இவ்வும்மத்தின் அல்குர்ஆன் விரிவுரையாளர்களது முன்னோடியாகவும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்ந்தவர் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சிறிய தந்தையின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள்.
அவர்கள் தனது கல்வித் தேடல் முறையை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர்களில் யாரிடமாவது ஒரு ஹதீஸ் இருப்பதாக எனக்குத் தெரிந்தால், நான் அத்தோழரின் (ஸஹாபியின்) வீட்டு வாயலுக்கு கைலூலா தூங்கும் நேரத்தில் (ளுஹ்ருக்கு சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலயத்திற்கு முன்னர்) சென்று எனது மேலாடையை அவரது வாசல் படியில் தலையணையாக அமைத்து சற்று அயர்வேன், அந்நேரத்தில் புழுதிபடிந்த மண் காற்று என் மீது விழும், இருந்தும் நான் அத்தோழரின் வீட்டைத் தட்டி அனுமதி கேட்டிருந்தால் அனுமதி கிடைத்திருக்கும், ஆனால் குறித்த ஸஹாபியின் மனதில் இடம்பிடிப்பதற்காகவே நான் இவ்வாறு படியில் காத்திருப்பேன்.
அவர் வீட்டிலிருந்து வெளியே வரும் தருணத்தில் இந்நிலையில் என்னைக் காண்பார், அப்போது இறைத்தூதரின் சிறிய தந்தையின் மகனே! எதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்?! என்னிடம் யாராவது ஒருவரை அழைத்து வரும்படி அனுப்பியிருந்தால் நான் உங்களிடம் வந்திருப்பேனே என்று கூறுவார். அவ்வேளையில் நான் "நான் தான் உங்களிடம் வருவற்கு மிகவும் தகுதியானவன் ஏனெனில் கல்வி/அறிவு தானாக வரமாட்டாது என்று கூறிவிட்டு அவரிடம் தேடி வந்த ஹதீஸை கேட்டுக் கற்றுக்கொள்வேன்"
நூல்: ஸுவருன் மின் ஹயாதிஸ் ஸஹாபா, பக்கம் 182-183