சொல்லை விட செயலைக் கொண்டு உபதேசம் செய்யுங்கள்!

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்..

இமாம் ஹஸன் கூறுகிறார்கள்: நீ உனது செயலால் மக்களுக்கு உபதேசம் செய்! உனது சொல்லால் அவர்களுக்கு உபதேசம் செய்யாதே!

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று, எண் : 1559

1559 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا هَارُونُ، حَدَّثَنَا ضَمْرَةُ، عَنِ ابْنِ أَبِي حَمَّادِ بْنِ كَيْسَانَ، عَنِ الْحَسَنِ قَالَ: «عِظِ النَّاسَ بِفِعْلِكَ وَلَا تَعِظْهُمْ بِقَوْلِكَயு


கருத்து:

சொல்லால் உபதேசிப்பதை விட செயலால் உபதேசிப்பது மிக அதிகம் பலன் தரக்கூடியதாகும். அதாவது, நாம் நல்லதை எடுத்து நடக்க வேண்டும். பிறகு,  அதை பிறருக்கு நாம் உபதேசம் செய்ய வேண்டும். நாம் பிறருக்கு உபதேசம் செய்வதற்கு முன்னர் நாம் அந்த நல்லதை நமக்குள் கொண்டு வர வேண்டும். பிறகு, அதை பிறருக்கு நாம் உபதேசிக்க வேண்டும். அது நல்ல மாற்றத்தை விரைவாக உண்டாக்கும்.

விளக்கம்:

அல்லாஹ் இமாம் ஹஸனுக்கு அருள் புரிவானாக! நமது சான்றோர் காட்டிய நல்வழியில் நம்மை வழி நடத்துவானாக! ஆமீன்.

உபதேசம் மக்களுக்கு தேவை. அறிவுரைகள் மக்களுக்கு சென்று சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் காலை, மாலை, இரவு, பகல், தொழில், வியாபாரம், வழிபாடு, குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிலும் அவர்களுக்கு அறிவுரையும் நல்லுபதேசமும் அழகிய வழிகாட்டலும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆம், அந்த உபதேசமும் அறிவுரையும் ஆழமாகவும், அழுத்தமாகவும், நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய நல்ல அறிவுரைகளை வழங்க தகுதியானவர்கள், சிறந்த உபதேசத்தை கொடுக்க அருகதை உள்ளவர்கள் யாரென்றால் அந்த அறிவுரைகளையும் உபதேசங்களையும் தங்கள் வாழ்வில் எடுத்து நடப்பவர்கள்தான். 

இமாம் அவர்கள் இங்கு, அறிவுரை வழங்கக்கூடியவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்; உபதேசம் செய்யக் கூடியவர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

ஆம், மக்களுக்கு பிரசங்கம் நிகழ்த்தக் கூடிய, அறிவுரை சொல்லக் கூடிய, உபதேசம் செய்யக் கூடிய எல்லோரும் சிந்தித்து புரிய வேண்டிய ஓர் ஞானமாகும் இது.

இஸ்ரவேலர்களுடைய அறிஞர்கள் செய்த பெரும் தவறுகளில் இதுவும் ஒன்றாகும். அவர்கள் மக்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால், அவர்கள் அதை பின்பற்றி நடக்க மாட்டார்கள். இதை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் இப்படி கண்டிக்கிறான்:

﴿أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ﴾

பொருள்: நீங்களோ வேதத்தை ஓதுபவர்களாக இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
 (அல்குர்ஆன் 2 : 44)

இது குறித்து மிக மிக எச்சரிக்கை ஒன்று நபிமொழியில் வந்திருப்பதை பார்க்கிறோம்.

مررْتُ ليلةَ أُسرِيَ بي بأقوامٍ تُقرضُ شِفَاهُهُمْ بِمَقَارِيضَ من نارٍ ، قُلْتُ : من هؤلاءِ يا جبريلُ ؟ قال : خُطَباءُ أمتِكَ الذينَ يقولونَ ما لا يفعلونَ ويقرؤونَ كتابَ اللهِ ولا يعملونَ بِه

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الترغيب | الصفحة أو الرقم : 125 | خلاصة حكم المحدث : صحيح | التخريج : أخرجه أحمد (13421)، والبزار (7231)، وأبو يعلى (3992) باختلاف يسير.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என்னை வானுலகம் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் சில மக்களை கடந்து சென்றேன். அவர்களின் உதடுகள் நெருப்பினால் ஆன கத்திரிகளால் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஜிப்ரீலே இவர்கள் யார் என்று நான் கேட்டேன். அவர் கூறினார்: இவர்கள் உமது உம்மத்தின் பிரசங்கிகள் - பேச்சாளார்கள். இவர்கள் தாங்கள் செய்யாததை (மக்களுக்கு) சொல்வார்கள். இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை படிப்பார்கள். அதன்படி அமல் செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுத் தர்கீப், எண்: 125.

يُجَاءُ بالرَّجُلِ يَومَ القِيَامَةِ فيُلْقَى في النَّارِ، فَتَنْدَلِقُ أقْتَابُهُ في النَّارِ، فَيَدُورُ كما يَدُورُ الحِمَارُ برَحَاهُ، فَيَجْتَمِعُ أهْلُ النَّارِ عليه فيَقولونَ: أيْ فُلَانُ، ما شَأْنُكَ؟ أليسَ كُنْتَ تَأْمُرُنَا بالمَعروفِ وتَنْهَانَا عَنِ المُنْكَرِ؟! قالَ: كُنْتُ آمُرُكُمْ بالمَعروفِ ولَا آتِيهِ، وأَنْهَاكُمْ عَنِ المُنْكَرِ وآتِيهِ.

الراوي : أسامة بن زيد | المحدث : البخاري | المصدر : صحيح البخاري

الصفحة أو الرقم: 3267 | خلاصة حكم المحدث : [صحيح]

التخريج : أخرجه البخاري (3267)، ومسلم (2989)

வீட்டில் பெற்றோர், பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பெரியவர்கள், சிறியவர்களுக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும். அறிஞர்களும் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இப்படி நம்மில் ஒவ்வொருவரும் நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு அழகிய முன்மாதிரியாக திகழ வேண்டும். அப்போதுதான் நாம் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்கிறபோது அந்த உபதேசம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். அவர்கள் ஆர்வத்தோடு நமது வழிகாட்டலை ஏற்று நடப்பார்கள்.

அல்லாஹ்வே! எங்கள் ஆன்மாவை அதன் அகத்தையும் புறத்தையும் பரிசுத்தப்படுத்துவாயாக! எங்கள் ஆன்மாக்களை தூய்மைப்படுத்துவாயாக! செயல்படாமல் சொல்வதிலிருந்தும், எடுத்து நடக்காமல் ஏவுவதிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக! ஆமீன்.

أحدث أقدم