ஸூரத்து ஃகாஃப்

அத்தியாயம் - 50

ஸூரத்து ஃகாஃப்
(வசனங்கள் - 45, மக்கி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

50:1. காஃப், கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக!

50:2. எனினும்; அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சாரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்; ''இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.””

50:3. ''நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது”” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).

50:4. (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.

50:5. இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.

50:6. அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

50:7. மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.

50:8. (இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.

50:9. அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.

50:10. அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரிச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).

50:11. (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.

50:12. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.

50:13. 'ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).

50:14. (அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.

50:15. எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.

50:16. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

50:17. (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-

50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.

50:19. மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)

50:20. மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சுறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.

50:21. அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.

50:22. ''நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.”” (என்று கூறப்படும்).

50:23. அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) ''இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது”” என்று கூறுவார்.

50:24. ''மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.

50:25. ''(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.

50:26 ''அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்”” (என்றுங் கூறப்படும்).

50:27. (அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; ''எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-””

50:28. ''என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்”” என்று (அல்லாஹ்) கூறுவான்.

50:29. (எனவே என்னுடைய) அச்சொல் ''என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்”” (என்றும் அல்லாஹ் கூறுவான்).

50:30. நரகத்தை நோக்கி, ''நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது ''இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?”” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!

50:31. (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.

50:32. ''இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).””

50:33. எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).

50:34. ''ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும்”” (என்று கூறப்படும்).

50:35. அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.

50:36. அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாளிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலிரும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?

50:37. எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.

50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.

50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.

50:40. இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.

50:41. மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.

50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.

50:43. நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.

50:44. பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.

50:45. அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக.

أحدث أقدم