விரும்பினால் என்னை மன்னிப்பாயாக!

நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! என்பது போன்ற நிபந்தனை அடிப்படைளை வைத்து துஆ கேட்பது உசிதமான முறையா?


ஹதீஸ்: 1

 لا يقولُ أحدُكم اللَّهمَّ اغفِر لي إن شِئت اللَّهمَّ ارحَمني إن شِئت ليعزِم المسألةَ فإنَّه لا مُكرِه لهُ

அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: உங்களில் யாரும், "யா அல்லாஹ்! நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! நீ நாடினால் எனக்கு அருள் புரிவாயாக!" என்று கூற வேண்டாம். மாறாக அவர் உறுதியாகக் கேட்கட்டும். ஏனெனில், அவனை வற்புறுத்த யாருமில்லை.

ஆதாரம்:ஸஹீஹ் திர்மிதி, 3497

ஹதீஸ்: 2

إذا دَعا أحَدُكُمْ فَلْيَعْزِمِ المَسْأَلَةَ، ولا يَقُولَنَّ: اللَّهُمَّ إنْ شِئْتَ فأعْطِنِي؛ فإنَّه لا مُسْتَكْرِهَ له.
அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: உங்களில் யாரேனும் துஆ செய்தால், உறுதியாகக் கேட்கவும். "யா அல்லாஹ்! நீ நாடினால் எனக்குத் தருவாயாக!" என்று கூற வேண்டாம். ஏனெனில், அவனை வற்புறுத்த யாருமில்லை.

நூல்:  ஸஹீஹ் புகாரி, 6338

ஹதீஸ்: 3
 عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ الله صلَّى الله عليه وسلَّم: (إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ فِي الدُّعَاءِ، وَلَا يَقُلْ: اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي، فَإِنَّ اللَّهَ لَا مُسْتَكْرِهَ لَهُ). رواه مسلم

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "உங்களில் யாரேனும் துஆ செய்தால், துஆ கேட்பதில் உறுதியாக இருக்க வேண்டும். "யா அல்லாஹ்! நீ நாடினால் எனக்குத் தருவாயாக!" என்று கூற வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வை வற்புறுத்த யாருமில்லை."

நூல்: ஸஹீஹ் முஸ்லிம்

*விளக்கம்*

துஆ என்பது வணக்கங்களில் மிகச் சிறந்த ஒன்றாகும். அதன் மூலம் ஒரு அடியான் தன்னுடைய ரப்பிடமும் இறைவனிடமும் நெருங்குகிறான். அதனால்தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுக்கு துஆவின் முறையை கற்றுக்கொடுத்தார்கள்.

இந்த ஹதீஸ்களின் படி, துஆ செய்யும்போது உறுதியுடனும், முழு நம்பிக்கையுடனும் கேட்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரு அடியான், "யா அல்லாஹ்! நீ நாடினால் எனக்குத் தருவாயாக" என்று கூறக் கூடாது. ஏனெனில், இத்தகைய வார்த்தைகள் தன்னுடைய வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதில் உள்ள சந்தேகத்தைக் குறிக்கின்றன.

ஒருவர் துஆ செய்யும் போது, தன் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் எனும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒருவேளை, தன் கோரிக்கை நிறைவேறாமல் போனால், அது அல்லாஹ்வுக்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, வேண்டுபவர் தனது தேவையை முழுமையாக அல்லாஹ்விடம் ஒப்படைக்க -தவக்ககுல் வைக்க- வேண்டும்.

பொதுவாக, ஒருவர் ஒருவரிடம் ஒரு பொருளைக் கேட்கும் போது, "உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் இதை எனக்குத் தர முடியுமா?" என்று பணிவுடன் கேட்போம். ஆனால், அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது இவ்வாறு கூறத் தேவையில்லை. ஏனென்றால், மனிதர்களைப் போல் அல்லாஹ்வை வற்புறுத்தவோ அல்லது நிர்பந்திக்கவோ யாராலும் முடியாது.எனினும் துஆவை அழுத்தமாக, உறுதியாக மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்க முடியும்.

அவன் எல்லாவற்றிற்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமல்லாது அருளாளன். எனவே, அவனிடம் கேட்கும்போது, "யா அல்லாஹ்! எனக்கு இதைத் தருவாயாக" என்று தெளிவாகவும், உறுதியாகவும், நம்பிக்கையுடனும் கேட்க வேண்டும். துஆ செய்யும் போது, பதிலளிக்கப்படும் எனும் நம்பிக்கையுடன் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் அருளில் ஒருபோதும் நம்பிக்கை இழக்கக் கூடாது. ஏனெனில், நாம் ஒரு பெரும் கொடையாளியிடம் கேட்கிறோம்.

ஆகவே, "யா அல்லாஹ்! நீ நாடினால்..." என்று கூறாமல், ஓர் ஏழை, தேவையுள்ளவன் கேட்பதைப் போல, "யா அல்லாஹ்! எனக்குத் தருவாயாக" என்று உறுதியாகக் கேட்க வேண்டும்.

_அஸ்(z)ஹான் ஹனீபா


Previous Post Next Post