- ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி حفظه الله تعالى
நாம் வாழக்கூடிய இந்த காலமானது குழப்பங்களும் சந்தேகங்களும் (நிரம்பி) இருக்கும் காலமாகும். என்னுடைய சகோதரர்களே! தற்போது நாம் கஷ்டமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம், நம்முடைய பிள்ளைகள், நம்முடைய குடும்பங்கள், நம்முடைய மக்கள் (என அனைவரும்) ஒரு கஷ்டமான காலத்தில் இருக்கின்றோம். அதனுடைய அடையாளமானது அதிகமான சந்தேகங்கள் (நிரம்பியிருப்பதா)கும்.
அதனுடைய சந்தேகங்களானது அனைத்து விடயங்களிலும் ஏற்படக்கூடியதாய் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய இருப்பில் சந்தேகங்கள், அல்லாஹ்வுடைய மகத்துவத்தில் சந்தேகங்கள், பெருமானார் ﷺ அவர்களின் நபித்துவத்தில் சந்தேகங்கள், குர்ஆனுடைய உண்மைத்தன்மையில் சந்தேகங்கள்,மேலும் இஸ்லாத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதனுடைய சட்டங்களில் சந்தேகங்கள்,(இவ்வாறென) அதனுடைய சந்தேகங்களாவது எல்லாவற்றின் மீதும் (ஏற்படக்கூடியதாய்) இருக்கின்றன. கடுமையான (காற்றைப் போன்ற) சந்தேகங்கள்!
ஒரு மனிதருக்கும், அவற்றை அடைவதற்கும் மத்தியில் - அவர்கள் கூறுவது போன்று - ஒரு பொத்தானை அழுத்துவதையே தவிர வேறு இல்லை. (உடனே) அச்சந்தேகங்கள் (மழை போன்று) அம்மனிதரின் மீது இறங்கி விடும்.
எந்தளவுக்கெனில், நீங்கள் ஒரு சிறுவனுடன் அமரலாம். இது எனக்கு பல முறை நடந்திருக்கின்றது. ஒரு முறை நடந்ததாக கூற மாட்டேன். நீங்கள் ஒரு சிறுவனுடன் அமரலாம், (அச்சிறுவன்) உங்களிடத்தில் இறைவனின் உள்ளமையுடன் சம்பந்தப்பட்ட நாத்தீக சந்தேகங்கள் அல்லது நம்முடைய நபி முஹம்மது ﷺ அவர்களின் நபித்துவத்தைப் பற்றிய சந்தேகங்களை உங்கள் முன்வைப்பான்! இது எவ்வாறு நடந்தது?!
(இதற்கு) பதில்: நீங்கள் காண்கின்ற, சிறியவர் பெரியவர் என நாம் ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் இருக்கின்ற (இந்த நவீன மொபைல் ஃபோன் ஆகும்). இது மனிதனின் மார்க்கங்களை அழிவில் தள்ளுகின்ற சந்தேகங்களைக் கொண்டு நிரம்பி வழிகின்றது. இது ஒன்றும் மிகைப்படுத்தல் அல்ல. என்னுடைய சகோதரர்களே! இது(தான்) யதார்த்தமான உண்மையாகும்.
நாம் சந்தேகங்களுடைய காலத்தில் இருக்கின்றோம். ஒரு இளைஞனோ அல்லது ஒரு இளைஞியோ யுடியூபில் ஒரு வீடியோவை பார்க்கலாம். அந்த வீடியோவானது ஒரு படத்தினுடைய தொடருடனோ, விளையாட்டுடனோ, (அல்லது) ஏதேனும் ஒன்றுடனோ தொடர்புடையதாக இருக்கும். பின்பு அந்த வீடியோவின் அருகே உள்ள கீழ்நோக்கி செல்லும் பட்டியலில் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உள்ள ஒரு தலைப்பை கண்டு அதனுள் நுழைவார், அதுவோ ஆபத்தான சந்தேகத்தைக் கொண்டதாயிருக்கும். அவரோ அறிவிலியாவார், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டுமெனத் தெரியாது!
மேலும் அதுவோ அவருடைய உள்ளத்தில் உடனே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். அந்த சந்தேகமோ நாளடைவில் குணப்படுத்தப்படவில்லை என்றால், நிச்சயமாக அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிவிடும்.
என்னுடைய சகோதரர்களே! நிச்சயமாக நான் கூறுகின்றேன்: இமாம் முஸ்லிம், அவர்களின் ஸஹீஹான தொகுப்பில் அறிவித்த நபி ﷺ அவர்களுடைய ஹதீஸின் யதார்த்தத்தை என் கண் முன்னே காண்கின்றேன்.
قال صلى الله عليه وسلم "بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم. يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا".
(நபி) ﷺ அவர்கள் கூறினார்கள்: "அடர்ந்த இரவுடைய பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் உங்களை அடைவதற்கு முன்பு நல்ல அமல்கள் செய்வதில் விரையுங்கள். காலையில் ஒரு மனிதர் மூஃமினாக இருப்பார், மாலையில் காஃபிராகி விடுவார் அல்லது மாலையில் மூஃமினாக இருப்பார், காலையில் காஃபிராகி விடுவார். உலகத்தின் ஒரு ஆதாயத்திற்காக தன்னுடைய மார்க்கத்தை விற்றுவிடுவார்".
காலைக்கும் மாலைக்கும் மத்தியில் எத்தனை மணிநேரம், சகோதரர்களே? எத்தனை மணிநேரம்? ஆம். பத்து மணி நேரம். ஒரு மனிதன் அவனுடைய தீனை மாற்றிக் கொள்வதற்கு பத்து மணி நேரம் போதும்! அல்லாஹ் பாதுகாப்பானாக!
சகோதரர்களே! நீங்கள் காண்கின்றீர்கள், இந்த விடயமானது (மிக) அபாயமானதாகும்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது ஒரு சில இளைஞர்கள் மற்றும் இளைஞிகளோடு நான் நேரடியாக கண்ட ஒரு விடயமாகும். எண்ணும் அளவிளான மணி நேரங்கள் (தான்)... சில சமயங்களில் (ட்விட்டரில் வரும்) இரு அல்லது மூன்று ட்வீட்கள் (தான்), இன்னும் சில சமயங்களில் ஒரு அல்லது இரு வீடியோக்கள் (தான்)... இவையே அவன் தலைகீழாக புரண்டு விடுவதற்கு போதுமானதாக இருக்கும்.
ஃபேஸ்புக்கில் ஒரு விடயம் பரப்பப்படும், அதை மற்றொன்று பின் தொடரும், (அதற்குப்பின்) மூன்றாவது (என இவ்வாறு சென்று கொண்டிருக்க)... திடீரென அவனை ஒரு சந்தேகம் பற்றிக்கொள்ளும். எதில் சந்தேகம்?! அல்லாஹ்வின் இருப்பில் சந்தேகம்!.
(அல்லாஹ் இருக்கின்றான் என்ற) இந்த விடயமானது பகலின் சூரியனை விட மிகவும் தெளிவானதாகும்.
இருந்தபோதிலும் ஒரு மனிதர் சந்தேகத்தை கொண்டு தீண்டப்படுகின்றார், பின்னர் அவருக்கு நயவஞ்சகத்தனமான சந்தேகம் ஏற்படுகின்றது.
وَٱرْتَابَتْ قُلُوبُهُمْ فَهُمْ فِى رَيْبِهِمْ يَتَرَدَّدُونَ
"அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து விட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே சிக்கித் தடுமாறுகின்றனர்." [9:45]
பின்னர் அல்லாஹ் அவருக்கு பரிவு காட்டவில்லை என்றால், நிச்சயமாக அவர் குதிங்கால்களின் மீது புறமுதுகிட்டவராக இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுவார். அல்லாஹ் பாதுகாப்பானாக.
ஒரு சந்தேகம்தான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சில சமயங்களில் (அந்த) சந்தேகமானது எந்தவொரு மதிப்பும் இல்லாத ஒரு சந்தேகமாக இருக்கும். ஆனால் அங்கு (அது சென்று அடைபவர் இடத்தில் மார்க்கக்) கல்வி இருக்காது. (மார்க்கக்) கல்விதான் ஒளியாகும். இந்த வழிகேட்டின் அறியாமைகள் அதன் முன்னால் வெளிப்பட்டுவிடும். மார்க்கக் கல்வி அவரிடம் இல்லை, என்றால் நிலை எவ்வாறு இருக்கும்?! அம்மனிதர் குழப்பமடைந்து விடுவார். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக).
-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.