பிறையை தீர்மானிப்பதில் Astronomical Calculation இன் வகிபாகம்

வானவியல் கணக்கீடு முறையை பயன்படுத்தி சந்திர மாதத்தை ஆரம்பம் செய்வதில் அறிஞர்கள் மத்தியில் விரிவான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. 

அவற்றை ஒட்டுமொத்தமாக மூன்று கருத்துக்களாக பிரிக்கலாம். 

முதலாவது கருத்து : 
வெற்றுக் கண்ணால் பிறையைப் பார்த்து மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும். 

இதில் வானவியல் கணக்கீடு முறையைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் பிறை தென்பட வாய்ப்புள்ளது என்று உறுதி செய்வதும் பிறை பார்த்ததாக வரும் சாட்சியத்தை, பார்ப்பதற்கு சாத்தியமில்லாத நேரத்தில் (சூரியன் மறைய முன் சந்திரன் மறைவு நிகழ்வது போல) பார்த்ததாகக் கூறி மறுப்பதும் முடியாது. 

(இக்கருத்தினை முந்தைய அறிஞர்கள் முதல் தற்காலம் வரை பல அறிஞர்கள் ஆதரிக்கின்றனர்.) 

இரண்டாவது கருத்து : 
மாதத்தை ஆரம்பம் செய்வதில் முழுமையாக வானவியல் கணக்கீடு முறையை பயன்படுத்தி குறித்த பகுதியில் பிறை இருப்பதை உறுதி செய்வதும் பிறை பார்த்ததாக வரும் சாட்சியத்தை வானவியல் கணக்கீட்டின்படி பார்ப்பதற்கு சாத்தியமில்லாத நேரத்தில் மறுப்பதுமாகும். 

இக்கருத்தினை ஆதரிக்கும் அறிஞர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். 
உதாரணமாக ஹதீஸ் கலை அறிஞர் அஷ்ஷெய்க் அஹ்மத் ஷாகிர் (ரஹ்), ஷெய்க் முஸ்தபா ஸzர்கா போன்றவர்கள். 

அதாவது இவர்கள் கூற வருவது யாதெனில்; அக்காலத்தில் காணப்பட்ட கணக்கீடு வான சாஸ்திரம், நட்சத்திரக் கணிப்பு போன்ற நம்பகத் தன்மையில் சந்தேகம் ஏற்படும், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்த முறைகளாகும். 
ஆனால் வானவியல் கணக்கீடு என்பது தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் துல்லியமாக கணக்கிடும் கருவிகள் என்று பல தொழில் நுட்பங்கள் மூலம் கையாளப்படுகிறது. 
ஆகவே வான சாஸ்திரம், நட்சத்திரக் கணிப்பு வேறு வானவியல் கணக்கீடு முறை என்பது வேறு என்று கருதுகின்றனர். மேலும் இது தொடர்பாக ஷெய்க் அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் அவாஇலுஷ் ஷுஹூர் அல்அரபிய்யா என்று சிறு ஆய்வொன்றை எழுதியுள்ளார்கள். 

மூன்றாவது கருத்து : 
கொஞ்சம் விரிவான கருத்தாகும். 
அதாவது மாதத்தை ஆரம்பம் செய்வதில் பிறையை தீர்மானிக்க வெற்றுக் கண்ணால் பார்க்க வேண்டும். இதில் வானவியல் கணக்கீடு முறையை பயன்படுத்த அனுமதி இல்லை. 
ஆனால் வானவியல் கணக்கீடு முறையை பயன்படுத்தி பிறை பார்ப்பதற்கு சாத்தியமில்லாத நேரத்தில் (சூரியன் மறைய முன் சந்திரன் மறைவு நிகழ்வது போல) பார்த்ததாக வரும் சாட்சியத்தை மறுப்பது அனுமதிக்கப்பட்டது. 

இக்கருத்தினை ஆதரிக்கும் அறிஞர்கள் இமாம்கள் சுப்கி (ரஹ்) மற்றும் சமகால அறிஞர் ஷெய்க் இப்னு உதைமீன் (ரஹ்) போன்றவர்கள் காணப்படுகின்றனர்.

இதே நிலைப்பாட்டை பல பெரும்பாலான நாடுகள் நடைமுறைப் படுத்துகின்றன. அதில் நம் இலங்கையும் உள்ளடங்கும்‌.

தொகுப்பு : Ahsan Muhajiri
أحدث أقدم