நபிமொழிகள் வாயிலாக “கவாரிஜ்களின் பண்புகள்”

அரபியில் : அஷ்ஷெய்க் அம்மார் அஸ்ஸயாஸினா

الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد.

‘கவாரிஜ்’ என்பது அண்மைக்காலமாக அதிகம் பாவிக்கப்பட்ட, சரியாகவோ, பிழையாகவோ சில ஜமாஅத்துகளுக்கும், இயக்கங்களுக்கும் பிரயோகிக்கப்பட்ட ஒரு சொல்லாகும். எனவே நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள விதத்தில் கவாரிஜ்களின் பண்புகளை நாம் அறிந்துகொள்வது கட்டாயமாகும். அப்போது தான் ஒவ்வொரு கூட்டத்தினரையும் அப்பண்புகளுக்கு நெருக்கமாக அல்லது தூரமாக இருப்பதைக் கவனிப்பதுகொண்டு அவர்களுக்குரிய இடத்தில் வைக்கலாம்.

நபிமொழிகளில் ‘கவாரிஜ்’களைத் தவிர வேறு எந்தக் பிரிவும், குறித்துக் கூறப்பட்டு எச்சரிக்கப்படவில்லை. ஆதாரப் பூர்வமான அறிவிப்பாளர் தொடர்களைக் கொண்ட, இருபதிற்கும் மேற்பட்ட நபிமொழிகள் அப்பிரிவு பற்றி வந்துள்ளன. அதற்கான காரணம், முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர்களால் ஏற்படும் மோசமான பாதிப்பும், மக்களுக்கு அவர்களுடைய விவகாரம் தெளிவில்லாமல் இருப்பதும், மக்கள் அவர்களைப் பார்த்து ஏமாறுவதுமாகும். ஏனெனில் அவர்கள் வெளிப்படையில் நல்லவர்களாகவும் இறையச்சமுள்ளவர்களாகவும் இருப்பர். மேலும் இவர்களது கொள்கை என்பது கருத்துக்கள், சிந்தனைகளுடன் மாத்திரம் நின்றுவிடும் ஒன்றல்ல. மாறாக, உயிர்களைக் கொல்வதன் அளவிலும் அது தாண்டிச் செல்கின்றது.

ஸுன்னாவில் வந்துள்ள அவர்களது சில பண்புகள் :

1. வயதில் குறைந்தவர்கள்.

அவர்கள் பெரும்பாலும் இளம்வயது வாலிபர்களாக இருப்பர். அவர்களில் அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள், வயோதிபர்கள் குறைவாகவே இருப்பர். நபி (ஸல்) அவர்கள் இவர்களைப் பற்றி ‘حدثاء الأسنان’ (இளம் வயதுடையவர்கள்) என்றார்கள். இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், ‘இங்கு (பயன்படுத்தப்பட்டுள்ள حدثاء என்பதன் ஒருமையாகிய) ‘حدث’ என்பது வயதில் குறைந்தவரைக் குறிக்கும்’ என்கின்றார்கள்.

2. மடமைத்தனம்

பெரும்பாலான கவாரிஜ்கள், மேலும் அவர்களது சிந்தனையை ஏற்றுக்கொள்பவர்கள் மடமை, அவசரப்புத்தி, உணர்ச்சிவசப்படல், குறுகிய பார்வை, இறுக்கமான சிந்தனை, அகப்பார்வை இன்மை போன்ற பண்புகளை உடைய வாலிபர்களாகவே இருப்பா. புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுளுள்ள ஒரு ஹதீஸில் நபியவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

‘يأتي في آخر الزمان قوم حدثاء الأسنان سفهاء الأحلام’

‘இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் வரும். அவர்கள் வயதில் இளையவர்களாகவும், மடையர்களகவும் இருப்பர்.’

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ‘இந்த ஹதீஸிலிருந்து, உறுதியும், பலமான அகப்பார்வையும் ஏற்படுவது, வயது பூர்த்தியடையும் போதும், அதிக அனுபவங்களின் போதும், பலமான சிந்தனையுடனுமே என்பதை விளங்கலாம்’

3. பெருமிதம், அகம்பாவம்.

கவாரிஜ்கள் அல்லாஹ்வுடைய அடியார்கள் மீது பெருமையடிப்பவர்களாகவும், தங்களையும் தங்கள் செயல்களையும் பார்த்துத் தற்பெருமை கொள்பவர்களாகவும் அறியப்படுவர். அதனால் அவர்கள் செய்தவற்றைக் கொண்டு அதிகம் பெருமை பேசுவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘உங்களில் ஒரு கூட்டத்தினர் கஷ;டப்பட்டு வணக்கங்களில் ஈடுபடுவர். அதனால் மக்கள் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அவர்களும் தங்களைப் பார்த்துத் தற்பெருமை கொள்வார்கள். வேட்டைப் பிராணியிலிருந்து அம்பு வெளியேறுவதைப் போல அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறுவார்கள். (ஆதாரம் : அஹ்மத்)

அவர்களது தற்பெருமை தங்களை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ளவும், அறிஞர்களைத் தூற்றவும், பாரிய பிரச்சினைகளை அனுபவமோ, நிதானமோ, அறிஞர்களின் கருத்துக்களை ஆராய்வதோ இன்றி முகம் கொடுக்கவும் தூண்டும்.

4. வணக்கத்தில் அதிக ஆர்வமாக செயற்படல்.

அவர்கள் தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், கொடை கொடுத்தல், உழ்ஹிய்யா கொடுத்தல் என அதிக வணக்கங்களில் ஈடுபட்டவர்களாக இருப்பர். இது அவர்களைப் பார்த்து மக்கள் ஏமாறும் ஒரு காரணியாகும். இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் இப்பண்புகளைத் தெளிவாகவே கூறியள்ளார்கள். ‘அவர்களுடைய ஓதலுடன் ஒப்பிடும் போது உங்கள் ஓதல் அற்பமானதாக இருக்கும். அவர்களது தொழகையுடன் ஒப்பிடும் போது உங்களது தொழுகை அற்பமானதாக இருக்கும். அவர்களது நோன்புடன் ஒப்பிடும் போது உங்களது நோன்பு அற்பமானதாக இருக்கும்’

இன்னுமொரு ஹதீஸில், ‘உங்களில் ஒருவர் அவர்களுடைய தொழுகையைப் பார்க்கும் போது தன் தொழுகையை அற்மானதாகக் கருதுவார். அவர்களுடைய நோன்பைப் பார்க்கும் போது தனது நோன்பை அற்பமானதாகக் கருதுவார்.’

நபித்தோழர்களே இவர்களது தொழுகையுடன் ஒப்பிடும் போது தங்களது தொழுகைகளை அற்பமானதாகக் கருதுவார்கள் என்றால், ஏனையோருடன் ஒப்பிடும் போது எவ்வாறு இருக்கும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கவாரிஜ்களை சந்தித்துத் திரும்பிய பின்னர் இவ்வாறு கூறினார்கள். ‘ஒரு கூட்டத்தாரிடம் நான் சென்றேன். அவர்களை விட வணக்கங்களில் முயற்சியுடன் ஈடுபடும் யாரையும் நான் காணவில்லை. அவர்களது கைகள் (அதிக வணக்கத்தின் காரணமாக) வன்மையானதாக இருந்தன. அவர்களது முகங்களில் ஸுஜூதின் காரணமாக அடையாளங்கள் காணப்பட்டன. (ஆதாரம் : முஸன்னபு அப்துர் ரஸ்ஸாக்)

5. அல்குர்ஆனைத் தவறாகப் புரிதல்.

அவர்கள் அல்குர்ஆனை அதிகம் ஓதுவார்கள். அதிகமாக அதிலிருந்து ஆதாரம் எடுப்பார்கள். ஆனாலும் அதைக் கற்கவோ, விளங்கவோ மாட்டார்கள். மாறாக, அதன் வசனங்களை உரிய இடத்தில் வைக்காமல் (தவறாக அர்த்தம் கூறி) விடுவார்கள். அதனாலேயே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ‘அல்குர்ஆனை ஓதுவார்கள். அது தங்களுக்கு சார்பாக இருக்கின்றது என எண்ணுவார்கள். எனினும் அது அவர்களுக்கு எதிராகவே இருக்கும்.’ மேலும் கூறினார்கள். ‘அல்குர்ஆனை இலகுவாக ஓதுவார்கள். அது அவர்களது குரல்வளைகளை தாண்டிடமாட்டாது’ மேலும் கூறினார்கள், ‘குர்ஆனை ஓதுவார்கள். எனினும் அது அவர்களது தொண்டைகளைத் தாண்டமாட்டாது’

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ஸஹீஹூ முஸ்லிமின் விரிவுரையில் இவ்வாறு கூறுகின்றார்கள், ‘அல்குர்ஆனில் அவர்களது பங்கு நாவால் ஓதுவது மாத்திரம் தான். அது அவர்களை உள்ளத்தை அடைவதற்காக தொண்டைக்குழியை தாண்டிச் செல்லமாட்டாது. அல்குர்ஆனை ஓதுவது மாத்திரமல்ல கடமை. மாறாக, அதனை விளங்குவதும், உள்ளத்திற்கு அதை எடுத்து ஆய்வு செய்தும் கூட கடமைiயே.’

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், ‘கவாரிஜ்களின் வழிகேட்டைப் போன்ற ஆரம்பவழிகேடுகள் அல்குர்ஆனைத் தவறாகப் புரிந்துகொண்டமையினாலே ஏற்பட்டது. குர்ஆனுடன் மோதுவதை அவர்கள் நாடவில்லை. மாறாக, குர்ஆன் கூறாத கருத்துக்களை அவர்கள் அதிலிருந்து புரிந்துகொண்டார்கள். (மஜ்மூஉ பதாவா)

அதனாலேயே இப்னு உமர் (ரலி) அவர்கள் கவாரிஜ்களைப் பற்றி இவ்வாறு கூறினார்கள். ‘காபிர்கள் தொடர்பாக இறங்கிய வசனங்களை எடுத்து, முஃமின்கள் மீது வைத்துவிட்டார்கள்.’

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகின்றார்கள், ‘அவர்கள் அல்குர்ஆனை ஓதுவதிலும், வணக்கத்தில் ஈடுபடுவதிலும் முயற்சியுடன் செயற்பட்டதால் அவர்களுக்கு ‘குர்ரா’ (அதிகம் ஓதுபவர்கள்) எனப்பட்டது. ஆனாலும் அவர்கள் அல்குர்ஆனிற்கு தவறான அர்த்தங்களைக் கொடுத்தார்கள். அவர்களது கருத்துக்களில் தான்தோன்றித் தனமாக செயற்பட்டார்கள். பற்றற்ற வாழ்க்கை, உள்ளச்சம் என்பவற்றில் எல்லைமீறிப் போனார்கள்.’ (பதஹுல் பாரி)

6. மெருகூட்டப்பட்ட அழகிய பேச்சு

அவர்களது பேச்சு அழகாக இருக்கும். அதன் இனிமை, கவர்ச்சி பற்றி யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமாட்டாது. அவர்கள் அதிகம் விவாதம், தர்க்கம் செய்வார்கள். ஷரீஆவை அமுல்படுத்துமாறும், தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு எனவும், மதம் மாறியவர்களுடனும், நிராகரிப்பவர்களுடனும் யுத்தம் செய்யுமாறும் அழைப்பு விடுப்பார்கள். எனினும் அவர்களது செயல்கள் அதற்கு மாற்றமாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவர்களது பேச்சு அழகாக இருக்கும். செயல்கள் மோசமாக இருக்கும்.’ மேலும் கூறினார்கள். ‘உண்மையே பேசுவார்கள்’ மேலும் கூறினார்கள், ‘மக்களது பேச்சுக்களில் சிறந்த பேச்சையே பேசுவார்கள்.’

ஸுனனுன் நஸாஈயின் விரிவுரையில் இமாம் ஸின்தி கூறுகின்றார்கள், ‘அதாவது வெளிப்படையில் மக்களது சிறந்த வார்த்தைகiளாக இருக்கும் சில வார்த்தைகளைப் பேசுவார்கள். உதாரணமாக ‘தீர்ப்பளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு’ எனக் கூறுவது, அல்லாஹ்வின் வேதத்தின் பால் அழைப்பது போன்றவை.’

7. காபிர் எனத் தீர்ப்பு வழங்குவதும், மக்களின் உயிர்களை ஆகுமாக்கிக் கொள்வதும்.

இதுதான் அவர்களை ஏனையோரிடமிருந்து பிரித்துக் காட்டும் பண்பாகும். அதாவது நியாயமின்றிக் காபிர் எனத் தீர்ப்பு வழங்கல், அவர்களை எதிர்ப்பவர்களின் உயிர்களை ஆகுமாக்கிக் கொள்ளல். நபி (ஸல்) கூறினார்கள். ‘சிலைவணங்கிகளை விட்டு விட்டு, முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள்.’

‘இது நபி (ஸல்) அவர்கள் கவாரிஜ்கள் பற்றிக் கண்டித்த மிகமோசமான ஒரு பண்பாகும்’ (இப்னு தைமிய்யா)

அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வதற்கான காரணம், முஸ்லிம்களைக் காபிர்கள் எனத் தீர்ப்பு செய்தமையாகும். இமாம் குர்துபி தனது ‘அல்முப்ஹிம்’ எனும் நூலில் இவ்வாறு கூறுகின்றார்கள். ‘அதாவது அவர்கள் தமக்கு எதிராக வெளிக் கிளம்பும் முஸ்லிம்களை காபிர்கள் எனத் தீர்ப்பளித்ததனால் அவர்களது உயிர்களை ஆகுமாக்கிக் கொண்டார்கள்’

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். ‘மதம் மாறியவர்களாக இல்லாத காபிர்களின் உயிர்களை ஹலாலாகக் கருதுவதை விட அதிகமாக, முஸ்லிம்களது உயிர்களை – அவர்கள் இவர்களது பார்வையில் மதம் மாறிவிட்டதனால் – ஹலாலாகக் கருதுவார்கள்.’

மேலும் கூறினார்கள், ‘அவர்களுடைய பித்அத்திற்கு யாரெல்லாம் மாறுசெய்கின்றார்களோ, அவர்களை காபிர்கள் எனத் தீர்ப்பு வழங்குவார்கள். அவர்களது உயிர்களையும் சொத்துக்களையும் ஹலாலாகக் கருதுவார்கள். இதுதான் அனைத்து பித்அத்வாதிகளதும் நிலை. ஒரு பித்அத்தை உருவாக்கி, அதில் தங்களுக்கு மாறுசெய்பவர்களுக்கு காபிர்கள் எனத் தீர்ப்பளிப்பார்கள். (மஜ்மூஉ பதாவா)

கவாரிஜ்கள் பல நிகழ்வுளில் ஏனையோரை காபிர்கள் எனத் தீர்ப்பளிப்பர். உதாரணமாக, பெரும் பாவம் செய்பவர்களைக் காபிர்கள் எனத் தீர்ப்பளித்தல், அடிப்படையில் பாவமே இல்லாத ஒரு செயலிற்காக காபிர் எனத் தீர்ப்பளித்தல், அல்லது எண்ணங்கள், சந்தேகங்கள், இடம்பாடான விடயங்கள் என்பவற்றை வைத்து காபிர் எனத் தீர்ப்பளித்தல, அல்லது மாற்றுக் கருத்து, ஆய்வு என்பன அனுமதிக்கப்பட்ட விடயங்களில் காபிர் எனத் தீர்ப்பளித்தல், அல்லது (காபிர் எனத் தீர்ப்பளிப்பதற்கான) நிபந்தனைகள் பூரணமாக இருப்பதையும் தடைக்காரணிகள் நீங்கியிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளாமல் தீர்ப்பளித்தல்.

அறியாமலிருத்தல், வலிந்துரை செய்தல் (التأويل) போன்றவற்றால் நிகழும் தவறுகளுக்கு மன்னிப்பு வழங்கமாட்டார்கள். மேலும் ஒரு வார்த்தையினால் விளங்கப்படும் வேறொரு அர்த்தத்தை வைத்தும்(لازم القول), ஒரு வார்த்தையின் பின்விளைவுகளை வைத்தும் அவ்வார்த்தையைக் கூறியவரைக் காபிர் எனத் தீர்ப்பளிப்பார்கள். யாரைக் காபிர் எனத் தீர்மானிக்கின்றார்களோ, அவரது உயிரை ஹலாலாக்கிக் கொள்வார்கள். விசாரிக்கவோ, தௌபா செய்யுமாறு வேண்டவோ மாட்டார்கள்.

இதனாலேயே அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ‘வேட்டைப் பிராணியில் இருந்து அம்பு வெளியேறுவது போல அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறுவார்கள்.’

‘அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறுவதை, வேட்டைப் பிராணியைத் தாக்கி, அதில் நுழைந்து (மறுபக்கத்தால்) வெளியேறும் அம்புக்கு நபியவர்கள் ஒப்பாக்கியுள்ளார்கள். அம்பை எறிபவரின் பலத்தினால், அது வேகமாக உடம்பை விட்டும் வெளிப்படுவதால் வேட்டைப் பிராணியின் உடம்பிலிருந்து எதுவும் அதில் ஒட்டிக்கொள்ளமாட்டாது.’ (உம்ததுல் காரீ)

முஸ்லிம் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில், ‘அவர்கள் படைப்புக்களில் மிகக் கெட்டவர்கள்.’ என நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், ‘அவர்களைக் கொல்பவர்களுக்கும், அவர்களால் கொல்லப்படுபவர்களுக்கும் சுபசோபனம் உண்டாவதாக!’ என்றார்கள். (அஹ்மத்)

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், ‘இந்த ஹதீஸில் நபியவர்களின் உம்மத்தில் வந்த வழிகெட்ட பிரிவுகளில் கவாரிஜ்கள் மிகக் கெட்டவர்கள் என்ற செய்தி இருக்கின்றது’

8. ஏனைய மக்களை விட்டும் தங்களை வேறுபிரித்துக் காட்டும் அடையாளம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல்.

ஒவ்வொரு காலத்திலும், தங்களை வேறுபடுத்திக் காட்டும் ஓர் அடையாளத்தை அவர்கள் வைத்துக்கொள்வர். இந்த அடையாளம் கொடி, அல்லது ஆடையின் நிறம், அல்லது ஆடையின் தோற்றம் போன்றவற்றில் இருக்கலாம்.

அலி (ரலி) அவர்களின் காலத்தில் இவர்களது அடையாளமாக இருந்தது, தலைமுடியை சிரைப்பதாகும். நபி (ஸல்) அவர்கள் இவர்களைப் பற்றி இவ்வாறு கூறினார்கள், ‘அவர்களது அடையாளம் தலைமுடியை சிரைப்பதாகும்.’ (புகாரி)

இமாம் இப்னு தைமிய்யா ‘இந்த அடையாளம், ‘துஸ்ஸுதைய்யா’ (ஆரம்பகால கவாரிஜ்களில் ஒருவர்) போன்ற, ஆரம்பகால கவாரிஜ்களின் அடையாளமே. இது அவர்களின் நிரந்தப் பண்பாக இருக்கும் என்று அர்த்தம் கொள்ளமுடியாது’

இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ‘அதாவது அதனை அவர்கள் உலக அலங்காரங்களை புறக்கணிப்பதற்கான அடையாளமாகவும், அவர்கள் அறியப்படுவதற்கான சின்னமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.’

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். 

- சுவனப்பாதை
Previous Post Next Post