ஸூரத்துல் கஹ்ஃபு

அத்தியாயம் - 18

ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)
(வசனங்கள் - 110, மக்கி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

18:1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.

18:2. அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).

18:3. அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

18:4. அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).

18:5. அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.

18:6.  (நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!

18:7. (மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

18:8.  இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.

18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ,

18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ''எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”” என்று கூறினார்கள்.

18:11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

18:12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

18:13. (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று ''வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்”” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

18:15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

18:16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

18:17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

18:18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

18:19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) ''நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?”” எனக் கேட்டார்; ''ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்”” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) ''நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வௌ்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்”” (என்றும் கூறினர்).

18:21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) ''இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) ''இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; ''நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்”” என்று கூறினார்கள்.

18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்”” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) ''ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்”” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்”” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறு எதும் பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

18:23. (நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் ''நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்”” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.

18:24. ''இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்”” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கள் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக் இன்னும், ''என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்”” என்றும் கூறுவீராக!

18:25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.

18:26. ''அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை”” என்று (நபியே!) நீர் கூறும்.

18:27. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.

18:28. (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.

18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக ''இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது”” ஆகவே, விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

18:30. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.

18:31. அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.

18:32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவாரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரித்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.

18:33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.

18:34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக ''நான் உம்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்”” என்று கூறினான்.

18:35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், ''இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை”” என்றும் கூறிக் கொண்டான்.

18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்”” என்றும் கூறினான்.

18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக ''உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?”” என்று அவனிடம் கேட்டான்.

18:38. ''ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -

18:39. ''மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது 'மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -

18:40. ''உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.

18:41. ''அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்”” என்று கூறினான்.

18:42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் ''என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!”” என்று கூறினான்.

18:43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.

18:44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.

18:45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! ''அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன் ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.

18:47. (நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.

18:48. அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்”” (என்று சொல்லப்படும்).

18:49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ''எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பொரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்க வில்லையே!”” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.

18:50. அன்றியும், ''ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்”” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

18:51. வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

18:52. ''எனக்கு இணையானவர்கனெ எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.””

18:53. இன்னும், குற்றவாளிகள்; (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.

18:54. இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.

18:55. மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.

18:56. இன்னும், நாம் தூதர்களை நன்மாரங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

18:57. எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு  போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.

18:58. (நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.

18:59. மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.

18:60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், ''இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்”” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.

18:61. அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.

18:62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, ''நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்”” என்று (மூஸா) கூறினார்.

18:63. அதற்கு ''அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நாம் மீனை மறந்து விட்டேன்.”” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!”” என்று பணியாள் கூறினார்.

18:64. (அப்போது) மூஸா, ''நாம் தேடிவந்த (இடம் அ)துதான்”” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.

18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.

18:66. ''உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவாரிடம் மூஸா கேட்டார்.

18:67. (அதற்கவர்,) ''நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!”” என்று கூறினார்.

18:68. ''(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!”” (என்று கேட்டார்.)

18:69. (அதற்கு) மூஸா, ''இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்”” என்று (மூஸா) சொன்னார்.

18:70. (அதற்கு அவர்) ''நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது”” என்று சொன்னார்.

18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; ''இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்”” என்று (மூஸா) கூறினார்.

18:72. (அதற்கு அவர்,) ''நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.

18:73. ''நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்”” என்று (மூஸா) கூறினார்.

18:74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) ''கொலைக்குற்றமின்றி, பாரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள்!”” என்று (மூஸா) கூறினார்.

18:75. (அதற்கு அவர்) ''நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?”” என்று கூறினார்.

18:76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்”” என்று கூறினார்.

18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) ''நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே”” என்று (மூஸா) கூறினார்.

18:78. ''இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்”” என்று அவர் கூறினார்.

18:79. ''அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.

18:80. ''(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.

18:81. ''இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

18:82. ''இனி (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தாமான புதையல் உள்ளது அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார் எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்”” என்று கூறினார்.

18:83. (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; ''அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்”” என்று நீர் கூறுவீராக.

18:84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும்  (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

18:85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.

18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ''துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்”” என்று நாம் கூறினோம்.

18:87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; ''எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.”” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.

18:88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.

18:89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:90 அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.

18:91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை.

18:94. அவர்கள் ''துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?”” என்று கேட்டார்கள்.

18:95. அதற்கவர்; ''என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”” என்று கூறினார்

18:96. ''நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்”” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ''உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”” (என்றார்).

18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

18:98. ''இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே”” என்று கூறினார்.

18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.

18:100. காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரப்பாக பரப்பி வைப்போம்.

18:101. அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.

18:102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

18:103. ''(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.

18:105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.

18:106. அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

18:107. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.

18:108. அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.

18:109. (நபியே!) நீர் கூறுவீராக ''என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சாரி!””

18:110. (நபியே!) நீர் சொல்வீராக ''நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.””

أحدث أقدم