இல்லாத வணக்கத்திற்கு இத்தனை அலங்காரங்களா?

27ம் நாள் பற்றிய ஒருதெளிவு

ரமழானின் கடைசிப்பத்து மிகச்சிறப்பானது கண்ணியமானது என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

ஆயிரம்மாதங்களை விட சிறப்பான ஒரு இரவு தான் இந்த லைலதுல்கத்ரு இரவாகும். அன்று மலக்குகளும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் இறங்குகிறார்கள் அதிகாலை பஜ்ர் வரை அமைதி மற்றும்  சாந்தம்  நிலவிக்கொண்டிருக்கும்.

லைலத்துல் கத்ரு இரவு இதுதான் என அறிவிப்பதற்காக நபியவர்கள் வந்தார்கள் அப் போது இரு தோழர்கள் அதுவிடயத்தில் சர்ச்சைகளில் ஈடுப்பட்டுகொண்டிருப்பதைக் கண்ட நபியவர்கள்,
அவ்விரவை அறிவிக்க நான் வந்தேன் ஆனால் இப்போது அது எனக்கு மறக்கடிக்க பட்டு விட்டது எனவே நீங்கள் கடைசிப்பத்தில் ஒற்றையான( 21,23,25,27,29) இரவில் தேடிக்கொள்ளுங்கள் என கூறினார்கள்

லைலதுல் கத்ரு இரவை நான் அடைந்து கொண்டால் என்ன கூறவேண்டும் என ஆயிஷா(ரலி) நபியவர்களிடம் கேட்டப்போது 
اللهم انك عفو تحب العفو  فاعف عني 
யாஅல்லாஹ் நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவன் பாவமன்னிப்பு கோருவதை விரும்புபவன் எனவே என்னை மன்னிப்பாயாக என  கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள்  
 
தங்களது வாழ்நாளில் ஒருபோதும் இதுதான் லைலத்துல் கத்ரு இரவு என நபியவர்கள் (முடிவு செய்து) அறிவித்ததுமில்லை சஹாபாக்களோடு சேர்ந்து கொண்டாடியதுமில்லை.

அந்நாளை அடைந்துக் கொள்ள தமது மரணம்வரை இஃதிகாப் இருந்தார்கள்.

அந்த கடைசிப்பத்து நாட்களை அமல்கள் செய்து உயிர்பிப்பார்கள் தங்களது மனைவியரையும் எழுப்பிவிடுவார்கள் 

இதற்கான ஆதாரங்களை புகாரி முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணமுடியும்.

உண்மை இவ்வாறு இருக்க முஸ்லிம்களில் ஒருசாரார் ரமழான் 27லில் மட்டும் தான் லைலதுல்கத்ரு இரவு என்று முடிவு செய்தும் அந்த நாளில் தான் தவ்பா கேட்கும் நிகழ்ச்சியை நடாத்தவேண்டும் என்றும் கூறி சில வணக்கங்களில் ஈடுப்படுகிறார்கள். 

அல்லாஹ்வினால் அறிவிக்காமல் விடப்பட்ட
அல்லாஹ்வுடைய தூதருக்கு தெரியாமல் மறைக்கப்பட்ட இந்த லைலதுல் கத்ரு இரவு முஸ்லிம்களில் ஒருசாராருக்கு மட்டும் வருடாவருடம்   27ல் கொண்டாட எப்படி தெரியவருகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உண்மையில் அல்லாஹ்வின் தூதரின் மீது நேசமுள்ள  முஸ்லிமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கடைசி பத்தை நபியவர்கள் கடைப்பிடித்ததுபோல் இபாதத்களோடு கழிப்பதற்கு முயற்ச்சிசெய்வானே தவிர 27ம் நாளில் மட்டும் ஈடுப்பட்டு தன்னை  ஏமாற்றிக் கொள்ள மாட்டான்.

தக்வாவிலும் இபாதத்திலும் முன்னிலை வகிக்கும் அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்களை யாரும் முந்திவிடமுடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்வோம்.

-இம்தியாஸ் யூசுப்
أحدث أقدم