அத்தியாயம் 65/2 திருக்குர்ஆன் விளக்கவுரை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 65

திருக்குர்ஆன் விளக்கவுரை 4606 - 4679


(5) 'அல்மாயிதா' அத்தியாயம் 1

பகுதி 1

'அல்மாயிதா' அத்தியாயத்தின் விளக்கவுரை

(திருக்குர்ஆன் 05:1 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஹுரும்' (இஹ்ராம் கட்டியவர்கள்) எனும் சொல்லின் ஒருமை 'ஹராம்' என்பதாகும்.

(திருக்குர்ஆன் 05:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபபிமா நக்ளிஹிம் மீஸாக்கஹும்' என்பதற்கு 'அவர்கள் தம் வாக்குறுதியை முறித்துவிட்ட காரணத்தால்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்லத்தீ க(த்)த பல்லாஹு' எனும் வாக்கியத்திற்கு அல்லாஹ் உங்களுக்காக அமைத்து(வைத்)துள்ள (புனித பூமியினுள் நுழையுங்கள்)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தபூஅ' எனும் சொல்லுக்கு 'நீயே சுமந்து கொண்டு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தாயிரத்துன்' எனும் சொல்லுக்கு 'ஏதேனும் துன்பம்' என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 05:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஃக்ரய்னா' (ஊட்டினோம்) எனும் சொல்லின் வேர்ச் சொல்லான) 'இஃக்ராஃ' என்பதற்குச் 'சாட்டுதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உஜூரஹுன்ன' எனும் சொல்லுக்கு 'அப்பெண்களுக்குரிய மஹ்ர் (விவாகக் கொடை)களை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:48 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்முஹைமின்' எனும் சொல்லுக்கு 'அல்அமீன் - நம்பகமான காவலன்' என்று பொருள். அதாவது இந்தக் குர்ஆன் தனக்கு முந்தியுள்ள வேதம் ஒவ்வொன்றையும் நம்பகமான முறையில் பாதுகாக்கக் கூடியது.

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்:

குர்ஆனிலுள்ள 'வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (இதர வேதங்கள் யா)வற்றையும் முழுமையாகச் செயல்படுத்தாத வரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை'' என்று (நபியே! தெளிவாகக்) கூறிவிடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:68) வசனத்தை விட எனக்குக் கடுமையானது வேறெதுவுமில்லை. 2

(திருக்குர்ஆன் 05:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஃக்மஸா' எனும் சொல்லுக்குப் 'பசி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:32 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மன் அஹ்யாஹா' (எவன் ஓர் உயிரை வாழ வைக்கிறானோ..) என்பதற்கு 'முறையின்றியே தவிர ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து விலகி கொள்கிறவன் மக்கள் அனைவரையுமே வாழவைத்தவன் ஆவான்' என்பது நோக்கப் பொருளாகும்.

(திருக்குர்ஆன் 05:48 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷிர்அத்தன் வ மின்ஹாஜன்' என்பதற்கு 'பாதை மற்றும் நடைமுறை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:107 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃப இன் உஸிர' எனும் சொல்லுக்கு 'வெளிப்பட்டால், - தெரியவந்தால்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:107 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் அவ்லயானி' (அதிகத் தகுதி வாய்ந்த இருவர்) எனும் சொல்லின் ஒருமை '(அல்) அவ்லா' என்பதாகும்.

பகுதி 2

''இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (உங்களின் மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்'' எனும் (திருக்குர்ஆன் 05:3 வது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஃக்மஸா' எனும் சொல்லுக்குப் 'பசி' என்று பொருள்.

4606. தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்

யூதர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்'' என்று கூறினர். உமர்(ரலி), 'அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறுகிறார்கள்;

''இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்'' எனும் (திருக்குர்ஆன் 05:3 வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.

பகுதி : 3

''நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்துவிட்டு) கழிப்பிடத்திலிருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் 'தயம்மும்' செய்து கொள்ளுங்கள். (அதாவது) அதில் உங்கள் கரங்களைப் பதித்து முகங்களிலும், கரங்களிலும் தடவிக் கொள்ளுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:6 வது) வசனத்தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'தயம்மமூ)' எனும் சொல்லுக்கு 'நாடுங்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 05:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆம்மீன்' எனும் சொல்லுக்கு 'நாடியவர்களாக' எனும் பொருள். 'அம்மகித்து' என்பதும் 'தயம்மகித்து' என்பதும் ('நாடினேன்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்;

(குர்ஆனில் இடம்பெற்றுள்ள) லமஸ்த்தும், தமஸ்ஸூஹுன்ன, வல்லாத்தி தகல்த்தும் பிஹின்ன, அல்இஃப்ளாஃ ஆகிய சொற்கள் திருமணத்தை (தாம்பத்திய உறவை)க் குறிக்கும்.

4607. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) 'பைதா' அல்லது 'தாத்துல் ஜைஷ்' எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது என்னுடைய கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை; அப்போது மக்கள் (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்களிடம் சென்று, '(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை'' என்று முறையிட்டனர். உடனே அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னைப் பார்த்து), 'அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை'' என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தம் கரத்தால் என்னுடைய இடுப்பில் குத்தலானார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்தது தான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் 'தயம்மும்' உடைய (திருக்குர்ஆன் 05:6 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இது குறித்து) உசைத் இப்னு ஹுளைர்(ரலி), 'அபூ பக்ரின் குடும்பத்தினரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத்(சமுதாயநலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்களின் மூலம் ஏற்பட்டுள்ளன.)'' என்று கூறினார்கள்.

(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளம்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.

4608. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நாங்கள் (பனூ முஸ்தலிக் போர் முடிந்தது) மதீனாவிற்கு வந்து கொண்டிருந்தபோது (மதீனாவுக்கருகில் உள்ள) 'பைதா' எனுமிடத்தில் என் கழுத்து மாலையொன்று (அவிழ்ந்து) விழுந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அங்கே தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, இறங்கி, என்னுடைய மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூ பக்ர்(ரலி) என்னை நோக்கி வந்து, என்னை வேகமாகக் குத்தி, 'ஒரே கழுத்து மாலைக்காக தடுத்து நிறுத்திவிட்டாயே'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் மடிமீது தலைவைத்துப் படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)று இருந்துவிட்டேன். அதனால் எனக்குக் கடும்வேதனை ஏற்பட்டது. பிறகு (நபி(ஸல்) அவர்கள் விழுத்தெழுந்தார்கள். சுப்ஹுத் தொழுகை (நேரம்) வந்துவிட்டது. உளூ (அங்கச் சுத்தி) செய்வதற்காக தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்கவில்லை. அப்போதுதான், 'இறைநம்பிக்கையாளர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்'' என்று தொடங்கி 'தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் 'தயம்மும்' செய்து கொள்ளுங்கள்'' என்று கூறும் (திருக்குர்ஆன் 05:6 வது) வசனம் அருளப்பட்டது. அப்போது உசைத் இப்னு ஹுளைர்(ரலி), 'அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள்வளம் பொழிந்துள்ளான், அபூ பக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான்'' என்று கூறினார்கள்.

பகுதி 4

''(மூஸா!) நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' (என்று பனூ இஸ்ராயீல் கூறினர்) எனும் (திருக்குர்ஆன் 05:24 வது) வசனத் தொடர்.

4609. இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்

மிக்தாத்(ரலி), பத்ருப் போரின்போது, 'இறைத்தூதர் அவர்களே! பனூ இஸ்ராயீல்கள் மூஸா (அலை) அவர்களிடம் 'நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' என்ற சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்ல மாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம்'' என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது.

இதே ஹதீஸில் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில்,

''மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) சொன்னபோது நான் இருந்தேன்'' என்ற தொடங்குகிறது.

இன்னும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 5

அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகிறவர்களும், பூமியில் கலகம் விளைவிக்கத் தீவிரமாக முயற்சிக்கிறவர்களுக்கும் உரிய தண்டனை இதுதான்; அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களின் மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் (எனும் 5: 33 வது வசனத் தொடர்.)

(இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) 'அல்லாஹ்வுடன் போரிடுதல்' என்பதற்கு அவனை மறுத்தல்' என்பது கருத்தாகும்.

4610. அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்

நான் (உமய்யா கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களுக்கப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து 'அல்கஸாமா' எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அதுபற்றி), மக்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்கள்.

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந்திருந்த என் பக்கம் திரும்பி, 'அப்துல்லாஹ் இப்னு ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' அல்லது அபூ கிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கோட்டார்கள். நான், 'திருமணமான பின்பு விபசாரம் புரிந்த மனிதனையும், அல்லது உயிருக்கு பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவனையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவனையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை'' என்று சொன்னேன். அப்போது அன்பஸா இப்னு ஸயீத்(ரஹ்), 'என்னிடம் அனஸ் இப்னு மாலிக்(ரலி) ('அல்கஸாமா' மற்றம் 'உரைனா' சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள்'' என்று கூறினார்கள்.

நான் சொன்னேன்:

''அனஸ்(ரலி) என்னிடம் கூட (இப்படிச்) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சமுதாயத்தார் ('உக்ல்'' மற்றம் 'உரைனா' குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், 'இந்த பூமி (மதீனா) எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டோம்)'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதோ, எங்களின் (தர்மத்திற்குரிய) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்றுடன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந்துங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய்நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின் மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டார்கள்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றார்கள்.

ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனம் போர்புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா, என்ன?

அப்போது அன்பஸா(ரஹ்), (வியப்புத் தெரிவிப்பது போன்று) 'சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் தூயவன்'' என்று கூறினார்கள்.

நான், 'என்னை நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(இல்லை) இதை எங்களுக்கு அனஸ்(ரலி) அறிவித்தார்'' என்ற கூறிவிட்டு, 'இந்த ஊர் (ஷாம்)வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர்களையும் அல்லாஹ் உங்களிடையே வாழவைத்திருக்கும் வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள்'' என்று கூறினார்கள்.

பகுதி : 6

''(குற்றவியல் தண்டனையில்) காயங்களுக்கும் பழிவாங்கல் உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 05:45 வது) வசனத் தொடர்.

4611. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த் நள்ர்(ரலி) ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, இறைத்தூதர் அவர்களே!'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும் (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)'' என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம்பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றனர். (ருபய்யிஉவை பழி வாங்காமல் மன்னித்தார்கள்.) அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்'' என்று கூறினார்கள்.

பகுதி : 7

(எம்) தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்கள் அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள் (எனும் 5:67 வது வசனத் தொடர்).

4612. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

முஹம்மத்(ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ '(எம்) தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்!'' என்று கூறுகிறான்.

பகுதி : 8

''நீங்கள் செய்த வீணாண சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை'' எனும் ( 5: 89 வது) வசனத் தொடர்.

4613. ஆயிஷா(ரலி) கூறினார்

''நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 05:89 வது ) இறைவசனம் 'லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும், 'பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!' என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகிறவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.

4614. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என் தந்தை (அபூ பக்ர்(ரலி)) சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூ பக்ர்(ரலி), 'நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்தோ அதையே செய்வேன் என்று கூறினார்கள்.

பகுதி : 9

''இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) வசனத் தொடர்.

4615. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) 'எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்.'' என்று கூறிவிட்டு பிறகு, 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி(ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பகுதி : 10

''இறைநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும்'' எனும் (திருக்குர்ஆன் 05:90 வது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அல்அஸ்லாம்' என்பது (அறியாமைக்கால மக்கள்) தங்கள் விவகாரங்களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன்படுத்தி வந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.

'நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

'அல்அஸ்லாம்' என்பதன் ஒருமையான 'அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும்.

'இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப்போட்டு, 'வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை)விட்டுவிடுவதையும், 'செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும்.

அம்புகளில் ('செய்யலாம்', 'செய்ய வேண்டாம்'; 'செய்தால் நல்லது', 'செய்யாவிட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறி பார்த்து வந்தார்கள். இதிலிருந்து 'ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் 'கஸம்து' எனும் கடந்த கால வினையும் 'குஸூம்' எனும் வேர்ச் சொல்லும் வரும்.

4616. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

மது பானத்தைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பட்டபோது ஐந்து வகையான மதுபானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.

4617. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நீங்கள் 'ஃபளீக்' என்றழைக்கிற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, 'உங்களுக்குச் செய்தி எட்டியதா?' என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், 'என்ன அது?' என்று கேட்டனர். அவர், 'மது தடை செய்யப்பட்டுவிட்டது'' என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், 'அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள்'' என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.

4618. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

மக்கள் சிலர், உஹுதுப் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.

4619. இப்னு உமர்(ரலி) கூறினார்

உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் உரைமேடையிலிருந்தபடி, 'இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத்தடை(ச் சட்டம்) இறங்கிவிட்டது. திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான்'' என்று கூறினார்கள்.

பகுதி : 11

இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது. (ஆனால், இனி தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து) அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல்கள் புரிகிறவர்களாகவும், இன்னும் (எந்த எந்தப் பொருள்களைவிட்டுத் தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து) விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் (இத்தகைய) நன்னடத்தையுடையோரை நேசிக்கிறான் (எனும் 5:93 வது இறைவசனம்)

4620. அனஸ்(ரலி) அறிவித்தார்

(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.

அபுந் நுஅமான்(ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு சலாம்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்ததாவது:

அனஸ்(ரலி) கூறினார்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் வீட்டில் (அங்கேயிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), 'வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)' எனக் கூறினார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), 'இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்'' என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம்,''நீ போய், இதைக் கொட்டிவிடு!'' என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், '(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!'' என்று கூறினார். அப்போதுதான் 'இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.'' எனும் (திருக்குர்ஆன் 05:93 வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.

பகுதி : 12

''இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்ததை ஏற்படுத்தும்'' எனும் (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம்.

4621. அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், 'நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்'' என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், 'என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இன்னார்'' என்று கூறினார்கள். அப்போதுதான் 'இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும'' எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

4622. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), 'என் தந்தை யார்?' என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் 'என் ஒட்டகம் எங்கே?' என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்.

இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 05:101)

பகுதி : 13

(கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்குகளான) பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக, மறுப்பாளர்கள் தாம் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர். (எனும் 5:103 வது இறைவசனம்)

(திருக்குர்ஆன் 05:116 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ இஃத் காலல்லாஹ்' எனும் சொற்றொடரில் உள்ள 'கால' (சொன்னான்) எனும் (இறந்த கால வினைச்) சொல்லுக்குச் 'சொல்வான்' என்று (எதிர்கால வினையின்) பொருளாகும்.

இந்த வசனத்திலுள்ள 'இஃத்' எனும் சொல் 'சொல்லிடை இணைப்புக் குறி' (ஸிலா) ஆகும்.

(திருக்குர்ஆன் 05:112 வது வசனத்திலுள்ள வினையாலணையும் பெயரான) 'அல்மாயிதா' எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொருத்தவரை 'விருந்தாக்கப்படும் உணவு' எனும்) செயற்பாட்டு எச்ச வினையாகும். 'ஈஷத்துன் ராளியா' (திருப்தியான வாழ்க்கை), 'தத்லீக் கத்துல்பாயினா' (இறுதிசெய்யப்பட்ட விவாகரத்து) ஆகிய சொற்றொடர்களைப் போன்று.

(இதன்படி 'அல்மாயிதா' என்பதன்) சொற்பொருள் 'விருந்தாளிக்கு அளிக்கப்படும் நல்ல உணவு' என்பதாகும்.

('இஷ்திகாக்' எனும் 'சொல் திரிபு வேறுபாட்டில்' இச்சொல்லை 'ஃபஅல, யஃப்இலு' எனும் வாய்பாட்டில்) 'மாத, யமீது' (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 03:55 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முத்தவஃப்பீக்க' எனும் சொல்லுக்கு 'உம்மை இறக்கச் செய்வோம்' என்பது கருத்தாகும்.

4623. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்

'பஹீரா' என்பது, (அறியாமைக்கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால்கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டு வந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.

'சாயிபா' என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'அம்ர் இப்னு ஆமிர் அல்குஸாஈ' தம் குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை கண்டேன். முதன் முதலாக 'சாயிபா' (ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்துத்) திரியவிட்டவர் அவர்தாம்.

'வஸிலா' என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டியிடுகிற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டு வந்தனர். இரண்டு(ஈற்று)க்கு மத்தியில் ஆண்குட்டியிடாமல் ஒன்றையடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதனால் (இதனைத் 'தொடர்ந்து வரக்கூடியது' எனும் பொருளில்) 'வஸீலா' என்று அழைத்தனர்.

'ஹாம்' என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல்கொள்ளச் செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல்கொள்ளச் செய்த பின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக்கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டார்கள்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதனை 'ஹாமீ(தன் முதுகைப் பாதுகாத்துக் கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர்.

இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்சொன்ன விளக்கமும் ஹதீஸும் வந்துள்ளன.

4624. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக் கொண்டிருப்பதை கண்டேன். 'அம்ர் இப்னு ஆமிர் அல்குஸாஈ' நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து)த் திரியவிட்டவர் அவர் தாம்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி : 14

(மர்யமின் மகன் ஈசா கூறினார்:) மேலும், நான் அவர்களுடன் இருந்தவரையில், அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! நீயோ அனைத்தையும் கண்காணிப்பனாக இருக்கிறாய் (எனும் 5:117 வது வசனத் தொடர்).

4625 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), 'மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாண மானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்காளகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு 'எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்'' எனும் (திருக்குர்ஆன் 21:104 வது இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.

பிறகு, 'அறிந்துகொள்ளுங்கள்; மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம்.

அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக்கத்(திலுளள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்று சொல்வேன். அதற்கு 'இவர்கள் உங்க(ளுடைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, 'நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!'' என்று பதிலளிப்பேன். அதற்கு, 'இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள்'' என்று கூறப்படும்.

பகுதி : 15

''(இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய் (என்றும் மர்யமின் மகன் ஈசா கூறுவார்)'' எனும் (திருக்குர்ஆன் 05:118 வது) இறைவசனம்.

4626. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப் படவிருக்கிறீர்கள். சிலர் இடப் பக்கத்திலுள்ள நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் (ஈசா(அலை) அவர்கள்) சொன்னதைப் போல், 'நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்'' (திருக்குர்ஆன் 05:117,118) என்று சொல்வேன்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

6. 'அல்அன்ஆம்' அத்தியாயம்

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 06:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபித்னத்துஹும்' எனும் சொல்லுக்கு 'அவர்கள் கூறும் காரணம் (அல்லது) சாக்குப் போக்கு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:141 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஃரூஷாத்' எனும் சொல்லுக்குத் 'திராட்சை முதலான (பந்தல்களில்) படரும் கொடிகள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:142 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹமூலத்' எனும் சொல்லுக்குச் 'சுமை சுமக்கும் பிராணி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லபஸ்னா' எனும் சொல்லுக்கு 'நாம் சந்தேகத்தில் ஆழ்த்தியவர்களாகியிருப்போம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:26 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யன்அவ்ன' எனும் சொல்லுக்குத் 'தொலைவாகி விடுகிறார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:70 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துப்ஸல' எனும் சொல்லுக்கு 'இழிவுபடுத்தப்படும் என்று பொருள். 'உப்ஸிலூ' என்பதற்கு 'அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:93 வது வசனத்தின் மூலத்தில்)'பாஸிதூ அய்தீஹிம்' என்பதிலுள்ள (பாஸிதூ எனும் சொல்லின் வேர்ச் சொல்லான) 'அல்பஸ்த்' எனும் சொல்லுக்கு 'அடித்தல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:128 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்தக்ஸர்த்தும்' எனும் சொல்லுக்கப் 'பலரைக் கெடுத்துவிட்டீர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:136 வது வசனத்தின் விளக்கமாவது:) இணைவைப்பாளர்கள் தங்களின் (பயிர், கால்நடை முதலியவற்றின்) பலன்களிலிருந்தும் செல்வத்திலிருந்தும் ஒரு பகுதியை அல்லாஹ்விற்கென்றும், மற்றொரு பகுதியை ஷைத்தான் மற்றும் சிலைகளுக்கென்றும் படைக்கின்றனர்.

(திருக்குர்ஆன் 06:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அகின்னத்' (திரைகள்) எனும் சொல்லின் ஒருமை; ‘கினான்’.

(திருக்குர்ஆன் 06:143 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அம் மஷ்தமலத்' எனும் சொற்றொடரின் விளக்கமாவது; ஆண், பெண் ஆகிய இரண்டு வகைகளையே ஆடுகள் கர்ப்பத்தில் சுமக்கின்றன. பிறகேன் (சில கால்நடைகளின் வயிற்றிலுள்ளவற்றை) சிலருக்குத் தடை விதிக்கிறீர்கள்; மற்றச் சிலருக்கு அனுமதிக்கிறீர்கள் (என்பதாகும்)

(திருக்குர்ஆன் 06:145 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸ்ஃபூஹ்' (வடியக்கூடிய) எனும் சொல்லுக்குச் 'சிந்தப்படும் (இரத்தம்) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:157 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸதஃப்' எனும் சொல்லுக்குப் 'புறக்கணித்தான்' எனும் பொருள்.

(திருக்குர்ஆன் 06:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'முப்லிஸுன்' ('நம்பிக்கை இழந்தவர்கள்') எனும் சொல்லின் வினைச் சொல்லான) 'உப்லிஸு'' எனும் சொல்லுக்கு 'நம்பிக்கை இழந்து (செயலாற்று)விட்டார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:70 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உப்ஸிலூ' எனும் சொல்லுக்கு '(அழிவுக்கு) ஆளாக்கப்பட்டார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:96 வது வசனத்தின் கருத்தில் அமைந்த 28:71 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'சர்மதன்' எனும் சொல்லுக்கு 'நிரந்தரமானது' எனும் பொருள்.

(திருக்குர்ஆன் 06:71 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்தஹ்வத்ஹு' எனும் சொல்லுக்கு 'அவனை வழி கெடுத்துவிட்டன' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தம்தரூன்' எனும் சொல்லுக்கு 'நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அசாத்தீர்' எனும் சொல்லுக்குக் 'கட்டுக்கதைகள்' என்று பொருள். இதன் ஒருமை 'உஸ்த்தூரத்' மற்றும் 'இஸ்த்தாரத்' ஆகும்.

(திருக்குர்ஆன் 06:42 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்பஃஸா' எனும் சொல், 'பஃஸ்' (துன்பம்) எனும் சொல்லிருந்து பிறந்ததாகும். 'புஃஸ்' (வறுமை) எனும் சொல்லிருந்தும் பிறந்திருக்கலாம்.

(திருக்குர்ஆன் 06:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜஹ்ரத்' எனும் சொல்லுக்கு 'நேருக்கு நேர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:73 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸுவர்' எனும் சொல் 'ஸுரத்' (உருவம்) எனும் சொல்லின் பன்மையாகும். 'சூரத்' (எல்லைச் சுவர்) என்பதையும் (அதன் பன்மையான) 'சுவர்' (எல்லைச் சுவர்கள்) என்பதையும் போல். 3

(திருக்குர்ஆன் 06:75 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மலக்கூத்' எனும் சொல்லுக்கு 'ஆட்சி' என்று பெருள். ('மலக்கூத்' என்பதிலுள்ள இறுதி எழுத்துகளான வாவும் தாவும் அதிகப்படியானவை; எவ்வாறென்றால்) ரஹபூத் கைருன் மின் ரஹ்மூத் என்ப(தில் உள்ள ரஹபூத், ரஹமூத் ஆகிய சொற்களின் இறுதியிலுள்ள வாவும் தாவும் கூடுதலானைவையாக இருப்ப)தைப் போன்று. இதையே 'துர்ஹபு கைருன் மின் அன் துர்ஹம்'' என்றும் கூறலாம்.4

(திருக்குர்ஆன் 06:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜன்ன' எனும் சொல்லுக்கு 'இருள் கவ்வியது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:100 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஆலா' எனும் சொல்லுக்கு 'உயர்ந்தான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:70 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இன் தஅதில்' என்று தொடங்கும் வசனத்திற்குப் 'பிரதியாகக் கொடுத்தால், அந்நாளில் அது அங்கீகரிக்கப்படமாட்டாது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:96 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹுஃபான்' எனும் சொல்லுக்கு '(காலத்தின் கணக்கை அறிதல்' என்று பொருள். 'அலல்லாஹி ஹுஃபானுஹு' ('அதன் கணக்கு வழக்கு அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது') என்று கூறப்படுவதுண்டு. 'ஹுஃபான்' எனும் (இந்த சொல்லுக்கு ('வானுலுகச் செய்திகளை) ஒட்டுக் கேட்க வரும் ஷைத்தான்களை நோக்கி எறியப்படும் அம்பு' என்று பொருளும் உண்டு.

(திருக்குர்ஆன் 06:98 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஸ்தகர்ருன்' எனும் சொல்லுக்கு '(தந்தையின்) முதுகந் தண்டில் தங்கவைக்கப்பட்டது' என்று பொருள். 'முஸ்தவ்தஉ' எனும் சொல்லுக்குத் '(தாயின்) கர்ப்பத்தில் பாதுகாப்பட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:99 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கின்வான்' எனும் சொல்லுக்குப் 'பழக் குலைகள்' என்று பொருள். இதன் ஒருமை 'கின்வ்' என்பதாகும். இதன் இருமை 'கின்வானி' என்பதாகும். பன்மையும் 'கின்வான்' என்பதே ஆகும். 'சின்வ்' (ஒருமை;) 'சின்வான்' (இருமை மற்றும் பன்மை என்பதைப் போல் (ஒரே வேரிலிருந்து தோன்றும் இரண்டு பேரீச்ச மரங்கள் என்பது இதன் பொருளாகும்.)

பகுதி 1

மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை (எனும் 6:59 வது வசனத் தொடர்.)

4627. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறினான்:) 'நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். (பெண்களின்) கருவறைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறேன் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 31:34)5

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6

பகுதி 2

''(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்களின் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'யல்பிஸகும்' எனும் சொல்லுக்குக் 'கலந்து விடுவது' என்று பொருள். இது 'இல்த்திபாஸ்' எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

'ஷியஉ' எனும் சொல்லுக்குப் 'பிரிவுகள்' என்று பொருள்.

4628. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

''(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, 'உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கி வைக்கவும் அவன் ஆற்றலுள்ளவன்'' என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இறைவா!) உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறினார்கள். 'உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ'' என்று கூறினார்கள். 'அல்லது உங்களைப் பல்வேறு குழுகளாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்'' என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது (முந்தைய வேதனையை விட) 'எளிதானது' அல்லது 'இது சுலபமானது' ஆகும்'' என்று கூறினார்கள். 7

பகுதி 3

மேலும், நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்காதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்களாவார்கள் (எனும் 6:82 வது இறைவசனம்).

4629. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

''நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்'' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், 'எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?' என்று கேட்டனர். அப்போது, 'இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்'' எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது. 8

பகுதி 4

''(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நேரான பாதையில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும் விட இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மேன்மையாக்கினோம்' எனும் (திருக்குர்ஆன் 06:86 வது) இறைவசனம்.

4630. அபுல் ஆலியா ருஃபைஉ இப்னு மிஹ்ரான்(ரஹ்) கூறினார்

உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.

''நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிறந்தவன்'' என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது. 9

4631. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிந்தவன்'' என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.10

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 5

''(நபியே!) அல்லாஹ்வினால் நேர்வழியில் செலுத்தப்பட்டவர்கள்தாம் இவர்கள். எனவே, இவர்களின் நேரான வழியையே நீங்களும் பின்பற்றுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 06:90 வது) வசனத்தொடர்.

4632. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'ஸாத்'' (எனும் 38 வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம் (திருக்குர்ஆன் 38:24 வது வசனத்தில் சஜ்தா உண்டு)'' என்று கூறிவிட்டு 'நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததிகளாக) வழங்கினோம்'' என்று தொடங்கி 'இவர்களுடைய நேரான வழியையே நீங்களும் பின்பற்றுங்கள்'' என்பது வரை (திருக்குர்ஆன் 06:84-90 வசனங்களை) ஓதினார்கள்.

பிறகு இப்னு அப்பாஸ்(ரலி), 'தாவூத்(அலை) அவர்கள் இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர் தாம்'' என்று கூறினார்கள்.

யஸீத் இப்னு ஹாரூன்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் அதிகப்படியாக இடம் பெற்றிருப்பதாவது:

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள் 'முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டவர்களில் உங்களில் நபி(ஸல்) அவர்களும் ஒருவர்தாம்'' என்றும் கூறினார்கள். 11

பகுதி 6

நகமுடைய பிராணிகள் ஒவ்வொன்றையும் யூதர்களுக்கு நாம் தடைசெய்திருந்தோம். அவர்களுக்கு ஆடு மாடுகளின் கொழுப்பையும் தடைசெய்திருந்தோம் (எனும் 6:146 வது இறைவசனம்).

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

நகமுடைய ஒவ்வொரு பிராணியும் என்பது, ஒட்டகத்தையும் தீக்கோழியையும் குறிக்கும். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹவாயா' என்பது குடல்களைக் குறிக்கும். 12

மற்றவர்கள் கூறுகின்றனர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹாதூ' என்பதற்கு 'யூதர்களாய் ஆகிவிட்டவர்கள்' என்று பொருள்.

(இதே சொல்லிருந்து பிறந்த 7:156 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹுத்னா' என்பதற்கு 'பாவமன்னிப்புக் கோரினோம்' என்று பொருள். (இதன் வினையாலணையும் பெயரான) 'ஹாயித்' என்பதற்கு 'பாவமன்னிப்புக் கோருகிறவர்' என்று பொருள்.

4633. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணிகளின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள்.

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இது வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 13

பகுதி 7

''மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை எதனையும் நெருங்காதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 06:151 வது) வசனத்தொடர்.

4634. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

''அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்'' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) கூறினார்:

நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம் 'இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிட்டார்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதில் கூறினார்கள்.

பகுதி 8

(திருக்குர்ஆன் 06:102 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ(க்)கீல்' எனும் சொல்லுக்குக் 'கண்காணித்துப் பாதுகாப்பவன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:111 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'குபுல்' எனும் சொல் கபீல் எனும் சொல்லின் பன்மையாகும். 'பல வகை சோதனைகள்' என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் 'கபீல்' என்று கூறப்படும்.

(திருக்குர்ஆன் 06:112 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸுக்ருஃபுல் கவ்ல்' எனும் சொற்றொடரானது, நீ எழிலூட்டி அலங்கரித்துக் காட்டும் எல்லா போலிகளையும் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 06:138 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹிஜ்ர்' எனும் சொல்லுக்குத் தடுக்கப்பட்டது' என்று பொருள். தடைவிதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் 'ஹிஜ்ருன் மஹ்ஜுர்' எனப்படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் 'அல் ஹிஜ்ர்' எனலாம். பெட்டைக் குதிரையும் 'ஹிஜ்ர்' எனப்படுகிறது. (அதைப்போன்று) அறிவும் 'ஹிஜ்ர்' என்றும், 'ஹிஜா' என்றும் சொல்லப்படுவதுண்டு.

'ஸமூத் குலத்தார் வாழ்ந்த பகுதியும் 'ஹிஜ்ர்' எனப்படுவதுண்டு.

தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் 'ஹிஜ்ர்' எனப்படும். இதனால்தான், 'இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள 'ஹத்தீம்' (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) 'ஹிஜ்ர்' (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது.

('ஃபஈல்' எனும் வாய்ப்பாட்டில் அமைந்த இந்த) 'ஹத்தீம்' எனும் சொல் (செயப்பாட்டு வினை எச்சமான) 'மஹ்த்தூம் (பிரிக்கப்பட்டது) என்ற பொருள் கொண்டதாகும். 'கத்தீல்' என்பதற்கு 'மக்த்தூல்' (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போன்று.

யமாமாவின் 'ஹஜ்ர்' என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும்.

பகுதி 9

''உங்கள் சாட்சிகளைக் அழைத்து வாருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 06:150 வது) வசனத் தொடர்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹலும்ம' (கொண்டு வாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ்வாசிகளின் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக்குமே பயன்படுத்தப்படுவதாகும்.

பகுதி 10

உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில், முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கோ, நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கோ அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது (எனும் 6:158 வது வசனத் தொடர்).

4635. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருபபவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் நம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதனுக்கும் அவன் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

4636. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரின் (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்'' என்று கூறிவிட்டு, 'உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது'' எனும் இந்த (திருக்குர்ஆன் 06:158 வது) வசனத்தை ஓதினார்கள். 14

(7) 'அல்அஃராஃப்' அத்தியாயம் 1

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 07: 26 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ரீஷ்' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் 'ரியாஷ்' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'ரியாஷ்' எனும் சொல்லுக்குச் 'செல்வச் செழிப்பு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:55 வது வசனத்தில் இடம்பெற்றுள்ள) 'நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை'' எனும் தொடருக்கு துஆ (பிரார்த்தனை) முதலானவற்றில் வரம்பு மீறுவோரை என்றுபொருள்.

(திருக்குர்ஆன் 07:95 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஃபவ்' எனும் சொல்லுக்கு 'அவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் சொத்து பத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:89 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஃப்தஹ் பைனனா' எனும் சொற்றொடருக்கு 'எங்களிடையே தீர்ப்பளி' என்று பொருள். (இச்சொல்லில் இருந்து வந்த 34:26 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஃபத்தாஹ்' எனும் சொல்லுக்குத் 'தீர்ப்பளிப்பவன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:171 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நத்தக்னல் ஜபல' எனும் வாக்கியத்திற்கு 'அந்த (சினாய்) மலையை நாம் உயர்த்தினோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:160 வது வசனத்தில்) 'பீறிட்டோடின' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள 'ஃபம்பஜஸத்' எனும் சொல்லுக்குரியதாகும்.

(திருக்குர்ஆன் 07:139 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முத்தப்பர்' எனும் சொல்லுக்கு 'நட்டமானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:93 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆஸா' எனும் சொல்லுக்குக் 'கவலைப்படுவேன்' என்று பொருள். (இதே இனச் சொல்லும், 5:26 வது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) 'தஃஸ' எனும் சொல்லுக்க 'கவலைப்படுதல்' என்று பொருள்.

(இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாத) மற்றவர்கள் கூறுகிறார்கள்.

(திருக்குர்ஆன் 07:12 வது வசனத்தில்) 'நீ சிரம் பணியாதிருக்கும்படி உன்னைத் தடுத்தது எது?' என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு 'நீ ஏன் சிரம் பணியவில்லை?' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஃக்ஸிஃபானி' எனும் சொல்லுக்கு 'அச்சோலையின் இலைகளை எடுத்துத் தங்களை மூடிக்கொள்ள அவர்கள் இருவரும் முயன்றனர்' என்று பொருள். அதாவது அந்த இலைகளில் ஒன்றோடொன்றைக் கோத்துத் தங்க(ள் மறைவிடங்)களை மறைத்துக் கொள்ள முயன்றனர்' என்று பொருள் விரியும்.

(இதே வசனத்திலுள்ள) 'சவ்ஆத்' (மறைவிடங்கள்) எனும் சொல், அவர்களின் பிறவி உறுப்புகளைக் குறிப்பிடுகிறது.

(திருக்குர்ஆன் 07:24 வது வசனத்திலுள்ள) 'ஒரு காலம்வரை சுகம்' என்பது அப்போதிருந்து மறுமை நாள் வரை உள்ள காலத்தைக் குறிக்கிறது. 'அல்ஹீன்' (காலம், நேரம்) எனும் சொல் அரபுகளிடம் சிறிது நேரம் முதல் எண்ணிறந்த காலம்வரை (எல்லா நேரத்தையும்) குறிக்கும்.

'ரியாஷ்' எனும் சொல்லும் (திருக்குர்ஆன் 07:26 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ரீஷ்' எனும் சொல்லும் ('ஆடையின் வெளிப்பாகம்' என்ற) ஒரே பொருளை கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 07:27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கபீலுஹு' (அவனுடைய இனத்தார்) எனும் சொல், ஷைத்தானுடைய தலைமுறையைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 07:38 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இத்தாரகூ' எனும் சொல்லுக்கு 'அவர்கள் குழுமினர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:40 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சம்மு' எனும் சொல்லுக்கு 'அவர்கள் குழுமினர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:40 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சம்மு' எனும் சொல்லுக்குத் 'துவாரம்' என்று பொருள். இதன் பன்மை 'கமூம்' என்பதாகும். மனிதன் மற்றும் கால்நடைகளின் (உடலிலுள்ள) அனைத்துத் துவாரங்களையும் இது குறிக்கும். அவையாவன: இரண்டு கண்கள், இரண்டு நாசிகள், வாய், இரண்டு காதுகள், ஆசனம், பிறவு உறுப்பு (ஆகிய உறுப்புகளின் துவாரங்கள்) ஆகும்.

(திருக்குர்ஆன் 07:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகவாஷ்' எனும் சொல்லுக்கு 'அவர்களுக்குப் போர்த்தப்படும் போர்வை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:57 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'புஷ்ரா - நன்மாராயம்' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் 'நுஷ்ரா' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'நுஷ்ரா' எனும் சொல்லுக்குப் 'பரவலானாது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:58 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நம்தா' எனும் சொல்லுக்குச் 'சொற்பமானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:92 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஃக்னவ்' எனும் சொல்லுக்கு 'வாழ்வார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:105 வது வசனத்தில்) 'கடமை' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள 'ஹகீக்' எனும் சொல்லுக்குரியதாகும்.

(திருக்குர்ஆன் 07:116 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஃதர்ஹபூஹும்' (அவர்களைத் திடுக்கிடச் செய்தனர்) என்பது 'ரஹ்பத் (திடுக்கம்) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

(திருக்குர்ஆன் 07:117 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தல்கஃபு' எனும் சொல்லுக்கு 'விழுங்கிவிட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:131 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தாயிருஹும்' எனும் சொல்லுக்கு 'அவர்களுக்கேற்பட்ட கதி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:133 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தூஃபான்' எனும் சொல்லுக்கு 'வெள்ளப்பெருக்கு'' என்று பொருள். ஏராளமான உயிர்ச் சேதமும் 'தூஃபான்' எனப்படுவதுண்டு.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'கும்மல்' எனும் சொல், சிறு பூச்சி வகையான பேனைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 07:137 வது வசனத்தின் 'மா கானூ யஃரிஷூன்' என்பதற்கு 'அவர்கள் கட்டியிருந்த' என்று பொருள். 'யஃரிஷூன்' எனும் சொல்லின் பெயர்ச் சொற்களான) 'உரூஷ்', 'அரீஷ்' ஆகிய சொற்களுக்குக் 'கட்டடம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:149 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சும்(த்)த' எனும் சொல்லுக்கு 'வருந்தினான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:160 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்பாத்' எனும் சொல், இஸ்ராயீலின் சந்ததிகளின் (பன்னிரு) குலங்களைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 07:163 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'யஃதூன ஃபிஸ்ஸப்தி' என்பதற்கு 'சனிக்கிழமையன்று வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்' என்று பொருள். 'தஃது' எனும் சொல்லுக்கு 'நீ வரம்பு மீறுகிறாய்' என்று பொருள்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷுர்ரஅன்' எனும் சொல்லுக்கு 'நீர் மட்டம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:165 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அக்லத இலல் அர்ள்' எனும் சொற்றொடருக்கு 'அவன் இவ்வுலக (ஆசாபாச)த்தின்பால் சரிந்து முடங்கிக் கிடந்தான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:182 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ச நஸ்தத்ரிஜுஹும்' எனும் சொல்லுக்கு, 'அவர்கள் அச்சமற்று இருக்குமிடத்தில் நாம் அவர்களை (அழிக்க) வந்தோம்' என்று பொருள். 'அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்(து அழித்)தான்'' எனும் (திருக்குர்ஆன் 59:02) வது வசனத்தைப் போன்று.

(திருக்குர்ஆன் 07:84 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மின் ஜின்னத்' எனும் சொல்லுக்குப் 'பைத்தியம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:187 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அய்யான முர்சாஹா' எனும் வாக்கியத்திற்கு 'மறுமையில் வருகை எப்போது?' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:189 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃப மர்ரத் பிஹி' எனும் வாக்கியத்திற்கு 'அவர் (ஹவ்வா) கர்ப்பத்தைச் சுமந்து கொண்டேயிருந்து பூர்த்தி செய்தார்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:200 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யன்ஸஃகன்னக்க' எனும் சொல்லுக்கு 'உம்மை குழப்பமடையச் செய்தான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:201 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'தாயிஃப்' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் 'தய்ஃப்' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'தய்ஃப்' எனும் சொல்லுக்கு 'ஷைத்தானின் தீண்டுதல்' என்று பொருள். ('தய்ஃப்' என்ற இச்சொல்) தாயிஃப் என்றும் ஓதப்படுகிறது. இதற்கும் அர்த்தம் ஒரே பொருள் தான்.

(திருக்குர்ஆன் 07:202 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யமுத்தூனஹும்' எனும் சொல்லுக்கு 'அவர்களுக்கு (சாத்தானின் சகோதரர்கள் தவறான வழிகளை) அலங்கரித்துக் காட்டுகிறார்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 07:205 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ கீஃபத்' எனும் சொல்லுக்கு 'பயம்' என்று பொருள் (கிட்டத்தட்ட இதே சாடையிலமைந்த) 'குஃப்யத்' எனும் சொல் 'இக்ஃபா' (மறைத்தல்) என்பதிலிருந்து பிரிந்ததாகும்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'வல் ஆஸால்' (மாலை) என்பதற்கு அஸ்ருக்கும் மஃக்ரிபுக்கும் இடைப்பட்ட நேரம்' என்று பொருள். இதன் ஒருமை 'அஸீல்' என்பதாகும். 'புக்ரத்தன் வ அஸீலா' (காலை, மாலை) என்று நீ குறிப்பிடுவதைப் போன்று.

பகுதி 1

என் இறைவன் வெளிப்படையாகவும், மறைவாகவும் உள்ள மானக்கேடான செயல்களையே தடைசெய்துள்ளான் என்று (நபியே!) நீங்கள் சொல்லுங்கள் (எனும் 7:33 வது வசனத் தொடர்.)

4637 அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார்

நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம், 'நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், ஆம்! அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

''அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். எனவேதான் மானக் கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடைசெய்துள்ளான். மேலும், அல்லாஹ்வை விட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். எனவே, தான் அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளான்'' என்று கூறினார்கள். 2

பகுதி 2

நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் (குறித்த இடத்திற்கு) மூஸா வந்தார். பிறகு அவரின் இறைவன் அவரிடம் உரையாடியபோது 'என் இறைவா! எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! நான் உன்னைப் பார்க்கவேண்டும்'' என்று அவர் வேண்டினார். அதற்கு இறைவன், 'என்னை நீர் ஒருபோதும் காணமுடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தன்னுடைய இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீ காண முடியும்'' என்று கூறினான். அவ்வாறே அவரின் இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது; மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது 'உன்னை நான் துதிக்கிறேன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும், நான் நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானவனாக இருக்கிறேன்'' என்று கூறினார் (எனும் 7:143 வது வசனம்).

4638. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தம் முகத்தில் அறைவாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறினார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?' என்று கேட்க அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், 'மனிதர்கள் அனைவரிலும் மூஸாவை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!'' என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மதை விடவுமா?' என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர்களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகிறவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியாசனத்தின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது 'தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்ற போது) அடைந்த மூர்ச்சைக்கு பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். 3

மன்னும் சல்வாவும்4

4639. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். 5

பகுதி 3

(நபியே!) கூறுக: மனிதர்களே! நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி எவனுக்குரியதோ அந்த அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உயிரளிக்கிறான்; இறக்கச் செய்கிறான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட 'உம்மீ' (எழுத்தறிவற்ற) தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேத வாக்குகளையும் நம்புகின்றனர். எனவே, அவரைப் பின்பற்றுங்கள்; அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும் (எனும் 7:185 வது இறைவசனம்).

4640. அபுத் தர்தா(ரலி) அறிவித்தார்

(ஒரு சமயம்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர்(ரலி) கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர்(ரலி) மன்னிக்காமல் அபூ பக்ர்(ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால் (தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.

(அப்போது) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூ பக்ர்(ரலி) வருவதைக் கண்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்'' என்று கூறினார்கள். (பிறகு) உமர்(ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள். (நடந்த) செய்தியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்கு வாதத்தை தொடங்கி வைத்ததால் உமரை விட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) 'மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள் 'பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால், அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்'' என்றார்கள். 6

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'ஃகாமர' எனும் சொல்லுக்கு 'நன்மையில் முந்தினார்' என்று பொருள்.

பகுதி 4

''ஹித்தத்துன் (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று (திருக்குர்ஆன் 07:161 வது வசனத்தொடர்.

4641. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இஸ்ரவேலர்களிடம், 'ஹித்ததுன்'' (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாசலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம்'' என்று கூறப்பட்டது. ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் பிட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும், (உள்ளே நுழையும் போது) 'ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்'' (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து) என்று (பரிகாசமாகச்) கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 7

பகுதி 5

(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199 வது இறைவசனம்.)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'உர்ஃப்' எனும் சொல் 'நன்மை'யைக் குறிக்கும்.

4642. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா'(ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், 'என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா'' என்று கூறினார். அதற்கு அவர், 'உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்'' என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் சென்றபோது, 'கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை'' என்று கூறினார். உமர்(ரலி) கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, '(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக!'' (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்'' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர்(ரலி) அதை மீறவில்லை. (பொதுவாக) உமர்(ரலி) இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

4643. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்

''(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!'' எனும் (திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.

4644. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்

மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில் 7:199) அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். 8

(8) 'அல் அன்ஃபால்' அத்தியாயம் 1

''(நபியே!) போரில் கிடைத்த பொருட்களை குறித்து அவர்கள் வினவுகிறார்கள். கூறும்: போரில் கிடைத்த பொருள்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், உங்களுக்கிடையே (உள்ள உறவுகளைச்) சீராக்கிக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 08:1 வது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) 'அன்ஃபால்' எனும் சொல்லுக்குப் 'போரில் கிடைத்த பொருள்கள் (ஃகனீமத்துகள்)' என்று பொருள்.

கத்தாதா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 08:46 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரீஹுக்கும்' எனும் சொல்லுக்கு 'உங்கள் போர் (வலிமை') என்று பொருள்.

நன்கொடையும் 'நாஃபிலா' என்று சொல்லப்படும்.

4645. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அல்அன்ஃபால்' அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், 'அது பத்ருப்போர் தொடர்பாக அருளப்பெற்றது'' என்று கூறினார்கள்.

(மேலும், இந்த அத்தியாயத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட சொற்களுக்குப் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது:)

(திருக்குர்ஆன் 08:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஷ்ஷவ்கத்'' எனும் சொல்லுக்கு '(ஆயுத) முனை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 08:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முர்திஃபீன்' எனும் சொல்லுக்குப் 'படை படையாக' என்று பொருள். (இதன் வினைச் சொல்லான) 'ரதிஃபனீ' மற்றும் 'அர்தஃபனீ' என்பதற்கு 'என்னைத் தொடர்ந்து வந்தான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 08:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃதூகூ' (சுவைத்துப் பாருங்கள்) எனும் சொல்லுக்கு 'அனுபவித்துப் பாருங்கள்' என்று பொருள். வாயினால் சுவைப்பதை இது குறிக்காது.

(திருக்குர்ஆன் 08:37 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபயர்குமஹு' எனும் சொல்லுக்குத் 'தீயோரை அவன் ஒன்று சேர்ப்பான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 08:57 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷர்ரித்' எனும் சொல்லுக்குச் 'சிதறி(யோ)டச் செய்யுங்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 08:61 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ இன் ஜனஹு' எனும் சொற்றொடருக்கு 'அவர்கள் (சமாதானத்தைக்) கோரினால்' என்று பொருள்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸில்கி' எனும் சொல்லும் 'அஸ்ஸல்கி' அஸ்ஸலாம் ஆகிய சொற்களும் ('சமாதானம்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(திருக்குர்ஆன் 08:67 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஸ்கின' எனும் சொல்லுக்கு 'முறியடிப்பார்' என்று பொருள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 08:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முகாஃ' எனும் சொல் 'அவர்கள் தங்கள் விரல் (நுனி)களைத் தங்கள் வாய்களுக்குள், நுழைத்துக் கொள்வதைக்' குறிக்கும். 'தஸ்தியா' எனும் சொல்லுக்குச் 'சீட்டியடித்தல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 08:30 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸி யுஸ்பித்தூக்க' எனும் சொல்லுக்கு 'உங்களை அடைத்துவைக்க' என்று பொருள்.

பகுதி1

நிச்சயமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும் தாம் அல்லாஹ்விடம் மிகவும் இழிவான விலங்குகளாவர் (எனும் 8:22 வது இறைவசனம்).

4646 முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்

நிச்சயமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடம் மிகவும் இழிவான விலங்குகளாவர் எனும் (திருக்குர்ஆன் 08:22 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில் 'பனூ அப்தித்தார் குலத்தைச் சேர்ந்த சிலர் தாம் அவர்கள்'' என்று கூறினார்கள். 2

பகுதி 2

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள். அல்லாஹ், மனிதனையும் அவனுடைய உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கிறான் என்பதையும், நிச்சயமாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (எனும் 8:24 வது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'இஸ்தஜீபு' எனும் சொல்லுக்கு 'பதிலளியுங்கள்' என்று பொருள். 'லிமா யுஹ்யீக்கும்' (உங்களுக்கு வாழ்வளிக்கின்ற) என்பதற்கு 'உங்களைச் சீராக்குகின்ற' என்று பொருள்.

4647. அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

நான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?' எனக் கேட்டார்கள். பிறகு, 'நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்'' என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் தாம்'' என்று கூறினார்கள். 3

இதே ஹதீஸை நபித்தோழர் அபூ ஸயீத் 'பின் முஅல்லா(ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று வேறு அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.

பகுதி 3

மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதையும் (நபியே!) நினைத்துப் பாருங்கள்: 'இறைவா! இது உன்னிடமிருந்து அருளப்பெற்ற சத்தியம் தான் என்றிருப்பின், எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்துவிடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' எனும் (திருக்குர்ஆன் 08:32 வது) இறைவசனம்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

குர்ஆனில் அல்லாஹ் 'மத்தர்' எனக் குறிப்பிட்டிருப்பது (பெரும்பாலும்) 'வேதனை'யையே குறிக்கும். (மழையைக் குறிக்காது). மழையைக் குறிக்க அரபுகள் 'அல்ஃகைஸ்' எனும் சொல்லையே பயன்படுத்துவர். 'அவர்கள் நம்பிக்கையிழந்த பின்னரும் அவனே மழையைப் பொழிவிக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 42:28 வது) வசனத்தில் இவ்வாறே (மழை என்பதைக் குறிக்க 'அல்ஃகைஸ்' எனும் சொல்லே) ஆளப்பட்டுள்ளது.

4648. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் 'இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!'' என்று சொன்னான். அப்போது '(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்'' எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.

பகுதி 4

''(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவ மன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 08:33 வது) இறைவசனம்.

4649. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல், 'இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று சொன்னான். அப்போது '(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! அறியமாட்டார்கள்'' எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.

பகுதி 5

(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் (எனும் 8:39 வது வசனத்தொடர்.)

4650. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் என்னிடம் வந்து, 'அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின் வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார். 'இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விருவருக்குமிடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினாரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதி வான்களை நேசிக்கிறான்'' (திருக்குர்ஆன் 49:09). 'இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்?' என்றும் கேட்டார். நான், 'என் சகோதரர் மகனே! இந்த (திருக்குர்ஆன் 49:9 வது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்குக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்துவிடுவது, 'ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலைசெய்தால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்து கிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்'' என்ற (திருக்குர்ஆன் 04:93 வது) வசனத்திற்கு சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப்பானதாயிருக்கும்'' என்று கூறினேன். 4 அந்த மனிதர்'' '(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்' (திருக்குர்ஆன் 08:39) என்று அல்லாஹ் கூறுகிறானே!'' என்று கேட்டார். நான், '(இதை) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்தி விட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்ற) ஒருவர் தம் மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக்கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்று விடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்தபோது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை'' என்று பதிலளித்தேன். தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும், 'அலீ இப்னு அபீ தாலிப்) மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார். நான், 'அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இதுதான்:) உஸ்மான்(ரலி) அவர்களை அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ(ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனுமாவார்கள்'' என்று கூறினேன். 5

(இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்:)

இப்னு உமர்(ரலி) 'இதோ நீங்கள் காண்கிற இந்த இடத்தில் உள்ளது தான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமாவின்) இல்லமாகும்''- என்று தம் கரத்தால் சைகை செய்தவாறு - கூறினார்கள்.

4651. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

எங்களிடம் இப்னு உமர்(ரலி) புறப்பட்டு வந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), 'நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, இப்னு உமர்(ரலி), 'குழப்பம்' (ஃபித்னா) என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா? முஹம்மத்(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் போரிட்டு வந்தார்கள். இணைவைப்பவர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்'' என்று பதிலளித்துவிட்டு, 'அவர்களின் போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களின் போரைப் போன்று இருந்ததில்லை'' என்றும் கூறினார்கள்.

பகுதி 6

நபியே! இறைநம்பிக்கையாளர்களுக்குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் கொன்றுவிடுவார்கள். மேலும், (இத்தகையோர்) உங்களில் நூறு பேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்த கொள்ளாத மக்களாக இருக்கிறார்கள் (எனும் 8:65 வது இறைவசனம்.)

4562. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 08:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது. இதையே 'இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது'' என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) பலமுறை தெரிவித்தார்கள். அதன் பிறகு 'எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு, தற்போது (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். எனவே, உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேர்களை வெற்றிகொள்வார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வெற்றி கொள்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 08:66 வது) இறைவசனம் அருளப்பெற்றது. (அதன்மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.

ஒரு முறை சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) இவ்வசனம் (திருக்குர்ஆன் 08:65) குறித்துக் கூறியபோது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஈயுமான (அப்துல்லாஹ்) இப்னு ஷுப்ருமா(ரஹ்), 'நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும் கூட நான் இது போன்றே கருதுகிறேன் என்று கூறினார்'' என்றும் அதிகப்படியாக அறிவித்தார்கள்.

பகுதி 7

''எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு தற்போது (அதனை) உங்களுக்கு அல்லாஹ் தளர்த்திவிட்டான்'' எனும் (திருக்குர்ஆன் 08:66 வது) இறைவசனம்.

4653. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 08:65 வது) வசனம் அருளப்பெற்று, (முஸ்லிம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டபோது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. எனவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது. அதில் அல்லாஹ், 'எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்போது (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். எனவே, உங்களில் (நிலை குலையாத) பொறுமைசாலிகள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றிகொள்வார்கள்'' எனும் வசனம் (திருக்குர்ஆன் 08:66) அருளப்பெற்றது. (எதிரிகளைச் சமாளிக்கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்துவிட்ட போதே அதே அளவுக்கு சகிப்புத்தன்மையையும் அவன் குறைத்துவிட்டான்.

(9) 'பராஅத்' ('அத்தவ்பா') அத்தியாயம்1

(திருக்குர்ஆன் 09:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மர்ஸத்' எனும் சொல்லுக்குப் 'பாதை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இல்லன்' எனும் சொல்லுக்கு பந்தம், பொறுப்பு, உடன்படிக்கை ஆகிய பொருள்கள் உண்டு.

(திருக்குர்ஆன் 09:16 வது வசனத்திலுள்ள 'அந்தரங்க நண்பர்கள்' என்பது மூலத்திலுள்ள 'வலீஜத்' எனும் சொல்லின் பொருளாகும். பொதுவாக) மற்றொன்றினுள் நீ நுழைவித்த எல்லாப் பொருள்களையும் 'வலீஜத்' எனும் சொல் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 09:42 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஷ்ஷுக்கா' எனும் சொல்லுக்குப் 'பயணம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கபால்' எனும் சொல்லுக்குச் சீர்குலைவு, மரணம் (அல்மவ்த்) ஆகிய பொருள்கள் உண்டு. ('அல்மூத்தா' என்பதன்படி 'மனநோய்' எனும் பொருளும் உண்டு.)

(திருக்குர்ஆன் 09:46 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வலா தஃப்தின்னீ' எனும் சொற்றொடருக்கு 'என்னை நீர் கண்டிக்காதீர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:53 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கர்ஹ்' எனும் சொல்லும் (அதே வகைச் சொல்லான 'குர்ஹ்' எனும் சொல்லும் ('வெறுப்பு' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 09:57 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முத்தகலன்' எனும் சொல்லுக்கு (அதே வகைச் சொல்லான' 'குர்ஹ்' எனும் சொல்லும் ('வெறுப்பு' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஜ்மஹுன்' எனும் சொல்லுக்கு 'விரைந்தோடுவார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:70 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் முஃதஃபிக்காத்' எனும் சொல்லுக்குத் 'தலைகீழாகப் புரண்டு போன ஊர்' என்று பொருள். 'வல் முஃதஃபிக்கத்த அஹ்வா' எனும் (திருக்குர்ஆன் 53:53 வது) வசனத்திற்கு, '(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்து போன நகரங்களை அதல பாதாளத்தில் தூக்கிப் போட்டவனும் அவன்தான்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:72 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்ன்' எனும் சொல்லுக்கு, 'நிலையானது' என்று பொருள். (அதன்வினைச் சொல்லான) 'அதன்த்து பி அர்ளின்' எனும் வாக்கியத்திற்கு 'நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்' என்று பொருள்.

இதிலிருந்து 'மஅதின்' (சுரங்கம்) என்ற சொல் பிறந்தது. மேலும் 'மஅதனி சித்க்' என்றால் 'சத்தியத்தின் பிறப்பிடம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:87 வது வசனத்திலுள்ள 'கவாலிஃப்' (பின்தங்கிவிட்டவர்கள்) எனும் சொல்லின் ஒருமையான) 'அல்காலிஃப்' எனும் சொல், என் பின்னால் வராமல் நான் சென்ற பின் (தன் வீட்டிலேயே) அமர்ந்துகொண்டவனைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்து 'யக்லுஃபுஹு ஃபில் ஃகாபிரீன்' (இறைவா! அவருக்குப் பின்னால் அவருக்கு பதிலாக ஒருவரை வழங்கிடுவாயாக!) எனும் வழக்கு பிறந்தது.

'கவாலிஃப்' என்பது 'காலிஃபா' எனும் பெண்பால் ஒருமையின் பன்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், இந்த அமைப்பில் ஆண்பால் பன்மை ஃபாரிஸ் - ஃபவாரிஸ், ஹாலிக் - ஹவாலிக் ஆகிய இரண்டு சொற்களில் மட்டுமே உண்டு.

(திருக்குர்ஆன் 09:88 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கைராத்' எனும் சொல்லின் ஒருமை 'அல்கைரத்' என்பதாகும். இதற்குச் 'சிறந்தவை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:106 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முர்ஜவ்ன' எனும் சொல்லுக்குத் 'தாமதப்படுத்தி வைக்கப்பட்டவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:109 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷஃபா' எனும் சொல்லுக்குத் 'தாமதப்படுத்தி வைக்கப்பட்டவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:109 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷஃபா' எனும் சொல்லுக்கு 'விளிம்பு' என்று பொருள்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுருஃப்' எனும் சொல்லுக்குச் 'சரிந்து விழக்கூடிய வெள்ளம் மற்றும் ஓடைகள்' என்று பொருள். 'ஹாரின்' எனும் சொல்லுக்கு 'இடிந்து விழக்கூடியது என்று பொருள். 'தஹவ்வரத்தில் பிஃரு' என்றால், 'கிணறு இடிந்துவிட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:114 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல அவ்வாஹ்' எனும் சொல்லுக்குப் பரிவோடும் பயத்தோடும் அடி பணிகிறவர்' என்று பொருள்.

ஒரு கவிஞர் கூறினார்: நான் இரவில் அந்த ஒட்டகத்தில் சிவிகை பூட்ட எழுந்தால், சஞ்சலம் உள்ள மனிதன் அடங்கி ஒடுங்குவதைப் போன்று அந்த ஒட்டகமும் அடிபணியும்.

பகுதி 1

''(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குவோரில் யாரிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்'' எனும் (திருக்குர்ஆன் 09:1 வது) இறைவசனம்.

(திருக்குர்ஆன் 09:3 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அஃதான்' எனும் சொல்லுக்கு 'அறிவிப்பு' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 09:61 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உதுனு (யுஃமினு)' எனும் சொற்றொடருக்கு '(அல்லாஹ்வை) உண்மை என நம்பும் செவி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 09:103 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தூய்மைப்படுத்துகின்ற' எனும் ஒரே பொருள் கொண்ட) 'துதஹ்ஹிருஹும்' மற்றும் 'துஸக்கீஹிம்' போன்ற இரண்டு சொற்களைப் பயன்படுத்துவது (அரபுகள் வழக்கில்) மிகுதியாக உண்டு.

('துஸக்கீஹிம்' என்பதன் வேர்ச் சொல்லான) 'ஸகாத்' எனும் சொல்லுக்குக் 'கீழ்ப்படிதல்; 'மனத் தூய்மை' ஆகிய பொருள்கள் உண்டு.

(இதே 'ஸகாத்' எனும் சொல் இடம் பெற்றுள்ள 41:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லாயுஃத்தூனஸ் ஸகாத்த' (ஸகாத் வழங்காதவர்கள்) என்பதன் கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறாதவர்கள்.

(திருக்குர்ஆன் 09:30 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'யுளாஹிஊன' எனும் சொல்லின் மற்றோர் ஓதல் முறையான) 'யுளாஹுன' எனும் சொல்லுக்கு 'ஒத்திருக்கிறார்கள்' என்று பொருள்.

4654. பராஉ(ரலி) அவர்களிடம் அறிவித்தார்

''(நபியே!) உங்களிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அல்லாஹ் அத்தகையவர்கள் குறித்து உங்களுக்குத் தீர்ப்பு அளிக்கிறான்.. என்று நீங்கள் கூறுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:17 வது) இறை வசனம் தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.

(9 வது அத்தியாயமான) 'பராஅத்' (அத்தவ்பா) அத்தியாயமே கடைசியாக அருளப்பெற்ற அத்தியாயம் ஆகும்.2

பகுதி 2

''எனவே, (இணைவைப்பவர்களே!) நீங்கள் (விரும்பியபடி) பூமியில் நான்கு மாதங்கள் (எங்கு வேண்டுமானாலும்) சுற்றித் திரியுங்கள். நீங்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியாது என்பதையும் அல்லாஹ் மறுப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09:2 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'சீஹூ' எனும் சொல்லுக்குச் 'சுற்றித் திரியுங்கள்' என்று பொருள்.

4655. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(அபூ பக்ர்(ரலி) தலைமையில் 'ஹஜ்ஜத்துல் வதா'விற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூ பக்ர்(ரலி) 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய(வர)க்கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக்கூடாது' என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பிவைத்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்:

எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே '(இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக் கூடாது என்றும் அறிவித்தார்கள்.3

பகுதி 3

''மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களைவிட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நிச்சயமாக விலகி விட்டார்கள். எனவே, (இறைமறுப்பிலிருந்தும் ஒப்பந்த மீறலிலிருந்தும்) நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்குத் தான் நல்லது. (அவ்வாறன்றி) நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்துகொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான தண்டனை உண்டெனும் 'நற்செய்தி'யை இறை மறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக'' எனும் (திருக்குர்ஆன் 09:3 வது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'அதான்' எனும் சொல்லுக்கு 'அறிவிப்பு' என்று பொருள்.

4656. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

அபூ பக்ர்(ரலி) (தம் தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது 'துல்ஹஜ் மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய நாளில் மினாவில் 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக்கூடாது' என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பிவைத்தார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களை அனுப்பி, (இணை வைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.

எனவே, எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக்கூடாது என்றும் அறிவித்தார்கள். 4

பகுதி 4

...ஆயினும், இணைவைப்பாளர்களில் எவருடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தம் உடன்படிக்கையை நிறைவேற்றுவதில்) உங்களுக்கு எந்தக் குறைபகுதி வைக்காமலும் உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு (எனும் 9:4 வது இறைவசனம்.)

4657. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு அபூ பக்ர்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின்போது அபூ பக்ர்(ரலி) 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது' என்றும், 'நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக்கூடாது' என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பி வைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஹுமைத் இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் (இந்த) ஹதீஸின் அடிப்படையில் '(துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாள்தான் பெரிய ஹஜ் நாளாகும்'' என்று சொல்லிவந்தார்கள்.

பகுதி 5

(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்த பிறகு இவர்கள் தங்களின் சத்தியங்களை முறித்துவிட்டு உங்களின் மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால் (இத்தகைய) இறைமறுப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள். ஏனென்றால், அவர்களுக்கு சத்தியங்கள் (என்பதெல்லாம்) கிடையாது. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) ஒதுங்கியிருக்கக் கூடும் (எனும் 9:12 வது இறைவசனம்.)

4658. ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார்

(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், 'இந்த இறைவசனத்தில் (திருக்குர்ஆன் 09:12) குறிபிட்டப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை'' என்று கூறினார்கள். 5 அப்போது கிராமவாசி ஒருவர், 'முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர் தரமான பொருள்களைத் திருடிச் செல்கிற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லையே'' என்று கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி), 'அவர்கள் பாவிகளே! (இறைமறுப்பாளர்களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவிற்கு முதியவரென்றால்) குளிர்ந்த நீரைப் பருகினால் கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

பகுதி 6

''தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழியில் செலவிடுகிறவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் 'நற்செய்தியினை (நபியே!) நீர் அறிவிப்பீராக'' எனும் (திருக்குர்ஆன் 09:34 வது) வசனத் தொடர்.

4659. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களின் கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

4660. ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார்

நான் (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' எனுமிடத்தில் அபூ தர்(ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், 'இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் ஷாம் நாட்டில் இருந்தோம். அப்போது நான், 'தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்து, அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் 'நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக'' எனும் (திருக்குர்ஆன் 09:34 வது) இறைவசனத்தை ஓதினேன். அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா(ரலி), இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்களின் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது'' என்று கூறினார்கள். நான், 'இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிச்சை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்'' என பதிலளித்தார்கள்.7

பகுதி 7

நபியே! ஒரு நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துக!) அந்நாளில் (தங்கம், வெள்ளி ஆகிய) அவற்றை நரகநெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டுப் பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடுபோடப்படும். இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் சுவையுங்கள் (என்று சொல்லப்படும்)'' எனும் (திருக்குர்ஆன் 09:35 வது) இறைவசனம்.

4661 காலித் இப்னு அஸ்லம்(ரஹ்) கூறினார்

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றோம். அப்(பயணத்தின்)போது அவர்கள், (திருக்குர்ஆன் 03:95 வது இறைவசனத்தைப் பற்றி) இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப்படுத்தக் கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்'' என்று கூறினார்கள்.

பகுதி : 8

உண்மையாக, அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள்முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனவாகும். இதுதான் சரியாக நெறிமுறையாகும்.'' எனும் (திருக்குர்ஆன் 09:36 வது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கய்யிம்' எனும் சொல்லுக்கு 'நிலையான' என்று பொருள்.

4662 ('ஹஜ்ஜத்துல் வதாவில்' உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து 'ரஜப்' மாதம் ஆகும்.

என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

பகுதி9

அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மன அமைதியை அருளினான்'' எனும் (திருக்குர்ஆன் 09:40 வது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'சகீனா' (மனஅமைதி) எனும் சொல் 'சுகூன்' எனும் வேர்ச் சொல்லிலிருந்து 'ஃபர்லா' எனும் வாய்ப்பாட்டில் அமைந்தாகும்.

4663. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்

நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) நபி(ஸல்) அவர்களுடன் ('ஸவ்ர்' எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு) இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், 'இறைத்தூதர் அவர்களே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவானே!'' என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். 10

4664. இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது நான் (இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்,) 'இப்னு ஸுபைரின் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களும், அவர்களின் பாட்டனார் அபூ பக்ர்(ரலி) அவர்களும், அவர்களின் பாட்டி ஸஃபிய்யா(ரலி) அவர்களும் ஆயிற்றே! (இத்தகைய சிறப்புகள் மிக்க இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கு நீங்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து, ஏன் கலீஃபாவாக ஏற்கக்கூடாது?)'' என்று கேட்டேன். 11

4665. இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்

இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்குமிடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் காலையில் சென்று, 'நீங்கள் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸுபைரையும் பனூ உமய்யாக்களையும் தாம் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கிறவர்களாக அல்லாஹ் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.'' என்று கூறினார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: மக்கள் (என்னிடம்) 'இப்னு ஸுபைர் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். நான், 'இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவரின் தந்தையோ நபி(ஸல்) அவர்களின் பிரத்தியேக உதவியாளராவார் - ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் - அவரின் தாயாரோ 'கச்சுடையாள்' (என்று நபி(ஸல்) அவர்களால் பட்டப் பெயர் சூட்டப்பெற்றவர்) ஆவார். - அஸ்மா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் - அவர்களின் சிறிய தாயாரோ இறைநம்பிக்கையாளர்களின் அன்னையாவார். - ஆயிஷா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் - அவர்களுடைய அத்தையோ நபி (ஸல்) அவர்களின் துணைவியராவார். - கதீஜா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் அத்தையோ அவரின் பாட்டியாவார். -ஸஃபிய்யா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர், இஸ்லாத்தில் நெறி தவறாதவர்; குர்ஆனை நன்கறிந்தவர். அல்லாஹ்வின் மீதாணையாக! உமய்யாக்கள் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றால் சொந்தத்தின் காரணத்தினால் உறவாடுகிறார்கள். 12 எனக்கு அவர்கள் ஆட்சியாளர்களானால் அதற்குத் தகுதியுடையோராயும் சிறந்த பாரம்பரியமுடையோராயுமே ஆட்சியாளர்களாகின்றனர். (அப்படியிருந்தும் நான் அவர்களைத் கைவிட்டு, இப்னு ஸுபைருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய உறுதி பூண்டேன். ஆனால்) அவரோ 'துவைத்'களுக்கும், 'உசாமா'க்களுக்கும், 'ஹுமைதா'க்களுக்கும் (என்னைவிட) முன்னுரிமை அளித்துவிட்டார். (இப்னு ஸுபைரின் குலத்தினரான) 'பனூ அஸத்' குலத்தைச் சேர்ந்த பனூ துவைத், பனூ உசாமா, பனூ ஹுமைத் ஆகிய குடும்பங்களையே குறிப்பிடுகிறார்கள். 13 இப்னு அபில் ஆஸ் - அப்துல் மலிக் இப்னு மர்வான் - அவர்கள் (தம் சகாக்களிடையே பல சிறப்புகள் பெற்று) முன்னேறிச் செல்கிறார். இவரோ - இப்னு ஸுபைரோ - பின்னடைவுக்கு ஆளாகிவிட்டார்.

4666 இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தனக்கே சேரவேண்டுமென்று) இப்னு ஸுபைர் அவர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? 'நான் இப்னு ஸுபைருக்காக (அவருக்கு ஆதரவு கொடுப்பதாக வேண்டாமா என்பதில்) என் மனசாட்சியுடன் விவாதித்து வருகிறேன். (இந்த அளவிற்கு) நான் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்காவோ உமர்(ரலி) அவர்களுக்காகவோ வாதாடியதில்லை. அவர்கள் இருவருமோ இப்னு ஸுபைரைவிட அனைத்து நன்மைகளுக்கும் தகுதிவாய்ந்தோராய் இருந்தனர்'' என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன்.

''இப்னு ஸுபைர் அவர்கள், நபி(ஸல்) அவர்களின் அத்தை (ஸஃபிய்யா) உடைய (புதல்வரின்) புதல்வரும், ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களின் புதல்வரும் ஆவார். மேலும், அவர் அபூ பக்ர்(ரலி) அவர்களின் (புதல்வி அஸ்மாவின்) புதல்வரும், கதீஜா(ரலி) அவர்களின் சகோதரர் (அவ்வாம்) உடைய (புதல்வர் ஸுபைரின்) புதல்வருமாவார். இன்னும் அவர் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) உடைய புதல்வரும் ஆவார்'' என்று (மக்களிடம்) கூறினேன். ஆனால், இப்னு ஸுபைரோ, தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு என்னைவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். நான் அவருக்கு நெருக்கமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.

''மேலும், நானாக முன்வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தால் அதனை அவர் ஏற்கவே செய்வார் என்றே நான் கருதியிருந்தேன். (இனியும் எனக்கு) அவர் நன்மை ஏதேனும செய்வார் என்று நான் கருதவில்லை. (அப்படி) அவர் (தன் நிலையில்) உறுதியாக இருப்பாரென்றால், (பனூ உமய்யா) என் மீது ஆட்சிசெலுத்துவதே மற்றவர்கள் (பனூ அஸத்) என் மீது ஆட்சிசெலுத்துவதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்'' என்று நான் எண்ணிக்கொண்டேன்.

பகுதி 10

''உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கும் ('ஸகாத்' எனும் தானம் உரியதாகும்)'' எனும் (திருக்குர்ஆன் 09:60 வது) வசனத் தொடர்.

''நன்கொடை மூலம் மக்களை ஈர்ப்பவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்'' என முஜாஹித்(ரஹ்) (விளக்கம்) கூறினார்கள்.

4667. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், 'இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்'' என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் 'நீங்கள் நீதி செய்யவில்லை'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகிற கூட்டத்தினர் தோன்றுவர்'' என்று கூறினார்கள். 14

பகுதி 11

''(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையோரென்றால், இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தான தர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கிறான். மேலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 09:79 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'யல்மிஸூன' எனும் சொல்லுக்குக் 'குறை பேசுகிறார்கள்'' என்று பொருள்.

'ஜுஹ்தஹும்' என்பதற்கு 'அவர்களால் முடிந்ததை - சக்திக்குட்பட்டதை' என்று பொருள்.

4668. அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்(ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், '(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக்கொண்டு வந்திருக்கிறார்'' என்று (குறை) கூறினார்கள். அப்போதுதான் '(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கிறான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 09:79 வது) இறைவசனம் அருளப்பெற்றது. 15

4669. அபூ வாயில் ஷகீக் இப்னு சலாமா(ரஹ்) அறிவித்தார்

அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) 'தர்மம் செய்யும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரண்டு கையளவு (தானியம் தர்மமாகக்) கொண்டு வருவதற்குக் கூடக் கடுமையாக உழைப்போம். (ஆனால்,) எங்களில் சிலருக்கு இன்று ஒரு லட்சம் (தீனார் ஃ திர்ஹம்) உள்ளது'' என்று - தம்மைப் பற்றியே குறிப்பிடுவதைப் போன்று - கூறினார்கள்.16

பகுதி 12

''(நபியே!) இந்த நயவஞ்சகர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது பாவமன்னிப்புக் கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெரினல்,) எழுபது முறை இவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான். ஏனென்றால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இவர்கள் மறுத்துவிட்டார்கள். பாவம் புரியும் மக்களை அல்லாஹ் நேர்வழியில் சேர்ப்பதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 09:80 வது) இறைவசனம்.

4670. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி(ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். 17 நபி(ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ்(ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர்(ரலி) எழுந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடைவித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, '(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபதுமுறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்'' என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள்.

உமர்(ரலி), 'இவர் நயவஞ்சகராயிற்றே!'' என்று கூறினார்கள். இருந்தும் நபி(ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான். 18

4671. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை சலூல் இறந்துவிட்டபோது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்தபோது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!'' என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, 'ஒதுங்கிக்கொள்ளுங்கள், உமரே!'' என்று கூறினார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், 'இவருக்காகப் பாவமன்னின்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.) நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவருமாயின் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் 'பராஅத்' (9 வது) அத்தியாயத்திலிருந்து 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்துவிட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09:84, 85ஆகிய) இரண்டு வசனங்கள் அருளப்பெற்றன. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.

பகுதி 13

''அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீங்கள் நிற்க வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத் தொடர்.

4672. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவரிடம் கொடுத்து அப்துல்லாஹ் இப்னு உபையை அதில் கஃபனிடும்படி உத்தரவிட்டார்கள். பிறகு அவருக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) நபி(ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, 'நயவஞ்சகராயிருந்த இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? அல்லாஹ்வோ, இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம் என்று உங்களைத் தடுத்துள்ளானே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், (அவர்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம். அல்லது கோரமலும் இருக்கலாம் என்று) 'எனக்கு அல்லாஹ் நான் விரும்பியதைச் செய்துகொள்ள அனுமதியளித்துள்ளான்' அல்லது 'அல்லாஹ் எனக்கு இவ்வாறு அறிவித்துள்ளான்' என்று கூறி, '(நபியே!) நீங்கள் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமல் இருங்கள். (இரண்டும் ஒன்றுதான். எனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்'' எனும் (திருக்குர்ஆன் 09:80 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, 'நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காக அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவருக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். பிறகு அல்லாஹ் 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீங்கள் நிற்கவேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்துவிட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை நபிகளாருக்கு அருளினான்.

பகுதி 14

''நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த(தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும்'' எனும் (திருக்குர்ஆன் 09:95 வது) இறைவசனம்.

4673. அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்

(என் தந்தை) கஅப் இப்னு மாலிக்(ரலி) 'தபூக்' போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன். 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்'' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள். 19

பகுதி

''நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்திகொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்தி கொள்ளமாட்டான்'' எனும் (திருக்குர்ஆன் 09:96 வது) இறைவசனம். 20

பகுதி 15

மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலுடன் தீயசெயலையும் கலந்துவிட்டிருக்கிறார்கள். (ஆயினும்,) அல்லாஹ் அவர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் பொரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாவான் (எனும் 9:102 வது இறைவசனம்).

4674. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

இன்றிரவு எங்களிடம் (வானவர்கள்) இருவர் வந்து என்னை (தூக்கத்திலிருந்து) எழுப்பி (அழைத்து)ச் சென்றார்கள். அவர்கள் இருவரும் தங்கச் செங்கல்லாலும் வெள்ளிச் செங்கல்லாலும் கட்டப்பெற்றிருந்த ஒரு நகரத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அப்போது எங்களைச் சில மனிதர்கள் எதிர்கொண்டார்கள். அவர்களின் உடலமைப்பில் பாதி நீ பார்த்திலேயே மிக அழகானதாயும், மற்றொரு பாதி நீ பார்த்ததிலேயே மிக அருவருப்பானதாயும் இருந்தது. அ(ந்த வான)வர்கள் இருவரும் அந்த மனிதர்களிடம், 'நீங்கள் சென்று அந்த ஆற்றில் விழுங்கள்'' என்று கூற அவர்களும் அவ்வாறே அதில் விழுந்தனர். பிறகு எங்களிடம் திரும்பி வந்தனர். (அதற்குள்) அந்த அருவருப்பான தோற்றம் அவர்களைவிட்டுச் சென்றுவிட்டிருந்தது. அவர்கள் மிக அழகான தோற்றமுடையவர்களாக மாறி விட்டிருந்தனர். (என்னை அழைத்துச் சென்ற) அந்த இருவரும் என்னிடம் 'இதுதான் 'அத்ன்' எனும் சொர்க்கம். இதுதான் உங்கள் தங்குமிடம்'' என்று கூறிவிட்டு பிறகு, 'பாதி (தோற்றம்) அழகானதாயும் பாதி (தோற்றம்) அருவருப்பானதாயும் இருந்தவர்கள் (உலக வாழ்வில்) நற்செயலையும் வேறு தீய செயலையும் கலந்துவிட்டவர்கள். அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான்'' என்று (விளக்கம்) கூறினார்கள்.

என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

பகுதி 16

''இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் - அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் - அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை'' எனும் (திருக்குர்ஆன் 09:113 வது) இறைவசனம்.

4675. முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிபுக்கு மரணவேளை வந்தபோது அவரருகில் அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் இருக்க, நபி(ஸல்) அவர்கள் வந்து, 'என் பெரிய தந்தையே! 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன்'' என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு உமய்யாவும், 'அபூ தாலிபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், '(பெரிய தந்தையே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்'' என்று கூறினார்கள். அப்போதுதான், 'இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் - அவர்கள் நெருங்கிய உறவினர்களாகிய கூட - அவர்களுக்காபப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை'' எனும் (திருக்குர்ஆன் 09:113 வது) இறைவசனம் அருளப்பட்டது. 21

பகுதி 17

''திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 09:117 வது) இறைவசனம்.

4676. அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி கஅப்(ரஹ்) அறிவித்தார்

(என் பாட்டனார்) கஅப் இப்னு மாலிக்(ரலி) (அந்திமக் காலத்தில்) கண் பார்வையற்றிருந்தபோது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்த அன்னாருடைய புதல்வரான (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) தெரிவித்தார்.

(என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) (தபூக் போரில் தாம் கலந்து கொள்ளாததைப் பற்றிய) தம் செய்தியை விவரித்தபோது 'எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தோ அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்துவிட்டான்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:118 வது) இறைவசனம் குறித்துச் சொன்னவற்றை செவியுற்றேன்.

கஅப்(ரலி) தம் பேச்சின் இறுதியில் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், (இறைத்தூதர் அவர்களே!) என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான (என்னுடைய) உரிமையைவிட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்துவிடுகிறேன்'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது'' என்று கூறினார்கள். 22

பகுதி 18

மேலும், எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம்விட்டிருந்ததெனில்) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகி விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீளவேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான் (எனும் 9:118 வது இறைவசனம்.)

4677. அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக்(ரஹ்) அறிவித்தார்

என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

'அல்உஸ்ரா' (எனும் தபூக்) போர், பத்ருப்போர் ஆகிய இரண்டு போர்களைத் தவிர, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த எந்த அறப்போரிலும் ஒருபோதும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.

மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முற்பகலில் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக்போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி(ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.

எனவே, மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரமும் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி(ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தாமல் இருந்துவிடுவார்களோ! அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்தால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான். அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென மக்களுக்குத் தடை விதித்திலிருந்து ஐம்பது நாள்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முஸலமா(ரலி) என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உம்மு ஸலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். உம்மு ஸலமா(ரலி), '(இறைத்தூதர் அவர்களே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்துவிடுவார்கள்'' என்றார்கள்.

ஆக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது. குறித்து (மக்களுக்கு) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.

(போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப் போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் கூறினான்.

(நம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப் போக்குக் கூறுகின்றனர். (எனவே, அவர்களை நோக்கி, நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சாக்குப் போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்க அறிவித்துவிட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள், மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (திருக்குர்ஆன் 09:94)23

பகுதி 19

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுடன் இருங்கள் (எனும் 9:119 வது இறைவசனம்.)

4678. அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி கஅப்(ரஹ்) அறிவித்தார்

(என் பாட்டனார்) கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) கூறினார்கள்.

(என் தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்துவிட்ட செய்தியை அறிவித்தபோது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பாரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்.

''நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினாரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.''

''மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.'' (திருக்குர்ஆன் 09:117-119)

பகுதி 20

''உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றனார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பாரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார்'' எனும் (திருக்குர்ஆன் 09:128 வது) இறைவசனம்.

4679. ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். 24 (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:

உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்'' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்'' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொருத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்'' என்று கூறினார்கள். 25

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்'' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன்.

முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், பேரீச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.

(அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கிறான்.'' (திருக்குர்ஆன் 09:128 , 129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. 26

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், '(அவ்விரு வசனங்கள்) 'குஸைமா'(ரலி) அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன'' என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது.
أحدث أقدم