பஜ்ர் தொழுகையை பஜ்ரின் நேரம் நுழைந்ததன் பின் காலை வெளிச்சம் வரமுன் இரவின் இருளிலே தொழுவதே சிறந்தது.
நபி (ஸல் )அவர்களின் வழிகாட்டலும் இப்படிதான் தான் இருந்தது.
நபித் தோழர்களின் பெரும்பான்மையினரினதும் நிலையும்,
பெரும்பான்மை இமாம்களின் நிலையும் இப்படித்தான் இருந்தது.
இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம் :-
1-...... وَالصُّبْحَ كَانُوا ـ أَوْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّيهَا بِغَلَسٍ
சுப்ஹு தொழுகையை ‘மக்கள்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்கள்’ இருள் இருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே ) தொழுபவர்களாய் இருந்தார்கள் (நூல் புஹாரி 560)
2- أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ قَالَتْ، كُنَّ نِسَاءُ الْمُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الْغَلَسِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கு பெறுபவர்களாக இருந்தனர்; தொழுகையை முடித்துக்கொண்டு தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா, பெண்ணா என்று) அறிந்து கொள்ள முடியாது (புஹாரி 578)
3- பாதீலா பிந்த் மஹ்ரமா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மக்களோடு சுபஹ் தொழுதுகொண்டிக்கும் போது நான் அங்கு சென்றேன்; நச்சத்திரங்கள் வானத்தில் இருந்தது, இரவின் இருளின் காரணமாக ஆண்களை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள முடியவில்லை (நூல் அஹ்மத்)
4- ஹர்மலா அன்பரி கூறுகிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களோடு பஜ்ர் தொழுதேன். தொழுகை முடிந்ததும் அங்கிருந்த மக்களின் முகங்களைப் பார்த்தேன். அவர்களை யார் என்று அறிய முடியவில்லை (நூல் அபூதாவூத் )
5- அபூ மசூத் அன்சாரி (ரழி) கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் பஜ்ர் தொழுகையை வெளிச்சம் கலந்த இருட்டில் தொழுதார்கள். மற்றுமொரு தடவை வெளிச்சத்தில் தொழுதார்கள். பிறகு நபியவர்கள் மரணிக்கும் வரை வெளிச்சத்தில் தொழவில்லை (நூல் அபுதாவூத் )
போன்ற ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
எனவே நன்மையின் பக்கம் முந்திக் கொள்வதை இஸ்லாம் வழி காட்டிய இடங்களில் வழி காட்டி உள்ளது. தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதே மிக முக்கியமான சிறந்த அமலாகும். நபி (ஸல்) அவர்கள் கூறும் போது "தொழுகையில் மிக சிறந்தது அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதேயாகும்."
இஷாத் தொழுகையை அத்தொழுகை தப்பிப் போகாத புறத்தில் பிற்படுத்தித் தொழ அனுமதி உண்டு. இது தவிர ஏனைய தொழுகைகளை அதன் ஆரம்ப நேரத்தில் தொழல் வேண்டும். அந்த அடிப்படையில் சுபஹ் தொழுகையை வெளிச்சம் கலந்த இருளில் தொழுவது சரியானதாகும்.
இக்கருத்தை "இமாம் ஷாபிஈ, இஸ்ஹாக் போன்றோரும். நபித்தோழர்களான அபு பக்கர், உமர் உஸ்மான் (ரழி) அன்ஹும் போன்றோரும் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் :- இப்னு குதாமா முஹ்னி, மேலும் இப்னு அப்துல் பர் )
எனவே இருள் கலந்த வெளிச்சத்தில் தொழுவதையே மேற் சொன்ன ஹதீஸ்கள் எடுத்துக்காட்டுகிறது.
பஜ்ர் தொழுகையை தாமதப்படுத்தி தொழுங்கள் என்ற அறிவிப்பு பற்றிய விளக்கம்:
أصبحوا بالصبح
اسفروا بالفجر
سافروا بالفجر فإنه أعظم للأجر
நபி (ஸல்) கூறினார்கள் "பஜ்ரை வெளிச்சம் வரும் (விடியும்) வரை எதிர்பாருங்கள்.
மேலும் பஜ்ர் வெளிச்சத்தில் தொழுங்கள்
மேலும் பஜ்ரை வெளிச்சம் வரும் (விடியும்) வரை எதிர்பாருங்கள். அது மகத்தான கூலி வழங்க தகுதியாகும்” என இடம் பெற்றுள்ளது. (நூல் அஹமத் 17287)
ஆரம்பத்தில் கூறிய ஹதீஸ்களோடு இறுதியாக கூறிய ஹதீஸ்களையும் இணைத்து பார்க்கும் போது மேற்கூறிய ஹதீஸ்களுக்கு பல அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் சொல்லி உள்ளார்கள்
“வெளிச்சம் வரும் வரை எதிர்பாருங்கள்” என்பது சுபஹ் உதயமாகவில்லை என்ற சந்தேகம் வரக்கூடாது என்பதாகும்.
மேலும் சுபஹ் தொழுகையில் ஓதும் கிராத்தை நீட்டி ஓதி நன்றாக வெளிச்சம் வரும் வரை தொழுவதாகும். அதாவது "இருளில் தொழுகையை ஆரம்பித்து வெளிச்சம் வரும் வரை நீட்டி தொழுவதையே குறிக்கும். இதற்க்கு உமர் (ரழி) அவர்கள் அபூமூஷா அல்அஷ்அரி (ரலி) அவர்களுக்கு எழுதிய பிரபல்யமான ஒரு கடிதம் வலுச் சேர்க்கிறது... அக் கடிதத்தில்.. சுபஹ் தொழுகையை இருட்டில் தொழுங்கள், கிராஅத்தை நீட்டி ஒதுங்கள். (நூல் பைஹகி)
முடிவாக :- சுபஹ் தொழுகையை அதன் நேரம் நுழைந்தன் பின் இருள் கலந்த வெளிச்சத்தில் தொழுவதே சிறந்தது. அதாவது ஆரம்ப நேரத்தில் தொழுவதே முறையாகும் இதுவே நபிகளாரின் வழிகாட்டலுமாகும்.
(அல்லாஹ் மிகவும் அறிந்தவன்)
-நஸீர் அந்நூரி