அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்

ARM. ரிஸ்வான் (ஷர்கி)

பிரயாணத்தின் போதான சிரமங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட விசேட சலுகைதான் பிரயாணத் தொழுகையாகும். முஸ்லிம்களில் அதிகமானோர் பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை குறித்து அறியாதிருப்பதால் பலர் தமது பயணங்களில் தொழுகைகளை பாழாக்கிவிடுகின்றனர், மற்றும் பலர் தவறாக நிறைவேற்றுகின்றனர்.

எனவே இது குறித்த தெளிவை உதாரணங்களுடன் முன்வைப்பது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

ஆரம்பமாக பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றி நோக்கிவிட்டு பின்னர் இத்தலைப்புத் தொடர்பான ஏனைய விடயங்களை கலந்துரையாடலாம்.


பயணத் தொழுகையை நிறைவேற்றும் முறை :

மூன்று முறைகளில் பயணத் தொழுகையை நிறைவேற்றலாம் :

1: சுருக்கி மாத்திரம் தொழுதல்:

ஐவேளைத் தொழுகைகளில் நான்கு றக்அத்துகள் கொண்ட ழுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய தொழுகைகளை அந்தந்த தொழுக நேரங்களில் இரண்டு றக்அத்துகளாக சுருக்கி மாத்திரம் தொழுதல்.

உதரணமாக, பிரயாணியாக இருக்கும் ஒருவர் ளுஹ்ர் தொழுகை நேரம் வந்தவுடன் அதன் நேரம் முடிவதற்குள் இரண்டு றக்அத்துகள் மாத்திரம் தொழுதல். இவ்வாறே அஸ்ர் தொழுகை நேரம் ஆரம்பித்து அதன் நேரம் முடிவதற்குள் இரண்டு றக்அத்துகள் தொழுதல், இஷாவுடைய நேரம் ஆரம்பமானதிலிருந்து அதன் நேரம் முடிவதற்குள் இரண்டு றக்அத்துகளாக இஷாவை தொழுதல்.

கவனிக்க :

நான்கு றக்அத்துகள் கொண்ட தொழுகைகளை மாத்திரமே இரண்டு றக்அத்துகளாக சுருக்கி தொழ முடியும் என்பதனால் மஃரிப், ஸுப்ஹ், ஜும்ஆ தொழுகைகளை சுருக்கித் தொழ முடியாது.

நான்கு றக்அத் கொண்ட தொழுகைகளை அந்தந்த நேரங்களில் சுருக்கி மாத்திரம் தொழுவதற்கான ஆதாரம் :

1. அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபியவர்களோடு மதீனாவிலிருந்து மக்காவுக்கு பயணம் மேற்கொண்டாம். மீண்டும் நாங்கள் மதீனாவை வந்தடையும் வரை நபியவர்கள் (நான்கு றக்அத்) தொழுகைகளை இரண்டிரண்டாகவே தொழுதார்கள் (புஹாரி, முஸ்லிம்).

2. இப்னு உமர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : ‘நான் நபியவர்களோடு இணைந்து பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அவர்கள் (நான்கு றக்அத் தொழுகைகளை) இரண்டு றக்அத்துகளை விட அதிகரிக்க மாட்டார்கள். அபூபக்ர், உமர், உஸ்மான் (றழியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் தமது பயணங்களில் இவ்வாறே நடந்துகொண்டார்கள் (புஹாரி, முஸ்லிம்).

இமாம் இப்னுல் கய்யிம் (றஹ்) கூறுகிறார்கள் : ‘நபிகளார் அவர்கள் பயணம் மேற்கொண்டு தனது ஊரான மதீனாவை வந்தடையும் வரை நான்கு றக்அத்துகள் கொண்ட தொழுகைகளை இரண்டாக சுருக்கியே தொழுதிருக்கிறார்கள். பயணங்களின் போது நான்கு றக்அத் தொழுகைகளை நான்காக முழுமைப்படுத்தி தொழுததாக ஆதாரங்கள் இல்லை’ (பார்க்க : ‘ஸாதுல் மஆத்’ , 1/464).

மேற்குறிப்பிட்ட தகவல்கள் நபிகளார் அவர்கள் நான்கு றக்அத் தொழுகைகளை பயணத்தில் இரண்டாக சுருக்கி மட்டும் தொழுதமைக்கு ஆதாரங்களாக அமைகின்றன.


2.சேர்த்து மாத்திரம் தொழுதல் :

ஒரு பிரயாணி ஐவேளைத் தொழுகைகளை இரண்டிரண்டு தொழுகைகளாக சுருக்காமல் சேர்த்து மட்டுமே தொழவும் அனுமதி உண்டு.

ஆதாரம் :

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘நபியவர்கள் அச்சமோ, மழையோ, பயணமோ அல்லாத சில சூழ்நிலைகளில் மதீனாவில் ளுஹ்ரையும் அஸ்ரையும் அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்…’ (முஸ்லிம்).

பிரயாணம் அல்லாத சூழ்நிலைகளிலும் நபிகளார் தொழுகைகளை சேர்த்துத் தொழுதார்கள் என்று மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்படுவதன் மூலம் பிரயாணத்தில் நபியவர்கள் சேர்த்து தொழுதிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

சேர்த்து மட்டும் தொழும் முறையை நோக்கினால், ளுஹ்ரை நான்கு றக்அத்துகளாக முழுமையாக தொழுதுமுடித்தவுடன் எழுந்து இகாமத் கூறி அஸ்ரையும் நான்கு றக்அத்துகள் தொழல். இவ்வாறே மஃரிப் மூன்று றக்அத்துகள் தொழுது முடித்தவுடன் எழுந்து இகாமத் கூறி இஷா நான்கு றக்அத்துகள் தொழல்.

கவனிக்க :

சேர்த்து தொழும் போது ளுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து தொழலாம்; அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழலாம். மாறாக அஸ்ரையும் மஃரிபையும் சேர்த்து தொழ முடியாது.

சேர்த்து தொழுதல் இரு வகைப்படும் :

1) முற்படுத்திச் சேர்த்தல் (ஜம்உ தக்தீம்) :

ளுஹ்ரையும் அஸ்ரையும் நான்கு நான்கு றக்அத்துகளாக ளுஹ்ருடைய நேரத்திற்குள் தொழல். அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் மஃரிபுடைய நேரத்திற்குள் தொழல்.

பிந்திய தொழுகையான அஸ்ரை முந்திய தொழுகையான ளுஹ்ருடைய நேரத்துக்கு முற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும், அவ்வாறே இஷாவை மஃரிபுடைய நேரத்துக்கு முற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும் இந்நடைமுறைக்கு ‘முற்படுத்திச் சேர்த்தல்’ (ஜம்உ தக்தீம்) எனப்படுகிறது.

2) பிற்படுத்திச் சேர்த்தல் (ஜம்உ தஃஹீர்) :

ளுஹ்ரையும் அஸ்ரையும் அஸ்ருடைய நேரத்திற்குள் நான்கு நான்கு றக்அத்துகளாக தொழுதல். அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் இஷாவுடைய நேரத்திற்குள் தொழல்.

முந்திய தொழுகையான ளுஹ்ரை பிந்திய தொழுகையான அஸ்ருடைய நேரத்துக்கு பிற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும், அவ்வாறே மஃரிபை இஷாவுடைய நேரத்திற்கு பிற்படுத்தி சேர்த்து தொழுவதனாலும் இந்நடைமுறைக்கு ‘பிற்படுத்திச் சேர்த்தல்’ (ஜம்உ தஃஹீர்) எனப்படுகிறது.

குறிப்பு :

சேர்த்து மாத்திரம் தொழுவது பிரயாணிக்குரிய அனுமதி மாத்திரமல்ல, சொந்த ஊரில் இருப்போர் கடும் மழை, கடும் குளிர், அச்சமான சூழல், கடும் நோய் போன்ற காரணங்களுக்காகவும் மேற்குறித்தவாறு ளுஹ்ரையும் அஸ்ரையும் அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ சேர்த்து தொழலாம். ஆனால் பிரயாணம் அல்லாத மேற்படி காரணங்களுக்காக சுருக்கி தொழ முடியாது. அதாவது சேர்க்கலாம்; சுருக்க முடியாது.

‘நபியவர்கள் கடுமையாக மழை பெய்த ஓர் இரவில் மதீனாவில் வைத்து மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்’ (புஹாரி).

நபிகளார் தனது சொந்த ஊரில் கடும் மழைக்காக சேர்த்துத் தொழுதிருக்கிறார்கள் என்பதை மேற்படி ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

 
3.சேர்த்தும் சுருக்கியும் தொழுதல் :

நான்கு றக்அத் தொழுகைகளை இரண்டாக சுருக்கும் அதே வேளை, இரு தொழுகைகளை சேர்த்து ஒரே தடவையில் தொழுவதை ‘சேர்த்தும் சுருக்கியும் தொழுதல்’ என்கிறோம்.

இதையும் இரண்டு விதமாக தொழலாம் :

1) முற்படுத்திச் சேர்த்து சுருக்குதல் :

எடுத்துக்காட்டாக, ளுஹ்ரை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி தொழுதுவிட்டு இகாமத் கூறி அஸ்ரையும் இரண்டு றக்அத்துகளாக சுருக்கி ளுஹ்ருடைய நேரத்தில் தொழுதல்.

அவ்வாறே, மஃரிபை சுருக்க முடியாது என்பதால் மூன்று றக்அத்துகள் தொழுதுவிட்டு, இகாமத் கூறி இஷாவை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி, மஃரிபுடைய நேரத்தில் தொழுதல்.

2) பிற்படுத்தி சேர்த்து சுருக்குதல் :

எடுத்துக்காட்டாக, ளுஹ்ரை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி தொழுதுவிட்டு இகாமத் கூறி அஸ்ரையும் இரண்டு றக்அத்துகளாக சுருக்கி அஸ்ருடைய நேரத்தில் தொழுதல்.

அவ்வாறே, மஃரிபை சுருக்க முடியாது என்பதால் மூன்று றக்அத்துகள் தொழுதுவிட்டு, இகாமத் கூறி இஷாவை இரண்டு றக்அத்துகளாக சுருக்கி, இஷாவுடைய நேரத்தில் தொழுதல்.

கவனிக்க :

தொழுகைகளை சேர்த்து தொழும் போது அல்லது சுருக்கியும் சேர்த்தும் தொழும் போது முதல் தொழுகைக்கு அதானும் இகாமத்தும் கூறப்படும். ஆனால் இரண்டாவது தொழுகைக்கு அதான் கூறாமல் இகாமத் மாத்திரம் கூறுவது போதுமாகும்.

ஆதாரம் :

நபியவர்கள் அறபாவில் தரித்திருந்த போது ஒரு அதான், இரு இகாமத்துகள் கூறி இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுதார்கள். பின்னர் முஸ்தலிபாவுக்குச் சென்று ஒரு அதான், இரு இகாமத்துகள் கூறி மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவ்விரு நொழுகைகளுக்கிடையில் தஸ்பீஹ் எதுவும் ஓதவில்லை. பின்னர் அதிகாலை உதயமாகும் வரை உறங்கினார்கள் (முஸ்லிம், நஸாஈ).

இதுதான் பிரயாணத் தொழுகையை நிறைவேற்றும் முறை பற்றிய சுருக்கமாகும்.

அடுத்து இப்பிரயாணத் தொழுகை பற்றிய ஏனைய விடயங்களை நோக்கலாம்.

 
சுருக்கித் தொழுவதற்கான தூரம் :

பிரயாணத்தின் போது நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதாயின் அப் பிரயாணம் குறிப்பிட்ட தூரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.

இப்னு உமர் (றழி) மற்றும் இப்னு அப்பாஸ் (றழி) ஆகிய இரு ஸஹாபாக்களும் 48 மைல் தூரம் கொண்ட பயணமாயின் தொழுகைகளை சுருக்கி தொழுவதோடு, நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள் (ஸஹீஹுல் புஹாரி).

மேற்படி இரு ஸஹாபாக்களின் நடைமுறையை அடிப்படையாக கொண்டு இமாம்களான மாலிக், ஷாபிஈ, லைத், இஸ்ஹாக் இப்னு றாஹவைஹி (றஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர், ஒருவர் 48 மைல் அல்லது அதனை விட அதிக தூரம் கொண்ட பயணத்திலேயே சுருக்கித் தொழ முடியும் என்ற கருத்தை கொண்டிருக்கின்றனர்.

அதே வேளை மற்றொரு முக்கியமான ஸஹாபியான அனஸ் (றழி) அவர்கள் 15 மைல் தூரம் கொண்ட பயணத்திலும் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் என்பதாக பல அறிவிப்புகள் வந்துள்ளன.

ஒரு நாள் தூரம் கொண்ட பயணத்திலேயே சுருக்கித் தொழ முடியும் என சில அறிஞர்களும், அரை நாள் பயண தூரத்தில் சுருக்கி தொழலாம் என மற்றும் சிலரும் குறிப்பிடுவதாக இமாம் இப்னு குதாமா (றஹ்) அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : ‘அல்முக்னீ’).

வெவ்வேறுபட்ட இந்த கருத்துக்களை வைத்து நோக்கும் போது நபியவர்கள் சுருக்கித் தொழுவதற்கான தூரத்தை வரையறை செய்யவில்லை என்பது புலனாகிறது. அவ்வாறு வரையறுத்திருந்தால் அறிஞர்களிடையே வெவ்வேறு கருத்துகள் தோன்ற நியாயமில்லை. ஆயினும் நபிகளாரின் பயணங்கள், அவற்றின் தூரங்கள், அப்பயணங்களின் போது அவர்கள் சுருக்கி தொழுதமை பற்றிய விடயங்களை அடிப்படையாக வைத்து அறிஞர்கள் தமது கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அல்லாஹ் அவர்களது ஆய்வுகளுக்கு நற்கூலி வழங்கப் போதுமானவன்.

ஆயினும் ஒரு மார்க்க விடயத்தை அறுதியிட்டு கூறுவதாயின் நபியவர்கள் தெளிவாக அது பற்றி கூறியிருக்க வேண்டும். ஆனாலும் நபியவர்கள் ஒரு போதும் சுருக்கித் தொழுவதற்கான தூரத்தை வரையறுக்கவில்லை.

இவ்வகையில் குறுந் தூரப் பயணமாயினும் நெடுந்தூரப் பயணமாயினும், உலக வழக்கில் பயணம் என்று கருதப்படும் அனைத்துப் பயணங்களிலும் சுருக்கித் தொழமுடியும் என்றும், நடைமுறையில் பயணம் என்று கருதப்படாத மிக குறுகிய தூரத்தின் போது சுருக்கித் தொழ முடியாது என்றும் பல அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இக்கருத்தே ஆதார வலுக்கூடிய கருத்தாக தோன்றுகிறது.

இதற்கு பின்வரும் ஆதாரங்களை குறிப்பிட முடியும் :

1. யஃலா பின் உமய்யா (றழி) அவர்கள் அல்குர்ஆனில் இடம்பெறுகின்ற ‘நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு தீங்கு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது’ (4:101) என்ற வசனத்தை உமர் (றழி) அவர்களிடம் எடுத்துக்கூறி, ‘காபிர்களின் தீங்கு இருக்கும் போது சுருக்கி தொழலாம் என்றே அல்லாஹ் கூறுகிறான், இப்போது எதிரிகளின் தீங்கு இல்லையே, சுருக்கித் தொழ வேண்டிய தேவை இல்லை அல்லவா?’ என்று கேட்ட போது உமர் (றழி) அவர்கள் ‘இது பற்றி நபியவர்களிடம் நானும் வினவியிருக்கிறேன். அப்போது நபியவர்கள் ‘சுருக்கித் தொழுதல் என்பது அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய ஸதகாவாகும். அந்த ஸதகாவை ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்). 

மேற்படி குர்ஆனிய வசனத்திலும் ஹதீஸிலும் பயணம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, தூரம் குறிப்பிடப்படவில்லை.

2. அனஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : ‘ நபியவர்கள் மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸகுகள் (1 பர்ஸக் = 3 மைல்கள்) பயணம் மேற்கொண்டால் சுருக்கித் தொழுவார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).

இது தொடர்பில் இமாம் இப்னு தைமியா (றஹ்) அவர்களின் கருத்து நோக்கத்தக்கதாகும் :

“தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கான தூரம் என்ன என்பது தொடர்பில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்படும் நிலையில், நபியவர்கள் தூரத்தை வரையறுக்கவில்லை என்பது தெளிவானதாகும். எனவே நீண்ட பயணத்தில் சுருக்கித் தொழமுடியும் என்பது போலவே குறுகிய பயணத்திலும் சுருக்கித்தொழ முடியும். ஏனெனில், நபியவர்கள் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்த வேளை அறபாவிலும் மினாவிலும் தொழுகைகளை சுருக்கித் தொழுதார்கள், அவர்களுக்குப் பின்னால் மக்காவாசிகளும் சுருக்கியே தொழுதார்கள். நபியவர்கள் அதை அங்கீகரித்தார்கள். மக்காவுக்கும் அறபாவுக்குமிடையிலான தூரம் 12 மைல்கள் மட்டுமே.

எனவே நபியவர்கள் சுருக்கித் தொழுவதற்கான தூரத்தை காலத்தை அடிப்படையாக வைத்தோ, இடத்தை அடிப்படையாக வைத்தோ வரையறுக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறு தூரத்தை வரையறுக்கும் அறிஞர்களின் கூற்றுகள் ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை” (பார்க்க : ‘மஜ்மூஉல் பதாவா’, 24/15).

சுருங்கக் கூறின், ஒருவர் எதில் பயணம் செய்கிறார் என்பதோ, எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார் என்பதோ முக்கியமல்ல, அவர் மேற்கொள்வது பயணம் என உலக வழக்கில் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அப் பயணத்தின் போது தொழுகைகளை சுருக்கி சேர்த்துத் தொழலாம் என்பதே அல்குர்ஆன், ஸுன்னாவிலிருந்து பெறப்படும் முடிவாகும். அல்லாஹு அஃலம்.


சுருக்கித் தொழும் கால எல்லை:

ஒருவர் பயணத்திலிருக்கும் காலம் முழுவதும் சுருக்கித் தொழ முடியுமா, அல்லது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே சுருக்கித் தொழ முடியுமா என்பது தொடர்பிலும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஒருவர் வெளியூரில் தங்குவதாக தீர்மானித்துக்கொண்டால் அவர் சுருக்கித் தொழுவதற்கான கால எல்லையாக பல அறிஞர்கள் பல்வேறு காலவரையறைகளை விதித்திருக்கிறார்கள்.

– சில அறிஞர்கள் நான்கு நாட்களுக்கு மாத்திரமே ஒரு பயணி சுருக்கித் தொழ முடியும், அதற்கு மேலும் பயணியாக இருந்தால் சுருக்கித் தொழ முடியாது, நான்கு றக்அத்துகளையும் பூரணமாக தொழ வேண்டும் என்றும், இதற்கு ஆதாரமாக, நபியவர்கள் தனது ஹஜ்ஜின் போது மக்காவில் நான்கு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தமையையும் அந்த நான்கு நாட்களும் சுருக்கித் தொழுததையும் குறிப்பிடுகிறார்கள்.

– மற்றும் சில அறிஞர்கள் 15 நாட்களுக்கு சுருக்கித் தொழ முடியும் என்றும்

– மற்றும் சிலர் 19 நாட்கள் என்றும் வரையறுக்கிறார்கள்.

இவ்வாறு பத்துக்கு மேற்பட்ட கருத்துகள் அறிஞர்களிடம் காணப்படுகின்றன. இத்தகைய கருத்துகளை இமாம் நவவி (றஹ்) அவர்கள் விரிவாக கலந்துரையாடுகிறார்கள் (பார்க்க : ‘அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப்’ ).

இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு காரணம் குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ சுருக்கித் தொழுவதற்கான கால எல்லை வரையறுக்கப்படவில்லை என்பதேயாகும். நபியவர்கள் மேற்கொண்ட பல்வேறு பயண நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே மேற்படி கருத்துகளை அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு பிரயாணி எவ்வளவு காலத்திற்கு சுருக்கித் தொழ வேண்டும் என்பதை நபியவர்கள் வரையறுத்துக் கூறவில்லை என்பதால், ஒருவர் தனது சொந்த ஊரிலிருந்து வெளியாகி மீண்டும் தனது ஊருக்கு திரும்பி வரும் வரை – எத்தனை நாட்களாயினும் – சுருக்கித் தொழ முடியும் என்ற கருத்தை வேறு சில அறிஞர்கள் முன்வைக்கிறனர். இக்கருத்தே வலுவான ஆதாரம் கொண்ட கருத்தாகத் தெரிகிறது.

ஏனெனில் நபிகளார் தமது வாழ்நாளில் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாட்கள் அவர்கள் பயணியாக இருந்தார்களோ அத்தனை நாட்களும் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைக்கின்றன :

1. ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு சென்ற போது அங்கே நபியவர்கள் 10 நாட்கள் தங்கியிருந்தார்கள். அத்தனை நாட்களும் சுருக்கித் தொழுதார்கள் (புஹாரி).

2. மக்காவை வெற்றி கொள்வதற்காக சென்ற வேளை 19 நாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள், அனைத்து நாட்களும் சுருக்கித் தொழுதார்கள் (புஹாரி).

3. தபூக் யுத்தத்துக்காக சென்ற போது அங்கே 20 நாட்கள் தங்கியிருந்தார்கள். அனைத்து நாட்களும் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் (அபூதாவூத்).

இதற்கு மேலதிகமாக, ஸஹாபாக்களின் நடைமுறைகளை நோக்கும் போது அவர்கள் மிக நீண்ட காலத்திற்கு தமது பயணங்களில் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் என்பதை காண முடிகிறது :

1. அனஸ் (றழி) அவர்கள் ஷாமிலே கலீபா அப்துல் மலிக் பின் மர்வானுடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்கள். அனைத்து நாட்களும் நான்கு றக்அத் தொழுகைகளை இரண்டாக சுருக்கியே தொழுதார்கள் (முஸன்னப் இப்னு அப்திர் ரஸ்ஸாக்).

2. ஸஹாபாக்களில் ஒரு குழுவினர் றாமஹுர்முஸ் பிரதேசத்தில் 09 மாதங்கள் தங்கியிருந்தார்கள். அத்தனை நாட்களும் சுருக்கியே தொழுதார்கள் (பைஹகி). (இது ஆதாரபூர்வமானது என இமாம் நவவி, ஹாபிழ் இப்னு ஹஜர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்).

3. அபூஜம்ரா அவர்கள் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் ‘குராஸான் பிரதேசத்தில் யுத்தத்துக்காக நீண்ட காலம் தங்க வேண்டியேற்படுகிறது, எவ்வாறு நாங்கள் தொழுவது?’ என்று கேட்ட போது இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் ‘பத்து வருடங்கள் தங்கியிருந்தாலும் தொழுகைகளை சுருக்கித் தொழுதுகொள்’ எனக் கூறினார்கள் (முஸன்னப் இப்னு அபீஷைபா).

4. அப்துர் ரஹ்மான் பின் ஸமுறா (றழி) அவர்களோடு சில தாபிஈன்கள் பாரசீக பிரதேசம் ஒன்றில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த போது அவ்வளவு காலமும் தொழுகைகளை சேர்க்காமல் அந்தந்த தொழுகை நேரம் வந்தவுடன் நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கி மாத்திரம் தொழுதுவந்தார்கள் (முஸன்னப் இப்னு அப்திர் ரஸ்ஸாக்).

இவை போன்ற ஸஹாபாக்களின் நடைமுறைகள் இன்னும் பல உள்ளன.

இவ்விடயம் தொடர்பில் இமாம் இப்னு தைமியா (றஹ்) அவர்களின் கருத்து நோக்கத்தக்கதாகும் :

“பயணத்துடன் தொடர்பான மார்க்க சட்டங்கள் அப்பயணம் முடிவடையாமல் நிறைவுபெறமாட்டாது. பயணம் என்பது ஒருவர் தனது வதிவிடத்தை பிரிந்திருப்பதாகும். ஒருவர் தனது வதிவிடத்தை பிரிந்து தன் ஊர் திரும்பும் வரை பிரயாணியாகவே கருதப்படுவார். தொழில் நிமித்தமோ, வேறு தேவைகளுக்காகவோ தன் வதிவிடத்தை பிரிந்து குறிப்பிட்ட சில காலங்களுக்கு வேறு ஓர் இடத்தில் தங்கியிருக்கும் வரை பிரயாணிக்கான சட்டங்கள் இருக்கவே செய்யும்”. (பார்க்க : ‘பதாவா இப்னு உதைமீன்’, 15/348, 354)

எனவே, தொழில், கல்வி மற்றும் வேறு தேவைகளுக்காக பிற பிரதேசங்களில், நாடுகளில் தங்கியிருப்போர் அங்கிருக்கும் காலம் முழுவதும் நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அனுமதி உண்டு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

 
பயணத் தொழுகையுடன் தொடர்பான சில அவசியமான குறிப்புகள்

1) பிரயாணத்தின் போது தொழுகைகளை சுருக்கி தொழுவதன் சட்டத்தை பொறுத்தவரை இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன: சில அறிஞர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமானது என்று குறிப்பிடுகின்றனர். ஹனபி, ழாஹிரி மத்ஹபினர் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். 

இவர்கள் இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் :

1. நபியவர்கள் தமது பிரயாணங்களின் போதெல்லாம் தொழுகைகளை சுருக்கியே தொழுதிருக்கிறார்கள். சுருக்காமல் முழுமையாக தொழுதமைக்கு ஆதாரங்கள் இல்லை.

2. இப்னு அப்பாஸ் (றழி) கூறுகிறார்கள்: ‘ அல்லாஹ் உங்களது நபியின் நாவின் மூலமாக ஊரிலிருப்போருக்கு நான்கு றக்அத்துகளாகவும் பயணிகளுக்கு இரண்டு றக்அத்துகளாகவும் தொழுகையை கடமையாக்கியுள்ளான்..'(முஸ்லிம்)

அதே வேளை, பெரும்பாலான அறிஞர்கள் பயணங்களில் சுருக்கித் தொழுவது கடமையல்ல, விரும்பத்தக்கது. முழுமையாக தொழுதாலும் நிறைவேறும் என்று குறிப்பிடுகின்றனர். மாலிகி, ஷாபிஈ, ஹம்பலி மத்ஹபினர் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான அறிஞர்களின் இக் கருத்தே வலுவானதாகும். இதற்கான ஆதாரங்களாக,

1. அல்லாஹ் கூறுகிறான்: ‘…தொழுகையை சுருக்கித் தொழுவது உங்கள் மீது குற்றமில்லை’ (4:101).

மேற்படி வசனத்தில் ‘சுருக்கித் தொழுவது குற்றமில்லை’ என்று கூறப்பட்டிருப்பது அது விரும்பத்தக்கது என்ற அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது. கடமை என்றிருந்தால் அல்லாஹ் அதை அதற்குரிய வார்த்தைப் பிரயோகத்துடன் பயன்படுத்தியிருப்பான்.

2. உஸ்மான் (றழி), இப்னு மஸ்ஊத் (றழி), ஆஇஷா (றழி) போன்ற ஸஹாபாக்கள் பயணங்களின் போது சுருக்காமல் முழுமையாக தொழுதிருக்கிறார்கள். ஏனைய ஸஹாபாக்கள் முழுமையாக தொழுவதை நிராகரிக்கவுமில்லை. சுருக்கித் தொழுவது கடமை என்றிருந்தால் அவர்கள் நிச்சயமாக சுருக்கியே தொழுதிருப்பார்கள்.

3. நபியவர்கள் சுருக்கித் தொழுவதை பற்றி குறிப்பிடும் போது ‘அது அல்லாஹ் வழங்கிய ஸதகா’ என்று கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்). இவ்வார்த்தை அது விரும்பத்தக்கது என்பதையே காட்டுகிறது.

எனவே, பயணிகள் நான்கு றக்அத் தொழுகைகளை முழுமையாக தொழுவது ஏற்றுக்கொள்ளப்படும் என்ற போதிலும் இரண்டாக சுருக்கித் தொழுவது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது என்பதால் பயணங்களின் போது சுருக்கித் தொழுது அல்லாஹ்வின் விருப்பத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

2)சுருக்கித் தொழுவதாயின் ஒருவர் தனது சொந்த வதிவிடத்தை தாண்ட வேண்டும். சொந்த ஊரில் சுருக்கித் தொழ முடியாது. 

நபியவர்கள் ஹஜ்ஜுக்காக மதீனாவில் இருந்து புறப்பட்டுச் செல்ல ஆயத்தமான போது மதீனாவில் ளுஹ்ர் தொழுகையை சுருக்காமல் நான்கு றக்அத்துகள் தொழுதுவிட்டு, பின்னர் மதீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்து துல்ஹுலைபா என்ற இடத்தை அடைந்த போது அஸ்ர் தொழுகையை இரண்டாக சுருக்கித் தொழுதார்கள் (புஹாரி).

சுருக்கிதொழுவதாயின் ஊரைத் தாண்ட வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகும்.

3)இரு தொழுகைகளை பயணத்தில் சேர்த்து சுருக்கித் தொழுத பின் இரண்டாவது தொழுகை நேரத்தில் ஊரை வந்தடைந்து விட்டால் பயணத்தில் சேர்த்து தொழுத தொழுகையை மீண்டும் தொழ வேண்டியதில்லை. ஏனெனில் அவர் தன் கடமையை நிறைவேற்றிவிட்டார். 

உதரணமாக ளுஹ்ரையும் அஸ்ரையும் அல்லது மஃரிபையும் இஷாவையும் பயணத்தில் சேர்த்து சுருக்கித் தொழுதுவிட்டு, பின்னர் அஸ்ர் வேளையில் அல்லது இஷா நேரத்தில் ஊரை வந்தடைந்துவிட்டால் மீண்டும் அஸ்ரை அல்லது இஷாவை ஊரில் தொழ வேண்டிய அவசியமில்லை. ஆயினும் ஊர் வந்த பின் அத் தொழுகையை ஜமாஅத்துடன் இணைந்து தொழுதால் அவருக்கு அது ஸுன்னத்தான தொழுகையாக நிறைவேறும்.

4)பயணத்தின் போது முன் பின் ஸுன்னத்தான தொழுகைகளில் ஸுப்ஹுடைய முந்திய ஸுன்னத் தொழுகையை தவிர ஏனைய முன் பின் ஸுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் தொழுபவர்களாக இருக்கவில்லை. ஸுப்ஹுடைய முந்திய ஸுன்னத்தை ஊரிலிருக்கும் போது மட்டுமன்றி, பயணத்திலும் தொழுதிருக்கிறார்கள். அவ்வாறே வித்ர், ளுஹா போன்ற ஏனைய ஸுன்னத்தான தொழுகைகளை பயணத்திலும் விடாது தொழுதிருக்கிறார்கள். 

5)இரு தொழுகைகளை சேர்த்து தொழும் போது முதலாவது தொழுகைக்கு முன்னர் அதானும் இகாமத்தும் கூறுவதும் முதலாவது தொழுகையை முடித்த பின் தஸ்பீஹ், திக்ர், துஆ எதுவும் ஓதாமலே எழுந்து இகாமத் மாத்திரம் கூறி இரண்டாவது தொழுகையை தொழுவதும் நபியவர்களின் நடைமுறையாகும்.

நபியவர்கள் அறபாவில் தங்கியிருந்த போது ஒரு அதான், இரு இகாமத்துகள் கூறி இரண்டிரண்டு தொழுகைகளாக சேர்த்து தொழுதார்கள். பின்னர் முஸ்தலிபா சென்று அங்கே ஒரு அதான், இரண்டு இகாமத்துகள் கூறி மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதார்கள். இரு தொழுகைகளுக்கிடையில் தஸ்பீஹ், திக்ர் எதுவும் ஓதவில்லை (புஹாரி, நஸாஈ).

6)ஒருவர் தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தை விட்டு திருமணத்தின் காரணமாவோ, தொழில் நிமித்தமோ வேறு ஒரு பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறிவிட்டால் குடியேறிய பிரதேசமே அவரது சொந்த ஊராகக் கருதப்படும். தனது தேவைகளுக்காக தான் பிறந்த ஊருக்கு வருகின்ற போது அவர் அங்கு பிரயாணியாக கருதப்படுவார். எனவே அங்கு தொழுகைகளை சேர்த்து சுருக்கித் தொழ முடியும்.

நபியவர்கள் பிறந்து வளர்ந்த பிரதேசம் மக்காவாக இருந்த போதிலும் பின்னர் மதீனாவை வாழ்விடமாக மாற்றிய பின் மக்கா வெற்றிக்காகவும் ஹஜ்ஜுக்காகவும் மக்காவுக்கு வந்த போது நபியவர்கள் மக்காவில் தொழுகைகளை சேர்த்து சுருக்கியே தொழுதார்கள் (புஹாரி, முஸ்லிம்).

7)சுருக்கித் தொழுகின்ற ஒரு பிரயாணியை ஊர்வாசி ஒருவர் பின்பற்றித் தொழுதால், பிரயாணி ஸலாம் கொடுத்தவுடன் ஊர்வாசி எழுந்து மீதமுள்ளதை தொழவேண்டும்.

இதற்கான ஆதாரம்:

ஹஜ்ஜுக்காக மக்கா வந்த நபியவர்கள் அங்கே சுருக்கித் தொழுத வேளை அவர்களை பின்பற்றி மக்காவாசிகளும் தொழுதார்கள். ஸலாம் கொடுத்தவுடன் எழுந்து மீதமுள்ள தொழுகையை முழுமையாக தொழுமாறு நபியவர்கள் மக்காவாசிகளை பணித்தார்கள்.

அதே நேரம் ஒரு பிரயாணி ஊர்வாசியான இமாமை பின்பற்றினால், – ஆரம்பத்திலிருந்து பின்பற்றினாலும் இடை நடுவிலே பின்பற்றினாலும் – ஊர்வாசி போன்று முழுமையாக நான்கு றக்அத்துகள் தொழுவார். ஏனெனில் இமாமை பின்தொடர்வது மஃமூமின் மீதுள்ள பொறுப்பாகும். இதுவே மிகப் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

ஒரு தடவை இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் ஒருவர் ‘சுருக்கித் தொழுகின்ற நிலையில் இருக்கும் ஒரு பயணி ஊர்வாசியான இமாமை பின்பற்றி முழுமையாக தொழுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்? ‘ என்று வினவிய போது ‘அவ்வாறு செய்வதுதான் – அதாவது பிரயாணி ஊர்வாசியான இமாமை பின்பற்றித் தொழும் போது சுருக்காமல் முழுமையாக தொழுவது – நபியவர்களின் நடைமுறை’ என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மத்).

இப்னு உமர் (றழி) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது தனியே தொழ நேர்ந்தால் சுருக்கி இரண்டு றக்அத்துகள் தொழுவார்கள், இமாமை பின்தொடர்ந்தால் அவரைப் பின்பற்றி நான்கு றக்அத்துகள் தொழுவார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).

8)ஒரு தற்காலிக பிரயாணி அல்லது வேறு பிரதேசத்தில் நீண்ட காலமாக வசிப்போர் அப்பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுக்கு சென்று ஜமாஅத்துடன் இணைந்து முழுமையாக தொழுவதற்கான வசதியையும் அவகாசத்தையும் பெற்றிருந்தால், அவ்வாறு ஜமாஅத்துடன் இணைந்து தொழுவதால் அவர்களுக்கு பயண தடங்கல்கள் அல்லது வேறு நெருக்கடிகள் ஏற்படாது என்றிருந்தால் சுருக்கித் தொழாமல் ஜமாஅத்துடன் இணைந்து முழுமையாக தொழுவது சிறந்ததாகும்.

 
அல்லாஹு அஃலம்.

 

இத்துடன் இத் தொடர் நிறைவுபெறுகிறது. வல்ல அல்லாஹ் இப்பணியை அவனது தனிப் பெரும் கருணையினால் ஏற்று அங்கீகரிப்பானாக. இத்தொடரை எழுதி முடிப்பதற்கும் முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் நான் பயன்படுத்திய அத்தனை நூல்களின் ஆசிரியர்கள், அறிஞர்களுக்கும் அல்லாஹ் தன் எல்லையற்ற அருளை சொரிவானாக.

 

துணை நின்ற நூல்கள் :

—————————————–

1. அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப், இமாம் நவவி (றஹ்)

2. மஜ்மூஉ பதாவா, இமாம் இப்னு தைமியா (றஹ்)

3. ஸாதுல் மஆத் பீ ஹத்யி கைரில் இபாத், இமாம் இப்னுல் கய்யிம் (றஹ்)

4. மஜ்மூஉ பதாவா, அல்லாமா இப்னு பாஸ் (றஹ்)

5. மஜ்மூஉ பதாவா, அல்லாமா இப்னு உதைமீன் (றஹ்)

6. தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வ ஸஹீஹிஸ் ஸுன்னா, அஷ்ஷெய்க் ஆதில் பின் யூஸுப்

7. ஸஹீஹு பிக்ஹிஸ் ஸுன்னா வ அதில்லதுஹூ, அஷ்ஷெய்க் அபூமாலிக் கமால்



أحدث أقدم