பராஅத் இரவும் லைலதுல் கத்ர் இரவும் ஒன்றா?

சஃபான் 15ம் தினத்தை பராஅத் இரவு என அழைக்கலாம் என சிலர் கூறிவருகின்றனர். ஆதாரம் என்னவென்று கேட்டால் சில குர்ஆன், ஹதீஸ் விரிவுரைகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இவ்வாறு சில புத்தகங்களில் இடம்பெற்றதனால் அதற்கு இஸ்லாமியச் சாயம் பூச முற்படுவது அறிவுடைமையல்ல. குறிப்பிட்ட அவ்விரவை பராஅத் என அழைப்பது பல காரணங்களால் தவறாகும்.

முதலாவது
குர்ஆன் ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. ரமழானில் லைலதுல் கத்ர் என்ற இரவு இருப்பதாக குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெற்றிருப்பதனால்தான் அவ்வாறு நாம் அழைக்கிறோம்.

இரண்டாவது
எனக்குத் தெரிந்த வகையில் இவ்விரவுக்கு பராஅத் என்ற பெயர் உண்டு என ஆரம்பமாகக் கூறியவர் முஃதஸிலாக்களைச் சேர்ந்த இமாம் சமக்க்ஷரி அவர்களே. அதற்கு முன் யாராவது கூறியிருந்தால் நமக்குத் தெரிவிக்கலாம். உண்மையில் இமாம் முஃதஸலிலாச் சிந்தனையுடைய சமக்க்ஷரி அவர்கள்தான் முதலில் கூறினார்கள் என்ற வாதத்தை ஆதாரத்துடன் மறுக்கும் வரைக்கும் இப்பெயரின் உருவாக்கம் ஒரு வழிகெட்ட சிந்தனைப் பிரிவின் கண்டுபிடிப்பே என்பதுதான் நிதர்சனம்.

மூன்றாவது
இவ்வாறு இவ்விரவுக்குப் பெயர் வருவதற்குக் காரணமாக இமாம் சமக்சரி அவர்கள் குறிப்பிடும் காரணம் அவ்விரவில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு விடுதலையளிக்கிறான் என்பதாகும். ஆனால் அதற்கு எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. எனவே இக்காரணமும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது என்பது தெள்ளத் தெளிவு.

நான்காவது
இவ்விரவுக்கு பராஅத் என்ற இரவு என்ற பெயரைக் குறிப்பிட்டவர்கள் இன்னும் பல பெயர்களையும் அதற்குக் கூறியுள்ளனர். அவற்றில் ஒன்றுதான் லைலதுல் கத்ர் என்பதாகும். எனவே பராஅத் இரவு என அழைப்பது பிரச்சினையில்லை எனக் கூறுவோர் லைலதுல் கத்ர் எனவும் அழைப்பதற்குத் தயாரா?

ஐந்தாவது
பராஅத் இரவு என அழைக்கலாம் எனக்கூறுவோர் ஆதாரமாக முன்வைக்கும் விரிவுரை நூட்களில் இப்பெயர் ஸூரா துகானின் (44:4) வது வசனத்தின் விரிவுரையிலேதான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவ்வசனத்தில் இடம் பெறும் இரவு ரமழானின் லைலதுல் கத்ர் இரவு என்பதே சரியான கருத்தாகும். என்பதே மிகப்பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். குறிப்பாக ஷாபி மத்ஹபின் முக்கிய அறிஞர் இமாம் நவவி அவர்கள் இவ்விரவு சஃபானின் 15ம் இரவு எனக்கூறுவது தவறாகும் என தனது மஜ்மூஃ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

அத்துடன் அது சஃபானின் 15ம் இரவு என்ற விளக்கம் குர்ஆனுக்கே முரணான கருத்தாகும். ஏனெனில் அவ்வசனங்களில் அல்லாஹ் அவ்விரவிலேதான் அல்குர்ஆனை அருளியதாகக் குறிப்பிடுகிறான். அது ச.பானின் 15ம் இரவுதான் என வாதிடுபவர்கள் அவ்விரவில் அல்குர்ஆன் இறங்கியதாகக் கூறுவதற்குத் தயாரா? 

அவ்வசனங்கள் இதோ
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:3. நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
44:4. அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்து 

ஷஃபான் 15ம் இரவில் பராத் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பித்அத்களுக்கு  பல்வேறு நபிமொழிகளில் ஆதாரமுண்டு மற்றும் இமாம் ஷாபி, ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா போன்ற பல அறிஞர்கள் அவற்றை அனுமதித்துள்ளனர் என பல இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. 

ஆனால் உண்மையில் ஹதீஸ்களில் அவ்வாறு ஆதாரம் ஏதும் கிடையாது. மாறாக சில ஹதீஸ்களில் குறித்த இரவில் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகின்றான் என்று மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அதுவும் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்ட ஹதீஸ். அது ஆதாரபூர்வமானது என வைத்துக்கொண்டாலும் இமாம் ஷாபி போன்றோர் கூறுவது போன்று பாவமன்னிப்ப வேண்டி அதிக துஆவில் ஈடுபடுவதற்கு மாத்திரமே அனுமதியுண்டு. இன்னும் சில அறிஞர்களின் கருத்துப் படி கூடுதலான தொழுகைகளில் ஈடுபடலாம். இதனையும் பல அறிஞர்கள் பித்அத் எனக் கூறி தாபிஈன்களின் காலத்திலேயே தடுத்துள்ளனர். அவர்களில் பலர் இந்த இரவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை எனக் கூறியுள்ளனர்.

குறித்த இரவில் தொழுது பகலில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள் என்ற அலி ரழி அவர்கள் அறிவித்ததாக இடம்பெறும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

அதனைத் தவிர இன்று ஷபே பராத் என்ற பெயரில் இடம்பெறும் மஃரிபிலிருந்து இஷா வரை யாஸீன் ஓதுதல் குறிப்பிட்ட சில திக்ருகளை எண்ணிக்கை வரையறுத்து ஒதி ரொட்டி வாழைப்பழம் பகிர்தல் போன்ற பல்வேறு வகையான நவீன கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாத்திலோ அறிஞர்களின் கூற்றுக்களிலோ எவ்வித ஆதாரமுமில்லை. 


நபியவர்கள் உட்பட, ஷாபி மத்ஹப் மற்றும் ஏனைய மத்ஹப் அறிஞர்களும் வஹ்ஹாபிகளா?

சஃபானின் 15ம் இரவில் பராத் இரவு என்ற பெயரில் கூடுதலான வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டு அவ்விரவை உயிர்ப்பிக்கலாமா என்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது, இவ்விரவை வணக்கங்களினால் உயிர்ப்பிப்பது பித்அத் என நாம் கூறினோம். அதற்குப் பதிலளித்த மாற்றுத்தரப்பினர் மக்களை வணக்கவழிபாடுகள் செய்யவிடாமல் தடுப்பது வஹ்ஹாபிகளின் வேலை. இது போன்ற வணக்கங்களுக்கு பித்அத் எனத் தீர்ப்பு வழங்குவது வஹ்ஹாபிகளின் கண்டுபிடிப்பு என முழங்கினர். 

அதற்கு நாம் பின்வரும் கேள்விகளை முன்வைத்தோம்.

முதலாவது:
நபியவர்கள் செய்யாத ஒரு வணக்கத்தை தமது விருப்பின் பிரகாரம் மேற்கொள்வது அல்லது நபியவர்கள் செய்த முறைக்கு மாற்றமான முறையில் செயற்படுவதைத் தடுப்பது வஹ்ஹாபிகளின் பண்பெற்றால் முழு இரவையும் தொழுகையிலும் அனைத்து நாட்களும் நோன்பு நோற்பதிலும் கழிப்பதற்குத் தயாராகிய தனது தோழர்களை, அவ்வாறு செய்யவேண்டாம், அது எனது சுன்னாவைப் புறக்கணிப்பதாகும், அவ்வாறு செய்பவர் என்னைச் சார்ந்தவரல்ல எனக் கூறிய நபியவர்களும் வஹ்ஹாபியா?

இரண்டாவது: 
இவ்விரவை பிரத்யேகமான வணக்கங்களினால் உயிர்ப்பிப்பது அல்லது வணக்கங்களை அதிகரிப்பது போன்றவை பித்அத்தாகும் என்பதே ஷாபி, மாலிகி மத்ஹப் மற்றும் ஏனைய பல அறிஞர்களின் கருத்தாகும். எனவே நம்மைப் போன்று பித்அத் எனக் கூறிய இந்த அறிஞர்களும் வஹ்ஹாபிகளா?

ஆதாரம்
ஷைகுல் இஸ்லாம் என அழைக்கப்படும் ஷாபி மத்ஹபின் முக்கிய அறிஞர் ஹிஜ்ரி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு ஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்கள் தனது அல்பதாவா பிக்ஹிய்யா அல்குப்ரா என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

الفتاوى الفقهية الكبرى (2/ 80)
وَالْحَاصِلُ أَنَّ لِهَذِهِ اللَّيْلَةِ فَضْلًا وَأَنَّهُ يَقَعُ فِيهَا مَغْفِرَةٌ مَخْصُوصَةٌ وَاسْتِجَابَةٌ مَخْصُوصَةٌ وَمِنْ ثَمَّ قَالَ الشَّافِعِيُّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - إنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِيهَا وَإِنَّمَا النِّزَاعُ فِي الصَّلَاةِ الْمَخْصُوصَةِ لَيْلَتهَا وَقَدْ عَلِمْت أَنَّهَا بِدْعَةٌ قَبِيحَةٌ مَذْمُومَةٌ يُمْنَعُ مِنْهَا فَاعِلُهَا، وَإِنْ جَاءَ أَنَّ التَّابِعِينَ مِنْ أَهْلِ الشَّامِ كَمَكْحُولٍ وَخَالِدِ بْنِ مَعْدَانَ وَلُقْمَانَ وَغَيْرِهِمْ يُعَظِّمُونَهَا وَيَجْتَهِدُونَ فِيهَا بِالْعِبَادَةِ، وَعَنْهُمْ


ஒரு கூட்டம் பித்அத்களை உயிர்ப்பிப்பதையே தமது முழுநேரப்பணியாகச் செய்கின்றது. இவர்களுக்கு உண்மையில் நன்மையில் விருப்பம் இருந்தால் ஏன் எத்தனையோ சுன்னாக்களை உயிர்ப்பிக்க முன்வருவதில்லை என்று சிந்திக்க வேண்டும். 

ஷஃபானில் அதிக நோன்புகளை நோற்று சுன்னாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட 15ம் தினத்தை உயிர்ப்பிப்பதற்கு மாத்திரம் இவர்கள் ஏன்தான் இவ்வளவு அவதிப்படுகின்றார்கள் என்பது புரியவில்லை. ஷஃபான் முழுக்க பெரும்பான்மையான பகுதியை நோன்பு நோற்று கண்ணிப்படுத்தும் ஒருவருக்கு 15ம் தினம் என்பதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. அய்யாமுல் பீழ்  என்ற அடிப்பிடையில் அல்லது திங்கள் வியாழன் என்ற அடிப்படையில் ஏதாவதொரு தினம் என்ற அடிப்படையில் அதில் நோன்பு நோற்கலாம். 

பித்அத்கள் உருவாக்கப்பட்டால் பல சுன்னாக்கள் ஒழிந்துவிடும் என்பதை நிதர்சனமாகக் காணமுடியுமாக உள்ளது. அல்லாஹ் போதுமானவன்.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
Previous Post Next Post