ஸூரத்துத் யூனுஸ்

அத்தியாயம் - 10

ஸூரத்துத் யூனுஸ் (யூனுஸ் நபி)
(வசனங்கள் - 109, மக்கி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

10:1. அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

10:2. மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, ''நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே”” என்று கூறுகின்றனர்.

10:3. நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

10:4. நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.

10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.

10:6. நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

10:7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -

10:8. அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.

10:9. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.

10:10. அதில் அவர்கள்; ''(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்”” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். ''எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே”” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.

10:11. நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைதக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.

10:12. மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்ககாதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.

10:13. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.

10:14. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.

10:15. அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ''இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்”” என்று கூறுகிறார்கள். அதற்கு ''என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

10:16. ''(இதை நான் உஙக்ளுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நாம் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?”” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

10:17. அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

10:18. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ''இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை”” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ''வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்”” என்று கூறும்.

10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.

10:20. ''மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?”” என்று கூறுகிறார்கள். அதற்கு ''மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

10:21. மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; ''திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்”” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)”” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், ''நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்”” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.

10:23. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்கெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறுது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.

10:24. இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றனர்; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்; (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்

10:25. மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.

10:26. நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

10:27. ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.

10:28. (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி; ''நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்”” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்”” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை”” என்று கூறிவிடும்.

10:29. ''நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்”” (என்றும் அவை கூறும்).

10:30. அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.

10:31. ''உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?”” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்”” என பதிலளிப்பார்கள்; ''அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?”” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்ள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

10:33. பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.

10:34. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக் அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

10:35. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக் அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.

10:36. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.

10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!”” என்று.

10:39. அப்படியல்ல் அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.

10:40. அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.

10:41. உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.

10:42. இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?

10:43. உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?

10:44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.

10:45. அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.

10:46. (உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.

10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

10:48. ''நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)”” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

10:49. (நபியே!) நீர் கூறும்; ''அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.””

10:50. (நபியே!) நீர் கூறுவீராக் ''அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?

10:51. ''அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது”” (என்று தான் கூறப்படும்).

10:52. அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; ''என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?”” என்று கூறப்படும்.

10:53. மேலும் ''அது உண்மை தானா?”” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; ''ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது”” என்று கூறுவீராக.

10:54. (அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.

10:55. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாரோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.

10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படவீர்கள்.

10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

10:58. ''அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது”” என்று (நபியே!) நீர் கூறும்.

10:59. (நபியே!) நீர் கூறும்; ''அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?””

10:60. அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

10:61. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், ''குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.

10:62. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

10:63. அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.

10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவெ மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

10:65. (நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லனையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

10:66. அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின் பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.

10:67. நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

10:68. அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?

10:69. ''அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்”” என்று (நபியே!) கூறிவிடும்.

10:70. உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.

10:71. மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாதை நோக்கி, ''என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம்செய்ய வேண்டாம்”” என்று கூறினார்.

10:72. ''ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவெரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்”” (என்று கூறினார்.

10:73. அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

10:74. அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.

10:75. இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.

10:76. நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, ''நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்”” என்று கூறினார்கள்.

10:77. அதற்கு மூஸா; ''உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்”” என்று கூறினார்.

10:78. (அதற்கு) அவர்கள்; எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்”” என்று கூறினார்கள்.

10:79. ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) ''தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்”” எனக் கூறினான்.

10:80. அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், ''நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்”” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.

10:81. அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா; ''நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்”” என்று கூறினார்.

10:82. இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).

10:83. ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.

10:84. மூஸா (தம் சமூகத்தவாரிடம்); ''என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லீம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்”” என்று கூறினார்.

10:85. (அதற்கு) அவர்கள்; ''நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!”” என்று பிரார்த்தித்தார்கள்.

10:86. ''(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!”” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)

10:87. ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்; ''நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!”” என்று வஹீ அறிவித்தோம்.

10:88. இன்னும்; ''எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ  ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்”” என்று மூஸா கூறினார்.

10:89. இறைவன் கூறினான்; ''உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்”” என்று.

10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்”” என்று கூறினான்.

10:91. ''இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”” (என்று அவனிடம் கூறப்பட்டது).

10:93. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியனரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதை பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.

10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.

10:95. அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.

10:96. நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.

10:97. நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கௌ்ள மாட்டார்கள்.).

10:98. தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.

10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?

10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

10:101. ''வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்”” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக் எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக் மாட்டா.

10:102. தங்களுக்குமுன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

10:103. (அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவாகளையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்,

10:104. ''மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேம்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

10:105. நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.

10:106. உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடவீர்.

10:107. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.

10:108. (நபியே!) நீர் கூறுவீராக் ''மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.””

10:109. (நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.


أحدث أقدم