அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ….
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அறிவியலின் மிகப் பெரிய முன்னேற்றத்தினால் நமது வாழ்க்கையை எளிதாக்கும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய சாதனங்களில் குறிப்பிடத்தக்கவை தொலை தொடர்பு சாதனங்களாகும். அதிலும் குறிப்பாக நம் வொவ்வொருவர் கைகளிலும் தவழும் செல்போன்.
பொதுவாக நமது வாழ்க்கைக்கு பயனளிக்கும் எல்லா சாதனங்களும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். அவற்றை அனுபவிப்பதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அத்துடன் அவற்றை அவன் வகுத்த வரைமுறையுடன் பயன்படுத்த வேண்டும்.
செல்போனை பயன்படுத்துவதனால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுடன் அதை பயன்படுத்த வேண்டிய முறைப்படி பயன்படுத்த வேண்டும். பரவலாக பெரும்பாலானவர்கள் அதை பயன்படுத்தும் முறையை பேணுவதில்லை. இக்கட்டுரையில் மார்க்க அடிப்படையில் அதை சரியான முறையில் பயன்படுத்துவது எவ்வாறு என பார்ப்போம்.
அழைப்பு எத்தனை தடவை:
ஒருவரிடம் ஒரு செய்தி பேசுவதற்காக நாம் செல்போனில் அழைக்கும் போது அவர் அந்த அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என்றால் சின்ன இடைவெளி விட்டு இரண்டாவது, மூன்றாவது தடவை அழைக்கலாம். மூன்றாவது அழைப்புக்கும் அவர் பதிலளிக்காவிட்டால் தொடர்ந்து அழைக்க கூடாது. ஏனென்றால் அவர் உறங்கிக் கொண்டோ அல்லது வேறு அவசிய வேளையில் ஈடுபட்டுக்கொண்டோ இருக்கலாம்.
ஒருவரை சந்திப்பதற்காக அவருடைய வீட்டு வாசலில் நின்று மூன்று தடவை ஸலாம் சொன்ன பிறகும் உள்ளே இருந்து பதில் வராவிட்டால் திரும்பிச் சென்று விட வேண்டும் என்பதுதான் நமக்கு நபியவர்கள் கற்றுத்தந்த வழிமுறை. (புகாரி 6245) அது இதற்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் பல தடவை அழைத்தும் ஒருவர் பதிலளிக்காமல் இருப்பதற்கும் திரும்ப அழைக்காமல் இருப்பதற்கும் பல நியாயமான காரணங்கள் அவரிடம் இருக்கலாம். ஆகையினால் அவர் மேல் கோபப்படாமல் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
நேரம்,காலம்:
ஒருவரை நாம் செல்போனில் அழைக்கும் அந்த நேரத்தில் அவர் நிச்சயம் தூங்கியிருப்பார் அல்லது முக்கியமான ஒரு வேளையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருந்தால் – நாம் பேசப்போகும் விஷயத்தை தாமதமாகக் கூட சொல்லிக்கொள்ள முடியும் எனும் பட்சத்தில் – பின்னர் ஒரு நேரத்தில் அழைத்துப் பேசுவதுதான் முறை. ஒருவருக்கு சிரமத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதை இயன்ற அளவு தவிர்க்க வேண்டும்.
ஸலாம் சொல்க:
ஒருவரை செல்போனில் அழைத்து பேச ஆரம்பிக்கும்போது முதலில் ஸலாம் சொல்ல வேண்டும். இதுவும் சந்திப்புக்கு நிகரானதுதான். வீடியோ கால் முறையில் பேசும்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது. ஆகவே பேச ஆரம்பிக்கும்போதும் முடிக்கும் போதும் ஸலாம் சொல்ல வேண்டும்.
பேச்சின் அளவு:
நம்முடைய அழைப்புக்கள் வரையறுக்கப்படாததாக (அன்லிமிடெட் காலாக ) இருந்தாலும் செல்போனில் நமது பேச்சுக்களை தேவையான அளவுக்குள் வரையறுத்து நிறுத்திக்கொள்ள வேண்டும். நேரில் பார்த்து பேசும்போது எதிராளியின் சூழ்நிலை நமக்கு தெரியும். ஆனால் செல்போனில் பேசும்போது அது தெரிவதில்லை. “பேசினால் நல்லதை பேசட்டும். இல்லாவிட்டால் வாய் மூடியிருக்கட்டும்” என்பது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையாளருக்கு சொன்ன உபதேசம்.நல்லதையும் கூட சூழ்நிலை அறிந்துதான் பேச வேண்டும்.
இதே போல் செல்போனை பயன்படுத்துவதில் நாம் தவிர்க்க வேண்டிய சில விசயங்களும் உள்ளன.
நம்மை பிறர் அழைக்கும் போது நாம் கேட்கும் செல்போனின் ஓசையும்(ரிங் டோன் ) பிறர் நம்மை அழைக்கும்போது அவர்கள் கேட்பதற்காக நாம் வைத்துள்ள ஓசையும்(காலர் டோன் ) இசையாகவோ இசை கலந்த பாடலாகவோ இருக்கக்கூடாது. ஏனெனில் மார்க்கத்தில் இசை வெறுக்கப்பட்டுள்ளது (புகாரி 5590) இந்த விசயத்தில் பலரும் அலட்சியமாக இருப்பதை காண முடிகிறது.
சிலரிடம் உள்ள இன்னொரு தவறு, முக்கியமான விசயங்கள் பேசுவதற்காக கூட்டப்பட்டிருக்கும் சபைகளில் இருந்துகொண்டு செல்போன் பேசிக்கொண்டும், அதில் வரும் செய்திகளை படித்துக் கொண்டுமிருப்பது. அந்த சபை கல்வி கற்கும் சபையாகவோ பிரசங்கம் நடக்கும் சபையாகவோ முக்கிய பிரச்னையில் ஆலோசனை செய்யும் சபையாகவோ இருந்தால் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அந்த சபைக்கான மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது.
செல்போன் பயன்படுத்துவதில் நடக்கும் தவறுகளில் இன்னொன்று, சிலர் மறுமுனையில் பேசுபவரின் பேச்சை அவர் அறியாமல் பதிவு செய்வது. அவ்வாறு பதிவு செய்ததை வைத்து பின்னர் பிரச்னைகளை உருவாக்குவது. மறுமுனையில் பேசியவர் இவ்வாறு பதிவுசெய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பேசியிருப்பார். அவ்வாறு நம்பியவருக்கு இடையூறு செய்யும் விதத்தில் பதிவு செய்தது நம்பிக்கை துரோகம் செய்த குற்றமாகும்.
எதிர் முனையில் பேசிக்கொண்டிருப்பவர் விரும்பமாட்டார் எனும் நிலையில் அவர் பேசுவதை மற்றவர்கள் கேட்கும் விதத்தில் செல்போனில் சப்தத்தை உயர்த்தி (லோட் ஸ்பீக்கரில்) வைப்பதும் இது போன்ற தவறுதான்.
இன்னொரு பெரிய தவறு, செல்போன் மூலம் தவறான, ஆபாசமான விசயங்களை அந்நிய ஆண்கள் பெண்கள் பேசிக்கொள்வது. ஆபாசம் வெறும் பேச்சில் மட்டும்தான் என்றாலும் அதுவும் பாவம்தான் (புகாரி 6243) இப்படிப்பட்ட பேச்சுத் தொடர்புதான் இறுதியில் விபச்சாரம் என்ற பெரும் பாவத்தில் தள்ளுகிறது. இதை சாதாரணமாக நினைத்து ஈடுபட்ட பல இளம்பெண்கள்தான் பொள்ளாச்சியில் கயவர்களிடம் சிக்கி விபச்சாரிகளாக ஆக்கப்பட்டார்கள்.
ஒரு அன்னிய ஆணும் பெண்ணும் அவசிய தேவைக்காக மட்டுமே பேச வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக பெசிவைக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அவளுடனும் அவசியமில்லாத கூடுதல் பேச்சுக்கள் பேசக்கூடாது. திருமணம் நடைபெறாத வரை இருவரும் அன்னியர்தான். இருவருக்கும் திருமணம் நடக்காமலும் போகலாம்.
இப்போது முன்னேற்றம் அடைந்துள்ள செல்போன்களில் நெட் வசதியை பயன்படுத்தி சினிமா உள்ளிட்ட பொழுது போக்கு விசயங்களை பார்க்க முடியும். ஆபாசங்களையும் பார்க்க முடியும். ஆபாசம் இல்லாவிட்டாலும் இவ்வுலக வாழ்வுக்கும் மறுவுலக வாழ்வுக்கும் பலனளிக்காத விசயங்களை விட்டு மனிதன் விலகியே இருக்க வேண்டும். அதிலும் இறைநம்பிக்கையாளன் என்றால் இவற்றை விட்டு தூரமாகவே இருக்க வேண்டும். மனிதக் கண்களுக்கு மறைவாக இருக்கும் போதும் இறைவனை அஞ்சுபவர்களுக்கே மன்னிப்பும், மதிப்பான கூலியும் கிடைக்கும் என்று அல்லாஹ் திருகுர்ஆனில் கூறியுள்ளான்.(67:12)
இதன் தீமை குறித்து இளவயதுக்காரர்களை எச்சரிக்க வேண்டும். அவர்கள்த்தான் இந்த விசயங்களில் அதிகமாக வீழ்கிறார்கள். அல்லாஹ்வைக் குறித்தும் மறுமையைக் குறித்தும் நினைவூட்டி இவற்றிலிருந்து அவர்களை தடுக்க வேண்டும்.
செல்போனில் உள்ள விளையாட்டுக்களும் சில பெரியவர்களையும் பல சிறியவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளன. பொன்னான நேரத்தை வீணடிக்க காரணமாக உள்ளன. உடலுக்கும் குறிப்பாக கண்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. இவற்றிலிருந்தும் எல்லோரும் தூரமாக இருக்க வேண்டும்.
செல்போன் பயன்பாட்டினால் நமக்கு கிடைத்திருக்கும் பெரும் பலன், வாட்ஸ் அப் மூலம் பலவித செய்திகளையும் காணொளி உள்ளிட்டவற்றையும் மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதாகும். பெரும் பலன் இருப்பது போலவே பெரும் இடையூறுகளும் உள்ளன. இதில் வருபவற்றை படிப்பது, பார்ப்பது,கேட்பது ஆகிய செயல்களில் மூழ்கி விடுவதால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைப்பது, தனக்கும் பிறருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்வது ஆகிய பாதகங்கள் இதன் மூலம் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதில் எல்லோருக்கும் சுய கட்டுப்பாடு அவசியம். மிக குறுகிய நேரமே அதற்கு ஒதுக்க வேண்டும். நமக்கு படிக்க நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு செய்திகள் வருகிறதென்றால் பல குழுக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவையற்ற, தவறான தகவல்களை அனுப்புபவர்களை தடை (Block) செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப்பில் செய்திகளை பரிமாறுவதில் சரியான வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மோசமான தகவல் என்றால் அதற்கு நிவாரணம் காண்பவர்களுக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும். எல்லோருக்கும் அனுப்புவதால் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். அதே போல் சிலருக்கு பயன்தரும் ஒரு தகவல் வேறு பலருக்கு பயன் தராது. இது போன்ற தகவல் யாருக்கு பயனாக அமையுமோ அவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
பொதுவாக நம் வாழ்வு முழுமைக்கும் வழிகாட்டுதலாக நபி (ஸல்) நமக்கு கூறியுள்ள ஒரு பொன்மொழி: ஒரு மனிதர் தனக்கு அவசியமில்லாததை விட்டுவிடுவது, அழகிய முறையில் அவர் இஸ்லாத்தை பின்பற்றுவதில் அடக்கமாகும்.(திர்மிதி)
இந்த நபிமொழி, செல்போனில் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் முக்கிய வழிகாட்டுதலாக உள்ளது.
செல்போன் பயன்பாட்டில் இன்னொரு பெருந்தவறு சிறுபிள்ளைகளை அமைதியாக இருக்க வைப்பதற்காக அவர்களுக்கு செல்போனை கொடுத்து பழக்குவது. அவர்களின் சிறு இடையூறுகளிலிருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் காரியம் இது. சிறுபிள்ளைகள் செல்போனை அருகில் வைத்துப் பார்ப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மட்டுமின்றி அவர்களின் அறிவு வளர்ச்சியில் மந்த நிலை ஏற்படுவதற்கும் குணங்கள் சீர்கெட்டுப் போவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதனால் சிறுபிள்ளைகளிடம் செல்போன் கொடுத்து அமைதிப் படுத்துகிற பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
இறுதியாக வல்ல அல்லாஹ்வின் வேத வசனத்தை நினைவூட்டி முடிக்கிறேன். அது:
“இறைநம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.மேலும் ஒவ்வொருவரும் (மறுமை எனும்) நாளைய தினத்திற்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 59:18)”
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil