தேவையை விட அதிகமாய் ஆடம்பர வீடுகளைக் கட்டுவது பற்றி நபியவர்களின் எச்சரிக்கை

நபியவர்கள் ஒரு வழியால் சென்றவேளை ஒரு ஸஹாபியின் உயரமான வீட்டைச் பார்த்து இது யாரது வீடென விசாரித்தார்கள்‌. இன்னாரது வீடெனச் சொல்லப்பட்டதும் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். பின்னர் அந்நபித்தோழர் நபிகளாரின் வந்து ஸலாம் கூறியதும் பதிலேதும் கூறாது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். இதனால் மனம் நொந்துபோன அவர் இதன் காரணம் பற்றி நண்பர்களிடம் விசாரிக்க அதற்கவர்கள் "நபியவர்கள் உங்கள் வீடு உயரமாக இருப்பதைக் கண்டு வெறுப்புற்றார்கள். அதனால் உங்களோடு வெறுப்புற்று இருக்கலாம் என்றனர்" உடனே அவர் புறப்பட்டுச் சென்று வீட்டின் உயர்ந்த கூரையை சீர்செய்து செப்பனிட்டு விட்டு நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறியதும் நபியவர்கள் பதில் கூறிவிட்டு இவ்வாறு சொன்னார்கள்...
"ஆதமின் மகன் கட்டிடம் கட்டுவதில் செலவுசெய்யும் பணம் செல்வம் அனைத்தும் அவனுக்குக் கேடாகவே அமையும்.. அவசியமானதைத் தவிர..அவசியமானதைத் தவிர..அவசியமானதைத் தவிர.. என்று கூறினார்கள்.  (அபூதாவுத் 5237 இமாம் அல்பானியால் உறுதிப்படுத்தப்பட்டது).

நபியவர்கள் கூறினார்கள்...
ஒரு மனிதன் நல்வழியில் செய்த செலவுகள் அனைத்துக்கும் கூலி கொடுக்கப்படும். மண்ணில் செய்த செலவைத்தவிர..  திர்மிதி2483 அல்பானியால் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆம்! இன்று உலகப்பற்றற்ற நபியவர்கள் வாழ்வை பின்பற்றுவதாய் கூறும் - உலகம் சிறைக்கூடமென கூறும் நாமே ஏனைய சமூகத்தவரை விட கல்லிலும் மண்ணிலும் காசைக் கரியாக்கி ஏட்டிக்குப் போட்டியாய் ஆடம்பர வீடுகளைக் கட்டிக் கொள்வதில் முன்னணி வகிக்கின்றோம். ஒருபக்கம் குடிசை வீட்டுக்கு தகரக் கூரை போடவும் வழியற்ற வறியோரின் கண்ணீர் கதை. மறுபக்கம் இன்னும் 50 வருடங்கள் வசிக்க முடியுமான- கட்டி சில வருடங்களேயான நல்ல வீடுகளை இடித்து நொறுக்கிவிட்டு ஆடம்பரத்தில் - பணத்திமிரில்  3,4 தட்டு வீட்டைக் கட்டி- வெளிச்சுவருக்கும் டைல்ஸ் பதித்து லட்சக்கணக்கில் மின் விளக்கலங்காரம் செய்து பின்னர் மாடிகள் பாழ்பட்டுக் கிடக்கும் வீடுகள் சொல்லும் கதை. 

இப்போதெல்லாம் கூலித் தொழில் செய்யும் மாப்பிள்ளையும்  பெரிய மாடி வீடும் சொந்த கடையும் உள்ள மாமனாருடன் சம்பந்தம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள்.  

குயில் முட்டையிட காகத்தின்  கூடு.. நோகாமல் தொங்கு திற்பதென்பது இதுதானோ.

ஆசை, ஆசை, பேராசை, பணத்தாசை மண்ணாசை பொன்னாசை   .

ஆனால் உலகை விட்டுப் பிரிகையில் ஒருபிடி மண்ணைக்கூட இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியுமா?? 

நான் சொல்ல வருவது ...வீண் ஆடம்பரம் வேண்டாம் சகோதரர்களே.. அல்லாஹ் தந்ததை அவன் விரும்பியதில் செலவு செய்யுங்கள்.. 
எஞ்சியதில் ஏழையின் கண்ணீரைத் துடைத்து  அவர்களை மகிழ்சிப்படுத்தி அதில் இறை அன்பைப் பெறுங்கள்.  
அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடாதீர்கள்.. அதை உங்களால் தாங்கிட முடியாது.

அல்லாஹ் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.

-ஏ.ஜி.எம். ஜெலீல் மதனி
Previous Post Next Post