வழிகாட்டுதலுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்தல்

இஸ்லாமின் நோக்கம் மனிதகுலத்திற்கு முழுமையையும், நலனையும் நோக்கி வழிகாட்டுவது தான். ஒவ்வொரு வளர்ச்சிக்கும் பின்னால் உள்ள உந்துசக்தி இறைவனின் வழிகாட்டுதலே. எந்த வளர்ச்சியும் அவனேயே சார்ந்துள்ளது. ஒரு மரம் அல்லது ஒரு மனிதன் அல்லது ஒரு யோசனை அவனுடைய ஒளியில் தான் முதிர்ச்சியடைய முடியும். ஒரு விலங்கு தன்னுடைய குட்டிகளை ஆபத்துகள் நிறைந்த காட்டில் காப்பாற்றி வளர்ப்பது அல்லாஹ்வின் வழிகாட்டுதலால் தான். வாழ்க்கை அல்லாஹ் அருளியது, அவன் மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும்.

நமக்கு வழிகாட்டுதல் ஏன் தேவைப்படுகிறது?

அல்லாஹ் நம்மை வாழ்வென்ற வலைப்பின்னலில் வழிநடத்திச் செல்கிறான். மனித வாழ்வு பல்வேறு நிலைகளைக் கொண்டதாக இருக்கிறது. “நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்..” [அல் குர்’ஆன் 84:19] ஒவ்வொரு நிலையிலும் நமக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல் தேவையாக இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், நாம் இன்று வழிகாட்டுதலைப் பின்பற்றினால், நாளை நமக்கு இன்னும் நல்ல நாளாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

தேடுதலின் மூலம் தான் நமக்கு வழிகாட்டுதல் கிடைக்கிறது மேலும், வழிகாட்டுதலின் மூலம் தான் நமக்கு தேடலும் கிடைக்கிறது. வழிகாட்டுதல் ஒரு தேங்கிய நிலையில் இல்லை, ஆனால், அது வளரக்கூடியது. “மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடைய நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை – பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்..” [அல் குர்’ஆன் 47:17] நமக்கு முன்னால் உள்ள பாதையை நாம் பின்பற்றினால், நமக்கு முன்னால் இன்னும் அதிகமான வழிகள் திறப்பதை நாம் காணலாம். வழிகாட்டுதல் முன்னேற்றத்துடன் வருகிறது.

சூரா ஃபாத்திஹா, வழிகாட்டுதலுக்காக பிரார்த்திக்க வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தருகிறது: “நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!.” [அல் குர்’ஆன் 1:6]. இதில் வழிகாட்டுதலின் குறிப்பிட்ட தன்மைகள் குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். நாம் பிடிவாதத்தினால் அதனுடைய எல்லையைக் குறுக்கி விடக்கூடாது. அல்லாஹ் மட்டுமே வழிகாட்டுதல் என்றால் என்ன என்பதை அறிவான், நாம் அவன் மேல் நம்முடைய முழுமையான நம்பிக்கையை வைக்க வேண்டும்.

எல்லா விஷயங்களிலும் நமக்கு வழிகாட்டுதல் தேவை

நமக்கு சில விஷயங்கள் தெரியும், சில விஷயங்களுக்கு மட்டும் தான் நமக்கு வழிகாட்டுதல் தேவை என்று நினைப்பது முட்டாள்தனம். எல்லா விஷயங்களிலும் நமக்கு வழிகாட்டுதல் தேவை. நம் வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முடிவாக இருக்கலாம் அல்லது, சாதாரண அன்றாட நடவடிக்கையாக இருக்கலாம் – எல்லாவற்றிற்கும் சமமாக நமக்கு இறைவனின் வழிகாட்டுதல் வேண்டும். அல்லாஹ்வுக்கு நம்முடைய இறுதி இருப்பிடம் தெரியும். அதற்கு ஏற்றாற்போல் அவன் நமக்கு வழிகாட்டுவான்.
நம் சமுதாயத்தில் பலர் மிக எளிமையாக வாழ்வைத் தொடங்கி மாபெரும் வெற்றிகளை அடைந்துள்ளதைப்பார்க்கிறோம். இது அல்லாஹ்வின் வழிகாட்டுதலினால் மட்டுமே சாத்தியமாகும். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருப்பது மிகவும் முக்கியம். அல்லாஹ் தன்னுடைய எல்லையில்லா ஞானத்தினால் நம்முடைய சிறு அடிகளை பெரிய பாய்ச்சலாக மாற்றுவான். அவன் சரியான ஆன்மாவுக்கு சரியான நிலைக்கு வழிகாட்டுவான்.

அனைவருக்கும் கிடைக்கக் கூடியது

வழிகாட்டுதலுக்கான இறைவனின் அழைப்பு அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொரு துறையிலும் உள்ள மக்கள் அனைவரையும் இது சூழ்ந்துள்ளது. அவன் மூஸா நபி (அலை) அவர்களையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், ஃபிர்’அவ்னிடம் சென்று நேர்வழியைப் பற்றி கூறும்படி பணிக்கிறான். “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” [அல் குர்’ஆன் 20:43, 44]

மனிதகுலம் சரியான வழிகாட்டுதலுடன் மிக அதிகமாக சாதிக்க முடியும். வழிகாட்டுதல் தான் உயர்வுக்கு வழி. வழிகாட்டுதல் இல்லையென்றால், வெற்றிகள், சோகங்களாக மாறிவிடக்கூடும். உயர் நோக்கங்களை அடையும் எண்ணம் உடையவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலைக் கேட்கத் தவறக்கூடாது. அல்லாஹ்வின் வழிகாட்டுதலினால் தான் நம் உள்ளம் நல்லவற்றை நாடும், நம் மனம் கவனம் செலுத்தி ஒரு திட்டத்தை தீட்ட முடியும். அதன் பிறகு தான், நம் நோக்கங்களை அடைவதற்கு நம் திறமைகளை நாம் அர்ப்பணிக்க முடியும்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயத்திலும் வழிகாட்டுதலுக்காக நாம் துவா செய்வோம்
Previous Post Next Post