பருவமடைந்த பிள்ளைகள் விடயத்தில் இஸ்லாம் கூறும் ஒழுங்குகள்

அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறியதாவது :

“ஏழு வயதை அடையும்போது உங்களது பிள்ளைகளை தொழுமாறு ஏவுங்கள்; பத்து வயது ஆகியும் அவர்கள் தொழாத பட்சத்தில் அவர்களை அடியுங்கள். மேலும் அவர்களுக்கு தனி  படுக்கை இடங்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.”

[ நூல் : அபூதாவூத், 495; இமாம் அல்பானி அவர்கள் இதனை 'ஸஹீஹ்' என்று ஸஹீஹ் அபீதாவூதில் கூறியுள்ளார்கள்.]

10 வயதிலிருந்தே ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனி படுக்கையை பிரித்து கொடுப்பது ஃபித்னாவை விட்டும் பாதுகாக்கும். 

மஹர்ரமான உறவுகள் மத்தியில் பாலியல் இச்சை இல்லையென்று கூறுபவர்களுக்கு இந்த ஹதீஸ் பெரும் மறுப்பாக அமைந்துள்ளது. 

அல்லாஹு கூறுகிறான் :
" وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَـٔۡذِنُواْ كَمَا ٱسۡتَـٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிடும் பட்சத்தில், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோரவேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 24:59)

இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுவதாவது :
"ஆண்களும்,  பெண்களும், பத்து வயதை அடைந்ததிலிருந்து அவர்கள் தூங்கும் போது ஆண் பிள்ளைகளை அவர்களது தாய் மற்றும் சகோதரியிடமிருந்தும், பெண் பிள்ளைகளை அவர்களது தந்தை மற்றும் சகோதரனிடமிருந்தும் பிரிக்க வேண்டியது அவசியமானதாகும்."
(நூல் : ரவ்ழதுல் தாலிபீன் 7/28)

ஒரு தந்தை தம்மால் முடியுமானவரை தம்முடைய பிள்ளைகளுக்கு தனி படுக்கை இடங்களை அளிக்க வேண்டுமென உலமாக்கள் தீர்ப்பளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
أحدث أقدم