தவஸ்ஸுல்‌ (வஸீலாத்‌ தேடுதல்‌)

அளவற்ற அருளாளனும்‌ நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்‌ திருப்பெயரால்‌

தவஸ்ஸுல்‌ என்பது வஸீலா என்ற சொல்லில்‌ இருந்து பிறந்ததாகும்‌. வஸீலா என்பது நாடப்படுகின்ற ஒன்றை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும்‌.

அனுமதிக்கப்பட்ட வஸீலா முறைகள்‌ :

நாடப்படுகின்ற இலக்குகளை அடைய உதவும்‌ உதவி சாதனங்கள்‌ அல்லது காரணிகள்‌ இரண்டு வகைப்படும்‌:

முதலாவது வகை : இறை திருப்தியையும்‌ சுவனத்தையும்‌ அடைவதற்காக செய்யப்படும்‌ வணக்க வழிபாடுகள்‌ (செயற்பாடுகள்‌). எனவேதான்‌ நாம்‌ அனைத்து வணக்கங்களும்‌ சுவாக்கத்தில்‌ நுழைவிக்கின்ற, நரகத்தில்‌ இருந்து ஈடேற்றத்தை தருகின்ற வஸீலா என்று கூறுகிறோம்‌.

இரண்டாவது வகை : பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற வஸீலா(உதவி தேடல்‌). அதாவது: எங்களுடைய பிரார்த்தனைகளை இறைவன்‌ அங்கீகரிப்பதற்காக ஏதாவதொன்றை நாம்‌ அவன்‌ முன்‌ நிறுத்தி பிரார்த்திக்கின்ற்தையே இந்த இரண்டாவது வகை வஸீலா சுட்டிக்‌ காட்டுகின்றது.

இதனை பல பிரிவுகளாக பிரிக்கலாம்‌ :

1. இறைவனின்‌ திருநாமங்களைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேடுதல்‌ : இதில்‌ பொதுவாக இறைவனின்‌ திருநாமங்களை கொண்டும்‌, அவனது குறிப்பிட்ட ஒரு நாமத்தைக்‌ கொண்டும்‌ வஸீலா தேடலாம்‌.

பொதுவாக இறைவனின்‌ திருநாமங்களைக்‌ கொண்டு வஸீலா தேடுவதற்கு உதாரணமாக பின்வரும்‌ ஆதாரத்தை குறிப்பிடலாம்‌. இப்னு மஸ்ஊத்‌ (ரழி) அவா்கள்‌ அறிவிக்கும்‌ இடர்‌, கஷ்ட நேரத்தில்‌ ஓதும்‌ துஆவை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. அந்த துஆ பின்வருமாறு அமைந்துள்ளது:

இறைவா! நிச்சயமாக நான்‌ உனது அடியான்‌, உன்னுடைய அடிமையின்‌ (ஆதமின்‌) மகன்‌ உன்னுடைய அடிமையின்‌ (ஹவ்வாவின்‌) மகன்‌ என்னுடைய நெற்றிமுடி உன்னுடைய கையிலே இருக்கறது, என்னிலே உன்னுடைய தீர்வே அமுல்படுத்தப்படுகிறது. என்‌ விடயத்தில்‌ உனது தீர்ப்பு நீதமானதே. ஆகவே உனக்கு நீயே சூட்டிக்கொண்ட‌ அல்லது உனது வேதத்தில்‌ இறக்கி வைத்த அல்லது உனது படைப்புகளில்‌ எதற்காவது நீ அறிவித்துக்‌ கொடுத்த அல்லது உனது மறைவான ஞானத்தில்‌ நீ தக்க வைத்திருக்கும்‌ ஓவ்வொரு பெயரைக்‌ கொண்டும்‌, குர்ஆனை எனது இதயத்தற்கு குளிர்ச்சியாகவும்‌ எனது உள்ளத்துக்கு ஒளிமயமாகவும்‌ என்‌ கவலையை நீக்கக்கூடியதாகவும்‌ என்‌ இடரையும்‌ பதட்டத்தையும்‌ போக்கக்கூடியதாகவம்‌ ஆக்குவாயாக என்று கேட்கிறேன்‌” (அஹ்மத் 3712)

இந்த ஹதீஸிலிருந்து “உனக்கே உரிய அனைத்து பெயர்களைக்‌ கொண்டும்‌” என்ற கூற்றையே ஆதாரமாக கூறலாம்‌. சில வேளைகளில்‌ நாம்‌, இறைவா! உன்னுடைய ஆழகிய திருநாமங்களைக்‌ கொண்டு உன்னிடம்‌ கேட்கின்றேன்‌ என்று கூறுகின்றோம்‌. இவ்வகையான துஆவிற்கு கீழ்வரும்‌ அல்குர்‌ஆன்‌ வசனத்தை ஆதாரமாகக்‌ கூறலாம்‌.

அல்லாஹ்விற்கு ஆழகிய திருநாமங்கள்‌ உள்ளன அதனைக்‌ கொண்டே அவனை அழையுங்கள்‌! (அல்‌ - அஹ்ராப்‌ : 180)

அல்லாஹ்வின்‌ குறிப்பிட்ட ஒரு பெயரைக்‌ கொண்டு வஸீலா தேடுவதற்கு உதாரணமாக கீழ்வரும்‌ கூற்றுக்களை எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

பிழை பொறாப்பாளனே! என்‌ பிழைகளை பொறுப்பாயாக.! அன்பானனே! என்‌ மீது இரக்கம்‌ காட்டுவாயாக! அது போல்‌ நீ மன்னிப்பாளன்‌, மன்னிப்பை விரும்புவன்‌. ஆகவே என்னை மன்னிப்பாயாக.!

2. அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ மூலம்‌ அவனிடம்‌ வஸீலா தேடுதல்‌.

இதிலும்‌ ஒரு குறிப்பிட்ட பண்பை வைத்து அல்லது பொதுவான அவனது பண்புகளை வைத்து வஸீலா தேடலாம்‌. அவனது செயற்பாடுகள்‌ அனைத்தும்‌ அவனது பண்புகளாகும்‌. பொதுவாக அவனது பண்புகளை வைத்து வஸீலா தேடுவதற்கு பின்வரும்‌ உதாரணத்தை குறிப்பிடலாம்‌. இறைவா! உனது அழகிய திருநாமங்களைக்‌ கொண்டும்‌. உனது உயர்ந்த பண்புகளைக்‌ கொண்டும்‌ நான்‌ உன்னிடம்‌ கேட்கிறேன்‌. அவனது குறிப்பிட்ட ஒரு பண்பை வைத்துக்‌ கேட்பதற்கு பின்வரும்‌ உதாரணத்தைக்‌ குறிப்பிடலாம்‌.

நான்‌ காணுகின்ற, நான்‌ தவிர்ந்து கொள்ள வேண்டிய தீங்கை விட்டும்‌ அல்லாஹ்வின்‌ கண்ணியத்தைக்‌ கொண்டும்‌ அவனது சக்தியைக்‌ கொண்டும்‌ பாதுகாவல்‌ தேடுகிறேன்‌.

அவனது செயற்பாடுகளை வைத்து வஸீலா தேடுவதற்கு பின்வரும்‌ உதாரணத்தை குறிப்பிடலாம்‌:

யா அல்லாஹ் இப்ராஹிம்‌ (அலை) அவர்கள்‌ மீதும்‌ அவர்களின்‌ குடும்பத்தினர்‌ மீதும்‌ அருள்‌ புரிந்தது போன்று முஹம்மது (ஸல்) அவர்கள்‌ மீதும்‌ அவர்களின்‌ குடும்பத்தினர்‌ மீதும்‌‌ அருள்‌ புரிவாயாக!

இங்கே நாம்‌ இறைவனிடத்தில்‌ நபி இப்ராஹிம்‌ (அலை) அவர்கள்‌ மீதும்‌ அவர்களின்‌ குடும்பத்தார்‌ மீதும்‌ அல்லாஹ்‌ அருள்‌ புரிந்தது போன்று முஹம்மது (ஸல்‌) அவர்கள்‌ மீதும்‌ அவர்களின்‌ குடும்பத்தார்‌ மீதும்‌ அருள்‌ புரியுமாறு கேட்கின்றோம்‌. இது இறைவனுடைய செயலை முன்வைத்தே அவனிடம்‌ கேட்கிறோம்‌.

3. அல்லாஹ்வை ஈமான்‌ கொள்வதின்‌ மூலம்‌ அவனிடம்‌ வஸீலாத்‌ தேடல்‌.

அதாவது, அல்லாஹ்வையும்‌ அவனது தூதரையும்‌ ஈமான்‌ கொள்வதின்‌ மூலமாக மனிதன்‌ அல்லாஹ்வை நெருங்குதல்‌. அவன்‌, யா அல்லாஹ்‌! உன்னையும்‌ உனது தூதரையும்‌ ஈமான்‌ கொண்டதின்‌ காரணமாக உன்னிடத்திலே இன்னின்ன விஷயங்களை கேட்கிறேன்‌ என்று அல்லாஹ்விடம்‌ வினவுகின்றான்‌. இது அனுமதிக்கப்பட்ட வஸீலா முறையாகும்‌.

இதற்கு ஆதாரமாக பின்வரும்‌ இறைவசனங்களைக்‌ குறிப்பிடலாம்‌:

திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன்: 3:190)

அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) “எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக!
(அல்குர்ஆன்: 3:191)

எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.
(அல்குர்ஆன்: 3:192)

எங்கள் அதிபதியே! இறைநம்பிக்கையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். ‘உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே, “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!
(அல்குர்ஆன்: 3:193)

நபிகளாரை ஈமான்‌ கொள்வதனை மன்னிப்பு பெறுவதற்கான வஸீலாவாக அமைத்துக்‌ கொண்டார்கள்‌. அல்லாஹ்வையும்‌ அவனது தூதரையும்‌ ஈமான்‌ கொள்வதின்‌ மூலமாக வஸீலா தேடுவதும்‌ அல்லாஹ்வின்‌ மீது அன்பு வைப்பதைக்‌ கொண்டும்‌ அவனது தூதரின்‌ மீது அன்பு வைப்பதைக்‌ கொண்டும்‌ வஸீலா தேடுவதும்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில்‌ அல்லாஹ்வின்‌ மீது நம்பிக்கை வைப்பது பிழை பொறுப்பாளனிடமிருந்து பாவ மீட்சியை தேடித்தர காரணமாக அமைகின்றது. அதே போன்று அல்லாஹ்வினதும்‌ அவனது தூதரினதும்‌ அன்பானது பாவமீட்சிக்கு காரணமாக அமைகின்றது. எனவே அல்லாஹ்விடத்தில்‌ இவைகளினூடான வஸீலாத்‌ தேடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

4. அழைப்பாளன்‌ தன்னுடைய நிலைமையை முறையிட்டு அல்லாஹ்விடம்‌ வஸீலா தேடுதல்‌.

எவ்விதமான விஷயங்களையும்‌ குறிப்பிடாமல்‌ தன்னுடைய நிலைமையை மாத்திரம்‌ சொல்லி அல்லாஹ்விடம்‌ வஸீலா தேடுதல்‌. யா அல்லாஹ்‌! நான்‌ உன்னிடத்தில்‌ தேவையுடையவனாக இருக்கிறேன்‌. நான்‌ உன்னிடத்தில்‌ கைதியாய்‌ அடிமையாய்‌ இருக்கிறேன்‌. இன்னும்‌ இத்தகைய வாசகங்களை பயன்படுத்தி அல்லாஹ்விடம்‌ வஸீலா தேடுவதை உதாரணமாக குறிப்பிடலாம்‌. இதற்கு ஆதாரமாக மூஸா(அலை) அவர்கள்‌ இரு பெண்மண்களின்‌ ஆட்டுமந்தைக்கு நீர்‌ வார்த்துவிட்டு பின்பு நிழல்‌ பக்கமாக சென்று பின்வருமாறு கூறியதை ஆதாரமாகக்‌ கொள்ளலாம்‌.

என்‌ இறைவா! எனக்கு நீ வழங்கும்‌ நன்மையில்‌ தேவையுடையவனாக இருக்கிறேன்‌. (அல்‌-கஸஸ்‌ : 24)

இங்கே அவர்‌ எதனையும்‌ குறிப்பிடாமல்‌ தன்னுடைய தேவையைக்‌ கேட்கிறார்‌.

ஒரு மனிதன்‌ தனது நிலைமையை வர்ணித்து கேட்பதானது அவன்‌ அருளையும்‌ அன்பையும்‌ நலவையும்‌ பெறுவதற்கு போதுமானதாகும்‌. குறிப்பாக அன்பாளார்களுக்கெல்லாம்‌ அன்பாளனான அல்லாஹ்விடத்தில்‌ இப்படி கேட்பதானது மிக ஏற்றமானதாகும்‌.

5. எவருடைய பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்‌ என எதிர்பார்க்கப்படுகிறதோ அவரின்‌ பிரார்த்தனையின்‌ ஊடாக வஸீலா தேடுதல்‌.

இதற்கு ஆதாரமாக பின்வரும்‌ நபி மொழியைக்‌ குறிப்பிடலாம்‌. 

நபி(ஸல்‌)அவர்கள்‌ வெள்ளிக்கிழமை தினத்தன்று பிரசங்கம்‌ நிகழ்த்திக்‌ கொண்டிருந்தார்கள்‌. அப்பொழுது ஒரு மனிதா அங்கே நுழைந்து ரஸுல்‌ (ஸல்‌) அவர்களிடம்‌ அல்லாஹ்வின்‌ தூதரே! சொத்துக்கள்‌ அழிந்துவிட்டன, அனைத்து வழி வகைகளும்‌ அறுபட்டன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடத்தில்‌ மழை பொழியுமாறு பிரார்த்தியுங்கள்‌ என்றார்‌. அப்பொழுது நபியவர்கள்‌ தனது இரு கரங்களையும்‌ உயாத்தி, இறைவா! எங்களுக்காக மழை பொழிவிப்பாயாக! எங்களுக்காக மழை பொழிவிப்பாயாக!! எங்களுக்காக மழை பொழிவிப்பாயாக!!! என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்‌.

இது பற்றி அனஸ்‌(ரழி) அவர்கள்‌ பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்‌ :

அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக நாங்கள்‌ வானத்தில்‌ எந்தவொரு மேகக்கூட்டத்தையோ மழை முகில்களையோ காணவில்லை. மதீனாவின்‌ எந்தவொரு மலைப்பகுதியிலோ அல்லது வீட்டின்‌ உச்சி பகுதியிலோ மேகக்கூட்டங்கள்‌ வருவதை காணவில்லை. ஆனால்‌ அவருக்கு பின்னால்‌ கேடயத்தை போன்ற அளவு மேகக்கூட்டம்‌ வந்து நடு வானத்தை அடைந்ததும்‌ அது விரிவடைந்து மழை பொழிய ஆரம்பித்தது. நபி(ஸல்‌) அவர்கள்‌ தனது தாடியிலிருந்து மழைநா வடிந்த நிலையிலே மிம்பரிலிருந்து இறங்கினார்கள்‌. (புஹாரி 1014, முஸ்லிம்‌ 897)

6. தான்‌ செய்த நல்ல செயல்களைக்‌ கொண்டு அல்லாஹ்விடத்தில்‌ வஸீலா தேடுதல்‌.

மனிதன்‌ தனது நல்ல செயலை காரணம்‌ காட்டி பிரார்த்தனையில்‌ ஈடுபடுகிறான்‌. அது அவனது வேண்டுதல்‌ அங்கீகரிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. இதற்கு உதாரணமாக நபியவர்கள்‌ கூறிய மூன்று குகைவாசிகளுடைய சம்பவத்தைக்‌ கூறலாம்‌.

அச்சம்பவம்‌ பின்வருமாறு :-

பனூ இஸ்ரவேலர்களுடைய காலத்தில்‌ மூன்று போர பிரயாணம்‌ செய்து கொண்டிருக்கும்போது இடைவழியில்‌ ஒரு குகையில்‌ இரவை கழிக்க நேரிட்டது. மூவரும்‌ அக்குகையினுள்‌ நுழைந்தனர்‌. அல்லாஹ்‌ அவனுடைய ஞானத்தின்‌ மூலம்‌ அவர்களை சோதிப்பதற்காகவும்‌ அவனுடைய அடியார்களுக்கு படிப்பினைக்காகவும்‌ ஒரு பாறாங்கல்லை விழச்செய்து அக்குகை வாயிலை அடைத்துவிட்டான்‌. அவர்கள்‌ அக்கல்லை அகற்ற முயன்றனர்‌, ஆனால்‌ அவர்களால்‌ முடியவில்லை. இறுதியில்‌ ஒவ்வொருவரும்‌ தாம்‌ செய்த நல்ல செயல்பாடுகளை முன்‌ வைத்து அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தால்‌ மட்டுமே அக்கல்லை அகற்ற முடியும்‌ என்ற முடிவிற்கு வந்தனா. ஒவ்வொருவரும்‌ தாம்‌ செய்த நல்ல செயல்பாடுகளை முன்‌ வைத்து அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்க ஆரம்பித்தனர்‌.

முதலாமவர்‌ : இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாயும்‌ தகப்பனும்‌ இருந்தனர்‌. நான்‌ ஆட்டிலிருந்து பால்‌ கறந்தால்‌ அவர்களுக்கு கொடுக்காத வரையில்‌ வேறு யாருக்கும்‌ கொடுப்பதில்லை. ஒருநாள்‌ நான்‌ விறகு தேடிச்சென்று சற்று தாமதித்து வந்தேன்‌. அவ்வேளை அவர்களிருவரும்‌ தாங்கியிருந்தனா. நான்‌ யாருக்கும்‌ கொடுக்காமல்‌ அவர்கள்‌ எழுந்திரிக்கும்‌ வரை பாலை வைத்துக்‌ கொண்டு காத்திருந்தேன்‌. அவர்கள்‌ காலையில்தான்‌ எழுந்தன. இறைவா! நான்‌ இதை உனக்காக செய்திருந்தால்‌ இக்கல்லை எங்களை விட்டும்‌ அகற்றுவாயாக! என்று பிராரத்தித்தார்‌. அக்கல்‌ சற்று அகன்றது, எனினும்‌ வெளியே வர முடியாமல்‌ இருந்தது.

இரண்டாமவர்‌ : இறைவா! எனது சிற்றப்பாவிற்கு ஒரு மகள்‌ இருந்தாள்‌. நான்‌ அவளை மிகவும்‌ விரும்பினேன்‌. ஆனால்‌ அவள்‌ மறுத்து விட்டாள்‌. கடுமையான வறட்சி ஏற்பட்டபோது உதவிதேடி அவள்‌ என்னிடத்தில்‌ வந்தாள்‌. நான்‌ அவளை மீண்டும்‌ தவறாக நடக்க அழைத்தேன்‌. அவளை வாட்டிய வறுமையின்‌ காரணமாக அவள்‌ உடன்பட்டாள்‌. நான்‌ அவளுடன்‌ தவறாக நடத்தையில்‌ ஈடுபட ஆரம்பித்த போது, நீ அல்லாஹ்வை பயந்து கொள்‌! எந்தவொரு முத்திரையையும்‌ அதன்‌ உரிமை இல்லாமல்‌ அகற்றிவிடாதே! என்று எச்சரித்தாள்‌. உலகிலேயே அவள்‌ எனக்கு மிகவும்‌ விருப்பமானவளாக இருந்தும்‌ நான்‌ தவிர்ந்து கொண்டேன்‌. அவளுடைய தேவையையும்‌ நிறைவேற்றினேன்‌. அதன்‌ மூலம்‌ பத்தினித்‌ தனத்தையும்‌ குடும்பத்துடன்‌ சேர்ந்து நடத்தலையும்‌ பாதுகாத்தேன்‌. இறைவா! இதை உனக்காக செய்திருந்தால்‌ எங்களுக்கு நிவாரணம்‌ அளிப்பாயாக! என்று கூறினார்‌. அக்கல்‌ இன்னும்‌ சற்று அகன்றது. எனினும்‌ யாருக்கும்‌ வெளியேற முடியாமல்‌ இருந்தது.

மூன்றாமவர்‌ : இறைவா! எனக்கு அதிகமான வேலையாட்கள்‌ இருந்தனர்‌. அவர்கள்‌ அனைவருக்கும்‌ உரிய கூலியை கொடுத்து விட்டேன்‌. ஆனால்‌ ஒருவர்‌ மட்டும்‌ அதனை எடுக்காமல்‌ சென்றுவிட்டார்‌. அவருடைய கூலியை பயன்படுத்தி வியாபாரம்‌ செய்தேன்‌. அதன்‌ மூலம்‌ நிறைய ஒட்டகங்களும்‌ ஆடுகளும்‌ மாடுகளும்‌ அடிமைகளும்‌ கிடைத்தன. பிறகு ஒருநாள்‌ அக்கூலிக்காரன்‌ தனது கூலியை கேட்டு வந்தான்‌. இதோ இங்கிருக்கும்‌ ஒட்டகங்கள்‌, ஆடுகள்‌, மாடுகள்‌, அடிமைகள்‌ அனைத்தும்‌ உன்னுடையது தான்‌ எனக்‌ கூறினேன்‌. அதற்கவர்‌ நீ அல்லாஹ்வை பயந்து கொள்‌! என்னை பரிகசிக்காதே! என்று கூறினார்‌. நான்‌ உன்னை பரிகசிக்கவில்லை. இதுதான்‌ உன்னுடைய கூலி என விபரத்தை கூறினேன்‌. அப்பொழுது அவர்‌ எதனையும்‌ வைக்காமல்‌ அனைத்தையும்‌ கொண்டு போய்விட்டார்‌. நான்‌ அவருக்கு கூலியை மட்டும்‌ கொடுத்திருந்தாலும்‌ அவர்‌ கொண்டு போய்‌ இருப்பார்‌. எனினும்‌ அமானிதம்‌ என்பதற்காகவே அக்கூலியின்‌ மூலம்‌ விருத்தியடைந்த அனைத்தையும்‌ கொடுத்தேன்‌. இறைவா! இதனை உனக்காக செய்திருந்தால்‌ எங்களுக்கு நிவாரணம்‌ அளிப்பாயாக! என்று கூறினார்‌. அக்கல்‌ மேலும்‌ சிறுது
அகன்றது. அம்மூவரும்‌ வெளியே சென்றனர்‌. (ஆதாரம்‌ : புகாரி 2215, முஸ்லிம்‌ 2743)

ஒருவன்‌ இறைவா! நான்‌ எனது பெற்றோருக்கு செய்த உபுகாரத்தின்‌ பிரகாரம்‌ எனது குழந்தைகளும்‌ எனக்கும் உபகாரம்‌ செய்ய அருள்பாவிப்பாயாக என்று கூறினால்‌ இது ஷரீயத்‌ அனுமதித்த வஸீலா முறையாகும்‌. இது நற்செயல்களைக்‌ கொண்டு வஸீலா தேடுவதாகும்‌.


தடுக்கப்பட்ட வஸீலா முறைகள்‌ :

வஸீலா தேட முடியாத முறை எதுவென்றால்‌ மார்க்கம்‌ அனுமதிக்காத தடுக்கப்பட்ட வஸீலா முறையாகும்‌. உதாரணமாக, நபிகளாரைக்‌ கொண்டோ அவர்களின்‌ கண்ணியத்தைக்‌ கொண்டோ வஸீலா தேடுவதாகும்‌. உண்மையிலேயே இது வஸீலாவாக இருக்க முடியாது. அதனால்‌ நமக்கு எவ்வித பிரயோஜனமும்‌ ஏற்படாது. அல்லாஹ்விடத்தில்‌ ரஸுல்‌ (ஸல்‌) அவர்களுக்கு கண்ணியமும்‌ மதிப்பும்‌ உள்ளது. அதன்‌ மூலம்‌ நபியவர்கள்‌ தான்‌ பிரயோஜனம்‌ அடைவார்கள்‌. வேறுயாரும்‌ அதன்மூலம்‌ பிரயோஜனம்‌ அடைய முடியாது. நபியவர்களின்‌ கண்ணியத்தின்‌ மூலம்‌ வஸீலா தேட முடியாது என்கின்ற போது அவர்களைக்‌ கொண்டே வஸீலா தேடுவதென்பது அறவே முடியாது என்பது தெளிவாகின்றது. தற்காலத்தில்‌ நபியவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடமுடியாது என்பதற்கு ஆதாரமாக உமர்‌ (ரழி) அவர்களுடைய காலத்தில்‌ ஏற்பட்ட சம்பவத்தைக்‌ குறிப்பிடலாம்‌. உமர்‌ (ரழி) அவாகளுடைய காலத்தில்‌ நடந்த சம்பவத்தைக்‌ குறிப்பிடலாம்‌. அவர்களுடைய காலத்தில்‌ ஸஹாபாக்களுக்கு வறட்சி ஏற்பட்டது. அப்பொழுது அவர்‌ ஸஹாபாக்களை அழைத்துக்‌ கொண்டு மழை வேண்டி பிரார்த்திக்க சென்றார்‌. இறைவா! எமது நபியின்‌ (துஆவின்‌) மூலம்‌ உன்னிடத்தில்‌ வஸீலா தேடினோம்‌. அதன்‌ மூலம்‌ நீ மழை பொழிவித்தாய்‌!. தற்போது உனது நபியின்‌ சிறிய தந்தையின்‌ (துஆவின்‌) மூலமாக வஸீலா தேடுகிறோம்‌. எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக எனக்‌ கேட்டார்கள்‌. அப்பொழுது அப்பாஸ்‌ இப்னு அப்துல்‌ முத்தலிப்‌ (ரழி), அவர்கள்‌ மழை வேண்டி பிரார்த்தித்தாகள்‌. அப்பொழுது ஸஹாபாக்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டது. (புஹாரி : 1010) 

இந்த ஹதீஸின்‌ மூலமாக நபி(ஸல்‌) அவாகளின்‌ துஆவின்‌ மூலம்‌ ஸஹாபாக்கள்‌ எவ்வாறு வஸீலா தேடினார்கள்‌ என்பது தெளிவாகின்றது. அதாவது ஸஹாபாக்கள்‌ நபி(ஸல்‌) அவாகளின்‌ துஆவின்‌ மூலமே வஸீலா தேடினார்களேயன்றி அவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடவில்லை. அவ்வாறு அவர்களைக்‌ கொண்டோ, அவர்களுடைய கண்ணியத்தைக்‌ கொண்டோ மழை தேடியிருந்தால்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களை அழைத்து வரவேண்டிய தேவையிருக்காது, ஏனெனில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணித்தாலும்‌ அவர்களுடைய பதவியும்‌ கண்ணியமும்‌ அல்லாஹ்விடத்தில்‌ இருந்து கொண்டேதானிருக்கும்‌. அவ்வாறிருக்கும்‌ போது அப்பாஸ்‌ (ரலி அவர்களின்‌ பிரார்த்தனை அவசியமற்றது.

இணைவைப்பாளர்கள்‌ தங்களது சிலைகள்‌, சிற்பங்கள்‌ மூலமும்‌, அறிவிலிகள்‌ தங்களது நேசக்காரார்கள்‌ மூலமும்‌ செய்யும்‌ வஸீலா ஷிர்க்கானதாகவே கருதப்படும்‌. நாம்‌ அதனை வஸீலா என்றோ நூதனம்‌ என்றோ கருத முடியாது. மாறாக அதனை ஷிர்க்கின்‌ அடித்தளம்‌ என்றே சொல்ல வேண்டும்‌. ஏனெனில்‌ இத்தகைய வஸீலா தேடுபவர்கள்‌ தங்கள்‌ தேடல்களை நிறைவேற்றும்‌ காரணகா்த்தாவென்று எவர்களை கருதுகிறார்களோ  அவர்களிடத்திலே பிராத்திக்கிறார்கள்‌. ஒரு மனிதன் தான்‌ நேசக்காரர்‌ என கருதுபவரிடத்தில்‌ வந்து அல்லாஹ்வின்‌ நேசக்காரரே! என்னைக்‌ காப்பாற்றுங்கள்‌! எனக்‌ கூறுகிறார்‌. அதே போன்று நபியவர்களின்‌ குடும்பத்தினரே! என்னை காப்பாற்றுங்கள்‌! எனவும்‌ அல்லாஹ்வின்‌ தாதரே! என்னை காப்பாற்றுங்கள்‌! எனவும்‌ கூறுகின்றனர்‌. இதனையும்‌ நாம்‌ வஸீலாவாக கருத முடியாது. மாறாக இது ஷிர்க்காகும்‌. அல்லாஹ்வுடன்‌ இணையாளர்களை கூட்டு சோத்ததனால்‌ இது ஹாராத்தை ஏற்படுத்திவிட்டது.

மேலும்‌ இது புத்தியில்‌ மடமையை ஏற்படுத்திவிட்டது என்பது பற்றி அல்‌ குர்‌ஆன்‌ பின்‌ வருமாறு குறிப்பிடுகிறது:

மேலும்‌ மறுமைநாள்‌ வரை (அழைத்தாலும்‌) தனக்கு பதிலளிக்க முடியாத அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை வி்‌ட கெட்டவர்கள்‌ யார்‌. அவர்களோ இவர்களுடைய அழைப்பை அறிய முடியாது. ( அல் அஹ்காப்‌ : 5)

மேலும், மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும்போது தங்களை அழைத்தவர்களுக்கு அவர்கள் பகைவர்களாயும் ஆகிவிடுவார்கள்; மேலும், அவர்களின் வழிபாட்டை நிராகரிப்பவர்களாயும் இருப்பார்கள். (அல்குர்ஆன்: 46:6)

இப்படியாக அழைக்கப்படுபவர்களை எதற்கும்‌ இயலாதவர்கள்‌ என்றும்‌ மறுமைநாள்‌ வரை இவர்கள்‌ அழைத்தபோதிலும்‌ அவர்கள்‌ பதிலளிக்கப்‌ போவதில்லை என்றும்‌ அல்லாஹ்‌ வர்ணித்துள்ளான்‌. அது போல்‌ தங்களை யார்‌ அழைக்கிறார்கள்‌ என்று கூட அறியாத அதுபற்றி ஒன்றையும்‌ உணராதவர்கள்‌ என்றும்‌ அழைக்கப்படுபவர்களை அல்லாஹ்‌ வாணித்துள்ளான்‌. உண்மையான தேவைகளை வேண்டி நிற்கிற மறுமைநாளில்‌ மனிதா்கள்‌ எழுப்பப்படும்‌ பொழுது (அழைக்கப்பட்டவர்களான) அவர்கள்‌ இவர்களுக்கு எதிராக இருப்பதுடன்‌ அவர்கள்‌ வணங்கப்பட்டதையும்‌ மறுத்துவிடுவர்‌. இப்படியானவைகளுக்கு உதாரணங்களாக நேசக்காரா்களிடத்திலும்‌ சிலைகளிடத்திலும்‌ பிரார்த்திப்பதை குறிப்பிடலாம்‌. இது போன்றவற்றை வஸீலா என்று கூற முடியாது. மாறாக, மார்க்கத்தை விட்டும்‌ வெளியேற்றும்‌ ஷிர்க்காகவே அது அமையும்‌ என்பதாக அல்லாஹ்‌ பின்வருமாறு எச்சரிக்கிறான்‌.
யாரேனும் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைத்தால் அது பற்றி அவனிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடமே உள்ளது! இத்தகைய நிராகரிப்பாளர்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. (அல்குர்ஆன்: 23:117)

இங்கே அல்லாஹ்‌ இத்தகைய அழைப்பாளர்களை (அல்லாஹ்‌ அல்லாதவர்களை அழைப்பவர்களை) காஃபிர்கள்‌ என்று நாமம்‌ சூட்டியுள்ளான்‌.
أحدث أقدم