ஸலவாத்

 “அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான். மலக்குகள் நபியவர்களுக்காக துஆ செய்கின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத் (என்னும் துஆவை) கூறுங்கள்! அவர்மீது ஸலாமும் கூறுங்கள்.” (அல்குர்ஆன்)

மேற்கூறிய வசனத்திற்கு நம் தமிழகத்தில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. “அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான்” என்று பல தமிழக அறிஞர்கள் தவறாக பொருள் தருகின்றனர்.

அல்லாஹ் ஸலவாத் கூற முடியுமா?

“ஸலவாத்” என்று சில துஆக்களை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தார்கள். அவை அனைத்துமே நபி(ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் விதமாகவே அமைந்துள்ளன. “ஸலவாத்” களில் மிகவும் உயர்ந்த “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத்த” என்று தொடங்கும் ஸலவாத்துக்கு உரிய பொருளைப் பார்ப்போம்.

“யா அல்லாஹ்! இப்ராஹிம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீஅருள் புரிந்ததைப் போல், முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிவாயாக”

அதாவது ஸலவாத் சொல்வது என்றால் நாம் நபி(ஸல்), அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்பதுபொருள்.

“அல்லாஹ் ஸலவாத் சொல்கிறான்” என்று பொருள் கொண்டால் “அல்லாஹ் துஆ செய்கிறான்” என்று கருத்துக் கிடைக்கும். அல்லாஹ் எப்படி துஆ செய்ய முடியும்? இன்னொருவனை அழைத்து அருள்புரியுமாறு கேட்பவன் எப்படி இறைவனாக முடியும்?

அதனால்தான் திருக்குர்ஆனின் அனைத்து விரிவுரையாளர்களும் “அல்லாஹ்வுடன் ஸலவாத் என்ற பதம் இணையும்போது, அல்லாஹ் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளனர். எனவே அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பவர்கள் தவறான கருத்திலேயே இருக்கின்றார்கள். அவன் இப்படி அருள்புரிவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது மட்டுமல்ல, எல்லா அடியார்களுக்கும் அவன் அருள் புரிந்து கொண்டே இருக்கிறான் (மூமின்களே)” உங்கள் மீது அவன் அருள்புரிகிறான்” (அல்குர்ஆன்) நபி அவர்களுக்குப் பயன்படுத்திய யுஸல்லூன என்ற பன்மைப் பதத்தி், ஒருமைப் பதமாகிய “யுஸல்லீ” என்ற பதத்தைப் பிரயோகம் செய்திருக்கிறான்.

மொத்தத்தில் அல்லாஹ்வுடைய ஸலவாத் என்ற அருள் மூமின்கள் அனைவருக்கும் பொதுவானது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் அருள்புரியவில்லை, என்பதை மேற்கூறிய வசனத்திலிருந்து நாம் தெரியலாம்.

ஸலவாத் ஏன் கூற வேண்டும்?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழி காட்டுதலை நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைக்கவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடைய வேண்டுமென்பதற்காக அத்தனையையும் தாங்கிக் கொண்டார்கள். நமது தாய், தந்தை மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட அவர்கள் மீது அன்புவைப்பது நம்மீது கடமையாகும். அதில் ஒரு பகுதியாகவே நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். அதாவது ஸலவாத் சொல்கிறோம். ஆம் ஸலவாத் என்றாலே துஆ என்றுதான் பொருள்.

“ஸலவாத் பொருள்”

நம்மில் சிலர் ஸலவாத் என்றால், “நபிகள் நாயகத்திடம் நாம் எதனையோ கேட்கிறோம்” என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல, மாறாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக ஸலவாத்தில் நாம்தான் துஆ செய்கிறோம். உதாரணத்துக்கு நாம் மேலே எழுதியுள்ள ஸலவாத்தின் பொருளை மீண்டும் பார்ப்போம்.

“யா அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ பேரருள் புரிந்தது போல் முகம்மது(ஸல்) அவர்கள்மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ பேரருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே மகத்துவம் உள்ளவனும் புகழுக்குரியவனுமாவாய்.”

இதுதான் அந்த ஸலவாத்தின் உண்மைப்பொருள். இதில் நாம் தான் அல்லாஹ்வின் திருத்தூதருக்காக துஆசெய்கிறோம். நாம் அவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்கவில்லை. இது போல் நாம் சொல்கின்ற எந்த ஸலவாத்துக்கும் “நபிகளுக்காக துஆ செய்வது” என்பதே பொருள்.

நமக்கென்ன தகுதி உண்டு?

அல்லாஹ்வின் படைப்பினங்களில் தலை சிறந்து விளங்குகின்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு “நாம் துஆ செய்து என்ன ஏற்பட்டுவிடும்” என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம்.

“துஆ” என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்காக ெசய்ய வேண்டியது” என்ற தவறான எண்ணமே இந்த ஐயத்தின் அடிப்படை.

உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம். உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். அதற்குரிய ஆதாரங்களை பார்ப்போம்.

“சுவனத்தில் வஸீலா என்ற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கின்றான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகின்றேன்” எனவே எனக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள்.”

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம். என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாதாரண நிலையில் உள்ள நம்மிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றார்கள்.

இன்னொருமுறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது “உமது துஆவில் நம்மை மறந்துவிடாதீர்!” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உமர்(ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்”) என்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெகுவாக வலியுறுத்தினர். அதற்கு பதிலாக “வஅலைக்குமுஸ்ஸலாம்” என்று பிரதி துஆ சொல்வதைக் கடமையாகவும் ஆக்கினர்.

நம்முடைய பெற்றோர்க்கு அருளை கோரும்படி வல்ல அல்லாஹ் நம்மைப்பணிக்கிறான். எத்தனையோ மகான்களின் துஆக்கள் ஏற்கப்படாமல் இருந்ததுண்டு. சாராரண மக்களின் துஆ ஏற்கப்பட்டதுமுண்டு.

அதுபோல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். எனினும், “நமது இந்த துஆவினால் தான் நபிகள் நாயகத்தின் அந்தஸ்து உயரப் போகின்றது?” என்று எவரும் தவறாக எண்ணலாகாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை மிக உயர்வான நிலையிலேயே வைத்துள்ளான். மாறாக, அல்லாஹ்வின் தூதரை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்காக நமக்கே அல்லாஹ் பேரருள் புரிகின்றான். அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன் மொழிகளைப் பார்ப்போம். 

நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாமும் துஆச் செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும். என்று சென்ற இதழில் கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம்.

“யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்” என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.

“என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்” என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : அபூதாவூது.

இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக் கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும். என்பதை ஹதீஸ் மூலம் நாம் உணரலாம்.

“உங்கள் ஸலவாத் என்னை வந்தடையும்” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியதிலிருந்து, ஸலவாத்தைத் தவிர மற்ற பாடல்கள் கொண்டாட்டங்கள் அவர்களை அடையாது என்றும் விளங்க முடியும்.

என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்்” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : திர்மிதீ

“என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்”. என்பதும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியாகும். அறிவிப்பவர் : அலி(ரழி) நூல் : திர்மிதீ

“யாரேளும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆமிர் இப்னு வபிஆ (ரழி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- “நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்” அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் அவுபு(ரழி) நூல் : அஹ்மத்

“உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தொழர்கள் “நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?” என்று கேட்டனர். எங்கள் நபி(ஸல்) அவர்கள் “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமாாகளின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர்.

அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி) நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா

இந்த ஹதீஸிற்குச் சிலர்தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுக்க முற்பட்டதால் இங்கெ சில விளக்கங்களைச் சொல்வது மிகவும் அவசியமாகிவிட்டது.

“நபிமார்களின் உடல்கள் மக்கி விடாது” என்ற சொற்றொடர்களிலிருந்து சிலர் அவ்லியாக்களின் உடல்களையும் மண் மக்கிவிடச் செய்யாது என்று தவறான விளக்கங்கள் கூறத் துவங்கி விட்டனர். அது எவ்வளவு தவறான விளக்கம் என்பது அறிவுடையோருக்கு நன்றாகவே தெரியும். ஸஹாபாக்களில் சிலர்,” நீங்கள் மக்கிவிடும் போது எப்படி எங்கள் ஸலவாத் உங்களுக்கு எத்தி வைக்கப்படும்?” என்று கேட்டதற்குப் பதிலாகவே இதனை நபி(ஸல்) கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!

அல்லாஹ்வின் நேசர்களிலேயே நபிமார்களுக்கு அடுத்த இடம் ஸஹாபாக்களுக்குத் தான் உண்டு. அவ்லியாக்களின் உடல்கள் மக்கி விடாது என்றால் ஸஹாபாக்களின் உடல்கள் தான் அதில் முதலிடம் பெறும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபாக்களை நோக்கி “நபிமார்களையும், ஸஹாபாக்களாகிய உங்களையும் மண் திண்ணாது” என்று கூறாமல், “நபிமார்கள்” என்று மட்டும் சொல்கிறார்கள். இதிலிருந்து ஸஹாபாக்களுக்கே இந்த ஊத்திரவாதம் இல்லை என்பது தெளிவு. ஸஹாபாக்களுக்கு இல்லாத சிறப்பு அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்களுக்கு இருக்க முடியாது என்று தெரிய முடிகின்றது.

எனவே நபிமார்களின் உடல்களை மட்டும் தான் மக்கிப் போகாமலிருக்கும். மற்றவர்களின் உடல்களை அல்லாஹ் நாடினால் அவன் பாதுகாக்கலாம்: பாதுகாக்காமலிருக்கலாம். திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அல்லாஹ் நாடினால் பிர்அவ்ன் போன்ற கொடியவனின் உடலையும் கூடப் பாதுபாப்பான். மிகச் சிறந்த நல்லடியார் ஒருவரின் உடலையும் பாதுகாக்காமல் அழித்துவிடவும்செய்யலாம். இதுதான் உண்மை.

“நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது” என்ற கூற்றிலிருந்து மற்ற விஷயங்கள் அவர்களை எட்டாது என்பதையும், “எத்தி வைக்கப்படுகின்றது” என்ற சொல்லிலிருந்து, தானாக நபி(ஸல்) அவர்கள் இதனைச் செவியுறுவதில்லை; மலக்குகள் மூலம் தான் அது எடுத்துச் சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் தெரிய முடிகின்றது.

ஸலவாத் சொல்வதன் சிறப்புப் பற்றி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நம்பிக்கையாளர்களுக்கு இவ்வளவு போதும் என்பதால் ஒரு சில ஹதீஸ்களை மட்டும் எடுத்துத் தந்துள்ளோம். அடுத்து ஸலவாத்திலிருந்து நாம் பெற வேண்டிய பாடமும் படிப்பினையும் என்ன என்று பார்ப்போம்

ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர்.

அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் “அந்த நபிமார்கள் எந்த லட்சியத்திற்குப் பாடுபட்டனரோ அந்த இலட்சியத்தை அதே நபிமார்களின் பெயரால் அழித்து விட்டனர்.” 

உதாரணத்திற்குக் கிறித்தவர்கள் ஈஸா நபியை வரம்புமீறி உயர்த்தியதைச் சொல்லலாம். இதைப்பற்றித்தான் நபி(ஸல்) சொன்னார்கள்.

யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிக்கட்டும்! (ஏனெனில்) அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, தாரமீ, முஅத்தா, அஹ்மது.

யூத கிறித்தவ சமுதாயம் அடைந்த நிலைகளை தன் சமுதாயம் அடையக்கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் தனக்குத் தன் சமுதாயத்தினர், ஸலவாத் கூற வேண்டும் என்று கற்றுத்தந்தனர். மனித இனத்திலேயே மிகவும் உயர்ந்த மதிப்புடைய நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி, சொல்லிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் தேவைகளைக் கேட்கும்படியோ, தன் பொருட்டால் கேட்கும் படியோ, சொல்லாமல் தனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களைவிட மதிப்பில் மிகவும் குறைந்த மற்றவர்களிடம் நம் தேவையைக் கேட்பது எப்படி நியாயமாகும்?

நபி(ஸல்) அவர்களை விட மற்றவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியவர்கள் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது அல்லவா?

தங்களின் துன்ப நேரத்தில் இறந்துவிட்டவர்களை அழைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைவிட மற்றவர்களை உயர்வாக மதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?

இன்றைக்கு நல்லவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கின்ற கொண்டாட்டங்களும், இணைவைத்தலுக்கும் “ஸலவாத்” என்பதே தக்க மறுப்பாக அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களை மதிக்கும் போதும் அன்பு செலுத்தும்போதும் அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது மற்றவர்களை மதிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களிடம் முறையிடுதலும் தேவைகளைக் கேட்டலும் எப்படி நியாயமாகும். என்று மக்கள் சிந்தித்தாலே போதும். இந்த சமுதாயம் சீர் பெற்றுவிடும்.

ஸலவாத்தை இந்த அளவு நபி(ஸல்) வலியுறுத்திச் சொன்னதின் நோக்கத்தை இதன் மூலம் உணரலாம். ஏனைய நபிமார்களின் பெயரால் ஏற்பட்ட தவறான உடன்படிக்கைகள் தன் பெயரால் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னை மதிக்கின்ற முறையையும் சொல்லித் தந்தார்கள்.

முகம்மது அலி M.A., திருச்சி.

Previous Post Next Post