அத்தியாயம் - 25
ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
(வசனங்கள்-77, மக்கி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
25:2. (அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
25:3. (எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மரிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.
25:4. ''இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்”” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; ''இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.””
25:6. (நபியே!) ''வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்”” என்று கூறுவீராக!
25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; ''இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?””
25:8. ''அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா?”” (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) ''சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை”” என்றும் கூறுகிறார்கள்.
25:9. (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.
25:10. (நபியே!) இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
25:11. எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர் ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
25:12. (அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
25:13. மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
25:14. ''இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்”” (என்று அவர்களிடம் கூறப்படும்).
25:15. அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்”” என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும்.
25:16. ''அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.””
25:17. அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) ''என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?”” என்று (இறைவன்) கேட்பான்.
25:18. (அதற்கு) அவர்கள் ''இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்”” என்று கூறுவர்.
25:19. நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்”” (என்று இறைவன் கூறுவான்).
25:20. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும்தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
25:21. மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்; ''எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?”” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
25:22. அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
25:23. இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
25:24. அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாகவும், சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
25:25. இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுக்கு கடுமையான நாளாகவும் இருக்கும்.
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?”” எனக் கூறுவான்.
25:28. ''எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?””
25:29. ''நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!”” (என்று புலம்புவான்.)
25:30. ''என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்”” என்று (நம்) தூதர் கூறுவார்.
25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
25:32. இன்னும்; ''இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?”” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.
25:33. அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.
25:34. எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.
25:35. மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
25:36. ஆகவே நாம், ''நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்”” என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.
25:37. இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
25:38. இன்னும் 'ஆது” 'ஸமூது” (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).
25:39. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.
25:40. இன்னும்; நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.
25:41. ''இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்”” (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.
25:42. ''நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்”” (என்றும் அவர்கள் கூறுகின்றனர் (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
25:43. தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
25:44. அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.
25:45. (நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
25:46. பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
25:47. அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.
25:48. இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
25:49. இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.
25:50. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.
25:51. மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
25:52. ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.
25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
25:54. இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
25:55. இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர் நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.
25:56. இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
25:57. ''அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நோ் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர”” என்று (நபியே!) நீர் கூறும்.
25:58. எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
25:59. அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
25:60. 'இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் ''அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?”” என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
25:61. வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
25:62. இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ''ஸலாம்”” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
25:64. இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
25:65. ''எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”” என்று கூறுவார்கள்.
25:66. நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
25:70. ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
25:71. இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார்.
25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)
25:74 மேலும் அவர்கள்; ''எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
25:75. பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியிலி) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.
25:76. அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.
25:77. (நபியே!) சொல்வீராக ''உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான் ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.””