அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
“ஒரு மனிதன் தூங்குகிறான்; (அவன் தூங்கும் போது) அவன் இதயத்திலிருந்து ‘அமானத்’ (நம்பிக்கை/பொறுப்பு உணர்வு) பிடுங்கி எடுக்கப்படுகிறது.”
ஸஹீஹ் அல்-புகாரி (6497)
ஹதீஸின் விளக்கம்:
ஷெய்க் இப்னு உசைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு மனிதன் இரவில் அல்லது பகலில் தூங்குகிறான்; அவன் தன்னை ‘நான் நம்பிக்கைக்குரியவன் (அமீன்)’ என்று நினைத்துக் கொண்டே உறங்குகிறான்.
ஆனால், அவன் விழிக்கும் போது,
அமானத் அவன் இதயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கும்.
இதனால் தான்,
மனிதன் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு (திக்ருடன்) தூங்கவும்,
அதேபோல் விழித்ததும் அல்லாஹ்வை நினைக்கவும் (திக்ர் செய்யவும்)
ஷரீஅத் வழிகாட்டுகிறது.
எனவே,
நாம் தூக்கத்தின் திக்ர்களையும், விழிப்பு திக்ர்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால்,
அல்லாஹ்வை நினைக்காமல் தூங்குகிறவன்,
அவன் விழிக்கும் போது
அவன் இதயத்திலிருந்து அமானத் நீக்கப்படுமோ என்று பயப்பட வேண்டும்.
குறிப்பு: ஸஹீஹ் அல்-புகாரி விளக்கம் (4/272)
அல்-மனாவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் فيض القدير பைழுழ் கதீர் (1/288) நூலில் கூறுகிறார்:
“அமானத் (நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு) என்பது – உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு, நீ அதை நிறைவேற்றவும் பாதுகாக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு உரிமையும் ஆகும்.”
அல்-கஃபவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அல்குல்லியாத் الكليات (பக்கம் 269) நூலில் கூறுகிறார்:
“அல்லாஹ்வின் அடியார்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட அனைத்தும் அமானத் ஆகும் – உதாரணமாக தொழுகை, ஜகாத், நோன்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல்.
அவற்றில் மிகவும் வலியுறுத்தப்பட்டவை ‘ஒப்படைக்கப்பட்ட பொருட்கள்
அவற்றிலும் மிக வலியுறுத்தப்பட்ட அமானத் – இரகசியங்களை காக்குதல் ஆகும்.”
இப்னு அதிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அல்முஹர்ரர் المحرر (4/137, 402) நூலில் கூறுகிறார்:
“அமானத் என்பது – மனிதனுக்கு ஒப்படைக்கப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் (கட்டளைகள், தடைசெய்யப்பட்டவைகள், மார்க்கம் மற்றும் உலக வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தும்) ஆகும்.
அதாவது, மனிதன் தன் மார்க்க விஷயத்திலும் உலக வாழ்விலும் ஏற்றுக் கொண்ட அனைத்து பொறுப்புகளும் – சொல் மற்றும் செயல் மூலம் – அமானத் ஆகும்.”
இமாம் அல்-குர்துபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அல்முப்ஃஹிம் المفهم (1/356) நூலில் கூறுகிறார்:
“அமானத் என்பது – மனிதனிடம் பாதுகாக்க ஒப்படைக்கப்பட்ட அனைத்தும் ஆகும்; அவற்றை அவர் கையில் விட்டுவிடப்படுகின்றன.
இதனால் தான் ‘தக்லீஃப்’ கடமை கூட ‘அமானத்’ என்று அழைக்கப்படுகிறது.”
அல்லாஹ் தஃஆலா கூறுகிறான்:
“اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۙ
நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 33:72)
“அமானத் அவரது இதயத்திலிருந்து எடுக்கப்படும்” என்பதன் பொருள்:
அல்லாஹ், முழுமையான இதயங்களை அமானத்தை நிறைவேற்றும் வகையில் படைத்துள்ளான்.
ஆனால்,
அமானத் எடுக்கப்படும் (நீக்கப்படும்) என்பது –
மனிதன் அலட்சியம், அல்லாஹ்விடமிருந்து விலகல், மற்றும் ஈமான் பலவீனமாதல் போன்ற நிலைகளில் இருக்கும் போது, அந்த அமானத் அவன் இதயத்திலிருந்து நீக்கப்படுகிறது என்பதாகும்.
இதன் நோக்கம்:
அமானத் மிகவும் விரைவாக இதயத்திலிருந்து நீக்கப்படும் என்பதை உணர்த்துவது.
ஒரு இரவு அல்லது பகல் தூக்கத்திலேயே கூட அது நீக்கப்படலாம் –
அல்லாஹ் நம்மை
பாதுகாப்பானாக !!.