ஒரு ஹதீஸை மவ்லூஃ என தீர்மானிப்பது எவ்வாறு?


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை பொதுவாக ஹதீஸ் என்கின்றோம். இவற்றை ஸஹாபாக்களில் சிலர் எழுத்திலும் பலர் நினைவாற்றலிலும் வைத்துப்பாதுகாத்து வந்தனர்.

ஸஹாபாக்கள் காலத்தில் நபி மொழிகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டிய அவசியம் காணப்படவில்லை. அதனால் ஹதீதை திரட்டி ஆவணப்படுத்தும் பணிக்கு அப்போது முக்கியத்துவம் இருக்கவில்லை.

தாபியீன்களின் காலத்தில்தான் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இத்துறைசார்ந்த அறிஞர்களை ஊக்குவித்தார்கள்.

அதனால், ஹதீது கலை மேதைகள் நாடு பூராகவும் சுற்றித்திரிந்து எஞ்சிய ஸஹாபாக்களையும் மற்றும் ஹதீதுகலை சார்ந்தோரையும் நேரடியாக சந்தித்து ஹதீதுகளை தொகுக்கலானார்கள். அடுத்து வந்த தபஉத்தாபியீன்களால் திரட்டப்பட்ட ஹதீதுகளை வகைப்படுத்தி பரிசுத்தப்படுத்தி சட்டம் இயற்றும் பணியில் ஈடுபடலானார்கள்.

இவர்களின் பகுப்பாய்வில்தான் ஹதீதுகள் நூல்களில் பதியப்பட்டன. ஹதீதுகள் அறிவிப்பாளரின் தகுதியையும் தரத்தையும் அடிப்படையாக கொண்டே ஹதீது வகைகள் பதியப்பட்டனவே அன்றி ஹதீதுகளின் கருத்துக்களை வைத்து அல்ல என்பதை நன்கு கவனிக்க வேண்டும். அதனால் சிலவேளை பல ளயீபான ஹதீதுகள் சஹிஹாகவும் இருக்கக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.

அறிவிப்பாளர்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஹதீதுகளை நான்கு வகைப்படுத்தியுள்ளனர் ஹதீஸ் கலை மேதைகள். அவை வருமாறு:

1. ஸஹீஹ் லிதாதிஹி
2. ஸஹீஹ் லிஙைரிஹி
3. ஹஸன் லிதாதிஹி
4. ஹஸன் லிஙைரிஹி


1. ஸஹீஹ் லிதாதிஹி

ஸஹீஹ் லிதாதிஹி என்பது ஒரு ஹதீதின் அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பிக்கை, உறுதியான அபார நினைவாற்றல் உள்ளவராக இருப்பதோடு அறிவிப்பாளர் பட்டியலில் நபியவர்கள்வரை சேர்ந்திருக்க வேண்டும். அறிவிப்பாளர் தொடரில் தகுதியில் குறைந்த ஒருவரும் இருக்கக் கூடாது. அறிவிப்பாளர்களின் அறிவிப்பில் முரண்பாடு இருக்கவும் கூடாது. எவ்வித குறையும் இல்லாமல் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

2. ஸஹீஹ் லிஙைரிஹி

மேற்கண்ட முதல் வகையைவிட சற்றுக் குறைபாடுள்ளதாகினும் பல அறிவிப்புக்கள் மூலம் கருத்து வலு சேர்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டவையாகும்.

3. ஹஸன் லிதாதிஹி

அறிவிப்பாளர் முதல் தரத்து ஸஹீஹான ஹதீதுகளை அறிவித்தவர்களின் நினைவாற்றலின் தரத்தை நிகர்த்திடாவிட்டாலும் ஒரு ஸஹிஹான ஹதீதுக்குரிய அனைத்து அம்சங்களையும் பொதிந்திருப்பது.

4. ஹஸன் லிஙைரிஹி

ளயீபான ஹதீதுகள் பல அறிவிப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டவையாகும். இவ்வகையான ஹதீதுகள் தனித்துப் பார்க்கும்போது ளயீபாக இருப்பினும் பல அறிவிப்புக்களால் ஸஹியின் தரத்திற்கு உயர்கின்றது.

ஸஹீஹான ஹதீதுகள் அறிவிப்பாளர்களின் நிலைகளைப் பொறுத்து நான்கு வகைப்படுவது போன்று ளயீபான ஹதீதுகளும் நான்கு வகைப்படும்.

1. இலேசான ளயீப்
2. கடுமையான ளயீப்
3. பொய் இட்டுக்கட்டுதல் பற்றி ஐயுறும் நபரின் அறிவிப்பு
4. மௌலூஃ


1. இலேசான ளயீப்

ளயீபான ஹதீதுகளின் வகையில் இது மிகவும் குறைந்த குறைபாடுள்ள வகையாகும். இதனை,
1. அறிவிப்பாளர்களின் மாறாட்டம்
2. நினைவாற்றலின் குறைபாடு
3. அறிவிப்பாளர்களின் பெயரில் மயக்கம்
போன்ற குறைபாடுகளால் வருவது. இதனை வேறு சான்றுகளினால் நிவர்த்திக்க முடியும். அப்பொழுது இவ்வகை ஹதீதுகள் ஸஹி லிஙைரி, அல்லது ஹஸன் லிஙைரி என்ற தரத்திற்கு உயரும். இவை இரண்டும் ஸஹியின் வகைகள் என்பது கவனிக்கத்தக்கது.

2. கடுமையான ளயீப்

அறிவிப்பாளர் பட்டியலில் ஷரியத்தை சரிவர பேணாத ஒரு பாஸிக் இடம்பெற்றிருப்பதுடன் உறுதியான நம்பிக்கையான அறிவிப்பாளருக்குரிய நிபந்தனைகள் காணப்படாதவற்றின் அறிவிப்பாகும். இத்தரத்தில் உள்ள ஹதீதுகள் ஹறாம், வாஜிப் உள்ளிட்ட சட்டங்களை தீர்மானிப்பதற்கு எடுக்க முடியாது. ஆயினும் சுன்னத்தான அமல்களுக்கும், சிறப்புக்களுக்கும் ஆதாரமாகக் கொள்ள முடியும். ஆயினும், இந்த ஹதீதுகள் பல்வேறு அறிவிப்புக்களால் உறுதி செய்யப்படும் பட்சத்தில் மேற்கூறியது போன்று ஸஹியின் தரத்திற்கு உயரும்.

3. பொய் இட்டுக் கட்டுதல் பற்றி ஐயுறும் நபரின் அறிவிப்பு

இவ்வகையில் இடம்பெறும் அறிவிப்பாளர் பொய் கூறுபவராகவும், இட்டுக்கட்டுபவராகவும் இருத்தல் அல்லது பொய் கூறுபவர் என்று சந்தேகித்தல், ளயீபான வகையில் அதிகம் தாழ்ந்தவை இதுவாகும். இவ்வகை அறிவிப்பாளரில் முக்கயமான நபர் பொய்யர் அல்லது இட்டுக் கட்டுபவர் என்று உறுதியாக தெரியும்பட்சத்தில் இவ்வகை ஹதீதை ளயீபில் இருந்து நீக்கி மௌலுஃ என்ற வகையில் சேர்க்கப்படும்.

4. மௌலூஃ

மௌலூஃ என்றால் இட்டுக்கட்டப்பட்டவை என்று பொருள். இதனை ஹதீது என்று கூறவும் முடியாது. இவ்வகையில் வரும் ஹதீதை அமல் செய்யவோ ஆதாரமாக கொள்ளவோ முடியாது. ஒரு ஹதீஸ் மௌலூஃ என்று உறுதி செய்வதற்கு பின்வரும் பதினைந்து வகைகளிலான ஆதாரங்கள் முன்வைக்கப்படல் வேண்டும்.

01. குர்ஆன்

02. முதவாதிரான ஹதீஸ்

03. உறுதியான இஜ்மாஃ

04. தெளிந்த அறிவு

05. பகுத்தறிவு

06. சரியான சரித்திரம் 

ஆகியவற்றிற்கு முரணாக இருத்தல். இம்முரண்பாடு தஃவீல் (வலிந்துரை), தத்பீக் (சமன்படுத்தல்) ஆகியவற்றுக்கு  சற்றும் தொடர்பில்லாது இருத்தல் வேண்டும்.

07. இதன் கருத்து கீழ்த்தரமானதாக, மோசமானதாக இருத்தல். இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நிச்சயமாக கூறியிருக்க முடியாது என்று உறுதிகொள்ளல்.

08. அல்லது ஒரு பெரும் கூட்டம்வரை சேர்ந்தும் (இதன் எண்ணிக்கை முதவாதீர் அளவு) பொய்யில் ஒருவர் மற்றவரை பின்பற்றி இருக்கும் சாத்தியமில்லாது இருந்தும், அது பொய்தான் என்பதை ஆதாரபூர்வமாகவும் புத்திரீதியாகவும் நிரூபிக்கப்படல்

09. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சி நடந்திருந்தால் அது பிரபலமடைந்திருந்து ஒரு பெரும் கூட்டமே அதனை நகல் செய்யும் சாத்தியம் இருந்தும், அம்மனிதரை தவிர்த்து வேறு யாரும் அதனை அறிவிக்காது இருப்பது.

10. ஒரு அற்பமான செயல் அதனை புகழ்ந்தும் வியந்தும் அதற்கு நற்செய்தி கூறப்பட்டிருப்பது அல்லது மிகச் சிறிய சாதாரண நிகழ்ச்சிதான். அதனை கண்டித்தும் சாடியும் இருப்பது. அளவு கடந்த எச்சரிக்கை இருப்பது. இது ஒரு நபியின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடாக கருத இடம் கொடாமையாக இருத்தல்.

11. அதன் வார்த்தைகள் கரடுமுரடாக இருத்தல். அதனை செவியேற்பவர் அதனை மனனம் செய்ய முடியாதிருத்தல். அதனை அறிவித்தவர் இந்த வார்த்தைகள் நாகரிகமாக நவிலும் நபியவர்களின் நபியுரையென வாதித்தல் அல்லது அவர்கள் கூற்றின் கருத்து எனக் கூறல்.

12. அல்லது ஹதீஸை நகல் செய்பவர் ராபிளியாக இருத்தல். இவர் நபியவர்களின் குடும்பத்தை குறித்து அறிவிப்பது இவரைத் தவிர அச்செய்தியை வேறு எவரும் அறிவிக்காது இருத்தல். (ராபிளிகள் அலி ரழியல்லாஹு அன்ஹு  அவர்களின் சிறப்புக்கள் குறித்து மூன்று லட்சம் ஹதீஸ்களை புனைந்து தள்ளினர்).

13. இவ்வறிவிப்பு குறித்த அம்மனிதனின் சொந்த விருப்பு, வெறுப்பு, பேராசைகளால் புனையப்பட்டது என சந்தர்ப்ப சுற்றுச் சூழல்களின் ஆதாரங்களைக் கொண்டு நிரூபித்தல்.

14. அல்லது, இவ்வறிவிப்பு பற்றி எல்லா நூற்களிலும் தேடிப்பார்த்தும் காணக்கிடைக்காதிருத்தல். (இது பல இலட்சம் நபிமொழிகளை மனனம் செய்த ஹாபிழ்களின் பணி தற்போது இத்தகுதி பெற்றோர் யாருமில்லை)

15. ஒரு அறிவிப்பாளர் தானே புனைந்ததாக தெளிவாகக் கூறுதல். உதாரணமாக நேரடியாக கேட்டிருக்க முடியாத ஒருவரிடமிருந்து தான் அறிவிப்பதாகக் கூறுதல். தான் அறிவிக்கும் அந்நபரின் மறைவுத் தேதியையும் அவரே குறிப்பிடுதல். எனவே, இருவருக்குமிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பற்று இருத்தல்.

மேற்கூறப்பட்ட 15 காரணங்கள் இருந்தும், அந்த நபிமொழியை ‘மௌலூஃ’ என்று எவ்வாறு அறிவிப்பது என்பதில் அறிஞர்களுக்கிடையே மூன்றுவித கருத்து வேறுபாடுகள் உள்ளன.

1. மேற்கூறப்பட்ட காரணங்களின்றி மறுக்கப்பட்டால் அது ஒருபோதும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாக நிச்சயம் இருக்க முடியாது. ராவி பொய்யுரைப்பவர் என்றிருந்தாலும் சரி. பத்ஹுல் கதிர் என்னும் நூலில் சகாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள். சமுத்திரம் போன்ற ஞானமுள்ள ஒரு நபிமொழிக்கலை வல்லுனர்களின் ஆய்வில் தட்டுப்படாமல் இருந்தாலும் கூட அந்நபிமொழியை அறிவித்தவர் பொய்யர் என்ற காரணத்தை வைத்து மேற்கூறிய காரணங்களைக் கவனிக்காது அந்த நபிமொழியை இட்டுக்கட்டப்பட்டது எனக் கூறவே முடியாது.

2. பொய் புனைபவர், அறிவிப்பாளர்களுள் தனித்திருத்தல், அதுவும் இவர் (மஆதல்லா) வேண்டுமென்றே பொய் புனைபவர் என்பதை ஊகித்தால், அல்லது (பொய் புனைபவர் என்று) உறுதியாகத் தெரிந்தால், காரணம், வடிகட்டிய  பொய்யனும் சிலவேளை உண்மை கூறுவதுண்டல்லவா? அவர் மீது ஓர் அபாண்டம் கற்பிக்கப்படுகின்றது என்று கொஞ்சமும் தெரிந்திருந்தாலும் அது புனையப்பட்ட நபிமொழி என்று வராது. அவர் பொய் புனைபவர் என்று சந்தேகிக்கப்பட்டாலும் சரியே. அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி உள்ளிட்ட மற்றும் ஹதீதுக்கலை பேரறிஞர்களின் கருத்து இதையொட்டியே அமைந்துள்ளது.
குற்றச்சாட்டு சிலவேளை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறாததை அறிவிப்பாளர் வேண்டுமென்றே கூறி இருப்பாரா? என்பதனாலும் ஏற்படும். அல்லது பொய் கூறக்கூடியவர் என்ற யூகத்தாலும் ஏற்படக்கூடும். இதில் புனையப்பட்டது (மௌலூஃ) என்ற தீர்ப்பு மிகைப்பான எண்ணத்தில் தவிர உறுதியான முடிவில்லை. சிலவேளை பொய்யனும் உண்மை உரைப்பதல்லவா! இரண்டாவது வகைக்கு மத்றூக் என்று கூறப்படும். ஹதீஸ் கலையில் மத்றூக் என்பது இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்தது அல்ல.                                                    ஆதாரம் : நுக்பத்துல் பிக்ர்

3. புனையப்பட்ட ஹதீஸ் என்று அநேக உலமாக்கள் கூறும் ஹதீதுகளின் காரணங்களை அலசினால் உருப்படியான காரணம் எதுவும் இருக்காது. அறிவிப்பாளர்களின் பொய்யரும் இருக்கமாட்டார். பொய் கூறுபவர் என்று குற்றம் சாட்டப்பட்டவரும் இருக்கமாட்டார். தடியெடுத்தவர் வேட்டைக்காரன் என்பதுபோல் சிலர் ஹதீத் ஆய்வில் இறங்கி விருப்பம்போல் பிடிக்காத ஹதீஸ்களை அல்லது தங்கள் கோட்பாட்டுக்கு பொருந்தாதவைகளை மௌழூஉ என்று கூறும் படலம் பெருநோயாக சமுதாயத்தை இன்று பீடித்திருக்கிறது.
அதனால், ஒரு ஹதீதை ஒருவர் மௌலூஃ என்று கூறுவதாயின் மேற்கண்ட 15 காரணங்களும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக அவை மௌலூஃ அல்ல என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

Previous Post Next Post