நம் வாழ்வின் மிக முக்கியமான பகுதி நம்முடைய ஐவேளை ஸலாஹ் (தொழுகை) தான். அல்லாஹ் தொழுகையை குர்’ஆனில் சுமார் 700 இடங்களில் குறிப்பிட்டுள்ளான். மேலும், தொழுகையாளிக்களைப் பற்றி சிறப்பாகவும் கூறியுள்ளான்.
மற்ற எல்லா விஷயங்களையும் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிப்பதற்கு அல்லாஹ் (சுபஹ்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பினான். ஆனால், தொழுகை எத்தனை முக்கியமானது என்றால், அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களை வானுக்கு உயர்த்தி (அல் லஇஸ்ரா வல் மெஹ்ராஜ்) தினசரி ஐவேளைத் தொழுகைக்கான கட்டளையை அருளுகிறான்.
ஒரு அடிமைக்கும் எஜமானனுக்கும் இடையேயுள்ள தொடர்பு தொழுகை தான். என்ன நடந்தாலும் நாம் புறக்கணிக்க முடியாத ஒரு செயல் தொழுகை.
அதனால், நாம் அதை எப்படி மேம்படுத்துவது? ஒரு மேம்பட்ட தொழுகை, விசுவாசிகளாகிய நம்முடைய தரத்தை உயர்த்தக்கூடியது, நம்முடைய முகத்தை ஒளிரச்செய்வது, நம் கவலைகளைப் போக்கக்கூடியது, நம்மை பாவங்களிலிருந்து காக்கக்கூடியது. இன்று நம்முடைய தொழுகையை மேம்படுத்துவதற்கு, மிகச் சிறப்பானதாக ஆக்குவதற்கு தேவையான நான்கு குறிப்புகளை – இரண்டு உடல்ரீதியானவை, இரண்டு ஆன்மீக ரீதியானவை – பார்க்கலாம்.
1. இடைநிறுத்துங்கள்
நம்மைச் சுற்றியுள்ள உலகுடன் – இயற்கையுடனும், நம்முடனும் கூட உள்ள தொடர்பை உயர்த்துவதற்கு உதவக்கூடியவைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் வழிகளில் ஒன்று, இடையில் சற்று நிறுத்தி நிதானித்து நம்முடைய தினசரி அலுவல்களை எச்சரிக்கையுடன் செய்வது.
நம்முடைய தொழுகையில் நாம் திருப்தியின்மையை உணருவதற்கான காரணங்களில் ஒன்று, நாம் அவசரமாகத் தொழுவது தான். நாம் நிற்கிறோம், பிறகு குனிகிறோம், பிறகு மீண்டும் நிமிருகிறோம், பிறகு சஜ்தா செய்கிறோம் – எல்லாமே 15 வினாடிகளுக்குள்!
அமைதியாக இருங்கள்! ஒவ்வொரு நிலையிலும், இரு நிமிடங்களுக்கு நிறுத்துங்கள். ருகூவில் இருக்கும்போது, சுபஹான ரப்பியல் அஸீம் ஓத ஆரம்பிப்பதற்கு முன்னால், சிறிது நேரம் அந்நிலையிலேயே இருங்கள். சுஜுதில் இருக்கும்போது, சுபஹான ரப்பியல் அ’லா ஒதுவதற்கு முன்னால், அந்நிலையையும், உங்களுடைய பணிவையும் உணர்ந்து இரு விநாடிகளுக்கு அப்படியே அசையாமல் இருங்கள்.
2. மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுங்கள்
நம்முடைய அவசர தொழுகையில் நாம் அரிதாக கவனிக்கக்கூடிய ஒன்று, மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதற்கு நாம் போதிய நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு நிலையிலும், நாம் நிறுத்தும்போது, மூச்சை முழுதும் உள்ளே இழுத்து, முழுதும் வெளியே விட வேண்டும். ருகூ, சஜ்தாவில் தலையை குனிந்து இருக்கும்போது, அல்லாஹ்டன் உங்களுடைய பணிவை உணருங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை நிதானிக்கும்போதும், மூச்சு விடும்போதும், அந்நிலையின் அமைதியை உணர்ந்த பின் அந்நிலையில் ஓத வேண்டியதை ஓதுங்கள். இதன் முடிவு: ஒரு மாற்றப்பட்ட தொழுகை.
உடல்ரீதியான இந்த இரண்டையும் செய்த பின், உங்களுக்கு அரபி தெரியாவிட்டால் கூட, உங்கள் தொழுகை ஏற்கனவே முன்னேற்றமடைந்திருக்கும். ஆன்மீக குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் தரத்தை இன்னும் உயர்த்தும். ஆனால், அதற்கு தொழுகையில் நாம் என்ன ஓதுகிறோம் என்பது சிறிதாவது புரிந்திருக்க வேண்டும். நம் தொழுகையில் ஓதக்கூடிய எல்லா வார்த்தைகளுக்கும் அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் அகாடெமி வகுப்புகளில் பொருள் கற்றுத்தரப்படும். நம்முடைய தொழுகையை மேலும் சிறப்பாக்குவதற்கு அது மிகவும் அவசியம். அதனால், நம் தொழுகையை முன்னேற்றுவதற்கு இரண்டு ஆன்மீக குறிப்புகள்:
3. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
நாம் சொல்வது நமக்கே புரியாவிட்டால், உரையாடலின் பயன் என்ன? நம் தொழுகையில் ஓதும் சொற்களைப் புரிந்து கொள்ள கற்றுக் கொள்வது, நம்முடைய தொழுகையில் ஈடுபாட்டை அதிகரிக்கும். சூரா ஃபாத்திஹாவை 5 விநாடியில் ஓதி முடிக்க மாட்டோம், ஏனென்றால், நமக்கு அதன் ஒவ்வொரு வசனத்திற்கும் பொருள் புரிவதால், அதில் அதிக கவனம் செலுத்துவோம். இந்த பாடங்கள் நமக்குள் பதிந்து, காலப்போக்கில் நம்மை ஆன்மீக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் முன்னேற்றும். அல்லாஹ்வுடைய பேச்சுக்களை நாம் புரிந்து கொள்வோம், அதனால், அவனுடன் உள்ள தொடர்பு இன்னும் நெருக்கமாகும்.
4. சொற்களை சிந்தியுங்கள்
புரிந்து கொள்வதற்கு இன்னும் ஒரு படி மேலே போவதற்கு, நாம் ஓதும் சொற்களைப்பற்றி சிந்திக்க வேண்டும். உண்மையில் இதன் பொருள், சிறிது நிறுத்தி, அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி சிந்தித்தல். சஜ்தாவில் இருக்கும்போது, அவனுடைய மகத்துவத்தை எண்ணி, வியந்து, சுபஹான ரப்பியல் அ’லா (மிக்க உயர்ந்தோனாகிய அல்லாஹ்வுக்கே மகத்துவம்) என்று கூறுவது. மிக்க உயர்ந்தோனாகிய அவனை எப்படி மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள நாம் எப்படி புகழ்வது என்று வியத்தல், நாம் ஓதும் வசனங்களைப்பற்றி சிந்திப்பது, நமக்குள்ளேயே அவற்றிற்கான பொருளை தேடுதல், நாம் சொற்களைப் புரிந்து கொண்டதோடு நிறுத்தி விடாமல், அவற்றைப்பற்றி ஆழமாக சிந்தித்தல் – இவை அனைத்தும் நம்முடைய தொழுகையை முற்றிலுமாக இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்லும். அல்லாஹ் (சுபஹ்) நம் அனைவருக்கும் தொழுகையில் ‘குஷு’வை (உள்ளச்சத்துடன் கூடிய மன ஓர்மையை) அருள்வானாக