அத்தியாயம் - 36
ஸூரத்து யாஸீன்
(வசனங்கள் - 83, மக்கி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
36:1. யாஸீன்.
36:2. ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
36:3. நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
36:4. நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
36:5. (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
36:6. எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
36:7. இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
36:9. இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
36:10. இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
36:13. (நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
36:14. நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, ''நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்”” என்று அவர்கள் கூறினார்கள்.
36:15. (அதற்கு அம்மக்கள்;) ''நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை”” என்று கூறினார்கள்.
36:16. (இதற்கு அவர்கள்;) ''நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்”” என்று கூறினர்.
36:17. ''இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை”” (என்றும் கூறினார்).
36:18. (அதற்கு அம்மக்கள்;) கூறினார்கள்; ''நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.””
36:19. அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்; ''உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
36:20. (அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); ''என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்”” என்று கூறினார்.
36:21. ''உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்”” (என்றும் அவர் கூறினார்).
36:22. ''அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
36:23. ''அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.
36:24. ''(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
36:25. ''உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.””
36:26. (ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) ''நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. ''என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.””
36:27. ''என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்”” (என்பதை).
36:28. தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
36:29. ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
36:30. அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பாரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
36:31. ''அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள்”” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
36:32. மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:34. மேலும், அதில் நாம் பேரித்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் வித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்து வளைந்த) பழைய பேரித்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
36:44. நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
36:45. ''இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்”” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும்
36:46. அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புற்ககணிக்காமல் இருப்பதில்லை.
36:47. ''அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்”” என்று அவர்களிடம் கூறப்பட்டால், ''அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்”” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
36:48. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; ''நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?”” என்று.
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
36:51. மேலும், ஸூர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:52. ''எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?”” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்”” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
36:53. ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
36:54. அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதம் அநியாயம் செய்யப்பட மாட்டாது இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
36:55. அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்தவர்களாக இருப்பார்கள்.
36:57. அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்க அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
36:58. 'ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
36:59. அன்றியும்; ''குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்”” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:60. ''ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்மான பகைவன்”” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. ''என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:62. ''அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
36:63. ''இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.
36:64. ''நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்”” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
36:76. (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பபதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”” என்று.
36:79. ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80. ''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்”” (ஆகிவிடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.