பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது

நாம் வாழும் இந்த பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

மனிதன் தோன்றிய வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆராய்ந்து பார்த்தால் கடைசியாக ஒரே ஒரு மனிதனைத்தான் போய் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது அகில உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஒரே ஒரு தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் உணர முடியும்.

எல்லா மனிதர்களும் ஒரு தாய் மக்களே, எல்லோரும் சகோதரர்களே, மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் சமம். அவர்களிடையே எந்தவித பாகுபாடும் கிடையாது. ஒருவருக்கொருவர் மனிதநேயத்தோடும் அன்போடும் பாசத்தோடும் வாழவேண்டும்.

இந்த உண்மையை 1400 வருடங்களுக்கு முன்னரே பரிசுத்தக் குர்ஆனில் இவ்வாறு இறைவன் கூறுகிறான்.

மனிதர்களே! ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் எல்லோரையும் நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 49:13)

மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்கள் எல்லோரையும் படைத்து, வளர்த்து, காத்து, பரிபாலித்து, இரட்சிக்கின்ற இறைவனை மட்டும் அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4:1)

அந்த இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (அல்குர்ஆன் 4:36)

அந்த இறைவனாகிய அல்லாஹ் ஒருவன்தான். அவன் தேவையற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை. யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகர் யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-5)

மனிதனுக்கு மேலாக ஒரு சர்வ வல்லமை பெற்ற மிகப்பெரிய சக்தி ஒன்று உண்டு என்று பகுத்தறிவு உணர்த்துகிறது. ஆன்மீகத்தை நம்புகின்ற அனைவருமே இதனை இறைவன் என்று ஒப்புக்கொள்கின்றனர். சிந்தனையை சற்று ஆழமாகச் செலுத்தும் போது இறைவனைப் பற்றி உள்ளம் கேள்விகள் பல எழுப்புகின்றன.

யார் இந்த இறைவன்? அவன் ஒருவனா? இருவர்களா? மூவர்களா? அல்லது அதற்கு அதிகமானோரா? இறைவன் என்பவனின் குணாதிசயங்கள் என்னென்ன? அவனுடைய பண்புகள் என்ன? அவனைப் பார்க்க முடியுமா? அவனுடைய சக்திகள்தான் என்ன? அவன் குறிப்பிட்ட நாட்டிற்கு, குறிப்பிட்ட மக்களுக்கு, குறிப்பிட்ட பூமிக்கு மட்டும் தான் இறைவனா? அல்லது எல்லோருக்கும், எல்லா நாட்டவருக்கும், எல்லா உயிரினங்களுக்கும், எல்லா கிரகணங்களுக்கும் அவன் ஒருவன்தான் இறைவனா? என்பன போன்ற கேள்விகள் பல எழுகின்றன.

மனிதனுக்குறிய சிறப்பம்சமே பகுத்தறிவு தான். எனவே இந்த பகுத்தறிவை நாம் பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டறியலாமே! பகுத்தறிவை நாம் பயன்படுத்தும் போது இறைவன் எத்தனை என்ற கேள்விக்கு முதலில் விடை கிடைக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை நினைக்க, அதனை செயல்படுத்த விரும்பினால் - ஒரு கடவுள் ஒருவரை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அவரை மேம்படுத்தவும் முனைந்தால்-முடிவு?! எனவே பகுத்தறிவு சொல்கிறது ஒரே அதிகார மையம், ஒரே சக்தி, ஒரே இறைவன்.

மனிதனைப் போன்றே கடவுளும் இருந்தால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல் போய்விடுமே!? நமக்குறிய பலவீனங்கள் அவரிடமும் இருந்துவிடுமே!? எனவே இறைவன் நம்மிடமிருந்து மாறுபட்டுத்தான் இருக்க வேண்டும் என்று நமது பகுத்தறிவு கூறுகிறதல்லவா? தயவு செய்து சிந்தனையை செலுத்துங்கள்.

1) நாம் உணவு உட்கொள்கிறோம். எனவே இறைவன் உணவு உட்கொள்ளாதவனாக இருக்க வேண்டும். மேலும் அவன் நமக்கு உணவு அளிப்பவனாக இருக்க வேண்டும்.

2) நாம் பிறரிடத்தில் தேவையுடையவராக இருக்கிறோம். இறைவன் எவரிடமும் தேவையற்றவனாக இருக்கவேண்டும்.

3) நாம் தாயின் வயிற்றில் பிறக்கின்றோம், எனவே இறைவன் தாய், தந்தை இல்லாதவனாக இருக்க வேண்டும். அவன் யாராலும் பெறப்படாதவனாகவும் யாரையும் பெற்றெடுக்காதவனாகவும் இருக்க வேண்டுமல்லவா?

4) நமக்கு மரணம் உண்டு, எனவே இறைவன் மரணமடையாதவனாக - நித்திய ஜீவனான- இருக்க வேண்டும்.

5) நாம் ஓய்வு எடுக்கின்றோம். உறங்குகின்றோம். உழைப்பிற்குப் பிறகு நமக்கு களைப்பு ஏற்படுகிறது. நமக்கு மாற்றமாக இறைவன் ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக, களைப்பற்றவனாக இருக்க வேண்டும்.

6) நமக்கு அழிவு ஏற்படுகின்றது. எனவே இறைவன் அழியாதவனாக (என்றும் நிலைத்தவனாக) இருக்கவேண்டும்.

7) நாமும் ஏனய பொருட்களும் படைக்கப்பட்டவைகளே! எனவே இறைவன் படைக்கப்படாதவனாக அதே சமயம் அனைத்தையும் அனைவரையும் படைத்தவனாக இருக்க வேண்டும்.

8) நாளை நடப்பதை நாம் அறியமுடியாது. ஆனால் இறைவன் நாளை நடப்பதை அறிபவனாக இருக்க வேண்டும். மறைவானவற்றின் மீது அவனுக்கு முழு அறிவு இருக்க வேண்டும்.

9) நாம் நினைப்பதையெல்லாம் நம்மால் செயல்படுத்த முடியாது. எனவே இறைவன் (நமக்கு மாற்றமாக) அவன் நினைத்ததை முடிப்பவனாக இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட இறைவன் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பகுத்தறிவு எப்படி எதிர்பார்க்கிறது?!

இறைவன் கருணையாளனாக, அன்பானவனாக இருக்கவேண்டும். நாம் நன்மை செய்தால் நமக்கு பரிசளிக்கவும் நாம் தீமை செய்தால் நம்மை தண்டிக்கும் குணங்களைப் பெற்றிக்க வேண்டும். செய்த தீமைகளுக்கு மனம் வருந்தினால் நம்மை மன்னிக்கும் குணம் உடையவனாகவும் இருக்கவேண்டும். நமக்கோ பாதுகாப்புத் தேவைப்படுகிறது. எனவே இறைவன் பாதுகாப்புத் தேவைப்படாதவனாக அதேநேரம் நமக்கு பாதுகாப்பு அளிப்பவனாக இருக்க வேண்டும்.

அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ, மொழியினருக்கோ, ஜாதியினருக்கோ, நாட்டினருக்கோ மட்டும் இறைவனாக இல்லாமல் மனித குலம் முழுமைக்கே இறைவனாக இருக்கவேண்டும். நம் தோற்றத்தையோ, மொழியையோ, குலத்தையோ பார்க்காமல் நம் உள்ளத்தை - நம் செயல்களை பார்ப்பவனாக, எடை போடுபவனாக- இருக்க வேண்டும். தீமை செய்து, அட்டூழியம் செய்து மனித உரிமைiளை மீறுபவர்களுக்கு அவர்கள் இறந்து விட்டாலும் கூட, பின்பு எழுப்பி விசாரணை செய்து தண்டனையளிப்பவனாக இருக்கவேண்டும். எந்நிலையிலும் நீதி தவறாதவனாக இருக்க வேண்டும். நம்மைப் படைப்பவனாக, பரிபாலிப்பவனாக இருக்கவேண்டும். நமக்கு நேர்வழி காட்டுபவனாக இருக்கவேண்டும். நமக்கு ஒரு தெளிவான வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துத் தருபவனாக இருக்கவேண்டும். இவ்வாறு இறைவனைப் பற்றிய சிந்தனையை பகுத்தறிவு விவரிக்கிறது.

இப்படி பகுத்தறிவுக்கு மாற்றமில்லாத ஒரே ஒரு இறைவனைத்தான் இஸ்லாம் அறிமுகம் செய்கிறது.

இஸ்லாம்;

1. இது ஒரு மதமல்ல. ஒரு அழகிய மார்க்கம்.

2. இது மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இறைவனால் அருளப்பட்டது.

3. சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டதல்ல. சிந்திக்கவும் பகுத்தறிவைப் பயன்படுத்தவும் தூண்டும் வற்புறுத்தும் ஒரு நெறி.

4. வன்முறைக்கும் துவேசத்திற்கும் இங்கு இடமேயில்லை. மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்பது இதன் அடிப்படைக்கொள்கை.

5. ஜாதி, இன, மொழி வேறுபாடுகள் இங்கில்லை. ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமையப்பெற்றது. உயர்வு தாழ்வுகள், மேல்ஜாதி கீழ்ஜாதி, ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி, படித்தவன் பாமரன் போன்ற வேறுபாடுகளை ஓரம்கட்டிவிட்டு நல்லவன் தீயவன் என்ற அடிப்படையிலேயே அணுகும் ஒரு மார்க்கம்.

6. வெறும் சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டுள்ள மதமன்று. இதுஒரு அழகான முழு வாழ்க்கைத் திட்டம்.

7. உலகின் மனித குலத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கும் ஒரு நீதித்திட்டம், பொருளாதாரக் கோட்பாடு, சட்ட இயந்திரம்.

8. பொய், களவு, சூது, மது, விலைமாது, லஞ்சம் லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப் பாசறை.

9. மனித உரிமைகளை நிலைநிறுத்தும் ஒருமிகப் பெரிய வழிமுறை. விஞ்ஞானம் இதற்கு எதிரல்ல. இஸ்லாம் ஒரு விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறை மார்க்கம் தான்.

10. சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்தி மனிதன் மனிதனாக வாழ்வதற்கும், சாந்தி சமாதானம் அடைவதற்கும் வழிகாட்டும் வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்...
அன்பு சகோதரர்களே!

அறிவுப்பூர்வமாக தயவு செய்து சிந்தியுங்கள். உங்கள் இறைவனைப் பற்றி நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் ஏன் அறிய முற்படக்கூடாது? இஸ்லாம் தந்துள்ள அறிவுப்பெட்டகமான குர்ஆனை நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்கூடாது? ஒரு முயற்சி செய்யுங்களேன்.

உங்களை அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறோம். உங்கள் பகுத்தறிவு பயன்படட்டுமே!

அல்லாஹ்வாகிய இறைவன் அவன் ஒருவனே! அவன் எந்த தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை. யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுங்கள். (திருக்குர்ஆன் 112:1-5)
Previous Post Next Post