குர்’ஆன் பல விசேஷமான சிறப்புகளைக் கொண்ட மக்கள் குழுக்களைப் பற்றி குறிப்பிடுகிறது. நீங்கள் ஒரு பிரத்தியேகமான குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் அல்லாஹ்(சுபஹ்)வுடைய சிறப்பான கருணையினால் அருளும் ஒரு சிறப்புப் பரிசுக்குத் தகுதியானவர். அந்தச் சிறப்புப் பிரிவுகளில் ஒரு குழு, குர்’ஆன் ‘உலுல் அல்பாப்’ என அழைக்கும், ‘அறிவுடைய மக்கள்’.
‘உலுல் அல்பாப்’ என்றால் யார்?
நம் ஒவ்வொருவருக்கும் பகுத்தறியும் ஆற்றலை அல்லாஹ் அருளியிருக்கிறான். அதை நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி பயன்படுத்துவோம். ‘உலுல் அல்பாப்’ என்பவர்கள் பகுத்தறிவை மட்டும் பெற்றவர்கள் அல்ல, அதை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என அறிந்தவர்கள். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், வானத்தைப் பார்க்க வேண்டியது மட்டுமே – அவர்களால் அதன் விசாலத்தைப் படிக்க முடியும், அதன் எல்லையில்லா அழகைக் காண முடியும், கருணை மிக்க, மிகச் சிறந்த படைப்பாளனான, அழகானவனும், அழகை விரும்புபவனும், நுட்பமானவனுமான ஏக இறைவனின் இருப்பை உணர முடியும்.
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.. [அல் குர்’ஆன் 3:190]
உலுல் அல்பாபின் தன்மைகள்:
அல்லாஹ்வுடைய ஆயத்துக்கள் அவை இயற்கையில் (வானம், மரங்கள், மலைகள், மலர்கள்) உள்ளவைகளாக இருந்தாலும், இறைவன் அருளியவைகளாக (தௌராத், இஞ்சீல், குர்’ஆன்) இருந்தாலும், அவர்களுடைய இதயங்களுக்குள் அவை மிக எளிதாக புகுந்து விடுகின்றன:
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.[அல் குர்’ஆன் 38:29]
அதனால், அவர்கள் இயல்பிலேயே இயற்கை அழகையும், வேத வெளிப்பாடையும் விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எந்நேரமும் இறைவனைப் பற்றி நினைவுகூர்பவர்களாக இருப்பார்கள், தங்களுடைய வாழ்வில் இடைவிடாத அவனுடைய இருப்பைப் பற்றி உணர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
. . . அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. . [அல் குர்’ஆன் 3:191]
அவர்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள். குர்’ஆன் குறிப்பாக கீழேயுள்ள து’ஆக்களைக் குறிப்பிடுகிறது:
““எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)“எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்றும்;)“எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.” [அல் குர்’ஆன் 3:191-194]
““எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” [அல் குர்’ஆன் 3:8-9]
அவர்கள் அறிவுடையோர்.
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.. [அல் குர்’ஆன் 2:269]
அவர்கள் அல்லாஹ்வுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவார்கள்.
அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது. [அல் குர்’ஆன் 13:20-22]
நரக நெருப்பைப் பற்றி அவர்கள் மிக அதிகமாக அஞ்சுவார்கள்.
சிரம காலங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி பொறுமை காப்பார்கள்.
தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; . . . [அல் குர்’ஆன் 13:22]
அவர்கள் பழிக்குப்பழி வாங்கும் தன்மையை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக மன்னித்து, நன்மையைக் கொண்டே தீமையைத் தடுப்பார்கள்.
.
. . நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.. . .[ அல் குர்’ஆன் 13:22]
உலுல் அல்பாபுடைய வெகுமதி:
இம்மக்களுக்குக் கிடைக்கும் சிறப்பு வெகுமதி சுவனத்தை விட வேறோன்றுமில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தின் நல்லோர்களான, பெற்றோர், துணைவர்கள், குழந்தைகளுடன் நிரந்தரமாக வாழ்வார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய நிரந்தர வீட்டினுள் நுழையும்போது, வாயிற்காப்பாளர்களான மலக்குகள் கூறுவார்கள்:
“நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” [அல் குர்’ஆன் 13: 24]