அத்தியாயம் 5 குளித்தல்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 5
குளித்தல்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ் கூறினான்:

''...நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்யுங்கள். மேலும் நீங்கள் நோயாளிகாளவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலம் கழித்துவிட்டு வந்தால் அல்லது நீங்க பெண்களைத் தீண்டினால் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது சுத்தமான மண்ணால் உங்கள் முகங்களையும் உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டுத் தன்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.'' (திருக்குர்ஆன் 05:06)

மேலும் அல்லாஹ் கூறினான்:

''நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர். அன்றியும் குளிக்க வேண்டிய கடமை இருந்தாலும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகையை நெருங்காதீர் என்றாலும், குளிப்பு கடமையானவர் பள்ளிக்குள் கடந்து செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால்) பாதையாகக் கடந்து செல்பவர்களாகவே தவிர (பள்ளியில்) தங்காதீர்கள். மேலும் நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ மலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரைப் பெறாவிடில் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும் உங்களுடைய கைகளையும் தடவித் 'தயம்மும்' செய்து (தொழுது) கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.'' (திருக்குர்ஆன் 04:43)

பகுதி 1

குளிப்பதற்கு முன்னர் உளுச் செய்தல்

248. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளுச் செய்வது போல் உளுச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்'' ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

249. 'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளுச் செய்வது போன்று உளுச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

மனைவியுடன் குளித்தல்

250. 'ஃபரக்' என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(குறிப்பு: 'ஃபரக்' என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)

பகுதி 3

ஒரு 'ஸாஉ' அளவுள்ள தண்ணீரில் குளித்தல்

(குறிப்பு: 'ஸாஉ' என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்காகும்.)

251. 'நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் 'நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?' என்று கேட்டதற்கு, 'ஸாவு' போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தம் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது' என்று ஆயிஷா(ரலி) கூறினார்'' என அபூ ஸலமா அறிவித்தார்.

252. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, 'ஒரு ஸாவு' அளவு தண்ணீர் போதும்' என்று கூறினார். அப்போது ஒருவர் 'அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது' என்றதற்கு, 'உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த (நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது' என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்'' என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.

253. 'நபி(ஸல்) அவர்களும் (அவர்களின் மனைவி) மைமூனா(ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''மற்றோர் அறிவிப்பில் ஒரு 'ஸாவு' அளவுள்ள பாத்திரம்'' என்று கூறப்பட்டுள்ளது.

பகுதி 4

தலையில் மூன்று முறை தண்ணீரை ஊற்றுதல்

254. 'நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்'' என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

255. 'நபி(ஸல்) அவர்கள் (குளிக்கும் போது) மூன்று முறை தங்கள் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

256. 'உன் தந்தையின் சகோதரர் மகனான ஹஸன் இப்னு முஹம்மத் இப்னி அல்ஹனஃபிய்யா என்னிடம் கடமையான குளிப்பு எப்படி? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத் தங்களின் தலையில் ஊற்றுவார்கள் பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் எனக் கூறினேன். அப்போது 'நான் அதிகமான முடியுடையவனாக இருக்கிறேனே?' என ஹஸன் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்' என்று கூறினேன்' என என்னிடம் ஜாபிர்(ரலி) கூறினார்'' என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.

பகுதி 5

குளிக்கும்போது ஒருமுறை தண்ணீர் ஊற்றுதல்

257. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன் கைகளையும் இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றித் தங்களின் மர்மஸ்தலங்களைக் குழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கையையும் கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது மாறி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்'' என மைமூனா நபி(ஸல்) அறிவித்தார்.

பகுதி 6

'ஹிலாப்' என்னும் பாத்திரத்தில் குளித்தல் குளிக்கும்போது நறுமணம் தேய்த்தல்

(ஹிலாப் - ஒட்டகத்தில் ஒருமுறை கறக்கப்படும் பாலின் கொள்ளளவுள்ள ஒரு பாத்திரம்)

258. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டு வரச் செய்து அதிலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 7

கடமையான குளிப்பின்போது வாய் கொப்புளித்து மூக்கில் தண்ணீர் செலுத்துதல்

259. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தால் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் மண் மூலம் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தம் தலையின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடம் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை'' மைமூனா(ரலி) அறிவித்தார்.

பகுதி 8

கை நன்றே சுத்தமாவதற்கு கையை மண்ணில் தேய்த்துக் கழுவுதல்

260. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியபோது (முதலில்) தங்களின் மர்மஸ்தலத்தைத் தங்கள் கையினால் கழுவினார்கள். பின்னர், கையைச் சுவரில் தேய்த்துக் கழுவினார்கள். தொழுகைக்குரிய உளுவைச் செய்தார்கள். குளித்து முடித்துத் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பகுதி 9

குளிப்புக் கடமையானவர் கையில் எவ்வித அசுத்தமும் இல்லாதபோது கையைக் கழுவுவதற்கு முன்னர் கையைத் தண்ணீர்ப் பாத்திரத்தில் நுழைக்கலாமா?

இப்னு உமர்(ரலி), பராவு இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோர் தங்களின் கைகளைக் கழுவுவதற்கு முன்னர்த் தண்ணீர்ப் பாத்திரத்தில் நுழைத்தார்கள். பின்னர் உளுச் செய்தார்கள்.

''கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரால் எவ்விதப் பாதிப்புமில்லை'' என்று இப்னு உமர்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.

261. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

262 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் கையைக் கழுவுவார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

263. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் கடமையான குளிப்பைக் குளித்தோம்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

264. 'நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியரில் ஒருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்புக் குளிப்பார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

பகுதி 10

குளிப்பு மற்றும் உளுவிற்கிடையில் சிறிது நேரம் இடைவெளி ஏற்படுத்துதல்

''உளுவின் உறுப்புகள் காய்ந்த பின்னர் தங்களின் இரண்டு கால்களையும் இப்னு உமர்(ரலி) கழுவினார்'' என கூறப்படுகிறது.

265. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக, நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன்கைகளில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தலையை மூன்று முறை கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பகுதி 11

குளிக்கும்போது வலக்கையால் தண்ணீர் எடுத்து இடக்கையில் ஊற்றுதல்

266. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்துத் திரையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைத் தங்களின் கையில் ஊற்றி ஒரு முறையோ, இரண்டு முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய்க்கும் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும், தலையையும் கழுவினார்கள். தங்களின் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அப்போது, 'வேண்டாம்' என்பது போல் தங்களின் கையினால் சைகை செய்தார்கள்'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

''இரண்டு முறை கை கழுவினார்கள் என்பதோடு மூன்றாவது முறை கழுவினார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்களா இல்லையா என எனக்குத் தெரியாது'' என்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுலைமான் கூறினார்.

பகுதி 12

மனைவியுடன் ஒருமுறை உறவு கொண்ட பின்னர் மீண்டும் உறவு கொள்ளுதல் மற்றும் பல மனைவியருடன் உறவு கொண்ட பின்னர் ஒருமுறை குளித்தல்

267. (''நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை'' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்'' என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

268. 'நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ்(ரலி) கூறினார்'' என கதாதா அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

பகுதி 13

'மதி' எனும் காம நீர் வெளியானால் அதைக் கழுவுவதும் அதற்காக உளுச் செய்வதும்

269. 'நான் அதிகமாக 'மதி' எனும் காம நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி அவர்களிடம் கேட்டு வருவதற்கு ஒருவரை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது, 'நீ உன்னுடைய உறுப்பைக் கழுவிவிட்டு உளுச் செய்து கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அலீ(ரலி) அறிவித்தார்.

பகுதி 14

ஏற்கனவே நறுமணம் பூசியவர் குளித்தவிட்டு இஹ்ராம் கட்டும்போதும் நறுமணத்தின் அடையாளம் இருந்தால் என்ன செய்வது?

270. '('நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்தி, காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கூறியபோது) 'நான் நபி(ஸல்) அவர்களுக்கு நறுமணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்'' என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

271. 'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 15

தலை முடியைக் கோதுதல் மற்றும் தலையின் தோல் நன்றாக நனைந்ததைத் தெரிந்த பின்னர் முடியின் மீது தண்ணீரை ஊற்றுதல்

272. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் இரண்டு கைகளையும் கழுவுவார்கள். தொழுகைக்குரிய உளுவைச் செய்வார்கள். பின்னர் குளிக்கத் துவங்குவார்கள். தங்களின் கையால் தலை முடியைக் கோதுவார்கள். தலையின் தோல் நனைந்தது தெரிய வந்ததும் தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

273. 'நபி(ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 16

கடமையான குளிப்பிற்காக உளுச் செய்து உடம்பு முழுவதும் கழுவிய பின்னர் உளுவின் உறுப்புகளை மீண்டும் கழுவாதிருத்தல்

274. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைத்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கையால் தண்ணீரைத் தங்களின் இடக்கையில் ஊற்றி இருமுறையோ, மும்முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய்க்கொப்புளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையில் தண்ணீர் ஊற்றி உடம்பைக் கழுவினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள் நான் அவர்களிடம் துவாலையை கொடுத்தேன். அவர்கள் அதை விரும்பாமல் தங்களின் கைகளால் தண்ணீரை வழித்தார்கள்'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பகுதி 17

பள்ளிவாசலில் இருக்கும்போது குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்தால் தயம்மும் போதுமென இருக்காமல் வெளியேறவேண்டும்

275. 'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைள் சரி செய்யப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்தால் எங்களைப் பார்த்து 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்'' என அபூ ஹுiரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 18

கடமையான குளிப்பிற்குப் பின்னர் இரண்டு கைகளையும் உதறுதல்

276. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து ஓர் ஆடையால் திரையிட்டேன். அவர்கள் தண்ணீரைத் தங்களின் கைகளில் ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்லத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் குழுவினார்கள். வாய்க் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையிலும் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அதை வாங்கவில்லை. தங்களின் கைகளால் தண்ணீரை வழித்துவிட்டுச் சென்றார்கள்'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பகுதி 19

குளிக்கும்போது தலையின் வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்

277. 'எங்களில் எவருக்குக் குளிப்புக் கடமையானாலும் மூன்று முறை இரண்டு கைகளால் தண்ணீர் எடுத்துத் தலையின் மீது ஊற்றுவோம். பின்னர், கையால் தண்ணீரை அள்ளி வலப்பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையினால் தண்ணீர் எடுத்து இடப்பக்கம் ஊற்றுவோம்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 20

அறைக்குள் தனியாகக் குளிக்கும்போது நிர்வாணமாகக் குளிக்கலாம். மறைத்துக் கொண்டு குளிப்பதே சிறந்தது.

''ஒருவன் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதை விட, அல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என முஆவியா இப்னு ஹய்தா(ரலி) அறிவித்தார்.

278. 'இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா(அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை' என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா(அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா(அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து 'கல்லே! என்னுடைய ஆடை!' என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா(அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை' என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

279. 'அய்யூப்(அலை) அவர்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்களின் மீது விழுந்தது. அதை அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடையில் எடுத்தார்கள். உடனே அவர்களின் இரட்சகன் அவர்களை அழைத்து 'அய்யூபே! நீர் பார்க்கிற இதைவிட்டு உம்மை தேவையற்றவராக நான் ஆக்கவில்லையா?' எனக் கேட்டான். அதற்கு 'உன் கண்ணியத்தின் மீது ஆணையாக அப்படித்தான் எனினும் உன்னுடைய பரகத்தைவிட்டு நான் தேவையற்றவனாக இல்லை' என அய்யூப்(அலை) அவர்கள் கூறினார்கள்'' என் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 21

குளிக்கும்போது மனிதர்களின் பார்வையைவிட்டு மறைத்தல்

280. 'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, நபி(ஸல்) (என்னைச் சுட்டிக்காட்டி) 'இது யார்?' என்று கேட்டார்கள். நான் உம்மு ஹானி என்றேன்'' என உம்முஹானி(ரலி) அறிவித்தார்.

281 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் வலக் கரத்தால் தங்களின் இடக்கையில் ஊற்றினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தையும் அவர்கள் மேனியில் பட்டதையும் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரின் மீதோ, பூமியிலோ தேய்த்தார்கள். பின்னர், தொழுகைக்குரிய உளுவைச் செய்தார்கள். இரண்டு கால்களையும் கழுவவில்லை. பிறகு அவர்கள் தங்களின் உடம்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு பாதங்களையும் கழுவினார்கள்'' மைமூனா(ரலி) அறிவித்தார்.

பகுதி 22

பெண்களுக்கு ஸ்கலிமாதல்

282. 'அபூ தல்ஹாவின் மனைவி உம்மு ஸுலைம் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'தண்ணீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என உம்மு ஸலமா(ரலி) கூறினார்.

பகுதி 23

குளிப்புக் கடமையானவனின் வியர்வையும் முஸ்லிம் அசுத்தமாவதில்லை என்பதும்

283. 'நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவி விட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?' என்று கேட்டதற்கு, 'குளிப்புக் கடமையாகியிருந்தேன் எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன்' என்றேன். அப்போது 'ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவே மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 24

குளிப்புக் கடமையானவர் கடை வீதி போன்ற இடங்களில் நடந்து செல்லுதல்

''குளிப்புக் கடமையானவர் இரத்தம் குத்தி எடுக்கலாம் தம் நகங்களை வெட்டலாம் தம் தலைமுடியை மழிக்கலாம் இதற்கு உளுச் செய்ய வேண்டும் என்பதில்லை'' என்று அதாவு கூறினார்.

284. 'நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

285. 'நான் குளிப்புக் கடமையாகியிருந்த இருந்த நிலையில் என்னை நபி(ஸல்) அவர்கள் சந்தித்து என்னுடைய கையைப் பிடித்தார்கள். நான் அவர்களோடு நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் நழுவிச் சென்று கூடாரத்தில் போய்க் குளித்துவிட்டு வந்தேன். அப்போது நபி(ஸல்) உட்கார்ந்திருந்தார்கள். 'அபூ ஹுர்ரே! எங்கே சென்று விட்டீர்?' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு நடந்த விஷயத்தைக் கூறினேன். அப்போது 'ஸுப்ஹானல்லாஹ்! அபூ ஹுர்ரே! நிச்சயமாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாவதில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 25

குளிப்புக் கடமையான ஒருவன் குளிப்பை நிறைவேற்றாமல் உளு மட்டும் செய்து வீட்டில் தங்குதல்

286. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?' என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு 'ஆம்! (தூங்கும் முன்) உளுச் செய்து கொள்வார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்'' என அபூ ஸலமா அறிவித்தார்.

பகுதி 26

குளிப்புக் கடமையானவர் தூங்குதல்

287. 'நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளுச் செய்துவிட்டுத் தூங்கலாம்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 27

குளிப்புக் கடமையானவன் தூங்க விரும்பினால் உளுச் செய்துவிட்டுத் தூங்கலாம்

288. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளுச் செய்வார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

289. 'நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளுச் செய்துவிட்டுத் தூங்கலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

290. 'இரவு நேரத்தில் தமக்குக் குளிப்புக் கடமையாகி விடுகிறது' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியதற்கு 'உளுச் செய்யும் உம்முடைய உறுப்பைக் கழுவிவிட்டு நீர் தூங்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 28

ஆண், பெண் உறுப்புகள் சந்தித்துவிட்டால் என்ன செய்யது?

291. 'ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஷுஅபா வாயிலா அம்ர் இப்னு மஸ்ரூக் என்பவர் இவ்வாறே அறிவித்துள்ளார்.

மூஸா மற்றும் ஹஸன் என்பவர்கள் இவ்வாறே அறிவித்துள்ளனர்.

பகுதி 29

உடலுறவின்போது பெண்ணுறுப்பிலிருந்து பட்டவற்றைக் கழுவுவது பற்றியது

292. 'ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளும்போது இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'தொழுகைக்குச் செய்வது போன்ற உளுவைச் செய்து கொள்ள வேண்டும் தம் உறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) பதிலளித்தார். மேலும், இது விஷயமாக அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் கேட்டேன். அவர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) கேட்டதாக உர்வா கூறினார்'' என ஜைத் இப்னு காலித் அல் ஜுஹைனி(ரலி) அறிவித்தார்.

293. 'நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தங்களின் மனைவியிடம் உறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா? என நான் கேட்டதற்கு, 'மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும் பின்னர் உளுச் செய்து தொழுது கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

''குளிப்பதுதான் சிறந்தது. ஆனால் இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாக இருந்தது. இதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதற்காகத்தான் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டேன்'' என்று அபூ அப்தில்லாஹ் (புகாரி) ஆகிய நான் கூறுகிறேன்.
Previous Post Next Post