-ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்
மார்க்கத்தில் அமல் ரீதியாக யார் எதை கொண்டு வந்தாலும், அதற்கான வழிக் காட்டல் இருக்க வேணடும். அதாவது நபியவர்கள் நேரடியாக சொல்லியிருக்க வேண்டும். அல்லது அதை செய்து காட்டியிருக்க வேண்டும்.அல்லது அதை அங்கீகரித்து இருக்க வேண்டும்.
நபியவர்கள் அனுமதிக்காத எந்த செயல்பாடுகளையும் நாம் அமல்களாக செய்யக் கூடாது. மார்க்கத்தில் புதிதாக உண்டாக்குபவைகள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு செல்லும் என்று நபியவர்களால் எச்சரிக்கப்பட்ட ஹதீஸ்களை மைய்யப்படுத்தி மக்களுக்கு சொல்லும் போது, மீண்டும் நம்மை நோக்கி சில கேள்விகள் முன் வைக்கப்படுவதை காணலாம். நபியவர்கள் காட்டித் தராத, அல்லது சொல்லாத செயல்பாடுகளை அமல்களாக செய்தால் முடிவு நரகம் என்றால். சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட சில குறிப்பிட்ட நபித்தோழர்கள் இப்னு உமர், இப்னு அப்பாஸ், உமர் (ரலி) போன்றோர்கள் நபியவர்கள் சொல்லித் தந்த அமல்களுக்கு மேலதிகமாகவும் சில வாசகங்களை அமல்களில் சொல்லியுள்ளார்களே ?
இவர்களின் நிலை என்ன ?இவர்கள் நரகவாதிகளா ?சுவனவாதிகளா ? என்று தான் செய்யும் பித்அத்துகளை தொடர்ந்து செய்வதற்கு சில ஸஹாபாக்களை கேடயமாக காட்டுகிறார்கள்.
இந்த கேள்வி நியாயமானதாக இருந்தாலும் ஸஹாபாக்களின் நிலையை சரியாக புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகளை கேட்க மாட்டார்கள். இப்படி கேள்வி கேட்பதே தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் பித்அத் சம்பந்தமாக எச்சரிக்கப்பட்ட ஹதீஸ்களை கவனியுங்கள்.
“இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
மேலும் “யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும் ”எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களுக்கும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்தத் தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள், அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது”, என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
ஆதாரம் : இப்னு மஸ்ஊத்(ரழி), நூல் : முஸ்லிம்
மேலும் “வார்த்தையில் சிறந்தது அல்லாஹ் வின் வேதமாகும். நடைமுறையில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது (நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத) “பித்அத்’கள். “பித்அத்’கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர்(ரழி), நூல்கள் : புகாரீ, முஸ்லிம், நஸாயீ.
மேலும் “எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது” என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர் : அலீ(ரழி), நூல் : அபூதாவூது, நஸாயீ. இப்படி பல ஹதீஸ்களை காணலாம்.
மேற்ச் சென்ற அனைத்து ஹதீஸ்களை உள்ளடக்கியதாக பின் வரும் குர்ஆன் வசனமும் எச்சரிப்பதை அவதானிக்கலாம்.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(33- 36)
பித்அத்தில் ஸஹாபாக்களின் நிலை?
ஸஹாபாக்கள் நபியவர்கள் சொல்லித் தராத ஒரு சில வார்த்தைகளை அமல்களாக சொல்லியிருப்பது ஹதீஸ் கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் ஸஹாபாக்கள் அல்லாஹ்விற்கும், நபியவர்களுக்கும் மாறு செய்து விட்டார்களா என்றால் கிடையாது.ஸஹாபாக்கள் விசயத்தில் நாம் எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகினால் மேற்கேட்கப்பட்ட கேள்வி எழாது.
முதலாவது ஸஹாபாக்கள் ஒரு போதும் நபியவர்கள் காட்டித் தந்த அமல்களுக்கு மாற்றம் செய்ய மாட்டார்கள். என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
இரண்டாவது மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் புரிந்து கொண்டதில் தவறிழைத்து இருக்கலாம்.
ஏன் என்றால் நபியவர்கள் காலத்தில் மார்க்க ரிதீயாக ஏதாவது பிழை நடந்தால் நபியவர்களே அதை திருத்திக் கொடுத்து விடுவார்கள். நபியவர்களின் காலத்திற்கு பிறகு நடந்தால், அது நபியவர்கள் சொல்லிக் கொடுத்ததிற்கு மாற்றமானது என்று யாருக்காவது தெரிய வந்தால், உடனே அவர் அதை திருத்திக் கொடுத்து விடுவார். அதற்கு அடுத்தடுத்த காலங்களில் அந்த விவகாரம் தெரிய வந்தால், நபியவர்களின் ஹதீஸ்களை வைத்து நபியவர்கள் இப்படி தான் சொல்லிக் கொடுத்துள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டி மக்களுக்கு எடுத்து காட்டுவார்கள்.
நபியவர்கள் சொன்னதும், ஸஹாபாக்கள் சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண் பட்டால் நபியவர்களின் செய்தியை தான் முற்ப்படுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவார்கள்.
குறிப்பிட்ட ஸஹாபாக்கள் குற்றவாளிகளா?
நிச்சயமாக ஸஹாபாக்கள் இந்த விசயத்தில் குற்றம் பிடிக்கப் பட மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே அல்லாஹ்வால் மன்னிக்கப்ட்டவர்கள். அவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும். ஓரிரு தோழர்கள் தவறு செய்தும் மன்னிக்கப்பட்ட வரலாறுகளை குர்ஆனும், ஹதீஸூம் உறுதிப்படுத்துகின்றன.
மேலும் “அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையும் அபூ மர்ஸத் கினாஸ் இப்னு ஹுஸைன் அல்ஃகனவீ(ரலி) அவர்களையும், ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் தலைவர்க)ளுக்கு ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய இரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)’ என்று கூறி அனுப்பினார்கள்.
(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க அவளை நாங்கள் சென்றடைந்தோம். ‘உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)’ என்று கேட்டோம். அவள், ‘என்னிடம் கடிதம் ஏதுமில்லை’ என்று பதிலளித்தாள். அவளிருந்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் நண்பர்கள் இருவரும் ‘கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!’ என்றார்கள்.
நான் (அவளிடம்), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன் மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! ஒன்று நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை (சோதனையிடுவதற்காக உன்னுடைய ஆடையை) நான் கழற்ற வேண்டியிருக்கும்’ என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்குத் தன்னுடைய கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள்.
அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். (கடிதம் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ(ரலி) அவர்களை நோக்கி,) ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர், ‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (என்னுடைய மார்க்கத்தை) மாற்றிக் கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும் என்னுடைய செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களின் மனைவி மக்களையும் அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் மக்காவில் உள்ளனர்’ என்று கூறினார்.
(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே கூறுங்கள்’ என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.
அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள், ‘இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உமரே! உமக்கென்ன தெரியும்? பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களிடம் அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’ என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லாவா?’ என்றார்கள்.
இதைக்கேட்ட உமர்(ரலி) அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள்.(புகாரி- 6259)
“ ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார்; “அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ தவறாகச் சொல்கிறாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப்போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள். (முஸ்லிம்- 4908)
மேற்ச் சென்ற சம்பவம் சம்பந்தமாக பின் வரும் குர்ஆன் வசனத்தை கவனியுங்கள். “ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.(60-01)
மேலும் “அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.(8- 68)
இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த நபித் தோழரின் எண்ணம் நல்லதாக இருந்தாலும், அந்த நபித் தோழர் தேச துரோக செயலை செய்கிறார், அதனால் தான் நபியவர்களுக்கு அல்லாஹ் அதை அறிவித்துக் கொடுத்து, காட்டி கொடுக்கிறான். ஆனால் பத்ரில் கலந்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் ஏற்கனவே மன்னிக்கப்பட்டு விட்டார். எனவே அவர் நமது பார்வையில் குற்றவாளியைப் போல காணப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் பார்வையில் குற்றவாளி கிடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பத்ரில் கலந்து கொண்டவர்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டவர்கள் என்பதை மேற்ச் சென்ற (08-68) வசனம் உறுதிப்படுத்துகின்றது.
மேலும் அடுத்த செய்தியை கவனியுங்கள். நீண்ட ஹதீஸின் தேவையான பகுதியை தருகிறேன். …ஆயிஷா(ரலி) கூறினார்: நானும் (அபூ ருஹ்மின் மகள்) உம்மு மிஸ்தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹ் (மிஸ்தஹின் தாயார்) தம் கம்பளி அங்கியில் இடறிக் கொண்டார். அப்போது அவர், (அவதூறில் பங்கெடுத்த தம் மகன் மிஸ்தஹை சபித்தவராக) ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்.’ என்று கூறினேன்… பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். (புகாரி- 4025) இந்த ஹதீஸிலும் கூட பத்ரில் கலந்து கொண்டவர்கள் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் செய்தாலும் அவரை கை நீட்டி பேசக் கூடாது என்பதை கற்றுத் தருகிறது.அவர்கள் ஏற்கனவே அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அன்சாரிகளை மன்னிப்பாயாக !
நபியவர்கள் தான் உயிரோடு வாழும் காலத்திலே ஒட்டு மொத்த அன்சாரிகளுக்காகவும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பை வேண்டியுள்ளதை கீழ் வரும் ஹதீஸில் காணலாம்.
“ ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (முஸ்லிம்- 4918)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்சாரிகளுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அன்சாரிகளின் சந்ததிகளுக்கும் அன்சாரிகளால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கும் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இதில் நான் ஐயம் கொள்ளவில்லை. (முஸ்லிம்- 4919)
அன்சாரிகளில் மூன்று பரம்பரையினருக்காக நபியவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்கள். எனவே இவர்கள் நபியவர்களின் காலத்திற்கு பிறகு மனிதர்கள் என்றடிப்படையில் தவறுகள் நடந்திருந்தாலும் நாம் அதை ஆதாரமாக தூக்கி பிடித்து பேசக் கூடாது என்பதை தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தவறிழைப்போரை மன்னித்து விடுங்கள்…
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள். (அன்சாரிகள்) குறைந்துவிடுவார்கள். ஆகவே, அன்சாரிகளில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்- 4922)
இங்கு நபியவர்கள் நேரடியாக சொல்கிறார்கள் அன்சாரிகளிடம் இருந்து நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் தவறுகளை மன்னித்து விடுங்கள். நிர்வாக ரீதியாக இருக்கலாம், அல்லது ஆட்சி ரீதியாக இருக்கலாம், அல்லது வேறு எந்த துறை சார்ந்த ஒன்றாக இருப்பினும் அது மார்க்கத்தின் அடிப்படையில் தவறாக நமக்கு தெரியும் போது, இவர் ஏன் இப்படி செய்தார் என்று ஸஹாபாக்களை குத்திக் காட்டியோ, கேலி செய்தோ, அல்லது குற்றவாளி கூண்டில் வைப்பது போன்ற தவறான செயல்களில் நாம் ஈடுபட்டு விடக் கூடாது.
அன்ஸாரிகள், முஹாஜிரீன்கள் மன்னிக்கப்பட்டவர்கள்…
அன்சாரிகளையும், முஹாஜிரீன்களையும், நான் மன்னித்து விட்டேன் என்ற அல்லாஹ் குர்ஆன் மூலம் தெளிவுப்படுத்துவதை காணலாம்.
“நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் – நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான். (09-117)
எனவே ஏற்கனவே அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டவர்கள் மனிதர்கள் என்றடிப்படையில் ஏதாவது தவறு நிகழும் கட்டத்தில் மன்னிக்கப்பட்ட ஸஹாபாக்கள் விசயத்தில் நாம் எதையும் ஆதாரமாக பேச முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பைஅத்துல் ரில்வானில் கலந்து கொண்டவர்கள்…. “(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் துணைவியார்) உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள். அதற்கு ஹஃப்ஸா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அப்படியல்ல” என்று கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஃப்ஸா (ரலி) அவர்களைக் கண்டித்தார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது” (19:71) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், “பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்” (19:72) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள். (முஸ்லிம்- 4909)
மேலும்“ முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.(48- 18)
இப்படி அதிகமான சான்றுகள் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் நாம் காணலாம் எனவே நபியவர்கள் காலத்திற்குப் பின் நபியவர்களால் காட்டித் தரப்படாத சில அமல்கள் ஓரிரு தோழர்கள் மூலம் காட்டப்பட்டிருந்தாலும் அதை நாம் பித்ஆவுடைய கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்ற நல்லெண்ணம் கொள்ள வேண்டும்.
மேலும் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டதால் இப்படி அமல்களை உருவாக்க முடிமா என்றால், அதுவும் முடியாது. சந்தர்ப்ப சூழ் நிலையால் இப்படி நடந்துள்ளது என்று நல்லெண்ணம் கொள்வதே நமக்கு பொருத்தமாகும்.
அதே நேரம் ஸஹாபாக்களை மேற்க் கோள் காட்டி அதற்கு பின்னால் வந்தவர்களுக்கும் மார்க்கத்தில் அமல் ரீதியான செயல்பாடுகளை புதிதாக உருவாக்க முடியும் என்று நாம் தவறாக பித்ஆக்களுக்கு உடந்தையாக இருக்க கூடாது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.