மகத்துவமிக்க "அர்ஷ்" "குர்ஸி"யின் இரட்சகன்.

அகிலங்களின் அதிபதியாகிய நமது இரட்சகனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை  கொள்வதில் மகத்துவமிக்க அவனது அர்ஷ் (அரியாசனம்), "குர்ஸி" ஆகியவையும் பிரதான இடத்தை வகிக்கின்றன. 

அல்குர்ஆனிலும்  ஹதீஸ்களிலும் "அர்ஷ்" என்ற சொற்பிரயோகம் பல இடங்களில் இடம் பெறுகின்ற அதே வேளை; அல்லாஹ்வின் மாட்சிமை, அவனது கீர்த்தியை விளக்கும் வகையில் குறித்த இடங்களில் அந்தச் சொல் இடம் பெற்றுள்ளதை நம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அவனது "குர்ஸி" பற்றி விளங்க ஆயத்துல் குர்ஸியை  தப்ஸீர் இப்னு கஸீர் வாயிலாக வாசித்து 
விளங்கினால் போதுமானது.

அல்குர்ஆனில் அர்ஷ் என்ற சொல் 26 இடங்களில் இடம் பெற்றிருப்பதில் ஐந்து இடங்களில்  மனிதர்களின் அரியாசனம் பற்றிப் பேசி இருக்கின்றது.

அது பெயரில் ஒன்றாக இருந்தாலும் அமைப்பில் வானம் பூமி வேறுபாட்டை கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்குர்ஆனில்
وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
மகத்தான அர்ஷின் இரட்சகன்,
الْعَرْشِ الْكَرِيمِ
சங்கைமிக்க அர்ஷின் இரட்சகன்,
يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ
அர்ஷை சுமப்போரும் அதற்கு சூழ இருப்போரும் தமது இரட்சகனின் துதியைக் கொண்டு (அவனைத்) துதிக்கின்றனர் போன்ற பல அடைமொழிச் சொற்களோடு இடம்  பெற்றிருப்பதைக் காணலாம் .

அவ்வாறே துன்பம், கஷ்டம் நீங்க கூறப்படும்  دعاء الكرب "துஆவுல் கர்ப்" என்ற  பிரார்த்தனையிலும் சரி வேறு பிரார்த்தனைகளின் போதும் சரி "அர்ஷ்" என்ற சொற்பிரயோகம் அல்லாஹ்வின் வல்லமை கண்ணியத்தோடு இணைத்து இடம் பெற்றுள்ளதை 
அவதானிக்க முடியும்.

பின்வரும் துஆவுல் கர்பில் :

عَنِ ابْنِ عَبّاسٍ ﵄، أنَّ النَّبِيَّ ﷺ «كانَ يَدْعُو عِنْدَ الكَرْبِ: لا إلَهَ إلّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لا إلَهَ إلّا اللَّهُ رَبُّ العَرْشِ الكَرِيمِ، لا إلَهَ إلّا اللَّهُ رَبُّ السَّماواتِ ورَبُّ العَرْشِ العَظِيمِ». (متفق عليه)

رَبُّ العَرْشِ الكَرِيمِ
சங்கைமிக்க அர்ஷின் இரட்சகன்,

رَبُّ العَرْشِ العَظِيمِ
மகத்தான அர்ஷின் இரட்சகன் என இடம் பெற்றுள்ளதை பார்க்கின்றோம்.

இமாம் புகாரியின் ஸஹீஹுல் புகாரியின் இறுதி அத்தியாயமான "கிதாபுத் தவ்ஹீத்" "ஓரிறைக்
கோட்பாடு" என்ற பகுதியில் அல்லாஹ் அர்ஷின் மீதான் என்பதை விளக்குகின்ற போது 
استوى/ علا وارتفع 
அர்ஷின் மீதிருந்து ஆட்சி செய்வதையும் அல்லாஹ்வின் உயர்வையும் விளக்கும் கருத்தையும் உறுதிப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம்.
அதே வேளை அல்லாஹ் அர்ஷை ஆக்கிரிமித்தான் என்ற பலவீனமான கருத்தை ஸஹாபாக்களோ, ஹதீஸ்கலை இமாம்களோ, மத்ஹபின் இமாம்களோ அங்கீகரிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இமாம் மாலிக்கின் காலத்தில் இஸ்தவா பற்றி பொதுவாக அறியப்பட்டு வந்த கருத்தை பித்அதவாதி ஒருவர் புதிதாக சந்தேகத்திற்கு  உட்படுத்திய போது 
இமாம் மாலிக் ரஹி அவர்கள் அளித்த பதில் இன்றும் பிரசித்திபெற்றதாகும்.

அவர்கள் குறிப்பிடுவது போன்று இஸ்தவா என்ற வார்த்தை நபித்தோழர்களால் பொருள் அறியப்பட்டதும், எப்படி என்ற முறை கற்பிக்க முடியாததும் அது பற்றிய கேள்வி ஸஹாபாக்களிடம் எழாமல் அதனை வந்த படி நம்பிக்கை கொண்டிருப்பதால்  அது எப்படி என்ற  கேள்வி புதுமையானதுமாகும் எனப் புரிந்து கொள்ள வேண்டும் எனப் பதிலளித்துள்ளார்கள்.

ஆனால் பிற்காலத்தில் தோன்றிய வழிகெட்ட சில பிரிவினர் அல்லாஹ்வின் பண்புகளை இல்லாதொழித்து, சில போது அவனது உயரிய பண்புகளை அவனது  படைப்புகளின் பண்புகளோடு ஒப்பிட்டு, அவர்களின் நடவடிக்கைகளுடன்  கற்பனை செய்து பேசியதன் விளைவாகவே மகத்துவமிக்க அல்லாஹ்வின் பண்புகளை குர்ஆன் நிலைப்படுத்திய வாறு நம்பிக்கை கொள்ளாத  துர்பாக்கிய நிலைக்குச் சென்றனர்

ஒப்பற்ற அல்லாஹ்வின்  பண்புகளை அவனது படைப்புகளோடு ஒப்பிடுவது தடை செய்யப்பட்ட நிலையிலும், அவனைப் போன்று யாரும் எதுவும் அவனுக்கு நிகராக இல்லை எனக் கூறிய பின்பும், அவன் தனது படைப்புகளோடு பாலும் நீரும் போல ஒன்றரக் கலந்தவன், அவனாக நான், நானாக அவன் என ஒரு சிறு குழுவும்  "அர்ஷ்" என்ற ஓர் அரியாசனத்தில் இருந்து அல்லாஹ்வை விலக்கி மலசல கூடம் போன்ற அசிங்கமான இடங்கள் உட்பட அனைத்து  இடங்களிலும் இருப்பவனாக அவனை மற்றொரு பிரிவும் அர்த்தப்படுத்துகின்ற போது நாம் யாரின் நம்பிக்கையை முன்னிலைப்படுத்த வேண்டும்? என சிந்திக்க வேண்டும்.

இவ்வாறான போக்கு  நபித்தோழர்கள் மற்றும் நல்வழி நடந்த இமாம்களின் வழிமுறை கிடையாது என நாம் அறிந்தும் அதனை நம்ப வேண்டிய தேவை நமக்கு வரலாமா?

வானம் பூமியை விட அல்லாஹ்வின் குர்ஸி விசாலமானது எனக் குர்ஆன் கூறி இருக்கின்றது என்றால் அவனது அர்ஷ் எவ்வளவு பெரிய படைப்பாக இருக்கும் என்பதை அவனே அறிந்தவன். அது பற்றிய அறிவும் இங்கு முக்கியமானதாகும்.

சிந்திக்க சில கருத்துக்கள்
---
ஏழாவது வானத்திற்கும் மகத்துவமிக்க அல்லாஹ்வின் அர்ஷிற்கும் இடையில் காணப்படும் தூர அளவைக் கருத்தில் கொண்டாலே அனைத்திலும் அல்லாஹ், அனைத்தும் அல்லாஹ், எல்லா இடங்களிலும் அல்லாஹ் என்ற ஒழுக்கமற்ற கருத்து உண்மையான  ஒரு முஃமின் கூற முற்படமாட்டான்.

அர்ஷை சுமக்கும் வானவர்கள் தொடர்பாக இறைத் தூதரின் ஆச்சரியமான பின்வரும் ஹதீஸைக் கவனித்தால் அல்லாஹ் மகத்தான அர்ஷின் மீதிருப்பதை உறுதி செய்யலாம்.

عن جابر بن عبدالله: أُذِنَ لي أن أُحدِّثَ عن مَلَكٍ مِن ملائكةِ اللهِ، مِن حمَلةِ العَرْشِ: إنَّ ما بين شَحْمةِ أُذُنِهِ إلى عاتقِهِ مسيرةُ سَبعِ مِئةِ عامٍ. [أبو داود (٢٧٥ هـ)، سنن أبي داود ٤٧٢٧  •  سكت عنه [وقد قال في رسالته لأهل مكة كل ما سكت عنه فهو صالح]  •  أخرجه أبو داود (٤٧٢٧)
"அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி உங்களுக்கு நான் எடுத்துரைக்க எனக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது" எனக் கூறிய இறைத் தூதர் (ஸல்) அவர்கள்: 
அவர்களில் ஒரு வானவரின் காதின் சோணைக்கும் அவரது தோழ் புயத்திற்கும் இடைப்பட்ட தூர அளவு 700 ஆண்டுகள் (மனிதன் காலால்) நடக்கும் கால அளவாகும் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்- அறிவிப்பவர்- ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரழி அவர்கள்)

அல்லாஹ் தனது படைப்புகளோடு கலக்காமல் அர்ஷின் மீதிருந்து ஆட்சி செய்வதை நம்பிக்கை கொள்ள இறைத் தூதர் (ஸல்) அவர்களின் மேலுள்ள செய்தியோடு மாத்திரம் நிறுத்தவில்லை.
மாற்றமாக,

அர்ஷில் இருந்து வஹி வருவதை அறியும் வானவர்கள் அதன் ஆன்மீகக் கனதியால் மயக்கமுற்று மீண்டும் எழுந்து ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அது பற்றி உரையாடி விசாரித்தல்,

அடியார்களின் செயற்பாடுகளை கவனிக்கும் வானவர்கள் மேலிருந்து பூமிக்கு வருகை தந்து மீண்டும் அல்லாஹ்விடம் சேர்ந்து திரைமறைவில் உரையாடுதல்,

உயிர்களைக் கைப்பற்றி, அவற்றை அல்லாஹ்விடம்  எடுத்துச் செல்லுதல்,

இறைத் தூதர் அவர்கள் தனது மிஃராஜ் பயணத்தில் திரைமறைவில் அல்லாஹ்வுடன் உரையாடியமை,

மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமந்து வருதல், 

அந்த அர்ஷின் கீழ் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தனது சமுதாயத்திற்காக  அழுது, மன்றாடி
شفاعة "ஷஃபாஅத்" என்ற பரிந்துரை செய்தல்,

அதே அர்ஷின் கீழ் பல்லாயிரம் பேர் நிழல் பெறும் வாய்ப்பு போன்ற பல ஆதாரபூர்வமான, தெளிவான குர்ஆன் ஹதீஸ்கள் அல்லாஹ்வை அர்ஷில் இருப்பவனாக நமக்குப் போதனை செய்திருக்க; நாம் ஏன் அல்லாஹ்வை தேவையில்லாத வகையில் வர்ணிக்க வேண்டும்? அவனை அவனும் அவனது தூதரும் நமக்கு வர்ணித்த பிரகாரம் நம்பாது யாரோ கற்பனையாகவும் தவறாகவும் விளக்குவது நம்ப வேண்டும் என சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post