அல்குர்ஆன் வசனம்: ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ (அத்தகாஸுர்: 8)
1. இதன் பொருள், "நீங்கள் உலகில் அனுபவித்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் உங்களை மறுமை நாளில் நிச்சயமாக விசாரிப்பான். அவற்றை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள், எந்த வழியில் அவற்றைப் பெற்றீர்கள், மற்றும் அவற்றை என்ன செய்தீர்கள்?" என இமாம் அத்தபரீ தனது தஃப்ஸீரில் (30/365) குறிப்பிட்டுள்ளார்.
2. அருட்கொடைகள் (நயீம்) என்றால் என்ன?
இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் ‘அருட்கொடை’ (நயீம்) பற்றி அறிஞர்களிடையே பல கருத்துகள் உள்ளன. அவற்றில் சில:
1. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.
2. ஆரோக்கியம் மற்றும் ஓய்வு.
3. கேட்கும் மற்றும் பார்க்கும் புலன்கள்.
4. மனிதன் உண்ணும் மற்றும் அருந்தும் சில பொருட்கள்.
5. காலை மற்றும் இரவு உணவு.
6. வயிறு நிறைந்த நிலை.
7. ஒரு மனிதன் உலகில் இன்பம் அடைந்த அனைத்து விஷயங்களும்.
இமாம் அத்தபரீ (30/365-370) மற்றும் இமாம் அல்-குர்துபி (20/176) ஆகியோர் இந்த கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
சரியான கருத்து:
இமாம் அத்தபரீ ரஹிமஹுல்லாஹ்வின் கூற்றுப்படி, இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் ‘நயீம்’ என்பது பொதுவானது. மனிதன் அனுபவிக்கும் அனைத்து விதமான அருட்கொடைகளும் இதில் அடங்கும். உணவு, பானம், உடை, இருப்பிடம், ஆரோக்கியம், புலன்கள் மற்றும் இதர அனைத்து இன்பங்களும் இதில் சேர்க்கப்படும்.
இமாம் அத்தபரீ ரஹிமஹுல்லாஹ் தனது தஃப்ஸீரில் (30/370) பிவருமாறு குறிப்பிடுகிறார் :
“இந்த விடயத்தில் சரியான கூற்று யாதெனில், அல்லாஹ் மக்களிடம் அருட்கொடைகளைப் பற்றி விசாரிப்பதாக அறிவித்துள்ளான். அவன் ஒரு குறிப்பிட்ட வகையான அருட்கொடையை மட்டும் விசேடமாகக் குறிப்பிடவில்லை, மாறாக அனைத்தையும் பொதுமைப்படுத்தி கூறியுள்ளான். எனவே, அவன் கூறியது போல் அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் விசாரிப்பான், ஒரு பகுதியை மட்டும் அல்ல.”
3. இவற்றை வலு சேர்க்கும் ஹதீஸ்கள்
“குளிர்ச்சியான நிழல், சுவையான பேரீச்சம்பழம் மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவை மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படும் அருட்கொடைகளில் சிலவாகும்.” (திர்மிதி: 2369)
மற்றொரு ஹதீஸ்: நபியவர்கள் (ஸல்) கூறினார்கள்: “மறுமை நாளில் அடியானிடம் அருட்கொடைகள் பற்றி முதலில் விசாரிக்கப்படும்போது, அவனிடம், 'நாம் உனது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவில்லையா? உனக்கு குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுக்கவில்லையா?' என்று கேட்கப்படும்”. (திர்மிதி: 3358, அல்பானி ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்).
ஐந்து விடயங்கள் பற்றிய விசாரணை:
நபியவர்கள் (ஸல்) கூறினார்கள்: “மறுமை நாளில் ஒரு மனிதனின் இரு பாதங்களும் அவனது ரப்பிடம் இருந்து நகர மாட்டாது, அவனிடம் ஐந்து விஷயங்கள் பற்றி விசாரிக்கப்படும் வரை: அவனது ஆயுளை எவ்வாறு கழித்தான், அவனது இளமையை எவ்வாறு பயன்படுத்தினான், அவனது செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான், எதில் செலவு செய்தான், மற்றும் அவன் அறிந்ததைக்கொண்டு என்ன அமல் செய்தான்.” (திர்மிதி: 2416, அல்பானி ஹஸன் எனக் குறிப்பிட்டுள்ளார்).
4. எந்த அருட்கொடைகள் விசாரிக்கப்பட மாட்டா?
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத சில அருட்கொடைகள் மறுமையில் விசாரிக்கப்பட மாட்டா. அவை:
1. ஒரு மனிதன் தனது வெட்கத்தலங்களை மறைக்கும் ஒரு துணி. 2. பசியைப் போக்கும் ஒரு ரொட்டித் துண்டு. 3.வெயில் மற்றும் குளிரிலிருந்து தஞ்சம் அடைய உதவும் ஒரு கல் (வீடு).
இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிகமாக உள்ளவை அனைத்தும் விசாரிக்கப்படும். (முஸ்னத் அஹ்மத்: 20244, அல்பானி ஹஸன் எனக் குறிப்பிட்டுள்ளார்).
5. விசாரணை யாருக்கு?
அருட்கொடைகள் பற்றிய விசாரணை முஸ்லிம்களையும் காஃபிர்களையும் உள்ளடக்கும்.
*விசுவாசிக்கு* : விசுவாசியிடம் நடைபெறும் விசாரணை, அவனுக்கு உலக மற்றும் மறுமை அருட்கொடைகள் இரண்டும் அளிக்கப்படும் என்ற நற்செய்தியாக இருக்கும். ஏனெனில், அவன் அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அதில் அவனது உரிமைகளை நிறைவேற்றியிருப்பான் .
*காஃபிருக்கு* : காஃபிரிடம் நடைபெறும் விசாரணை அவனைக் கடிந்து கொள்வதற்காக இருக்கும். ஏனெனில், அவன் உலக அருட்கொடைகளை இறைநிராகரிப்புக்கும் பாவத்திற்கும் பயன்படுத்தினான்.
இமாம் மாவர்தி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: “இந்த விசாரணை காஃபிரையும் முஃமினையும் உள்ளடக்கும், ஆனால் முஃமினின் விசாரணை உலக மற்றும் மறுமை அருட்கொடைகளை அவனுக்குச் சேகரித்துத் தருவதற்கான நற்செய்தியாகும். காஃபிரின் விசாரணை உலக அருட்கொடைகளை நிராகரிப்பு மற்றும் பாவத்திற்குப் பயன்படுத்தியதற்காக அவனைக் கடிந்து கொள்வதாகும்.”
(தஃப்ஸீர் அல்-குர்துபி: 20/177).
ஷேக் அஸ்-ஸஅதி (ரஹ்) தனது தஃப்ஸீரில் (பக்கம் 836) குறிப்பிடுகிறார்:
“(ثمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ) – அதாவது, நீங்கள் உலக வாழ்க்கையில் அனுபவித்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தினீர்களா, அதில் அல்லாஹ்வின் உரிமையை நிறைவேற்றினீர்களா, அவனது கட்டளைக்கு மாறு செய்ய அந்த அருட்கொடைகளைப் பயன்படுத்தவில்லையா என்பது பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அவ்வாறு இருந்தால், அவன் உங்களுக்கு அதைவிடச் சிறந்த, உயர்ந்த அருளை வழங்குவான். நீங்கள் நன்றி செலுத்தாமல், பாவத்திற்குப் பயன்படுத்தியிருந்தால், அதற்காக உங்களை அவன் தண்டிப்பான்.”
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
தகவல்: https://islamqa.info/ar/answers/181057
- அஸ்(z)ஹான் ஹனீஃபா