ஆதியில் இருந்தே உலகை ஆட்சி செய்யும் ஒப்பற்ற அதிபதி அல்லாஹ்.

இந்த உலகம் எப்போது படைக்கப்பட்டது என்பது பற்றி அதைப் படைத்த அல்லாஹ்வுக்கே தெரியும்.

இந்த உலகம் அல்லாஹ்வின் வியக்கத்தக்க  படைப்பாகும். வானங்கள் பூமியை அவன் படைப்பதற்கு முன்பிருந்தே தனது அர்ஷின் மீது இருந்து வருகின்றான். அந்த அர்ஷ் நீரின் மீதிருக்கின்றது என குர்ஆனும் ஹதீஸும் தெளிவாக குறிப்பிடுகின்றன. அதை நாம் இப்படித்தான் என முறைமை கற்பிக்காது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا) [هود: 7] 
அவனே - (அல்லாஹ்வே)  வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் நீரின் மீதிருந்தது. உங்களில் அழகிய செயல் புரிவோர் யார் என்பதை சந்திப்பதற்காக (உங்களைப் படைத்தான்) ( ஹூத்-07).

குறிப்பு 
--
1) வானங்கள், பூமி ஆகிய இரு பிரமாண்டமான படைப்புக்களுக்கும் அல்லாஹ்வின் உள்ளமைக்கும் இடையில் தொடர்பு கிடையாது. 

அதாவது வானங்களின் மேல் அர்ஷை நிறுவி அவன் இருந்து வருகின்றான் என்ற நம்பிக்கை பிழையானதாகும். பின்னரே அவ்விரண்டும் படைக்கப்பட்டுள்ளன.

(2) நாம் அறிந்த நீர் குர்ஆன் குறிப்பிடுவது போன்று மழை நீராகும். அது மேகங்களில் இருந்து பொழிவிக்கப்படுவதாகும்.

ஆனால் அர்ஷ் இருக்கும் நீர் என்பதன் தன்மை பற்றி அல்லாஹ்வே அறிவான். அது ஏழு வானத்திற்கும் மேலால் இரு‌ப்பதாக குர்ஆன் குறிப்பிடுவதை புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்கள் உறுதி செய்கின்றன. பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்.
عن عمران بن الحصين:رضي الله عنه  قالَ قال قال رسول الله صلى الله عليه : كانَ اللَّهُ ولَمْ يَكُنْ شيءٌ غَيْرُهُ، وكانَ عَرْشُهُ على الماءِ، وكَتَبَ في الذِّكْرِ كُلَّ شيءٍ، وخَلَقَ السَّمَواتِ والأرْضَ [ أخرجه البخاري ومسلم]
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கின்றார்கள்
நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூதமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூதமீம் குலத்தாரே!'' என்றார்கள். அதற்கு அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்'' என்று கூறினார்கள்: அப்போது எமன் நாட்டு மக்களான  (அஷ்அரீ குலத்தார் சிலர்) வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'எமன் வாசிகளே! நீங்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூதமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை'' என்றதும்; அவர்கள், 'நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டானதன் ஆரம்ப நிலை குறித்தும் உங்களிடம் கேட்டறிவதற்காகவுமே நாங்கள் தங்களிடம் வந்தோம்'' எனக் கூறினார்கள்:

நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்'' பின் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தான் எனக் கூறினார்கள் . (புகாரி- 7418) (முஸ்லிம்)"

விளக்கம்
---
அல்லாஹ் என்பவன் தனித்தவன். அவன் அழகிய பல  பெயர்களுக்கும் உயரிய எண்ணற்ற பல பண்புகளுக்கும் உரித்தானவன்.

அவனது அர்ஷை சுமக்கவென அடியார்களில் சிறந்த தனது வானவர்களை அவன் தேர்வு செய்திருப்பது அவனது கண்ணியத்திற்கே அன்றி, அவனது இயலாமைக்காக அல்ல என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவன் என்றும் உயிரோடு இருப்பவன், அவனே நம்மை படைத்த இரட்சகன். அவன் உண்ணுவதில்லை, உறங்குவதில்லை.

எந்த நேரத்திலும் நமது தேவைகளை ஒழுக்கமாகவும் பண்பாகவும் இரகசியமாகவும் பரகசியமாகவும் அவனிடம் முறையிட செய்ய அவனே நமக்கு கட்டளையிட்டுள்ளான். 

அவன் அவதாரம் எடுப்பதில்லை. அவன் அவனாகவே இருப்பான். அவன் அறிவு, ஆற்றல், பக்க பலம் போன்றவற்றால் நம்முடன் இருப்பானே அன்றி; அவனது தாத் எனப்படும் உண்மையான  தோற்றத்தோடு நம்மோடு கலந்திருக்க மாட்டான்.
இதுவே நமது தூதரினதும் நமது  நபித்தோழர்களினதும் அடிப்படையான நம்பிக்கையாகும்.

நமது இருகரங்களும் வானம் நோக்கி செல்வது அவன் எங்குமில்லை. மாறாக, மகத்தான தனது அர்ஷின் மீதிருக்கின்றான் என்பதை இயல்பாக நமக்கு உணர்த்தவே.

அவன் முருகனும் இல்லை, முஹம்மதுமில்லை. அவன் தனித்தவன், ஒப்பு உவமை அற்ற பிரகாசமானவன். பேரழகன். அவனை மண்ணோடு மண்ணாகி அழிந்து போகும் அவனது படைப்புகளுக்கு ஒப்பிடுவது பெரும் பாவமாகும்.

-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post