அத்தியாயம் - 62
ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)
(வசனங்கள் - 11, மதனி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
62:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
62:2. அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
62:3. (இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
62:4. அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான், மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
62:5. எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும், எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
62:6. (நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.””
62:7. ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
62:8. ''நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்”” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
62:9. ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
62:10. பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
62:11. இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், ''அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக.