உலக அழிவும், மறுமை விசாரணையும்

 இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும்.

இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும்,அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது.

நபியவர்கள் மறுமை நாளைப்பற்றி அடிக்கடி மக்கத்து மக்களுக்கு மத்தியில் எச்சரித்து வந்த நேரத்தில், இந்த மறுமை நாள் எப்போது வரும் என்ற கேள்வியை இறை நிராகரிப்பாளர்கள் நபியவர்களிடம் கேட்ட போது, நபியவர்கள் மௌனமாக இருந்த நேரத்தில் படைத்தவன் அதற்கு இப்படி பதிலளித்தான்

“எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? மகத்தான அச்செய்தியைப் பற்றி, ‏எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி, அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள். (78:1-5)

அந்த மறுமை நாள் எப்போது நிகழும் என்பதை படைத்த அல்லாஹ் மட்டுமே அறிவான். உலக அழிவதற்கு முன் ஏற்ப்படும் பல முன் அறிவிப்புகளை நபியவர்கள் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதே நேரம் இத்தனையாம் ஆண்டு உலகம் அழியும் என்று யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு அதை அல்லாஹ் இரகசியமாகவே வைத்துள்ளான் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது… (31:34)

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறக்கேட்டேன். ( புகாரி 4936)

உலக அழிவு நாள்…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1548)

இங்கு உலக அழிவு நாள் வெள்ளிக்கிழமை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த வெள்ளிக்கிழமை இந்த உலகம் அழிக்கப்படும் என்பதை குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

சூர் ஊதுதல்…
உலகம் சம்பூர்ணமாக அழிக்கப்படுவதற்கு முன் முதலாவது எக்காளம்(சூர்) ஊதப்படும். முதலாவது சூர் ஊதப்பட்டவுடன் வானங்கள், பூமி. சூரியன் சந்திரன், நட்சத்திங்கள், கடல்கள், மலைகள் அனைத்தும் தூள், தூளாக… தூக்கி வீசப்படும்.அதன் பிறகு இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் பூமியிலிருந்து அனைவரும் எழுப்பப்படுவார்கள்.

“ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். (39:68)

அல்லாஹ் நாடியோர்களைத் தவிர என்றால், முதல் சூரின் போது மலக்குமார்கள் அழிக்கப்பட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்

“அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்
‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், ‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள். (புகாரி 4935)

எனவே முதல் சூர் ஊதப்பட்டவுடன் இந்த உலகம் எப்படி அழியும் என்ற காட்சியை குர்ஆன் பின் வருமாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

பூமி தூள், தூளாக…
“பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

“பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1-2)

அல்லாஹ் உலகத்தை அழிக்க நாடும் போது பூமியை அப்படியே தூள் தூளாகத் தூக்கி புரட்டிப் போடுவான்.

மலைகள் வெடித்து சிதறும்…
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

“மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.(101:05)

பூமி அசையாமல் இருப்பதற்காக அல்லாஹ் மலைகளை அமைத்துள்ளான். அந்த மலைகள் உலக அழிவு நாள் அன்று காற்றில் பறக்கும் பஞ்சைப் போல காற்றோடு, காற்றாக, பறக்கும் என்பதை அந்த குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சூரியன், நட்சத்திரங்கள், ஒளியிழந்து உதிர்தல்…
“நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது (82: 2)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும் தனது ஒளியை இழப்பதோடு, அப்படியே மேலிருந்து கீழே உதிர்ந்து கொட்டும் என்பதை அல்லாஹ் அந்த வசனங்கள் மூலம் குறிப்பிடுகிறான்.

வானம் பிளக்கும்…
“வானம் பிளந்து விடும்போது (84:1)

“எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் இந்த வானம் துண்டு, துண்டாக, பிளந்து உருகி வடியும் என்பதை அந்த குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

கடல் கொந்தளிப்பு…
“கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது…(82:3)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் கடல் தண்ணீர் கொந்தளிக்கப்பட்டு, பூமியின் பக்கம் தண்ணீர் தூக்கி வீசப்படும். இப்படி பல ரீதியில் உலக அழிவுகள் ஏற்பட்டப் பின் வெறும் மையானமாக இந்த பூமி காட்சி தரும்.

மறுமையில் பாவிகளின் நிலை ?

சென்ற முதலாவது தொடரில் உலகம் அழியும் போது இந்த உலகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும், எடுத்துக் காட்டியிருந்தேன். இப்போது உலகம் மையானமாக காட்சி தரும் வேலையில் சூர் (எக்காளம்) ஊதப்படும். அப்போது மீண்டும் விசாரணைக்காக மண்ணறையிலிருந்து மக்கள் எழுப்பப்படும் காட்சிகளை குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு காட்சிப் படுத்துவதை தொடர்ந்து அவதானிப்போம்.

சூர் ஊதப்படல்…
இந்த உலகத்தை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன் ஒரு சூரும், அழிக்கப்பட்ட மக்களை மீண்டும் எழுப்புவதற்கு மற்றொரு சூரும் ஊதப்படும். இதை பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவுப் படுத்துவதை காணலாம்.

“அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்.
‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு (ஸூர்) எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், (மேலிருந்து) வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள். (புகாரி 4935)

இந்த ஹதீஸின் மூலம் சில செய்திகளை நபியவர்கள் நமக்கு நினைவுப் படுத்துகிறார்கள். முதலாவது இரண்டு சூர்கள் ஊதப்படும். அதில் ஒன்று உலகத்தில் உள்ள அனைத்தும் அழிக்கப் படுவதற்காகவும், மற்றொன்று அழிக்கப்பட்ட படைப்புகளை எழுப்பி விசாரணை செய்வதற்காகவாகும்.

இரண்டாவது உலகம் அழிக்கப்பட்டு நாட்பது நாட்கள்,அல்லது நாட்பது மாதங்கள், அல்லது நாட்பது வருடங்கள் கழித்து இரண்டாவது சூர் ஊதப்படுவதாகும். மூன்றாவது வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான் அதாவது வானங்கள் தூள், தூளாக ஆக்கப்படிருந்தாலும், மேலிருந்து தண்ணீரை அல்லாஹ் இறக்குவான். நான்காவது ஒரு மனிதனை அடக்கிய பின் குறிப்பிட்ட காலத்தோடு அவனது உடல் மண்ணோடு மண்ணாக உக்கி போய் ஒன்றும் இருக்காது. ஆனால் உள்வால் என்று சொல்லக் கூடிய முதுகந்தண்டின் அடி எலும்பை தவிர, அந்த எலும்பு அப்படியே இருக்கும். அந்த எலும்பை வைத்தே அல்லாஹ் மனிதர்களை எழுப்புவான்.

பாவிகள் எழுப்பும் விதம்…
பாவிகளை அல்லாஹ் எழுப்பி, அவர்களை தலை கீழாக விசாரணைக்கு எடுப்பான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.(17- 97)

பாவிகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அல்லாஹ் மிக கடுமையாக சொல்லிக் காட்டுகிறான். மேலும் சூர் ஊதப்பட்டவுடன் கப்ருக்குள் இருந்து வெளி வரும் அமைப்பை பின் வரும் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.

“ எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்). ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள். அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.(36- 51)

“மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். (36:52)

புதிய பூமி…
“சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்”
புஹாரி 6521, 6520

“அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்… (அல்குர்ஆன் 14.48)

மறுமையின் அமளி, துமளி…
மறுமை நாளில் மக்கள் பித்துப் பிடித்தவர்களைப் போல அங்குமிங்கும் பதறிக்கொண்டு ஓடித்திரிவார்கள், யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத நிலையில், எனக்கு என்ன நடக்குமோ என்று நடுங்க கூடிய காட்சியை அல்லாஹ் குர்ஆனின் மூலம் நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் – (80:35)
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும் (80:36)
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- (80:37)
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.(80-34)
மேலும் “எவ்வித மறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம், ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்! (20:108)

நிர்வாணிகளாக எழுப்பப் படுவார்கள்…

“மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்படும் போது, முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம்(அலை)அவர்கள்”
(இப்னு அப்பாஸ்(ரலி)– (புகாரி 3349)

மேலும்

”நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.
புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).

மறுமையில் நபிமார்களின் நிலை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். ‘நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்’ என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் – அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, ‘நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) ‘உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், ‘குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை’ என்று சொல்வேன்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) | புகாரி 4476

மேற்ச் சென்ற இந்த ஹதீஸின் மூலமாக அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்களான நபிமார்களே எனக்கு என்ன நடக்குமோ, அல்லாஹ் எனக்கு என்ன தீர்பளிக்க போகிறான் என்று கவலையோடு நடுங்கி நிற்கும் நாள் அந்த மறுமை நாளாகும். நபிமார்களே தனது வாழ் நாளில் நடந்த ஓரிரு தவறுகளுக்காக பயப்படுகிறார்கள் என்றால், பாவத்திலே அதிகமாக மூழ்கி இருக்க கூடிய நாம் எந்த அளவு அந்த மறுமை நாளை நினைத்து தன்னை மறுமைக்காக எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். நானும் ஒரு நாள் மரணிக்க கூடியவன், திடீரென்று எனக்கு மரணம் வந்து விட்டது என்றால், மறுமையில் எனது நிலை என்னவாகுமோ என்று பயந்த நிலையில் அமல்களை சரியாக நிறைவாக செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மறுமையில் மக்களின் நிலை

“ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது; அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும்; தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்; அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.” (80:33-37)

உலகில் ஒரு கஷ்டம் என்றால் உறவுகள், நண்பர்கள், மாறி, மாறி உதவிகள் செய்வார்கள். ஆனால் மறுமை நாளில் எல்லோரும் யா நப்fசி, யா நப்fசி என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பார்கள்.

மேலும் “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”(26:88)

மறுமை நாளில் அவரவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அதனால் உலகில் வாழும் போது மறுமையின் நிலைமையை கருத்திக் கொண்டு அமல்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

மறுமை நாளில் ஈஸா நபியின் நிலை

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, பிறகு, ‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்’ என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். ‘இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாகிவிட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கும் முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும். ஆவாய்’ (திருக்குர்ஆன் 05: 117, 118) என்று சொல்வேன்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 3447)

எனவே மரணத்தை முன்னோக்கிக் கொண்டிருக்க கூடிய நாம் மறுமைக்காக இவ்வுலகின் வாழ்க்கையை அல்லாஹ்விற்கு பொருத்தமாக அமைத்துக் கொள்வோமாக!

ஸிராத் பாலத்தின் உண்மை நிலை?

சென்ற தொடரில் மறுமை நாளில் நபிமார்களினதும், மக்களினதும் நிலை சம்பந்தமாக சில சான்றுகளை முன் வைத்திருந்தேன். இந்த தொடரிலும் மறுமை நாளில் நடக்கும் சில காட்சிகளை உங்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

ஸிராத் எனும் பாலம்…
மறுமை நாளில் நல்லவர்களும், கெட்டவர்களும், இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்தை அல்லாஹ் அமைத்துள்ளான். இந்த பாலத்தைப் பற்றி நபியவர்கள் கூறிய சில தகவல்களை உங்களுக்கு நான் தொகுத்து வழங்குகிறேன்.

“ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். -19:68

“பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். -19:69

“பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். -19:70

“மேலும், அதனை(பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். -19:71

“அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந்நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். -19:72

மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் யாராக இருந்தாலும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை விளங்கமுடிகிறது. நல்லடியார்களும், பாவிகளும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்களும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

…”பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டுவைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். ‘நஜ்த்’ பகுதியில் முளைக்கும் அவை ‘கருவேல மர முற்கள்’ எனப்படும்’ என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள்…(புகாரி 7439)

…”நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப் படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். ‘இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று!’ என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களும் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.”

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி 6535)

எனவே மேற்ச் சென்ற குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் அந்த பாலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அந்த பாலம் கரு வேல முள்ளை விட கூர்மையாக இருக்கும். பாலத்திற்கு இடை, இடையே கொக்கிகள் போடப்பட்டிருக்கும், அந்த பாலத்தை நல்லவர்களும் கடக்க வேண்டும். பாவிகளும் கடக்க வேண்டும். நல்லவர்கள் அனைவரும் கடந்து விடுவார்கள் ஆனால் எந்த பாவிகளையும் அந்த பாலத்தில் போடப்பட்டிருக்கும் கொக்கிகள் விட்டு விடாது பிடித்து, பிடித்து நரகத்தில் தள்ளி விடும் என்பதை விளங்கி கொண்டீர்கள்.

அதே நேரம் இந்த பாலத்தை பற்றி பேசும் போது ஸிராத்துல் முஸ்தகீம் என்று மௌலவிமார்கள் சொல்வார்கள். ஆனால் நபியவர்கள் ஸிராத்துல் முஸ்தகீம் அதாவது முஸ்தகீம் என்ற வார்த்தையை சேர்த்து சொல்ல வில்லை,நான் மேலே புகாரி ஹதீஸ் இலக்கங்களை குறிப்பிட்டுள்ளேன் அவற்றை வைத்து நேரடியாக ஹதீஸ் கிதாப்களில் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். மாறாக ஸிராத் அல்லது அதற்கு ஒத்த கருத்தை (பாலம்) என்று மட்டும் தான் நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். நபியவர்கள் சொல்லாத பெயரை நாம் சொல்லி மறுமையில் நாம் குற்றவாளியாக மாறுவதை விட, நபியவர்கள் சொன்ன ஸிராத் என்ற சொன்ன சொல்லையே மக்களுக்கு எடுத்துக் காட்டி மறுமையில் ஈடேற்றம் அடைவோமாக!

இப்றாஹீம் நபியும், தந்தையும்…
மறுமை நாளில் இப்றாஹீம் நபியும், அவரது தந்தையும் நேரடியாக கண்டு கொள்ளும் காட்சியை நபியவர்கள் இப்படி எடுத்துக் காட்டுகிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே!’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘இறைமறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்து விட்டேன்’ என்று பதிலளிப்பான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4769)

மற்றொரு அறிவிப்பில் இப்றாஹீம் நபியின் தந்தையை அல்லாஹ் கழுதை புலி உருவத்தில் மாற்றி நரகத்தில் வீசிவான் என்பதை காணலாம். அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை தான் இந்த சம்பவம் எச்சரிக்கிறது.

மறுமை நாளில் மூஸா நபி…
மறுமை நாளில் மூஸா நபி அல்லாஹ்வுடைய அர்ஷை பிடித்தவர்களாக இருப்பார்கள் என்பதை நபியவர்கள் பின் வரும் செய்தியின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்ட போதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களர் அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)?’ என்று எனக்குத் தெரியாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4813)

நாம் உலகத்தில் செய்த அனைத்து விடயங்களையும் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்பட இருக்கிறோம். அவற்றில் முதலாவதாக விசாரிகப்படும் செயலை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (புகாரி 6864)

மோசடிகாரர்களுக்கு கொடி…
இந்த உலகத்தில் வாழும் போது யாருக்காவது எந்த வழியிலாவது மோசடி செய்திருந்தால் குறிப்பாக பிறருடைய ஏதாவது பொருளை அநியாயமாக அபகரித்திருந்தால், இவன் மோசடிகாரன் என்பதற்கு அடையாள சின்னமாக ஒரு கொடி வழங்கப் படும் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது ‘இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)’ என்று கூறப்படும். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6178)

மேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும். மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால்குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது. (பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்தநிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது “நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக்கொள். அது எனக்கு வேண்டாம்” என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1806)

மூன்று பேருக்கு எதிராக வழக்கு ?…
மறுமை நாளில் பலவிதமான காட்சிகளுக்கு மத்தியில் அல்லாஹ் சில மக்களுடன் வழக்காடுவான். அவர்களில் மூவர்களை பின் வருமாறு நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 2227)

மூன்று பேரை அல்லாஹ் பார்க்க மாட்டான்…
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

  1. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
  2. இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.
  3. மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, ‘எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.

இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்…’ என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 2358)

ஸகாத்து பொருள் பாம்பாக மாறும்…
இந்த உலகில் ஸகாத் கொடுக்க தகுதியிருந்தும் அதற்கான ஸகாத்தை கணக்குப் பார்த்து கொடுக்கவில்லையானால்,அவைகள் மறுமை நாளில் பாம்பாக மாற்றப் பட்டு, அவரின் கழுத்தை சுற்றி வேதனைப்படுத்தும் என்பதை நபியவர்கள் பின் வருமாறு எச்சரிக்கிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்’ ‘நானே உன்னுடைய புதையல்’ என்று கூறும்.’
இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.’ என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 1403)

துருவி, துருவி விசாரிக்கப்பட்டவன் அழிந்தான்…
பொதுவாக மறுமை நாளில் அனைவரும் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள். அதே நேரம் யார் துருவி, துருவி விசாரிக்கப்படுகிறாரோ அவரின் நிலை மோசமாக அமைந்து விடும் என்பதை பின் வரும் ஹதீஸ் எச்சரிக்கிறது.

“ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக்கரத்தில் வழங்கப்படுமோ, அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:8 வது வசனத்தில்) கூறுகிறான்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்ற் மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான்’ என்று கூறினார்கள். (புகாரி 4939)

நரகத்தில் பாவிகள் அனுபவித்து வரும் தண்டனைகளை தொடராக நான் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் காட்டி வருகிறேன். அந்த தொடரில் இன்னும் சில காட்சிகளை காணலாம்.

மனோ இச்சையினால் நரகம்…
மனிதன் சரியான முறையில் வாழ்வதற்காக நபியவர்களை தேர்ந்தெடுத்து, அவரின் மூலமாக மார்க்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.
நபியவர்களின் மரணத்திற்கு பிறகு காலம் செல்ல, செல்ல, நபியவர்கள் மார்க்கத்தில் காட்டித்தராத பல செயல்பாடுகள் மார்க்கமாக மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். செய்தால் நல்லது தானே, செய்தால் என்ன தப்பா, நல்ல செயல் பாடாக தானே உள்ளது, என்று மனோ இச்சைக்கு அடிபணிந்து மனோ இச்சை எதையெல்லாம் மார்க்கமாக நாடுகிறதோ அதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் நடை முறைப்படுத்தி வர ஆரம்பித்தார்கள். அதற்கான எச்சரிக்கையாக தான் மனோ இச்சைகளுக்கு அடிபணிந்தால் நரகம் தான் என்று நபியவர்களின் எச்சரிக்கையை பின் வருமாறு காணலாம்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6487)

மேலும் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைபோன்றே (மிக அருகில் உள்ளது.)
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். (புகாரி 6488)

மேலும் அல்லாஹ்வின் எச்சரிக்கையையும் பின் வருமாறு காணலாம்.

“அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

பெருமையும், நரகமும்…
எவரிடத்தில் பெருமை இருக்கிறதோ அவர் இறுதியாக ஒதுங்குமிடம் நரகமாகும் என்று அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் எச்சரித்துள்ளார்கள். தன்னை அறியாமல் மனிதனிடத்தில் பெருமை வந்து விடுகிறது.குறிப்பாக பெருமையைப் பற்றி நபியவர்கள் பின் வருமாறு ஒரே வரியில் சுருக்கமாக கூறினார்கள். பெருமை என்றால் சத்தியத்தை மறுப்பதும், பிறரை அற்பமாக நினைப்பதும்ஆகும் என்று எச்சரித்தார்கள்.

இன்று மனிதன் தன்னை அறியாமல் நான், நான் என்று பிறரை அற்பமாக நினைத்து பெருமையில் சிக்கிக் கொள்கிறான். எனக்கு தான் தெரியும் அவருக்கு தெரியாது. எனக்கு தான் முடியும் அவருக்கு முடியாது. இப்படி அதிகமாக என்னால் முடியும் அவருக்கு முடியாது என்று சர்வ சாதாரணமாக நினப்பதே பெருமையாகும் .தஃவா களத்தில் ஈடுபடும் மௌலவிமார்கள் உட்பட சாமானியர்கள் வரை இப்படியான பெருமையில் தன்னை அறியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். இதனுடைய முடிவு நரகம் என்பதை நாம் பயந்து கொள்ள வேண்டும்.

“ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.(புகாரி 4918)

வெப்பமும், நரகமும்…
நாம் உலகில் வாழும் போது நமது வாழ்க்கைக்காக அல்லாஹ் இந்த உலகத்தையும், உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்துள்ளான். அவைகளில் ஒன்று தான் சூரியனாகும். இந்த சூரியனிடமிருந்து வெளியாகும் வெப்பத்தை நபியவர்கள் நரகத்தின் மூச்சுக் காற்று என்று எடுத்துக் காட்டி நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று எச்சரிப்பதை காணலாம்.

உலகில் நாம் வாழும் போது பல இலட்ச மயில்களுக்கு அப்பால் இருந்து வெளிவரும் சூரியனின் தாக்கத்தை தாங்க முடியவில்லை என்றால், நேரடியாக நரகத்தின் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை நினைவுப் படுத்தவே நபியவர்கள் பின வரும் செய்தியை சொல்கிறார்கள்.

“அபூ தர்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (முஅத்தின் லுஹர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முறபட்ட போது), ‘வெப்பம் தணியட்டும். பிறகு, தொழலாம்’ என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘வெப்பம் தணியட்டும்’ என்று – சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும் வரை – கூறினார்கள். பிறகு, ‘தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது’ என்றார்கள். ( புகாரி 3258)

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம் தன் இறைவனிடம், ‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே’ என்று முறையிட்டது. எனவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இரண்டு மூச்சுகள்விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 3260)

உலகில் எங்களால் வெப்பத்தின் தாக்கத்தையும்,தாங்க முடியாது. குளிரின் தாக்கத்தையும் எங்களால் தாங்க முடியாது. எனவே வெப்பமும், குளிரும், நரகத்தின் நினைவை கொண்டு வர வேண்டும்.

أحدث أقدم