வியாபாரஸ்தலங்களில் இடம்பெறும் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள்

بسم الله الرحمن الرحيم

தீமையை எப்போதும் ஒரு கூட்டத்தார் முன்னின்று தடுக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இன்னும், (விசுவாசங் கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார் அவர்கள் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும் நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும் தீய செயல்களில் இருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும்! அவர்களே தாம் வெற்றிபெற்றோர்". (ஆலு இம்றான்: 104) 

மேலும், தீமையைத் தடுப்பது விசுவாசங்கொண்ட ஆண் பெண் அனைவரினதும் பண்பாகத் திகழ்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்: "விசுவாசங்கொண்ட ஆண்களும் விசுவாசங்கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உற்ற காரியஸ்தர்களாயிருக்கின்றனர். அவர்கள் (பிறரை) நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள். (மார்க்கத்தில் மறுக்கப்பட்ட) தீமையைவிட்டும் விலக்குகிறார்கள்". (அத்தவ்பா: 71)

இந்த சமுகம் தீமையைவிட்டும் தடுக்கக்கூடிய சமுகமாக இருப்பதால் தான் சிறந்த சமுகம் என்ற புகழாரத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்: "(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்;கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள்". (ஆலு இம்றான்: 110)

மேலும், தீமையைத் தடுத்தலானது ஒவ்வொருவரினதும் சக்திக்கு உட்பட்ட அமைப்பில் காணப்படும். 

நபியவர்கள் கூறினார்கள்: "உங்களில் யார் ஒரு தீமையைக் காண்கிறாரோ, அவர் அதனைத் தனது கரத்தினால் தடுக்கட்டும். அதற்கு அவர் சக்தி பெறாத போது தனது நாவினால் தடுக்கட்டும். அதற்கும் அவர் சக்தி பெறாத போது தனது உள்ளத்தால் தடுத்துக் கொள்ளட்டும். அதுவே, ஈமானின் பலவீனமான நிலையாகும்". (முஸ்லிம்)

வியாபாரஸ்தலங்களில் இடம்பெறும் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் பல உள்ளன. பொதுவாக வியாபாரஸ்தலங்களைப் பொறுத்தளவில் நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ சென்றுவரக்கூடிய இடமாக உள்ளன. எனவே, அப்படியான இடங்களுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படும் நாம் பின்வரக்கூடிய மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டும் விலகியிருப்பது எம் கடமையாகும்.

1.   இணைவைத்தல், இறைநிராகரிப்பு

வியாபாரஸ்தலங்களில் இடம்பெறும் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் மிகப் பிரதானமான இடத்தை வாகிப்பன இவையாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்துவிடுகின்றான். மேலும் அவர் தங்குமிடம் நரகம் தான்". (அல்மாயிதா: 72)

அந்த அடிப்படையில் வியாபாரஸ்தலங்களில் இடம்பெறும் இணைவைப்பு மற்றும் இறைநிராகரிப்பு ஆகியவற்றோடு தொடர்புபட்ட செயற்பாடுகளை பின்வருமாறு இனங்காட்டலாம்.

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல். நபியவர்கள் கூறினார்கள்:"யார் சத்தியம் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்! அல்லது வாய்மூடி மௌனமாக இருந்து கொள்ளட்டும்!" (புகாரி)

வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரஸ்தலங்களைக் குறுக்கிட்டுச் செல்பவர்களை வைத்து சகுனம் பார்த்தல். நபியவர்கள் கூறினார்கள்: "பறவைச் சகுனம் பார்த்தல் இணைவைப்பாகும்". (அஸ்ஸஹீஹுல் முஸ்னத்)

இறைநிராகரிப்பின் அடையாளச் சின்னங்களைக் கொண்டு வியாபாரஸ்தலங்களை அலங்கரித்தலும் அவற்றை விற்பனை செய்தலும்.

காபீர்களின் பண்டிகைகளுக்கு உதவி புரிதலும் அவற்றோடு தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்தலும்.

வேண்டுமென்று தொழுகையை விட்டுவிடுதல். நபியவர்கள் கூறினார்கள்:"எங்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களான அவர்களுக்கும் இடையிலுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே,எவர் அதனை விட்டுவிடுகிறாரோ அவர் நிராகரித்துவிட்டார்". (திர்மிதி)

இன்னும் சிலர் தொழுகிறார்கள்! ஆனால், ஜமாஅத்துடன் தொழாமல் தனியாகத் தங்களது கடைகளில் தொழுகிறார்கள். இதுவும் தவறான செயற்பாடாகும். நபியவர்கள் கூறினார்கள்: "யார் (அதானாகிய) அதனை செவிமடுக்கிறாரோ அவர் அதற்கு பதிலளிக்கட்டும். அவருக்கு நியாயமான காரணமேயன்றி அவ்வாறு தொழுவது கிடையாது". (இப்னு ஹிப்பான்)

அதேபோன்று, ஜமாஅத் தொழுகையை தங்களுடைய வீடுகளில் தொழுபவர்களை அவர்களுடைய வீடுகளுக்குள் வைத்து எரிப்பதற்கு நபியவர்கள் நாடிய செய்தியும் கண்தெரியாத ஒரு தோழர் தனியாக வீட்டில் தொழுவதற்கு அனுமதி கேட்ட போது,அவருக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்த செய்தியும் நாம் ஏலவே குறிப்பிட்ட தகவலுக்கு வலுசேர்க்கின்றன.

வியாபாரஸ்தலங்களில் தாயத்து,போத்தல் குப்பிகள் போன்றவற்றைக் கொழுவிவிடுதல். நபியவர்கள் கூறினார்கள்: "யார் தாயத்தைக் கொழுவுகின்றாரோ அவர் இணைவைத்துவிட்டார்". (அஸ்ஸஹீஹா)

நுகர்வோரைப் பார்த்து நான் அல்லாஹ்வின் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன் என்று கூறுவதும் அல்லாஹ்வையும் உங்களையும் தவிர எனக்கு வேறுயாருமில்லை என்று கூறுவதும். நபியவர்கள் முன்னிலையில் அல்லாஹ்வையும் நபியவர்களையும் சமஅந்தஸ்தில் வைத்துப் பேசிய ஒருவரை நபியவர்கள்: "அல்லாஹ்வுக்கு நிகராக என்னை ஆக்கி விட்டாயா?" என்று வினவிக் கண்டித்த செய்தியை இதற்கு ஆதாரமாகக் கூறலாம்.

2. நேரத்தை வீணடித்தலும் அதனைத் தவறான காரியங்களைப் புரிவதற்குப் பயன்படுத்தலும்.

பொதுவாக, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மத்தியில் இப்படியான சில நிலைப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்கலாம். இத்தகையவர்கள் அரட்டையடிப்பவர்களுடன் சேர்ந்து அரட்டையடிக்கக் கூடியவர்களாகவும் சினிமா, பாடல், இசை போன்றவற்றை பகிரங்கமாக முழக்கிவிட்டு ரசிக்கக்கூடியவர்களாகவும் அதிகமான நேரத்தை தமது கையடக்கத் தொலைபேசியில் கழிக்கக்கூடியவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட பண்பை உடையவர்கள் பாவிகளாகக் கருதப்படுகின்றனர். இதுவிடயத்தில் அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் ஒதுங்கும் தளமாக நரகம் இருக்கின்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:"மேலும், பாவம் செய்கிறார்களே! அத்தகையோர் அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்பாகும்". (அஸ்ஸஜ்தா: 20)

மேலும், இப்படிப்பட்டவர்களுடன் நாம் அமர்வது எம்மை அவர்களில் ஒருவராக கருதப்படக்கூடியதாக ஆக்கிவிடும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:"மேலும் அல்லாஹ்வுடைய வசனங்களை அவற்றை நிராகரிக்கப்படுவதையோ அல்லது பரிகசிக்கப்படுவதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்ந்து வேறு விடயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம் என நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் (இவ்)வேதத்தில் உங்களுக்கு இறக்கிவைத்திருக்கிறான். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்)". (அன்னிஸா: 140)

இன்னும் எமக்களிக்கப்பட்ட ஓய்வு நேரம் மாபெரும் அருட்கொடையாகும். அதனை உதாசீனம் செய்வது பெரும் கைதேசமாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: "இரு அருட்கொடைகள் இருக்கின்றன. அவை விடயத்தில் அதிகமான மக்கள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறார்கள். அவை ஆரோக்கியமும் ஓய்வு நேரமுமாகும்".(புகாரி)

3. பொய்யும் பொய் சத்தியமும்

வியாபாரஸ்தலங்களில் காணப்படும் மற்றுமொரு தவறான அம்சம் பொய்யும் பொய் சத்தியமுமாகும். இத்தவறான அம்சங்களை கொடுக்கல் வாங்கலின் போது வெளிப்படுத்துவது அவற்றில் காணப்படும் அபிவிருத்தியை அற்றுப்போகச் செய்யக் கூடியனவாக இருக்கின்றன என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்: "மூன்று நபர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் மறுமைநாளில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை பார்க்கவும் மாட்டான். (அவர்களில் ஒருவர்,) அஸருக்குப் பின் ஒரு பொருள் குறித்து பொய் சத்தியம் செய்து முஸ்லிமான ஒரு மனிதனின் செல்வத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பவராவார்". (புகாரி)

மேலும் நபியவர்கள் நவின்றார்கள்:"வியாபாரத்தில் ஈடுபடும் இருவரும் அவர்கள் அவ்விடத்தைவிட்டும் விலகிச் செல்லும் வரை தெரிவுச் சுதந்திரத்திற்கு உட்பட்டவர்களாவர். எனவே, அவர்கள் உண்மை பேசி வியாபாரப் பொருள் குறித்த தெளிவை வழங்குவார்களென்றால் அவர்கள் இருவரினதும் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்யப்படும். மேலும்,அவ்விருவரும் ஒருவருக்கொருவர் வியாபாரப் பொருள் குறித்த குறைகளை மறைத்துக் கொண்டு பொய் பேசுவார்களென்றால் அவ்விருவரினதும் வியாபாரத்தில் அபிவிருத்தி அழிக்கப்பட்டுவிடும்". (புகாரி)

4. மோசடி செய்தல்

நபியவர்கள் கூறினார்கள்: "யார் எங்களை ஏமாற்றுகிறாரோ அவர் எங்களைச் சார்ந்தவரல்ல. மேலும் தந்திரம், சூழ்ச்சி ஆகியன நரகில் உள்ளன". (இப்னு ஹிப்பான்)

5. பொய் சாட்சி கூறுதல்

"நபியவர்களிடத்தில் பெரும் பாவங்களைப் பற்றி வினவப்பட்ட போது, இணைவைப்பையும் கொலையையும் பெற்றோருக்கு நோவினை செய்வதையும் குறிப்பிட்டார்கள். பின்னர் பெரும் பாவங்களில் மிகப்பெரியது எது என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என வினவிட்டு, பொய்யான வார்த்தை அல்லது பொய் சத்தியம் எனக் கூறினார்கள்". (முஸ்லிம்)

6. வெள்ளிக்கிழமையில் அதன் கூறப்பட்ட பிறகு வியாபாரம் செய்தல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:"விசுவாசங்கொண்டோரே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக (அதான் சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால்,அப்போது அல்லாஹ்வை நினைவு கூறுவதின் பால் நீங்கள் சென்றுவிடுங்கள்!"(அல்ஜுமுஆ: 9)

7. வட்டி கலந்த வியாபாரம்

வியாபாரஸ்தலங்களில் காணப்படுகின்ற மற்றுமொரு தவறான அம்சம் வட்டியுடனான தொடர்பாகும். பொதுவாக, எம்மில் பலர் வட்டி விடயத்தில் எச்சரிக்கையாக இருந்தாலும், அது குறித்த சரியான தெளிவு இல்லாததன் காரணமாக வட்டியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் நவீன கொடுக்கல் வாங்கல் முறைகளுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்த அடிப்படையில்:

•   தங்கத்தை கடனுக்கு விற்றல்,

•   பழைய தங்கத்திற்கு புதிய தங்கத்தை விற்றல்,

•   நாணயமாற்றின் போது அதன் நிபந்தனைகளைப் பேணாமை,

•   இலாபம் நாடி வியாபாரத்திற்காக பணங்களை முதலீடு செய்யும் போது அதன் சட்டதிட்டங்களை கருத்திற்கொள்ளாமை,

என்று அடுக்கிக் கொண்டே பேகலாம். வட்டி ஹராம் என்பது தொடர்பாக இடம்பெறக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும் இவை போன்ற கொடுக்கல் வாங்கல்களுக்கும் குறித்த தீர்ப்பை அளிக்கும் என்பதை நினைவில் கொள்க!

எனவே, நாம் எந்த ஒரு புதிய வியாபார முறையில் உட்புக நாடினாலும் அது குறித்த உலமாக்களின் ஆளோசனைகளைப் பெறுவது எமது கடமையாகும்.

8. மார்க்கத்திற்கு முரணான வழியிலான சம்பாத்தியங்கள்

அந்தவிதத்தில் பலவகைப்பட்ட வியாபார முறைகளை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

•   போதைப்பொருள் விற்பனை,

•   அற்ககோள், பண்றி கொழுப்பு கலந்த பொருட்கள் விற்பனை,

•   உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள், பெண்கள் வெளியில் அணியத் தடைசெய்யப்பட்ட ஆடைகள் விற்பனை,

•   விபச்சாரத்தை தொழிலாகக் கொள்ளுதல்,

•   தாடி வழித்தல் மற்றும், ஆண்களுக்கும் பெண்களுக்குமாக தடைசெய்யப்பட்ட சிகை அலங்கார முறைகளை செய்துவிடல்,

•   மஸாஜ் சென்டர்,  முக அலங்கார இஸ்தலங்கள் ஆகியவற்றை நடாத்தல்,

•   ஹராமான சம்பாத்தியத்திற்கு துணைபோகும் விதத்தில் கடைகளை வாடகைக்கு வழங்குதல்,  

•   ஹராமான பொருட்களை வினியோகிப்பதற்கு உதவியாக கூலிக்கு வாகனங்களை ஓட்டுதல்,

•   இறை நிராகரிப்பு,  இணைவைப்பு,  நூதன அனுஷ்டானம் போன்றவற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,

•   வியாபாரம் செய்வதற்குத் தடை செய்யப்பட்ட பொருட்களான சிலைகள், காபீர்களுடைய பெருநாட்களுடன் தொடர்புடைய பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதும்,  அவை குறித்து விலைக்கழிவுகளை மேற்கொள்வதும்,

இப்படி பட்டியல் படுத்திக்கொண்டே போகலாம்.


-அபூ ஹுனைப் ஹிஷாம் மதனி
Previous Post Next Post