ஸூரத்துல் பய்யினா

அத்தியாயம் - 98

ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்)
(வசனங்கள் - 08, மதனி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

98:1. வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.

98:2. (அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).

98:3. அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

98:4. எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.

98:5. ''அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.””

98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

98:7. நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.

98:8. அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

أحدث أقدم