணவர் 'ரிஃபாஆ'விடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்துகொள்ள முடியாது; உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை மணக்கமுடியாது)'' என்று கூறினார்கள். 12

5261. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். எனவே, அவள் இன்னொருவரை மணந்துகொண்டாள். அவரும் தலாக் சொல்லிவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்து) 'முந்திய கணவருக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவளா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய) இன்பம் அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாம் கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்கும் வரையில் முடியாது'' என்று கூறிவிட்டார்கள்.13

பகுதி 5

ஒருவர் தம் துணைவியருக்கு (தம்மிடமிருந்து பிரிந்துவிட) உரிமை அளிப்பது.

மேன்மைமிக்க அல்லாஹ் கூறினான்:

நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். (திருக்குர்ஆன் 33:28)

5262. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை.14

5263. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், (ஒருவர் தம் மணபந்தயத்திலிருந்து விலகிக் கொள்ள தம் மனைவிக்கு) உரிமை அளிப்பது ('கியார்') குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) '(தம் துணைவியரான) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் (தம் மண பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள) உரிமை அளித்தார்கள்; அது என்ன தலாக்காவா ஆகிவிட்டது?' என்று கேட்டார்கள்.

(தொடர்ந்து அறிவிப்பாளர்) மஸ்ரூக்(ரஹ்) கூறினார்கள்.

(இவ்வாறு நான் என் மனைவிக்கு உரிமையளித்து) அவள் என்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டால், நான் அவளுக்கு (ஆரம்பத்தில்) ஒன்றென்ன! நூறு (தலாக்கு)க்கு உரிமை அளித்திருந்தாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன்.15

பகுதி 6

ஒருவர் தம் மனைவியிடம் 'உன்னை நான் பிரிந்துவிட்டேன்' என்றோ 'உன்னை நான் விடுவித்துவிட்டேன்' என்றோ அல்லது 'நீங்கி விட்டேன்' என்றோ அல்லது தலாக்கின் கருத்திலமைந்த ஒரு சொல்லையோ கூறினால், அது அவரின் எண்ணப்படியே அமையும். 16

வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்:

நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (திருக்குர்ஆன் 33:49)

உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். (திருக்குர்ஆன் 33:28)

பின்னர் முறைப்படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக் கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்துவிடலாம். (திருக்குர்ஆன் 02:229)

எனவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள். (திருக்குர்ஆன் 65:02)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(அவதூறு சம்பவத்தின் போது) நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்துவிடுமாறு என் தாய் தந்தையர் எனக்குக் கட்டளையிடப் போவதில்லை என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள்.

பகுதி 7

ஒருவர் தம் மனைவியிடம் 'நீ எனக்கு 'விலக்கப்பட்டவள்' என்று கூறினால்..

ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) கூறினார்கள்:

(இவ்வாறு ஒருவர் கூறினால்) அவரின் எண்ணப்படி முடிவு அமையும். 17

ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள் என்று அறிஞர்கள் கூறுவதுடன், அதனை 'ஹராமுன் பித்தலாக்' என்றும் 'ஹராமுன் பில்ஃபிராக்' என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால், இது உணவை ஒருவர் தம் மீது ஹராமாக்கிக் கொள்வதைப் போன்றதன்று. ஏனெனில், அனுமதிக்கப்பட்ட உணவை (ஒருவர் தமக்கு விலக்கிக் கொள்வதால்) 'ஹராமான உணவு' என்று சொல்லப்படாது. ஆனால், மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணை 'விலக்கப்பட்டவள்' என்று சொல்வதுண்டு. மூன்று (கட்டத்) தலாக் விஷயத்தில் அல்லாஹ் கூறினான்:

பின்னர் அவன் (மூன்றாவது தவணையில்) அவளைத் தலாக் சொல்லிவிட்டால், பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் மணக்கிறவரை, அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவளாகமாட்டாள். (திருக்குர்ஆன் 02:230)18

5264. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், 'ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் (திரும்ப அழைத்துக்கொள்ளலாமே!) ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள். 19 ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும் வரை உனக்கு அவள் விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்'' என்று பதிலளிப்பார்கள்.

5265. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒருவர் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே அவள் வேறொருவரை மணந்துகொண்டாள். பிறகு அவரும் மணவிலக்குச் செய்துவிட்டார். (இரண்டாவதாக மணந்த) கணவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இனஉறுப்பு) இருந்தது. அந்தக் கணவரிடமிருந்து தான் விரும்பிய எ(ந்தச் சுகத்)தையும் அவள் அனுபவிக்கவில்லை. வெகு விரைவில் அவளை அவர் மணவிலக்குச் செய்தும்விட்டார். எனவே, அவள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் கணவர் என்னை மணவிலக்குச் செய்துவிட்டார். பிறகு நான் இன்னொருவரை மணந்துகொண்டேன். அவர் என்னருகில் வந்தார். ஆனால், அவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இனஉறுப்பு) இருந்தது. அவர் என்னை ஒரு முறைதான் நெருங்கினார். என்னிடமிருந்து அவர் எ(ந்தச் சுகத்)தையும் அனுபவிக்கவில்லை. எனவே, நான் என் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவேனா?' என்று கேட்டாள். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணவர் மறுத்தார்.) எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உன் இரண்டாவது கணவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் நீ உன் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆகமாட்டாய்'' என்று கூறினார்கள்.20

பகுதி 8

அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக்கொள்கிறீர்கள்? (எனும் 66:1 வது இறைவசனம்.)

5266. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி), 'ஒருவர் (தம் மனைவியை நோக்கி) 'அவள் எனக்கு 'விலக்கப்பட்டவள்' என்று கூறினால் அது (மணவிலக்காகக் கருதப்படும்) ஒரு விஷயமே அல்ல'' என்று கூறிவிட்டு, 'உறுதியாக அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது'' (திருக்குர்ஆன் 33:21) என்றும் கூறினார்கள்.21

5267. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்'' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்'' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)'' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.22

(இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) 'நீங்கள் இருவரும்' என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா(ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) 'நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்'' என்பது 'இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)'' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.

5268. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவையாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். எனவே, நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகரகத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதனை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்'' என்று கூறிக்கொண்டு (நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆவிடம், (ஹஃப்ஸா வீட்டில் தேன் அருந்திவிட்டு) நபி(ஸல்) அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேல பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்! 'இல்லை' என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேளுங்கள்! அதற்கு நபி அவர்கள் 'எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்' என்று கூறுவார்கள். உடனே நீங்கள் 'இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு (தேனை உறிஞ்சிக் கொண்டு) வந்திருக்கலாம். (எனவேதான் வாடை வருகிறது)' என்று சொல்லுங்கள்! நானும் இவ்வாறே சொல்கிறேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) கூறினேன். (நான் கூறியவாறு செய்துவிட்டு) சவ்தா அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் கூறியபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். என்னை நபி(ஸல்) அவர்கள் நெருங்கியதும், இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' என்றார்கள். 'தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்' என்றார்கள். உடனே நான் 'இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டது போலும்.) என்று சொன்னேன்.

(தொடர்ந்து ஆயிஷா(ரலி) கூறினார்:)

என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது நானும் அவ்வாறே கூறினேன். ஸஃபிய்யாவிடம் நபியவர்கள் சென்றபோதும் அவரும் அவ்வாறே கூறினார். பிறகு (மறுநாள்) ஹப்ஸாவிடம் சென்றபோது 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் அருந்துவதற்குச் சிறிது தேன் தரட்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அது எனக்குத் தேவையில்லை'' என்று கூறினார்கள். (இது குறித்து) சவ்தா(ரலி) 'அல்லாஹ்வின் மீதணையாக! நபி(ஸல்) அவர்களை அதைக் குடிக்கவிடாமல் தடுத்துவிட்டோமே' என்று கூறினார்கள். உடனே அவரிடம் நான், 'சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது!)'' என்று சொன்னேன்.

பகுதி 9

மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது.

அல்லாஹ் கூறினான்:

இறைநம்பிக்கையாளர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்து விட்டீர்களானால், அவர்களின் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்றுமில்லை. எனவே, அவர்களுக்கு (ஏற்றவகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (திருக்குர்ஆன் 33:49)

''(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறியுள்ளார்கள். '(மணமுடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாகமாட்டாள்'' என்று அலீ(ரலி), ஸயீத் இப்னு முஸய்யப், உர்வா இப்னு ஸுபைர், அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா, அபான் இப்னு உஸ்மான், அலீ இப்னு ஹுசைன், ஷுரைஹ், ஸயீத் இப்னு ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹஸன் அல்பஸரீ, இக்ரிமா, அதாஉ, ஆமிர் இப்னு ஸஅத், ஜாபிர் இப்னு ஸைத், நாஃபிஃ இப்னு ஜுபைர், முஹம்மத் இப்னு கஅப், சுலைமான் இப்னு யாசர், முஜாஹித், காசிம் இப்னு அப்திர் ரஹ்மான், அம்ர் இப்னு ஹாரிம் மற்றும் ஷஅபீ (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்கள் என அறிவிக்கப்படுகிறது,

பகுதி 10

ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி 'இவள் என் சகோதரி'' என்று கூறினால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து 'இவர் என் சகோதரி'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிக் கூறினார்கள்.

பகுதி 11

நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம் தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைவைத்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்தால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.

('தவறுதலாக அல்லது மறதியாக தலாக் கூறினால் அது நிகழாது' என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் இப்னு ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) 'எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!'' எனும் (திருக்குர்ஆன் 02:286 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்)

(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'உனக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள்.

அலீ(ரலி) கூறினார்.

ஹம்ஸா(ரலி) என்னுடைய இரண்டு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடிபோதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா(எங்களைப் பார்த்து) 'நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள் தாமே?' என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.

''போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான்(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள். 'மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது'' என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார். 'ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு'' என அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள்.

நாஃபிஉ(ரஹ்) கூறினார் ஒருவர், தம் மனைவி வீட்டை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா)த் தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். ('இது குறித்து நான் வினவிய போது) இப்னு உமர்(ரலி), 'அவ்வாறு அவள் (வீட்டை விட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது'' என்று கூறினார்கள்.

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார் ஒருவர், 'நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாள்' என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு கூறினார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது 'குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்து கொண்டே நான் அவ்வாறு கூறினேன்' என்று அவர் குறிப்பிட்டால், அது அவரின் பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும்.

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) கூறினார் ஒருவர் தம் மனைவியை நோக்கி 'நீ எனக்குத் தேவையில்லை' என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும்.

கத்தாதா(ரஹ்) கூறினார் ஒருவர் தம் மனைவியை நோக்கி 'நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்'' என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு முறை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்து விடுவாள்.

''ஒருவர் தம் மனைவியிடம் , 'நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு' என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்'' என ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) கூறினார்கள்.

''அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்படவேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

''ஒருவர் தம் மனைவியை நோக்கி, நீ என் மனைவி அல்லள்'' என்று கூறினால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மணவிலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப்படியே மணவிலக்கு நிகழ்ந்து விடும்'' என ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

அலீ(ரலி) (உமர்(ரலி) அவர்களை நோக்கி) 'மூன்று நபர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?' எனக் கேட்டார்கள்.

1. பைத்தியக்காரனிடமிருந்து அவன் புத்தி சுவாதீனம் அடையும் வரை.

2. சிறுவனிடமிருந்து அவன் பருவ வயதை அடையும் வரை.

3. தூங்குபவனிடமிருந்து அவன் கண் விழிக்கும் வரை. மேலும், 'அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்'' என்று அலீ(ரலி) கூறினார்.

5269. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) கூறினார்.

ஒருவர் மனத்துக்குள்ளேயே தலாக் சொல்லிக் கொண்டால் அதனால் (தலாக்) எதுவும் நிகழப்போவதில்லை.

5270. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது, 'அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து, 'நான் விபசாரம் செய்துவிட்டேன்'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பினார்கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து, 'உனக்கு என்ன பைத்தியமா?' என்றும், 'உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?' என்றும் கேட்டார்கள். அவர் 'ஆம்'' என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவரின் மீது கற்கள் விழுந்தபோது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாதைகள் நிறைந்த (அல்ஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்.

5271. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது 'அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே!'' என்று அழைத்து, 'பிற்போக்கானவன் விபசாரம் செய்துவிட்டான்'' என்று தம்மைப் பற்றிக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தை அவரைவிட்டுத் திருப்பினார்கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு வந்து அவர்களின் முகத்திற்கு நேராக நின்று கொண்டு முன்போன்றே கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். அவர் மறுபடியும் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு அவர்களின் முகத்தை நேராக நின்று கொண்டு முன்போன்றே கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வேறு பக்கம் திரும்பினார்கள். (இவ்வாறு) நான்காம் முறையளாக நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக நின்று கொண்டு, தாம் விபசாரம் செய்துவிட்டதாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை நபி(ஸல்) அவர்கள் (அருகில்) அழைத்து 'உனக்கு என்ன பைத்தியமா? (சுயநினைவோடுதான் கூறுகிறாயா?)''' என்று கேட்டார்கள். அவர், 'எனக்குப் பைத்தியம்) இல்லை. நான் தெளிவுடன்தான் இருக்கிறேன்)'' என்று கூறினார்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இவரை அழைத்துச் சென்று கல்லெறி தண்டனை வழங்கிடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். அந்த மனிதர் திருமணம் ஆனவராக இருந்தார்.

5272. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

அப்போது அவரை மதீனாவின் (பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். அவரின் மீது கல்லடி விழத் தொடங்கியதும் (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோடலானார். இறுதியில் அவரை நாங்கள் பாறைகள் நிறைந்த ('அல்ஹர்ரா' எனும்) இடத்தில் பிடித்து அவர் மரணிக்கும் வரை அவரைக் கல்லால் அடித்தோம்.

பகுதி 12

'அல்குல்உ' (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிடமிருந்து பிரிந்து கொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா? என்பது பற்றியும்.

அல்லாஹ் கூறினான்:

(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள். என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (திருக்குர்ஆன் 02:229)

ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே 'குல்உ' நிகழ்வதை உமர்(ரலி) அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) 'குல்உ' நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான்(ரலி) அனுமதித்துள்ளார்கள்.

தாவூஸ்(ரஹ்) கூறினார்

''(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...'' எனும் (திருக்குர்ஆன் 02:229 வது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லறவாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்யவேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என் அஞ்சினால் தவிர.

(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு உன் மூலம் ஏற்பட்ட பெருந்துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகிற அளவிற்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் 'குலா' செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ்(ரஹ்) கூறவில்லை.

5273. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!'' என்று கூறினார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்;

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் 'முதாபஆ' (அறிவிப்பாளர் தொடரில் ஒற்றுமை இல்லை.)

5274. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு உபை என்பவரின் சகோதரி (ஜமீலா) இடம் நபி(ஸல்) அவர்கள் 'உன் கணவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' என்றார். எனவே, அதனை அவர் திருப்பித் தந்துவிட்டார். பின்னர், தலாக் சொல்லிவிடும்படி நபி(ஸல்) அவர்கள் அவரின் கணவருக்கு உத்தரவிட்டார்கள்.

இக்ரிமா(ரஹ்) அவர்களின் இன்னோர் அறிவிப்பில் 'அவரைத் தலாக் சொல்லி விடுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று காணப்படுகிறது.

5275. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களின் துணைவியார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப்பற்றையோ அவரின் குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆனால், அவருடன் வாழ என்னால் முடியவில்லை'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள். அவரும் 'ஆம்' (திருப்பித் தந்துவிடுகிறேன்) என்று கூறினார்.

5276. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'சரி! அவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அவரும் 'ஆம்' என்று கூறினார்கள். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார்.

5277. இக்ரிமா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அந்தப் பெண்ணின் பெயர்) ஜமீலா என்று மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது.

பகுதி 13

(கணவன்- மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படு(மோ என அஞ்சு)வதும், அவசியம் நேரும்போது 'குலா' செய்யும்படி (நடுவர்) யோசனை கூறலாமா என்பதும்.

மேன்மைமிக்க அல்லாஹ் கூறினான்:

(கணவன்- மனைவி ஆகிய) அவ்விருவருக்கிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அல்லாஹ் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிகிறவனாகவும், நன்கு உணர்கிறவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 04: 35)

5278. மிஸ்வர் இப்னு மக்ரமா அஸ்ஸுஹ்ரீ(ரலி) அறிவித்தார்

''பனூ முஃகீரா குலத்தார், தங்கள் புதல்வியை அலீ(ரலி) மணந்துகொள்ள அனுமதி கோரினர். (ஆனால், அதை) நான் அனுமதிக்கமாட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதை கேட்டேன்.''

பகுதி 14

(திருமணமான) அடிமைப் பெண்ணை விற்பது மணவிலக்கு ஆகாது.

5279. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பாரீராவின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப்பெற்றன:

1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார்.

2. 'அடிமையின் வாரிசுரிமை ('வலா'') விடுதலை செய்தவருக்கே உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டிக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)'' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம்! (இருக்கிறது)ஆனால், அது பாரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பாரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பாரீராவிடமிருந்து) அன்பளிப்பு'' என்றார்கள்.

பகுதி 15

ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமையுண்டு.

5280. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(ஆயிஷா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பாரீராவின் கணவர் ஓர் அடிமையாக இருந்ததை பார்த்தேன்.

5281. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

பாரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாவார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்ட பின், தம்மிடமிருந்து பிரிந்து விடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட போது) மதீனாவின் தெருக்களில் பாரீராவுக்குப் பின்னால் சென்றதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

5282. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

கறுப்பு அடிமையான பாரீராவின் கணவர் முஃகீஸ்இன்ன குலத்தாரின் அடிமையாயிருந்தார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்ட பின், தம்மிடமிருந்து பிரிந்துவிடுவதைத் தேர்ந்தெடுத்த போது) மதீனாவின் தெருக்களில் பாரீராவுக்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

பகுதி 16

பாரீராவின் கணவருக்காக நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தது.

5283. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

பாரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பாரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பாரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பாரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பாரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பாரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பாரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பாரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை'' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்'' என்றார்கள. அப்போது பாரீரா, '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டார்.

பகுதி 17

5284. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான் (அடிமைப் பெண்ணான) பாரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பாரீராவின் எசமான்கள் 'வலா' எனும் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும் என நிபந்தனையிட்டு, 'இல்லையேல் விற்கமுடியாது என) மறுத்தனர். எனவே, இதைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (உன் விருப்பப்படியே) பாரீராவை நீ வாங்கி விடுதலை செய்தவருக்கே உரியதாகும் என்று கூறினார்கள்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம், இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது 'இ(ந்த இறைச்சியான)து, பாரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும்'' என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இது பாரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு (இது)அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் 'பாரீரா தம் கணவர் விஷயத்தில் விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்' எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

பகுதி 18

''(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைக்கும் (சுதந்திரமான) ஒரு பெண்; உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளை விட இறைநம்பிக்கையுள்ள அடிமைப் பெண்ணே நிச்சயமாக மேலானவள் ஆவாள்' எனும் (திருக்குர்ஆன் 02:221 வது) இறைவசனம்.

5285. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

( ஒரு முஸ்லிம்) கிறிஸ்துவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணந்துகொள்வது தொடர்பாக இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், அவர்கள் 'இறைநம்பிக்கையாளர்கள் இணைவைக்கும் பெண்களை மணமுடித்துக கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவரான ஈசா(அலை) அவர்களைத் தன்னுடைய இறைவன் என்று ஒரு பெண் கூறுவதைவிட மிகப் பெரிய இணைவைப்பாக வேறொன்றையும் நான் அறியவில்லை' என்பார்கள்.

பகுதி 19

இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்கு முன் மேற்கொள்ளவேண்டிய) அவர்களின் 'இத்தா'க் காலமும்.

5286. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் இணைவைப்பாளர்கள் இரண்டு வகையினராக பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள். நபியவர்களும் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்தவர்களாக இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள். பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாகி) நாடு துறந்து (மதீனாவுகு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடையும் வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப் பின்) தூய்மையடைந்தால் மண முடித்துக் கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்து கொள்வதற்கு முன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாகி) நாடு துறந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள். பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ பெண்ணோ (முஸ்லிமாகி) நாடு துறந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (நாடு துறந்து வந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன.

பின்னர் (இதன் அறிவிப்பாளரான) அதாஉ(ரஹ்), (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்(களின் பெண்)கள் குறித்து முஜாஹித்(ரஹ்) அறிவித்திருப்பதைப் போன்று (பின்வருமாறு) அறிவித்தார்கள்.

(சமாதான) ஒப்பந்தம் செய்த இணைவைப்பாளர்களின் ஆண் அடிமையோ, பெண் அடிமையோ (முஸ்லிமாகி) நாடு துறந்து வந்தால் அவர்கள் (தம் நாட்டிற்குத்) திருப்பி அனுப்பிவைக்கப்படவில்லை; அவர்களுக்குரிய விலை மட்டுமே திருப்பித் தரப்பட்டது.

5287. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

அபூ உமைய்யாவின் மகள் 'குறைபா' என்பவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை உமர் இப்னு கத்தாப்(ரலி) மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பின்னர் அவரை முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) மணந்தார்கள்.

அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் புதல்வியார் உம்முல் ஹகம் அவர்கள், இயாள் இப்னு ஃகன்கி அல்ஃபிஹ்ரீ(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை இயாள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பிறகு அவரை அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் அஸ்ஸகஃபீ என்பவர் மணந்தார். 43

பகுதி 20

பகை நாட்டு இணைவைப்பாளரின், அல்லது இஸ்லாமிய நாட்டு முஸ்லிமல்லாத குடிமகனின் கிறிஸ்தவ மனைவி, அல்லது இணைவைப்பாளியான மனைவி முஸ்லிமாகிவிட்டால் (என்ன சட்டம்?)44

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

தன் கணவனுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக ஒரு கிறிஸ்தவப் பெண் முஸ்லிமாகிவிட்டால் கூட உடனே அவள் தன் கணவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்.

இப்ராஹீம் அஸ்ஸாயிஃக்(ரஹ்) கூறினார்

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அவர்களிடம், 'இஸ்லாமிய நாட்டின் ஒப்பந்தப் பிரஜையான முஸ்லிமல்லாத ஒரு பெண் முஸ்லிமாகிவிட்டாள். பிறகு அவள் 'இத்தா'க் காலத்தில் இருந்து கொண்டிருந்தபோது அவளுடைய கணவனும் முஸ்லிமானார். இப்போது அவள் அவரின் மனைவிதானா? (அவர்கள் இடையிலான மணஉறவு முறிந்துவிட்டதா அல்லது தொடருகிறதா?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இல்லை (முறிந்துவிட்டது); இனி அவளாக முன்வந்து (அதே கணவனைப்) புதிதாகத் திருமணம் செய்துகொண்டு 'மஹ்ர்' பெற விரும்பினால் தவிர. (அப்போதுதான் பழைய கணவனுடன் தொடர்ந்து அவள் வாழ முடியும்)'' என்று பதிலளித்தார்கள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்

(மேற்கண்ட நிலையில்) அவள் 'இத்தா'வில் இருந்து கொண்டிருக்கும்போது கணவன் முஸ்லிமாகிவிட்டால் (புதிதாக) அவளை மணந்து கொள்ள வேண்டும்.

மேன்மைமிக்க அல்லாஹ் கூறினான்:

(முஸ்லிமாம்விட்ட) அந்தப் பெண்கள் (முஸ்லிமல்லாத) தங்கள் கணவன்மார்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்தக் கணவன்மார்களும் இந்தப் பெண்களுக்கு அவமதிக்கப்பட்டவர்கள் அல்லர். (திருக்குர்ஆன் 60:10)

ஹஸன் அல்பஸாரீ(ரஹ்), கத்தாதா(ரஹ்) ஆகியோர் கூறினார்கள்

(நெருப்பை வழிபடுகிறவர்களான) மஜூஸித் தம்பதிகள் ஒரே நேரத்தில் முஸ்லிமானால் (பழைய) மணஉறவிலேயே அவர்கள் இருவரும் நீடிப்பார்கள். அதே சமயம் அவர்களில் ஒருவர் மற்றவரை முந்திக்கொண்டு முஸ்லிமாகி, மற்றொருவர் (முஸ்லிமாக) மறுத்தார் எனில், (அவர்கள் இருவருக்குமிடையே) மணமுறிவு ஏற்பட்டுவிடும்; அவளின் மீது அவன் உரிமை கொண்டாட முடியாது.

இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்

நான் அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அவர்களிடம், 'இணைவைப்பாளர்களிலுள்ள ஒரு பெண் (இஸ்லாத்தை ஏற்று) முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தால், (இணைவைப்பவரான) அவளுடைய (முன்னாள்) கணவனுக்கு அவள் மணக் கொடையை (மஹ்ரை)த் திருப்பிச் செலுத்த வேண்டுமா? ஏனெனில், அல்லாஹ் '(இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்!'' (திருக்குர்ஆன் 60:10) என்று கூறுகிறானே?' என்று கேட்டேன். அதற்கு அதாஉ(ரஹ்), '(அவசியம்) இல்லை. அதுவெல்லாம் நபி(ஸல்) அவர்களுக்கும் (இணைவைப்பாளர்களான) ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே இருந்த ஒன்றுதான் (இன்று அது நடைமுறையில் இல்லை)'' என்று பதிலளித்தார்கள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்

இதுவெல்லாம் நபி(ஸல்) அவர்களுக்கும் குறைஷியருக்குமிடையே ஏற்பட்டிருந்த உடன்பாட்டின்போது தான். (பின்னர், மக்கா வெற்றியின்போது காலாவதியாகிவிட்டது.)

5288. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்

''நம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 60:10 வது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தினால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி(ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (இணைவைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்' என்று) இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டபோது அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெறவில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் 'உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக் கொண்டேன்' என்று வார்த்தை மட்டுமே கூறினார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது கரம் பற்றியதைப் போன்று பெண்களிடம் செய்யவில்லை'')

பகுதி 21

''தங்களின் மனைவியரை நெருங்குவதில்லை எனச் சத்தியம் (ஈலா) செய்கிறவர்களுக்காக (அவர்களின் மனைவியர்) நான்கு மாதங்கள் எதிர்பார்க்கும் உரிமையுண்டு. (இக்காலத்திற்குள் அவர்கள் சத்தியத்திலிருந்து) மீண்டுவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக்க மன்னிக்கிறவனும் மிக்க அருள்கிறவனும் ஆவான். (ஆனால்) அவர்கள் மணவிலக்கையே உறுதிசெய்வார்களாயின், நிச்சயமாக அல்லாஹ் மிக்க செவியுறுவோனும் நன்கு அறிவோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 02:226, 227 ஆகிய) இறைவசனங்கள்'.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஇன் ஃபாஊ' எனும் சொற்றொடருக்கு 'அவர்கள் மீண்டுகொண்டார்களானால்' என்று பொருள்.

5289. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாதகாலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள் (இந்தக் காலக்கட்டத்தில்) அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. எனவே, அவர்கள் தங்களின் மாடியறையில் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்துவிட்டு பிறகு இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாள்கள் தாம்'' என்று பதிலளித்தார்கள்.

5290. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

அல்லாஹ் குறிப்பிட்டுள்ள 'ஈலா' எனும் சத்திய விஷயத்தில் இப்னு உமர்(ரலி), 'அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்திரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையில் (தம் மனைவியைத்) தம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அவளை மணவிலக்குச் செய்ய உறுதியான முடிவு செய்திடவேண்டும். இதைத் தவிர வேறெதற்கும் அனுமதியில்லை'' என்று கூறுவார்கள்.

5291. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும் வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும் வரை (ஈலாவின்) மணவிலக்கு நிகழாது.

இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தர், ஆயிஷா(ரலி) மேலும் பன்னிரன்ட போரிடமிருந்து அறிவிக்கப்ட்டுள்ளது.

பகுதி 22

மனைவி மக்களையும் சொத்து பத்துக்களையும் விட்டுவிட்டுக் காணாமற்போனவர் பற்றிய சட்டம்.

போரின்போது (நம்) அணியிலிருந்து ஒருவர் காணாமற்போய்விட்டால் அவரை அவரின் மனைவி ஒரு வருட காலம் எதிர்பார்ப்பாள் என ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்கள்.

இப்னு மஸ்ஊத்(ரலி) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினார்கள். (பிறகு விலையை ஒப்படைப்பதற்காக) அவளுடைய எசமானை ஒரு வருட காலம் தேடினார்கள். அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. அவர் காணாமல் போய்விட்டார். எனவே, இப்னு மஸ்ஊத்(ரலி) ஏழைகளுக்கு ஒன்றிரண்டு வெள்ளி நாணயத்தைக் கொடுத்துக் கொண்டே 'இறைவா! இதை இன்ன மனிதருக்காக வழங்குகிறேன். அவர் வந்துவிட்டால் (தர்மம் வழங்கியதற்காக) எனக்கு (நன்மை) உண்டு; (அவரின் கடனைச் செலுத்தவேண்டிய பொறுப்பும்) என் மீது உண்டு'' என்று கூறிவிட்டு, 'கண்டெடுக்கப்பட்ட பொருள் விஷயத்தில் இவ்வாறே செயல்படுங்கள்'' என்று கூறினார்கள்.

இதைப்போன்றே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்.

இருக்கும் இடம் அறியப்படுகிற கைதி விஷயத்தில் ஸுஹ்ரீ(ரஹ்), 'அவனுடைய மனைவி மறுமணம் செய்து கொள்ளமாட்டாள். அவனுடைய சொத்துகள் தகவல் கிடைக்காவிட்டால், காணாமல் போனவன் விஷயத்தில் கையாளப்படும் அதே வழிமுறை இவன் விஷயத்திலும் கையாளப்படும்'' என்று கூறினார்கள்.

5392. அல்முன்பஇஸ்(ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான யஸீத்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம், வழிதவறி வந்துவிட்ட ஆட்டைப் பற்றி வினவப்பட்டது நபி(ஸல்) அவர்கள் (வினவியவரிடம்), 'அதை நீ பிடித்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரனுக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றி வினவப்பட்டது. (இதைச் செவியுற்ற) உடன் நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். (எந்த அளவிற்கென்றால்) அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன. பிறகு, 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் தான் (நடப்பதற்கு) குளம்பும், (நீரைச் சேமிக்கத்) தண்ணீர் பையும் (வயிறும்) உள்ளதே! அதை அதன் உரிமையாளன் சந்திக்கும் வரை தண்ணீர் அருந்தி (தாகம் தணித்து)க் கொள்கிறது. மரத்திலிருந்து அது (இலை தழைகளைத்) தின்கிறது'' என்று கூறினார்கள்.

மேலும், நபி(ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்தும் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், 'அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் தெரிந்து வைத்துக் கொண்டு ஓராண்டுக் காலத்திற்கு அதை அறிவிப்புச் செய்!

''அதன் உரிமையாளரான உடையாளம் அறிந்தவர் வந்தால் சரி! (அதை அவரிடம் கொடுத்துவிடு;) இல்லாவிட்டால் அதை உன்னுடைய செல்வத்துடன் சேர்த்துக் கொள்!'' என்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

நான் ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த அறிவிப்பைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து (கேட்டு) மனனமிடவில்லை. 'வழிதவறி வந்துவிட்டவை தொடர்பாக யஸீத்(ரஹ்) அறிவித்துள்ள மேற்கண்ட ஹதீஸ், (நபித்தோழர்) ஸைத் இப்னு காலித் அல்ஜுஹைனீ(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதுதானே! எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கேட்டேன். அதற்கு ரபீஆ(ரஹ்) 'ஆம்' என்றார்கள்.

யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்:

(மேற்கண்ட ஹதீஸை) ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களிடமிருந்து யஸீத்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள். சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டார்கள்.

பகுதி 23

ழிஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)

''(நபியே) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ அவளுடைய முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்'' என்று தொடங்கி, 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்'' என்று முடியும் (திருக்குர்ஆன் 58:1-4) இறைவசனங்கள்.

மாலிக்(ரஹ்) கூறினார்

நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது ('ழிஹார்' செய்வது) 'அடிமையின் 'ழிஹார்' சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்'' என்று கூறினார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக்(ரஹ்), 'அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்'' என்று கூறினார்கள்.

ஹஸன் இப்னு அல்ஹூர்ரு(ரஹ்) கூறினார் 'சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திரமான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் செல்லும் ழிஹாரானது ஒன்றுதான்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்

ஒருவர் தம் அடிமைப்பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு ('ழிஹார்' செய்து)விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. 'ழிஹார்' என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியது தான்.

(திருக்குர்ஆன் 58:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'யஊதூன)லிமா காலூ' (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, 'மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறியவர்கள், அவ்வாறு கூறியபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்' என்று பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரின் கருத்துக்கேற்ப 'முதலில் தாம் கூறியதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்' எனப் பொருள் கொண்டால் வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒரு முறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழி காட்டுகிறான் என்றாம்விடும். ஆனால், )அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.

பகுதி 24

மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்.

நபி(ஸல்) அவர்கள், 'கண்ணீரினால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தினால் அல்லாஹ் வேதனை செய்வான்'' என்று கூறியவாறு தம் நாவைக் காட்டி சைகை செய்தார்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

(கடனில்) பாதியை வாங்கிக் கொள்! (மீதியைவிட்டுவிடு) என்று நபி(ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.

அஸ்மா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா(ரலி) அவர்களிடம் (சென்று) 'மக்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டேன். உடனே அவர்கள் தங்களின் தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) 'அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'ஆம்'' என்று தலையாலேயே சைகை செய்தார்கள்.

அனஸ்(ரலி) கூறினார்

(தொழுகை நடத்துவதற்காக) முன் செல்லுமாறு அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கித் தம் கையால் நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

'பரவாயில்லை' என்பது போல் தம் கையால் நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

அபூ கத்தாதா(ரலி) கூறினார்

இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக் காட்டி சைகை செய்தாரா? என்று கேட்டார்கள். மக்கள் 'இல்லை'' என்றனர். 'அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5293. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றி வந்தார்கள்.

அந்த ('ஹஜருல் அஸ்வத்' கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தம் கையிலுள்ள ஒரு பொருளினால் முத்தமிடுவது போல்) சைகை செய்தபடி 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள்.

ஸைனப்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் 'யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போல் (சிறிது) திறக்கப்பட்டது'' என்று கூறி தம் கையால் 90 என்று (அரபி எண்வடிவில்) மடித்துக் காட்டினார்கள்.

5294. அபுல் காசிம்(முஹம்மத்- ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

இதைக் கூறும்போது நபி(ஸல்) அவர்கள் தம் விரல் நுனியை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப்பாகத்தின் மீது வைத்துத் தம் கையால் சைகை செய்தார்கள். 'இதன்மூலம் அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்'' என நாங்கள் பேசிக்கொண்டோம்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5295. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக் கொண்டு அவளுடைய மண்டையை உடைத்துவிட்டான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அவளை உடனே அவளுடைய குடும்பத்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அவளால் பேச முடியவில்லை. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உன்னைத் தாக்கியவன் யார்? இவனா? என்று அவளைத் தாக்காத வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள். அதற்கு அச்சிறுமி, 'இல்லை'' என்று தன்னுடைய தலையால் சைகை செய்தாள். பிறகு அவளைத் தாக்காத இன்னொருவரின் பெயரைக் குறிப்பிட்டு (இவரா உன்னைத் தாக்கியவர்? என்று) கேட்டார்கள். அதற்கும் அவள், 'இல்லை' என்று சைகை செய்தாள். இறுதியில் 'இன்னாரா?' என்று அவளைத் தாக்கியவனின் பெயரைச் சொல்லிக் கேட்டதும் அவள், 'ஆம்' என்று சைகை செய்தாள். உடனே அந்த நபருக்குத் தண்டனை வழங்கும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட, அவனுடைய தலை இரண்டு கற்களுக்கிடையில் வைத்து நசுக்கப்பட்டது.

5296. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, 'இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்'' என்று சொல்லக் கேட்டேன்.

5297. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றிருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!'' என்று கூறினார்கள். அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!'' என்றார். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!'' என்று (மீண்டும்) கூறினார்கள். அதற்கவர், 'பகல்(வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே, இறைத்தூதர் அவர்களே!'' என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக'' என்று கூறினார்கள்.

மூன்றாம் முறையில் அவர் இறங்கிவந்து நபி(ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்தி (நோன்பு திறந்து)விட்டுத் தம் கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, 'நீங்கள் (கிழக்குத் திசையான) இங்கிருந்து இரவு முன்னோக்கி வந்துவிடக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்திட வேண்டும்'' என்று கூறினார்கள்.

5298. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் ஸஹர் உணவு உண்பதிலிருந்து 'பிலாவின் அழைப்பு' அல்லது 'பிலாலின் (தொழுகை) அறிவிப்பு' உங்களைத் தடுத்து விடவேண்டாம் . ஏனெனில், அவர் அழைப்பது அல்லது 'அவர் (தொழுகை) அறிவிப்புச் செய்வது, 'உங்களில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகத்தான் 'சுப்ஹு' அல்லது 'ஃபஜர்' நேரம் வந்துவிட்டது என்பதைத அறிவிப்பதற்காக அல்ல.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் இப்னு ஸுரைஉ(ரஹ்) இதை அறிவிக்கும்போது தம் கைகளை வெளிப்படுத்தினார்கள். பிறகு ஒரு கையை விட இன்னொரு கையை (நீளவாட்டில்) நீட்டிக் காட்டி (நீளவாட்டில் தோன்றும் அதி காலை வெளிச்சமே உண்மையான ஃபஜர் நேரம் ஆகும். அகலவாட்டில் தோன்றுவதன்று' (என்பது போல்) சைகை செய்தார்கள்.

5299. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கிற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தம் மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை இரும்பாலான நீளங்கி அணிந்துள்ளனர். செலவு செய்கிறவர் எதைச் செலவு செய்தாலும் அவரின் அங்கி உடல் மீது நீண்டு கொண்டே சென்று விரல் நுனியையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதச் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது.

கஞ்சன் (எதையாவது) செலவு செய்ய விரும்பினால் (அவனுடைய இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அதன்னுடையன் இடத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. அவன் அதை(த் தளர்த்தி) விரிவாக்க முயல்கிறான். ஆனால், அது விரிவடைவதில்லை.

(இதைக் கூறியபோது) நபி(ஸல்) அவர்கள் (குரல் வளையைக் கழுத்துச் சட்டை இறுக்கிப் பிடிப்பதை உணர்த்தும் முகமாக) தம் விரலல் தம் குரல்வளையைக் காட்டி சைகை செய்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 25

லிஆன்- (மனைவி மீதும் கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாப அழைப்புப் பிரமாணமும் அது பற்றி இறைவசனமும்.

அல்லாஹ் கூறினான்.

தம் மனைவியர் மீது (விபச்சாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத் தம்மையன்றி வேறு சாட்சிகள் தம்மிடம் இல்லாத ஒருவர், நிச்சயமாகத் தாம் (தம் குற்றச்சாட்டில்) உண்மையாளர் தாம் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும் ஐந்தாவது முறை (தம் குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் 'அல்லாஹ்வின் சாபம் தம் மீது உண்டாகட்டும்' என்று கூறவேண்டும். கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஜந்தாவது முறை, அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன் மீது உண்டாவதாக' என அவள் கூறவேண்டும். (திருக்குர்ஆன் 24: 6-9)

எனவே ஊமை, அறிந்து கொள்ளப்படுகிற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவி மீது (விபசாரக்) குற்றம் சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போனறே கருதப்படுவான். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் 9தொழுகை போன்ற) கடமைகளில் சைகைளை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரின் கூற்றுமாகும்.

மேலும், அல்லாஹ் கூறினான்:

(ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும் படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். 'நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?' என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன் 19:29)

ளஹ்ஹாக்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 03:41) வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இல்லா ரம்ஸன்' எனும் சொற்றொடருக்கு 'சைகையால் தவிர' என்று பொருள்.

''(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; ('லிஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக் கிடையாது) என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக் கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர். ஆனால், (மனைவி மீது விபசாரக்) குற்றம் சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால் தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால் தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப்போன்ற (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாது போகும்.

இதைப்போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் ('லிஆன்) செய்யலாம்.

ஷஅபீ மற்றும் கத்தாதா(ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால்(எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிடமிருந்து அவள் மணவிலக்கப் பெற்றவளாகிவிடுவாள்.

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) கூறினார்

ஊமை தன்னுடைய கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும்.

ஹம்மாத்(ரஹ்) கூறினார் ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.

5300. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், 'ஆம்! (தெரிவியுங்கள்) இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினர்.

''(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு அவர்களைத் தொடர்ந்து பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ சாஇதா குடும்பமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய பின் தம் விரல்களை மடக்கிப் பின்பு அவற்றை விரித்துவிட்டுத் தம் கையால் (எதையோ) எறிபவர் போல் (சைகை) செய்தார்கள். பிறகு 'அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு'' என்ற கூறினார்கள்.69

5301. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நானும் மறுமையும் 'இதிலிருந்து இதைப் போல்' அல்லது 'இந்த இரண்டையும் போல்' (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள். 70

5302. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்'' என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு 'மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்'' (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) - இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை' இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள்.71

5303. அபூ மஸ்வூத் உக்பா இப்னி அம்ர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டிய சைகை செய்து 'இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும்'' என்று இருமுறை கூறிவிட்டு, 'அறிந்து கொள்ளுங்கள்! கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரண்டு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலை தூக்கும். அதாவது,) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்'' என்று கூறினார்கள். 72

5304. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.

பகுதி 26

இந்தக் குழந்தை தன்னுடையது அல்ல என ஒருவர் குறிப்பால் உணர்த்துவது. 73

5305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(கிராமவாசியான) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)'' என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிறம் என்ன?' என்ற கேட்டார்கள். அவர், 'சிவப்பு' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், '(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும்'' என்று கூறினார்கள்.

பகுதி 27

சாப அழைப்புப் பிரமாணமும், சாப அழைப்புப் பிரமாணத்திற்குப் பிறகு மணவிலக்கு அளிப்பது.

5308. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

உவைமிர் அல்அஜ்லானீ(ரலி) ஆஸிம் இப்னு அதீ அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் வந்து, 'ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவுகொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்று விடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள். ஆஸிமே! எனக்காக இது குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டுச் சொல்லுங்கள்'' என்றார்கள். எனவே, ஆஸிம்(ரலி) இது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம்(ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று.

ஆஸிம்(ரலி) தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது அவர்களிடம் உவைமிர்(ரலி) வந்து 'ஆஸிமே! உங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?' என்ற கேட்டார்கள். அதற்கு ஆஸிம்(ரலி) உவைமிர்(ரலி) அவர்களிடம், 'நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்க வைத்துவிட்டாய்;) நான் கேட்ட கேள்வி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு உவைமிர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்'' என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள்!'' என்று கேட்டார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் (வசனத்தை) அருளிவிட்டான். எனவே, நீர் சென்ற உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!'' என்றார்கள். (பிறகு அவர்கள் இருவரும் வந்தனர்.) நான் மக்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருக்கும்போது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அவர்கள் லிஆன் செய்து முடித்தபோது உவைமிர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

பிறகு இதுவே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது. 77

பகுதி 30

பள்ளிவாசலில் (வைத்து) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தல்.

5309. பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

அன்சாரிகளில் (உவைமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! சொல்லுங்கள்: ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால், பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?' என்றார். அப்போது அல்லாஹ், சாப அழைப்புப் பிரமாணம் செய்துகொள்ளும் தம்பதியர் தொடர்பாகக் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள விதியை அருளினான். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் தீர்ப்பளித்துவிட்டான்'' என்று கூறினார்கள். எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்து சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். அப்போது அங்கு நானும் இருந்தேன். இருவரும் சாப அழைப்புப் பிரமாணயம் செய்து முடித்தபோது உபைமிர்(ரலி) 'அவளை நான் (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே) வைத்திருந்தால், அவளின் மீது நான் (பொய்(க் குற்றச்சாட்டு) சொன்னவனாம் விடுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொல்லிவிட்டு, லிஆன்- பிரமாணம் முடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பாகவே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி(ஸல்) அவர்கள் முன்னிலையிலேயே அவளைவிட்டுப் பிரிந்துகொண்டார். இதுவே லிஆன்- பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்கும் வழியாயிற்று.

-தம்பதியர் பரஸ்பரம் செய்துகொள்ளும் சாப அழைப்புப் பிரமாணம் குறித்தும் அதன் வழிமுறைகள் குறித்தும் ஸஹ்ல்(ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவித்துள்ள இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்: இந்த இருவருக்கும் பின்னால் சாப அழைப்புப் பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்து வைக்க இதுவே முன்மாதிரி ஆனது.

அந்த லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்னவளின் மகன் என்று) அழைக்கப்படலானது. பின்னர் மகனிடமிருந்து அந்தப் பெண்ணும், அப்பெண்ணிடமிருந்து மகனும் அல்லாஹ் அவர்களுக்கு நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது.

தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) கூறினார்.

(லிஆன் நடந்து முடிந்ததும்) நபி(ஸல்) அவர்கள், 'இவள் அரணையைப் போன்ற குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் இவள் உண்மை சொல்லிவிட்டாள். கணவர் இவள் மீது பொய் சொல்லிவிட்டார் (என்று பொருள்); கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய பிட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளின் மீது அவளுடைய கணவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மை தான் என்று கருதுகிறேன்'' என்றார்கள். பிறகு விரும்பத்தகாத அந்தத் தோற்றத்திலேயே அப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். (கணவரின் குற்றச்சாட்டு நியாயமானதாகப்பட்டது.)78

பகுதி 31

''நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்கு) கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் (இதோ இந்தப் பெண்ணுக்கு அளித்திருப்பேன்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

5310. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்கு முன் ஒரு முறை மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் இப்னு அதீ(ரலி) அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம்(ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகக் கூறினார். அதற்கு ஆஸிம்(ரலி), 'நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறினார்கள். எனவே, ஆஸிம்(ரலி) அவரை அழைத்துக்கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவரின் மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.

(இந்த குற்றச்சாட்டைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி(ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டு வந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.)'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 32

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யப்பட்ட பெண்ணின் மஹ்ர் (மணக் கொடை குறித்த சட்டம்).79

5311. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன)?' என்று கேட்டேன். அதற்கவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபி(ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள். பிறகு 'உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மீண்டும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே) 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். எனவே, அவர்கள் இருவரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப்(ரஹ்) கூறினார்:

இந்த ஹதீஸில் (ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) குறிப்பிட்ட) ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன்'' என்று என்னிடம் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: (சாப அழைப்புப் பிரமாணம் செய்த) அந்த மனிதர், '(மஹ்ராக நான் அளித்த) என்னுடைய பொருள் (என்னவாவது)?' என்று கேட்டார். அதற்கு அவரிடம், '(உம்முடைய மனைவி மீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவுகொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகி விடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அச்செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது' என்று கூறப்பட்டது.

பகுதி 33

சாப அழைப்புப் பிரமாணம் செய்யும் தம்பதியரிடம் 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் யார்?' என்று தலைவர் கேட்பது.

5312. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்ளும் தம்பதியரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியாரிடம் நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவளின் மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்று கூறினார்கள். உடனே அவர், 'இறைத்தூதர் அவர்களே! (நான் இவளுக்கு மஹ்ராக அளித்த) என்னுடைய பொருள் (என்ன ஆவது? அதைத் திரும்பப் பெறலாமா?)'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகி விடும். அவளின் மீது நீர் பொய் சொல்லியிருந்தால் (அவளை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகு தூரத்தில் உள்ளது'' என்று கூறினார்கள்.

தொடர்ந்து ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்: நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், தம் மனைவியுடன் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த மனிதர் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள், (தம்பதியர் இருவரையும் பிரித்து வைக்க வேண்டும் என்பதைக் காட்ட) தம் இரண்டு விரல்களால் சைகை செய்தார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அப்போது தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பிரித்துக் காட்டினார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த தம்பதியரை (லிஆனுக்குப் பின்) பிரித்து வைத்தார்கள். பிறகு 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் உண்டா?' என மூன்று முறை கேட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

சுஃப்யான்(ரஹ்) கூறினார்கள்:

(இப்போது) உங்களுக்கு நான் தெரிவித்ததைப் போன்றே அம்ர் இப்னு தீனார், அய்யூப்(ரஹ்) ஆகியோரிடமிருந்து இந்த ஹதீஸை நான் மனனமிட்டுள்ளேன்.

பகுதி 34

சாப அழைப்புப்பிரமாணம் (லிஆன்) செய்த தம்பதியரைப் பிரித்துவைத்தல்.

5313. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணையும் அவளின் மீது விபசாரக் குற்றம் சாட்டிய கணவரையும் சத்தியப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.

5314. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் உள்ள ஒரு தம்பதியரை சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.

பகுதி 35

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யப்பட்ட பெண்ணிடமே (அவளுடைய) குழந்தை சேர்க்கப்படும்.

5315. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவரின் மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்தார்கள். அப்போது அந்த மனிதர் அவளுடைய குழந்தையைத் தமதல்ல என்று கூறினார். எனவே, அவ்விருவருரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.

பகுதி 36

(சாப அழைப்புப் பிரமாணத்தின்போது) 'இறைவா! (உண்மையை) வெளிப்படுத்துவாயாக' என்று தலைவர் கூறுவது.

5316. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்வது (நடைமுறையில் வருவதற்கு முன், மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் இப்னு அதீ(ரலி) அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகச்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம்(ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவுகொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகக் கூறினார். அப்போது 'நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே (என் குலத்தாரில் நடந்த) இந்த நிகழ்ச்சியால் நானே சோதிக்கப்பட்டுள்ளேன்'' என்று ஆஸிம்(ரலி) கூறினார். எனவே, ஆஸிம்(ரலி) அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவரின் மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைந்தவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும், சுருட்டை முடி உள்ளவராகவும் இருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் தாம் கண்டதாகக் கணவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தையைப் பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால், இவளுக்கு அளித்திருப்பேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியது, (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் தொடர்பாகவா? என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'இல்லை. (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள் ஆவாள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.80

பகுதி 37

மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் 'இத்தா'க் காலத்திற்குப் பின் வேறொரு கணவனை மணமுடித்து, அவர் அவளைத் தாம்பத்திய உறவுகொள்ளாத நிலையில் (அவரும் அவளைத் தலாக் சொல்லிவிட்டால், முதல் கணவன் அவளை மணந்து கொள்ளலாமா?)

5317. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். பிறகு அப்பெண்ணை அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். எனவே, அந்தப் பெண் வேறொருவரை மணந்துகொண்டார். பிறகு அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தம் கணவர் தம்மிடம் (உறவுகொள்ள) வருவதில்லை என்றும், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சம் போன்றதுதான் என்றும் கூறினார். (பிறகு தாம் தம் முதல் கணவருடன் வாழ விரும்புவதாகவும் கூறினார்.) (அப்போது அங்கிருந்த அவரின் இரண்டாவது கணவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தமக்கு முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளையும் அவர் காட்டினார்.) உடனே நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; நீ (உன்னடைய இரண்டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும் வரையிலும், அவர் உன்னிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும் வரையிலும் (முதல் கணவரை நீ மணந்து கொள்ள முடியாது)'' என்று கூறினார்கள்.

இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 81

பகுதி 38

மேலும், உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டாலும், இன்னும் யாருக்கு (இதுவரை) மாதவிடாயே ஏற்படவில்லையோ அவர்களுக்கும் 'இத்தா' (தவணை) மூன்று மாதங்களாகும் (எனும் 65:4 வது வசனத் தொடர்).

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

அதாவது மாதவிடாய் ஏற்படுகிறதா அல்லது இல்லையா என உங்களுக்குத் (தெளிவாகத்) தெரியாத பெண்களுக்கும், (முதுமையின் காரணத்தினால்) மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், (பருவம் அடையாததால் இதுவரை) மாதவிடாயே ஏற்பட்டிராத பெண்களுக்கும் 'இத்தா' (தவணை) மூன்று மாதங்களாகும். 82

பகுதி 39

கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களின் ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (எனும் 65:4 வது வசத் தொடர்).

5318. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த 'சுபைஆ' என்றழைக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரின் கணவர் (ஸஅத் இப்னு கவ்லா) இறந்துவிட்டார். (நாற்பது நாள்களுக்குப் பிறகு அவருக்குக் குழந்தை பிறந்தது.) இந்நிலையில் அவரை 'அபுஸ் ஸனாபில் பின்பஅக்கக்(ரலி)' என்பவர் பெண் கேட்டார். அவரை மணக்க அப்பெண் மறுத்துவிட்டார். பிறகு (வேறொருவரை மணக்கவிருக்கும் செய்தி கேட்டு) அவரைப் பார்த்து அபுஸ் ஸனாபில்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இரண்டு தவணைகளில் பிந்தியது எதுவோ அது வரையில் நீ 'இத்தா' இருக்காமல் அவரை நீ மணந்துகொள்ள முடியாது'' என்று கூறினார்கள். (பிரசவத்திற்குப் பின்) சுமார் பத்து நாள்கள் அப்பெண் இருந்துவிட்டு பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(பிரசவத்துடன் உன் இத்தா முடிந்துவிட்டது.) நீ மணந்துகொள்'' என்று கூறினார்கள்.83

5319. அப்துல்லாஹ் இப்னு உத்பா இப்னி மஸ்வூத்(ரஹ்) அறிவித்தார்

நான் உமர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அல் அர்கம்(ரஹ்) அவர்களை, அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சுபைஆ(ரலி) அவர்களிடம் சென்று, அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ('இத்தா' தொடர்பாக) என்ன தீர்ப்பளித்தார்கள்? என்று கேட்கும்படி கடிதம் எழுதினேன். (அவ்வாறே அவரும் கேட்டார்.)

அப்போது சுபைஆ(ரலி) 'நீ பிரசவித்தவுடன் மணமுடித்துக்கொள்'' என்று நபி(ஸல்) அவர்கள் எனக்குத் தீர்ப்பு வழங்கினார்கள் என்று பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ ஹபீப்(ரஹ்) அவர்களுக்கு இப்னு ஷிஹாப்(ரஹ்) தம் கடிதத்தில் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

5320. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்

தம் கணவர் இறந்த சில நாள்களுக்குப் பின் சுபைஆ அல்அஸ்லமிய்யா(ரலி) பிரசவித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று (மறு)மணம் புரிந்து கொள்ள அனுமதி கோரினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி அளித்ததையடுத்து அவர் (ஒருவரை) மணந்தார்.

பகுதி 40

''மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் வரை தங்களின் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்'' எனும் (திருக்குர்ஆன் 02:228 வது) வசனத் தொடர்.

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ) அவர்கள் கூறுகிறார்கள்.

'இத்தா'வில் உள்ள ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து, அவரிடம் வந்த பின் அவளுக்கு மூன்று மாதவிடாய்க் காலம் முடிந்தால், முதல் கணவனிடமிருந்து அவள் முற்றாகப் பிரிந்தவள் ஆவாள். (ஆனால்,) இந்த மாதவிடாய்க் காலத்தை இரண்டாம் கணவனுக்கான 'இத்தா'வாக அவள் கணக்கிட முடியாது.

அவ்வாறு கணக்கிடலாம் என ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார். ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களின் கருத்தே சுஃப்யான்(ரஹ்) அவர்களுக்கு மிக உவப்பானதாகும்.84

மஅமர் இப்னு முஸன்னா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'குரூஉ' எனும் சொல்லின் வினைச் சொல்லான) 'அக்ரஅத்' எனும் சொல்லுக்கு' ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது' என்ற பொருளும், 'ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது' என்ற (எதிரிடையான) பொருளும் உண்டு. ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்ப்பதைக் குறிக்கவும் 'கரஅத்' எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

பகுதி 41

ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அவர்களின் நிகழ்ச்சி.85

வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்:

உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (மணவிலக்கு அளிக்கப்பட்டு 'இத்தா'வில் இருக்கும் பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்துகொள்கிறார். (ஏனெனில், சேர்ந்து வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (திருக்குர்ஆன் 65:1 வது வசனத்தொடர்.)

உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்திலேயே ('இத்தா'விலிருக்கும்) பெண்களைக் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடி உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்..'' (திருக்குர்ஆன் 65:6,7)

5321, 5322 காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) அவர்களும் சுலைமான் இப்னு யஸார்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்

யஹ்யா இப்னு ஸயீத் இப்னி ஆஸ்(ரஹ்) (தம் துணைவியாரான) அப்துர் ரஹ்மான் இப்னு அல்ஹகம் அவர்களின் புதல்வியை (ஒட்டுமொத்த)த் தலாக் சொல்லிவிட்டார். எனவே, அவரை (அவரின் தந்தை) அப்துர் ரஹ்மான் (தலாக் சொல்லப்பட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக்) குடிமாற்றினார். (இச்செய்தி அறிந்த) ஆயிஷா(ரலி) மதீனாவின் (அப்போதைய) ஆட்சித் தலைவராக இருந்து (அப்துர் ரஹ்மானின் சகோதரர்) மர்வான் இப்னு அல்ஹகம் அவர்களிடம் ஆளனுப்பி, 'மர்வானே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (உங்கள் சகோதரர் புதல்வியான) அவளை (மணவிலக்கு அளிக்கப்பட்ட) அவளுடைய வீட்டிற்கே திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறினார்கள். மர்வான், '(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் என்னை மிகைத்துவிட்டார். (என்னால் அவரைத் தடுக்க முடியவில்லை)'' என்று பதிலளித்தார். இவ்வாறு சுலைமான் இப்னு யஸார் அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.

காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்:

மேலும், மர்வான் 'ஃபாத்திமா பின்த் கைஸ் தொடர்பான தகவல் தங்களை வந்தடையவில்லையா? (அவர் இடம் மாறித்தானே 'இத்தா' இருந்தார்!'' என்று (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) கேட்டார். ஆயிஷா(ரலி), ஃபாத்திமா பின்த் கைஸின் செய்தியை நீங்கள் (ஆதாரமாகக்) குறிப்பிடாமல் இருப்பதால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்துவிடாது. (அவர் இடம் மாறியதற்குத் தக்க காரணம் இருந்தது.)'' என்று கூறினார்கள். அதற்கு மர்வான் இப்னி ஹகம் அவர்கள், '(ஃபாத்திமா இடம் மாறியதற்குக் காரணமாக அமைந்த) இடர்ப்பாடு ஏதேனும் தங்களுக்கு (ஏற்புடையதாக இருக்குமென்றால், இந்தத் தம்பதியரிடையே உள்ள (அதே விதமான) இடர்ப்பாடு (என் சகோதரர்) மகள் இடம் மாறுவதில்) தங்களுக்குப் போதும்தானே!'' என்று கூறினார்.

5323, 5324 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஃபாத்திமா பின்த் கைஸிற்கு என்ன நேர்ந்தது? '(மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு 'இத்தா'வின் போது) உறைவிடமோ ஜீவனாம்சமோ (கணவன் அளிக்கவேண்டியது) இல்லை'' என்று கூறுகிறாரே! அவர் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா?

5325, 5326 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'அப்துர் ரஹ்மான் இப்னு அல்ஹகமுடைய புதல்வியான இன்னவளைப் பார்த்தீர்களா? அவரை அவரின் கணவர் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் 'இத்தா' இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே!'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) 'அவர் செய்தது தவறு'' என்றார்கள். நான் ஃபாத்திமா பின்த் கைஸ், (தான் மற்றோர் இடத்தில் 'இத்தா' இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷாரலி) அவர்கள், 'இச்செய்தியைக் கூறி வருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை என்பதைப் புரிந்துகொள்!''என்று கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது:

ஆயிஷா(ரலி) (ஃபாத்திமா பின்த் கைஸைக்) கடுமையாகச் சாடினார்கள். மேலும், '(இந்த) ஃபாத்திமா தன்னந் தனியானதோர் இடத்தில் இருந்தார். இதனால் அவர் (பாதுகாப்பு) குறித்து அஞ்சப்பட்டது. இதையடுத்தே அவருக்கு (மற்றோர் இடத்தில் 'இத்தா' இருக்க) நபி(ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்'' என்றும் ஆயிஷா கூறினார்கள்.

பகுதி 42

மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் தன்னுடைய கணவன் வீட்டில் ('இத்தா' மேற்கொண்டால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என்றோ, அவள் தன் (கணவனின்) குடும்பத்தாரிடம் அசிங்கமாகப் பேசிவிடுவாள் என்றோ அஞ்சப்படுமானால் (அவள் இடம் மாறிக் கொள்ளலாம்).

5327, 5328 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி), ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு (மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் கணவனின் இல்லத்திலிருந்து வெளியேறி மற்றோர் இடத்தில் 'இத்தா' மேற்கொள்ளலாம் என்று) கூறி வந்ததை நிராகரித்தார்கள்.86

பகுதி 43

''(மணவிலக்கு அளிக்கப்பட்ட) அந்தப் பெண்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் (உண்மையிலேயே) நம்பினால், தம் கருவறைகளில் அல்லாஹ் படைத்துள்ள எதையும் அவர்கள் மறைக்கலாகாது'' எனும் (திருக்குர்ஆன் 02:228 வது) வசனத் தொடர்.

அதாவது (தம் கருவறைகளில் ஏற்பட்டுள்ள) மாதவிடாயோ கர்ப்பமோ எதையும் மறைக்கலாகாது.

5329 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பியபோது ஸஃபிய்யா(ரலி) (மாதவிடாய் ஏற்பட்டதால்) தம் கூடாரத்தின் வாசலில் கவலை அடைந்தவராய் நின்றிருந்தார்கள். அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் (செல்லமாக) 'அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வலி வரட்டும்! எம்மை (புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாயே! நஹ்ருடைய (துல்ஹஜ் -10 வது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றிவந்தாயா?' என்று கேட்டார்கள். ஸஃபிய்யா(ரலி) 'ஆம்' என்று கூற, நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால், நீ புறப்படு'' என்று கூறினார்கள்.87

பகுதி 44

(மணவிலக்கு அளித்த) அவர்களின் கணவர்களே அவர்களை ('இத்தா' முடிவதற்குள்) திருப்பி அழைத்துக்கொள்ள அதிக உரிமையுள்ளவர்கள் ஆவர் (எனும் 02:228 வது வசனத் தொடர்).

ஒன்று, அல்லது இரண்டு 'தலாக்' சொன்ன ஒருவர் தம் மனைவியைத் திருப்பி அழைக்கும் முறை யாது?

''(மணவிலக்கு அளிக்கப்பட்ட) அந்தப் பெண்களை (இத்தா முடிந்தபின் அவர்களின் கணவர்களே மீண்டும் மணந்துகொள்வதை) நீங்கள் தடுக்கவேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தொடர்.

5330. ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) அறிவித்தார்

மஅகில் இப்னு யஸார்(ரலி) தம் சகோதரியை (ஒருவருக்கு) மணமுடித்துக் கொடுத்தார்கள். பிறகு அவரை அவரின் கணவர் மணவிலக்கு அளித்துவிட்டார். பின்னர் அவரின் 'இத்தா'க் காலம் முடியும் வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியேவிட்டுவிட்டார். பிறகு (பழைய கணவரே மீண்டும்) அவரைப் பெண்கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஅகில்(ரலி) பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். மேலும், '(என் சகோதரி 'இத்தா'வில் இருந்தபோது) அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அவருக்கு சக்தியிருந்தும் அப்படியேவிட்டுவிட்டு, ('இத்தா' முடிந்த) பிறகு (இப்போது வந்து) பெண்கேட்கிறாரே!'' என்று கூறி, இருவருக்கும் இடையே மஅகில் தடையாக இருந்தார். அப்போதுதான் அல்லாஹ் 'நீங்கள் (உங்கள்) மனைவியரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் ('இத்தா') தவணையின் இறுதியை அடைந்தால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை முழுமையாக அருளினான். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மஅகில்(ரலி) அவர்களை அழைத்து (அந்த வசனத்தை) அவருக்கு முன் ஓதிக் காட்டினார்கள். எனவே, அவர் தம் பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.89

5332. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி) தம் மனைவியை அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு(ப் பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்:

அவர் தம் மனைவியைத் திருப்பி அழைத்துக்கொள்ளவேண்டும். பிறகு மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும் வரை காத்திருந்துவிட்டு, அவர் அவளைத் தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னால் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்) தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.

இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இது குறித்து வினவப்பட்டால் 'உன் மனைவியை நீ மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணந்து (உடலுறவு) கொள்ளும் வரை அவள் உனக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்'' என்று பதிலளிப்பார்கள்.

மற்றோர் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது:

இப்னு உமர்(ரலி) 'நீ ஒரு முறை, அல்லது இருமுறை தலாக் சொல்லியிருந்தால் (அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ளலாம்). இவ்வாறு (திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு) தான் நபி(ஸல்)அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்'' என்று கூறுவார்கள். 90

பகுதி 45

மாதவிடாயிலிருக்கும்(போது மணவிலக்கு அளிக்கப்பட்ட) பெண்ணைத் திரும்ப அழைத்துக்கொள்வது.

5333. யூனுஸ் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (மாதவிடாயிலிருக்கும் மனைவியை மணவிலக்குச் செய்வது குறித்துக்) கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் மாதவிடாயிலிருந்த என் மனைவிக்கு மணவிலக்கு அளித்தேன். எனவே, (என் தந்தை) உமர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்து) வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அவள் 'இத்தா'வை எதிர்கொள்வதற்கேற்ற (வகையில் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த) நேரத்தில் (விரும்பினால்) அவர் தலாக் சொல்லட்டும் என அவருக்கு உத்தரவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'அது ஒரு தலாக்காகக் கருதப்படுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?' என்று கேட்டார்கள்.91

பகுதி 46

கணவன் இறந்த பெண் நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கம் கடைப்பிடிப்பாள்.92

ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்

கணவன் இறந்த (பருவமடையாத) சிறுமி நறுமணம் பூசலாமென்று நான் கருதவில்லை. ஏனெனில், அவளுக்கும் (பருவமடைந்த பெண்ணைப் போன்றே) 'இத்தா' இருக்கும் கடமையுள்ளது.

ஹுமைத் இப்னு நாஃபிஉ(ரஹ்) கூறினார்

(பின்வரும்) இந்த மூன்று ஹதீஸ்களையும் (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகளான) ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) எனக்கு அறிவித்தார்கள்.

5334. ஸைனப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) அவர்களிடம், அவரின் தந்தை அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) (ஷாம் நாட்டில்) இறந்துவிட்ட சமயம் சென்றேன்.

அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா(ரலி) மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டு வருமாறு கூறி அதனை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரண்டு கன்னங்களிலும் தடவினார்கள். பின்னர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக்கேட்டுள்ளேன். (எனவேதான் இப்போது நறுமணம் பூசினேன்.)'' என்றார்கள். 93

5335. ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பிறகு, 'இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன்'' என்றார்கள்.94

5336. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'விலிருக்கும்) என் மகளின் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ளலாமா?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'வேண்டாம்' என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் வேண்டாம்' என்றே கூறினார்கள். பிறகு, '(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) 'இத்தா'க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் தாம். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் (கணவன் இறந்தபின்) மனைவி (ஓராண்டு 'இத்தா' இருப்பாள்.) ஆண்டின் முடிவில் ('இத்தா' முடிந்ததன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவான். (அந்த நிலை இப்போது இல்லை)'' என்றார்கள்.

5337. ஹுமைத் இப்னு நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

நான் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம், 'ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள்'' என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு தன் ஆடைகளிலேயே மிகவும் மேசாமானதை அணிந்துகொள்வாள். ஓராண்டு செல்லும் வரை எந்த நறுமணத்தையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று அவளிடம் கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அவளுடைய உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருப்பது அரிதேயாகும். பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கு முன்பக்கத்தில்) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே 'இத்தா' முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்றவற்றையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'தஃப்தள்ளு பிஹி' (அதன் மீது தேய்த்துக் கொள்வாள்) எனும் சொற்றொடரின் கருத்தென்ன?' என்று மாலிக்(ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர்கள், 'அந்தப் பெண் அந்த உயிரினத்தின் மீது தன் உடலைத் தேய்த்துக்கொள்வாள்' என்று (பொருள்) கூறினார்கள்.

பகுதி 47

(கணவனை இழந்து) துக்கம் கடைப்பிடிக்கும் பெண் (கண்ணில்) அஞ்சனம் தீட்டிக்கொள்வது (கூடாது).

5338. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்'' என்று கூறினார்கள்.

5339. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும், இறந்த ஒருவருக்கு மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!

இதை (அன்னை) உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

5340. உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்

கணவருக்காகத் தவிர (வேறு யாருடைய இறப்புக்காகவும்) மூன்று நாள்களுக்கு அதிகமாகத் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

இதை முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்.

பகுதி 48

(கணவனை இழந்து) துக்கம் கடைப்பிடிக்கும் பெண் (மாதவிடாயிலிருந்து) தூய்மை அடையும்போது கோஷ்டக் கட்டையால் (குஸ்த்) நறுமணப் புகையிடுதல் (செல்லும்).95

5341. உம்மு அத்திய்யா(ரலி) கூறினார்

இறந்த எவருக்காகவும் மூன்று நாள்களுக்கு மேல் நாங்கள் துக்கம் கடைப்பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!

(அதாவது 'இத்தா'வில் இருக்கும்போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக் கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக்கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); ஆனால், நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ('அஸ்ப்' எனும்) ஆடை தவிர! எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து குளித்துத் தூய்மையடையும்போது 'ழஃபார்' எனும் இடத்தில் கிடைக்கும் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக் கொள்ள எங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாதென்றும் தடை விதிக்கப்பட்டிருந்தோம்.96

அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.)

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'குஸ்த்' (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுகிறது. 'காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல் (ஃகாபூர், காஃபூர்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. மேலும், (இதிலுள்ள) 'நுப்ஃதத்' எனும் சொல்லுக்குத் துண்டு' என்று பொருள்.

பகுதி 49

துக்கம் கடைப்பிடிக்கும் பெண், நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ('அஸ்ப்' எனும்) ஆடையை அணியலாம், 97

5342. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; கணவனுக்காகத் தவிர! ஏனெனில், (கணவன் இறந்த) அவள் (நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கம் கடைப்பிடிப்பாள். அப்போது) அஞ்சனம் தீட்டிக்கொள்ள மாட்டாள். சாயமிடப்பட்ட ஆடையை அணியமாட்டாள்; நெய்வதற்கு முன் நூலில் சாயமிட்டுத் தயாரிக்கப்பட்ட ('அஸ்ப்' எனும்) ஆடையைத் தவிர!

என உம்முஅத்திய்யா(ரலி) அறிவித்தார்.

5343. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்

(கணவன் இறந்து இத்தாவிலிருக்கும் பெண்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர! அப்போது 'குஸ்த்' மற்றும் 'ழஃபார்' ஆகிய கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ளலாம்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'குஸ்த்' (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுகிறது 'காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல் (ஃகாபூர், காஃபூர்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. 98

பகுதி 50

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு இறந்துபோயிருந்தால், அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள். தங்கள் தவணையின் இறுதியை அவர்கள் எட்டிவிட்டால், தங்களின் விஷயத்தில் முறையோடு அவர்கள் செய்து கொள்கிற (அலங்காரம் முதலான)வற்றில் (தலையிடாமல் இருப்பதால்) உங்களின் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் செய்கிறவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 02:234 வது இறைவசனம்).

5344. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

''உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு இறந்து போயிருந்தால், அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:234 வது) வசனத்தின் கருத்தாவது:

(கணவன் இறந்த) அந்தப் பெண் (நான்கு மாதம் பத்து நாள்கள் காத்திருத்தல் எனும்) இந்த 'இத்தா'வைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பாரமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது'' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம் பத்து நாள்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம் இருபது நாள்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாள்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவன் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாள்களுக்குப் பின்) வெளியேறிக் கொள்ளலாம். இதைத்தான் 'வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றை செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:240 வது) வசனம் குறிக்கிறது. ஆக, (நான்கு மாதம் பத்து நாள்கள் எனும்) 'இத்தா'க் கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.

(எனவே, 02:234 வது வசனம், 02:240 வது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித்(ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீ நஜாஹ்(ரஹ்) கூறினார்.

''இந்த வசனம் (திருக்குர்ஆன் 02:240), அவள் தன்னுடைய கணவன் வீட்டில்தான் இருக்கவேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் 'இத்தா' இருப்பாள். இதையே இந்த (திருக்குர்ஆன் 02:240 வது) வசனத் தொடர் குறிக்கிறது'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள்.

(இதைத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ(ரஹ்) கூறினார்

அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் 'இத்தா' இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க் கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறினான்: ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிறவற்றைச் செய்துகொண்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ(ரஹ்) கூறினார்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12 வது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்துதர கணவன் சாசனம் செய்ய வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் 'இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.99

5345. ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்

தம் தந்தை (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரண்டு கைகளிலும் தடவினார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இலை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர'' என்று சொல்லக் கேட்டுள்ளேன். 100

பகுதி 51

விலைமாதின் வருமானமும், செல்லாத திருமணமும். 101

''ஒருவர் தமக்கு மணமுடிக்கத் தடை செய்யப்பட்டுள்ள பெண்ணைத் தம்மை அறியாமல் மணந்துகொண்டால் அவர்கள் இருவரும் பிரித்துவைக்கப்படுவர். மண ஒப்பந்தத்தின்போது முடிவு செய்யப்பட்ட மணக்கொடை (மஹ்ர்) அவளுக்குக் கிடைக்கும்; வேறெதுவும் கிடைக்காது'' என்று ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) கூறினார்கள். பிறகு (அக்கருத்திலிருந்து மாறி) அவளுக்கு (நிகரான பெண்களுக்குத் தரப்படும்) நிகர மணக்கொடை (மஹ்ருல் மிஸ்ல்) உண்டென்று கூறினார்கள்.

5346. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாய் விற்ற காசு, சோதிடனின் தட்சணை, விபசாரியின் வருமானம் ஆகியவற்றுக்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். 102

5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103

5348. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

அடிமைப் பெண்கள் (விபசாரம் போன்ற தகாத வழிகளில்) பொருளீட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

பகுதி 52

தாம்பத்திய உறவு கொள்ளப்பட்ட பெண்ணுக்குரிய மணக்கொடை, தாம்பத்திய உறவு தீர்மானிக்கப்படும் முறை, தாம்பத்திய உறவுக்கு முன் மணவிலக்கு அளித்தல் (ஆகியன குறித்த சட்டம்).104

5349. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'ஒருவர் தம் மனைவியின் மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன?)'' என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்:

அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை நபி(ஸல்) அவர்கள் பிரித்து வைத்துவிட்டு, 'உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்க, (தம்பதியர்களான) அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகும் நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்க, அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தனர். எனவே, (தம்பதியரான) அவர்கள் இருவரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப்(ரஹ்) கூறினார்:

என்னிடம் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) 'இந்த ஹதீஸில் ஒரு விஷயத்தைத் தாங்கள் சொல்லவில்லை என்றே கருதுகிறேன்'' என்று கூறிவிட்டு, பிறகு அவர்களே (பின்வருமாறு) கூறினார்கள்: (தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டிய) அந்த மனிதர் '(மஹ்ராக நான் அளித்த) என் பொருள் (என்ன ஆவது?)'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(உம்முடைய குற்றச் சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர். (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அச்செல்வம் (மஹ்ர்) உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது'' என்று கூறினார்கள். 105

பகுதி 53

மணக்கொடை (மஹ்ர்) நிர்ணயிக்கப்படாத பெண்ணுக்கு உதவித் தொகை (முத்ஆ) வழங்குதல்.

ஏனெனில் மேன்மைமிக்க அல்லாஹ் கூறினான்:

பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களின் மணக்கொடையை நிர்ணயிப்பதற்கு முன் தலாக் சொன்னால் உங்களின் மீது குற்றமில்லை. (இந்நிலையில்) வசதியுள்ளவர் தன் தகுதிக்கேற்றவாறும், ஏழை தன் தகுதிக்கேற்றவாறும் அவர்களுக்குப் பயனுள்ள ஏதேனும் பொருட்களை (உதவித் தொகையை) நல்ல முறையில் வழங்கிட வேண்டும். (இது) நல்லோர் மீது கடமையாகும். (திருக்குர்ஆன் 02:236, 237)

மேலும், மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்களுக்கு (கணவனிடமிருந்து) முறையான பராமரிப்புப் பெற உரிமையுண்டு. (இது) தீமையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வோர் மீது கடமையாகும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு விளக்கிக் காட்டுகிறான். (திருக்குர்ஆன் 02:241, 242)

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யப்பட்ட பெண்ணை, அவளுடைய கணவர் தலாக் சொன்னபோது உதவித் தொகை (முத்ஆ) வழங்கிடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை.106

5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்'' என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), 'இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது'' என்று கூறினார்கள்.

அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது'' என்று கூறினார்கள். 107
أحدث أقدم