ஸலபுகளுடமிருந்தும்.. படித்ததில் பிடித்ததும்

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..

தொகுப்பு: ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)


1. 'வழங்குகின்ற தர்மம் ஏழையின் கைகளைச் சென்றடைய முன்னரே அல்லாஹ்வின் கையை சென்றடைந்துவிடுகிறது என்ற உண்மையை தர்மம் வழங்குபவர் அறிந்துகொண்டால் தர்மம் பெறுவதில் ஏற்படும் மகிழ்ச்சியை விட கொடுப்பவருக்கு ஏற்படும் இன்பமோ பன்மடங்காக இருக்கும்'.

- இமாம் இப்னுல் கையிம் (றஹ்)
நூல் : 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 1/26


2. ‘சில மனிதர்களை நான் அறிவேன்; அவர்களிடம் ஆரம்பத்தில் குறைகள் எதுவும்  இருக்கவில்லை. பிறரது குறைகளை வெளிப்படுத்த தொடங்கினார்கள். குறைபேசிய அவர்களிடம் குறைகள் ஏற்படத் தொடங்கின. மேலும் சில மனிதர்களையும் நான் அறிவேன். அவர்களிடம் குறைகள் இருந்தன. இருப்பினும் அவர்கள் பிறரது குறைகளை மறைத்தார்கள். பிறர் குறைகளை மறைத்த அவர்களது குறைகள் காலப் போக்கில்  மறைந்து போயின'.

- இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ்
நூல் : 'அழ்ழியாஉல் லாமிஃ', 1/106


3. ‘நபிகளார் அவர்கள் மதீனாவில் கால்பதித்த முதல் நாளும் நான் இருந்திருக்கிறேன். அந்த தினம் போன்ற செழிப்பும் பிரகாசமும் நிறைந்த வேறு ஒரு தினத்தை நான் பார்த்ததில்லை. நபிகளார் மரணித்த தினத்திலும் நான் இருந்திருக்கிறேன். அந்த தினம் போன்ற வேதனையும் இருளும் நிறைந்த எந்த ஒரு தினத்தையும் நான் பார்த்ததில்லை'

- அனஸ் றழியல்லாஹு அன்ஹு -
நூல் : 'ஸாதுல் மஆத்', 3/55


4. செவிமடுப்பதன் ஒழுங்கு :

பிரபல தாபிஈன்களில் ஒருவரான அதாஃ இப்னு அபீ றபாஹ் (றஹ்) கூறுகிறார்கள் :

யாரேனும் ஒருவர் என்னோடு ஏதேனும் ஒரு விடயத்தை பேசினால் அது பற்றி இதுவரை கேள்விப்படாதது போன்று வாய்மூடி செவிமடுப்பேன். ஆனால் அவ்விடயம்  பற்றி அவர் பிறப்பதற்கு முன்னரே அறிந்திருப்பேன்.

நூல் : 'ஸியரு அஃலாமிந் நுபலா' (5/86).


5. கர்வமுள்ளவனின் வணக்கத்தை விட ஒரு பாவியின் கண்ணீர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது. 

- இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)


6. அறிஞர்களோடு ஒப்பிடும் போது நாம் ஒன்றுமே இல்லை. அவர்கள் எழுதி குவித்தவற்றை வாசிக்கும் போதெல்லாம் வெட்கத்தால் தலைகுனிகிறோம். 

- ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான்


7. அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு செயலாற்றுபவர் மணலில் நடத்துசெல்பவரைப் போன்றவர்; சத்தமெழுப்பாமலே அவர் தன் தடயங்களை பதித்துச்செல்வார்.

- இப்னு மஸ்ஊத் (றழி)
நூல் : 'ஜாமிஉல் உலூமி வல்ஹிகம்'


8. ‘சத்தியத்திற்கான ஆதாரங்கள் அதிகமாக இருந்தும் அவை அதிகமானோருக்கு தெரியாமற் போவது குறித்து வியப்படையத் தேவையில்லை. சத்தியத்திற்கான ஆதாரங்கள் அதிகமானவைதான்; ஆனால் அல்லாஹ் தான் நாடியோருக்குத்தான் சத்தியத்தை வெளிப்படுத்துகிறான்'.

- ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்)
நூல் : 'தர்உ தஆருழில் அக்லி வந் நக்ல்'


9. மாபெரும் ஹதீஸ் துறை அறிஞரான இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) அவர்களிடம் 'தாங்கள் எவ்வாறு இத்தகைய ஆழ்ந்த அறிவை பெற்றீர்கள்?' என்று வினவப்பட்டது. அப்போது அவர்கள் 'ஸம்ஸம் நீர் எந்த நோக்கத்துக்காக அருந்தப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறும்' என நபியவர்கள் கூறியுள்ளார்கள். நான் ஸம்ஸம் நீர் அருந்திய போது பயனுள்ள அறிவை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன்' என்று கூறினார்கள்.

நூல் : 'தபகாதுஷ் ஷாபிஇய்யதில் குப்ரா' , 3/110


10. ‘உலகப் பற்றின்மை என்பது, உன் உள்ளத்தில் உலகின் மீதான மோகத்தை சுமந்துகொண்டு உலகை துறப்பதல்ல, உன் கையில் உலகம் இருக்கும் போது அதன் மீதான மோகத்தை உன் உள்ளத்திலிருந்து களைவதாகும்'

- இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)


11. தன்னைப் போன்றே தன் மகளையும் வளர்த்தெடுத்த ஆளுமை....

'தாபிஈன்களின் தலைவர்' என வர்ணிக்கப்படும் இமாம் ஸஈத் இப்னுல் முஸய்யிப் (றஹ்) அவர்களது மகள் மணம் முடித்த மறுநாள் ஸுப்ஹ் நேரம் - அவர்களது கணவர் வெளிச்செல்வதற்காக தனது ஆடையை அணிந்துகொண்டார். அப்போது மனைவி ' எங்கு செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'ஸஈத் இப்னுல் முஸய்யிப் அவர்களின் சபைக்கு செல்கிறேன்...மார்க்க அறிவை பெறுவதற்காக' என்றார் கணவர்.

அப்போது இமாம் அவர்களின் மகளான மனைவியவர்கள் கூறினார்கள் : 'இங்கு அமருங்கள். இமாம் அவர்களின் அறிவை நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன்'.

நூல் : 'அல்மத்ஹல்', இமாம் இப்னுல் ஹாஜ்


12. தாபிஈன்களைச் சேர்ந்த காபிஸ் இப்னு ரபீஆ (ரஹ்) அவர்கள் பார்ப்பதற்கு நபியவர்களைப் போன்றே தோற்றமளிப்பார்கள். அவர்களை நபிகளாருக்கு பத்து வருடங்கள் பணிவிடைபுரிந்த அனஸ் (றழி) அவர்கள் கண்டால் அழுதுவிடுவார்கள்.

நூல் : ' கஷ்புல் முஷ்கில் ' , இமாம் இப்னுல் ஜவ்ஸி (றஹ்).


13. ‘நேரான பாதையை பற்றிக்கொள். வழிதவறிய பாதைகள் குறித்து எச்சரிக்கையாக இரு. நேரான பாதையில் பயணிப்பவர்கள் குறைவாக இருப்பதோ, வழிதவறிய பாதைகளில் செல்வோர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதோ உன்னை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம்'

இமாம் புழைல் இப்னு இயாழ் (றஹிமஹுல்லாஹ்)

நூல் : 'அல் இஃதிஸாம்'


14. நான்காம் கலீபா அலி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒருவர் வந்து "அபூபக்ர், உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் காலங்களில் தோன்றாத குழப்பங்களெல்லாம் உங்களுடைய ஆட்சியில் ஏன் தோன்ற வேண்டும்?" என்று கேட்டார்.

கலீபா அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : "அவர்கள் என் போன்றவர்களை ஆட்சிசெய்தார்கள். நான் உன் போன்றவர்களை ஆள வேண்டியிருக்கிறதே"


15. ‘இஸ்லாமிய புத்தாண்டு மலர்வதை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் குற்றமில்லை. அதே நேரம் அது மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட விடயமுமல்ல. வாழ்த்து தெரிவிப்பது வழக்காறு சார்ந்த விடயமேயன்றி வணக்க வழிபாடு சார்ந்த விடயமல்ல'

- அல்லாமா இப்னு உதைமீன் (றஹ்)


16. ‘அல்லாஹ் எதையும் சிறிதாக படைத்து பின்னர் பெரிதாக்குகிறான். ஆனால் துன்பங்கள், சோதனைகள் என்பவற்றை பெரிதாக படைத்து பின்னர் சிறிதாக்குகிறான்'

- ஹுதைபா (றழியல்லாஹு அன்ஹு)
நூல் : பஹ்ஜதுல் மஜாலிஸ், 250


17. யூனுஸ் அஸ்ஸதபீ (ரஹ்) கூறுகிறார்கள்: 'நான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களை விட பேரறிஞர் எவரையும் சந்தித்ததில்லை. ஒரு மார்க்க விடயம் தொடர்பில் அவர்களோடு ஒருநாள் விவாதித்தேன். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டோம். சில நாட்களின் பின் அவர்கள் என்னை சந்தித்த போது, என் கையைப் பிடித்து 'நாம் ஒரு மார்க்க விடயத்தில் உடன்படவில்லையென்றாலும் நாம் சகோதரர்களாக இருக்கலாமல்லவா?' என்று கேட்டார்கள்.

நூல் : 'ஸியரு அஃலாமிந் நுபலா', 10/16.


18. ஒருவர் தன் சுயநலனுக்காக பிறரை பழிவாங்குவது அவருக்கு இழிவையே கொண்டுவரும். மன்னிப்பதன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு கண்ணியத்தை கொடுக்கிறான். இதனைத்தான் நபியவர்கள் 'மன்னிப்பதனூடாக அல்லாஹ் ஒருவரது கண்ணியத்தை உயர்த்துகிறான்' என்பதாக கூறினார்கள். பழிவாங்குவதன் மூலமாக வெளிப்படையில் கண்ணியம் கிடைப்பது போல் தோன்றினாலும் உள்ளார்ந்த ரீதியாக அவருக்கு அது இழிவையே ஏற்படுத்தும். ஆனால் மன்னிப்பது உடனடியான அவமானமாக தோன்றினாலும் உண்மையில் வெளிப்படையிலும் உள்ரங்கமாகவும் அது கண்ணியத்தையே கொண்டுவரும்'

- இமாம் இப்னு தைமிய்யா (றஹ்)
நூல் : 'ஜாமிஉல் மஸாஇல்', 1/170


19. ஒரு நல் வார்த்தை பல உள்ளங்களை திறந்துவிடு

இமாம் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்களின் வீட்டில் திருடும் நோக்கில் ஒரு  திருடன் நுழைந்தான். நீண்ட நேரம் தேடியும் வீட்டில் பெறுமதியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. சற்று திரும்பினான். மாலிக் இப்னு தீனார் (ரஹ்) சலனமின்றி தொழுதுகொண்டிருந்தார்கள். திருடனிடம் அவர்கள் 'உலக பொருளொன்றை திருட முயற்சித்தும் எதுவும் உனக்கு கிடைக்கவில்லை. மறுமைக்கென்று எதையும் வைத்திருக்கிறாயா?' என்றார்கள். இந்த வார்த்தை திருடனை உலுக்கிவிட்டது. இமாம் அவர்களின் அருகில் அமர்ந்தான். அவனுக்கு உபதேசித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது உணர்வூட்டும் உபதேசம் அவனது உள்ளத்தை தொட்டு அவனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. 

இப்படியே ஸுப்ஹ் நேரமாகி விடவே இருவரும் மஸ்ஜிதுக்கு சென்றார்கள். மக்களுக்கு பேராச்சரியம். பிரதேசத்தின் பிரபல திருடன் பேரறிஞர் ஒருவருடன்.. இது எப்படி சாத்தியம்..? மக்கள் ஆச்சரியத்துடன் வினவினார்கள். இமாம் அவர்கள் அமைதியாக கூறினார்கள் : 'அவர் நம்மிடத்தில் திருடுவதற்காக வந்தார். நாம் அவரது உள்ளத்தை திருடி விட்டோம்'.


20. ‘எறும்பு செல்லும் வழியில் நீ உன் விரலை வைத்தால் உன் விரலை நீ தூக்கும் வரை அது காத்திருக்காது; மாறாக அது தன் வழியை மாற்றிக்கொள்ளும்.

மூடப்பட்ட வாயிலின் முன் நிற்காதே! வாயில்களோ அதிகமுள்ளன. வாழ்வாதாரம் அளிப்பவன் வானத்திலிருக்கிறான். அவன் உனக்கு ஒன்றை தராமல் தடுத்தது, அதை விட சிறந்த வேறொன்றை உனக்கு வழங்குவதற்காக இருக்கலாம்!' 

-கலாநிதி முஹம்மத் அல்அரீபி


21. தவறுகளுக்கான அடிப்படைகள் மூன்று :

1. பெருமை - இதுதான் இறைகட்டளைக்கு அடிபணிய இப்லீஸை தடுத்தது.

2. பேராசை - இது ஆதம் நபியை சுவனத்திலிருந்து வெளியேற்றியது.

3. பொறாமை - இது ஆதம் நபியின் புதல்வர்களில் ஒருவர் தன் சகோதரன் மீது அடர்ந்தேற தூண்டியது

இம் மூன்று தீய பண்புகளிலிருந்து தன்னை பாதுகாத்துகொண்டவர் முழு தீமைகளிலிருந்தும் பாதுகாப்பு பெற்றிடுவார்.

- பெருமையிலிருந்து இறை நிராகரிப்பு தோன்றுகிறது.

- பேராசை மூலம் பாவங்கள் உருவாகின்றன.

- பொறாமை அநீதியிழைக்கத் தூண்டுகிறது".

- இமாம் இப்னுல் கையிம் (றஹ்)

நூல் : 'அல்பவாஇத்'


22. உண்மையான அறிஞர்கள் அறிவில் மட்டுமல்ல பண்பாட்டிலும் சிகரம் தொட்டவர்கள்!!

இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,  நபர் ஒருவர் இமாம் அவர்களை பற்றி மோசமாக பேசியதாக குறிப்பிட்டார். அப்போது இமாம் அவர்கள் " நீ கூறியது உண்மை என்றால் நீ கோள் சொல்பவன், நீ கூறியது பொய் என்றால் நீ ஒரு கெட்டவன்" என்றார்கள்.

வந்த மனிதர் வெட்கித்து திரும்பிச்சென்றுவிட்டார்.


23. உங்களில் ஒருவர் உழைக்க செல்லாமல் உட்கார்ந்துகொண்டு 'யாஅல்லாஹ் எனக்கு உணவளிப்பாயாக' என்று பிரார்த்திக்கவேண்டாம். வானம் உங்களுக்காக தங்கத்தையோ, வெள்ளியையோ மழையாக பொழியாது.

- உமர் றழியல்லாஹு அன்ஹு


24. இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒருவர் கேள்வி ஒன்றை முன்வைத்தார். இமாம் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். 'என் கேள்விக்கு பதிலளிக்கமாட்டீர்களா?' என்று வினா தொடுத்தவர் கேட்ட போது இமாம் அவர்கள் கூறினார்கள் :  ' இந்த கேள்விக்கு பதிலளிப்பதில் நலவுள்ளதா? மௌனமாக இருப்பதில் நலவுள்ளதா? என்று யோசிக்கிறேன்'.

 'அல்கலிமுத் தய்யிப்'


படித்ததில் பிடித்தது:

1. அறிஞர் ஒருவரிடம் ஒரு மனிதர் வந்து  பிறிதொரு மனிதர் பற்றி கோள் கூறினார். அப்போது அறிஞர் அம்மனிதரிடம் 'எனது ஒரு சகோதரனைப் பற்றி கொள்சொன்னதன் மூலம் மூன்று குற்றங்களை நீ இழைத்திருக்கிறாய் :

1. எனக்கும் அந்த சகோதரனுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளீர்.

2. வெறுமையாக இருந்த எனது உள்ளத்தில் சுமையை உண்டாக்கியுள்ளீர்.

3. உன்னைப் பற்றிய தப்பபிப்பிராயத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளீர்.


2. ‘உங்களது நண்பர் ஒருவர் உங்கள் மீது வைத்துள்ள நேசத்தை எவ்வாறு அறிந்துகொள்வீர்கள்?' என ஓர் அறிஞரிடம் வினவப்பட்டது.

அதற்கவர், 'எனது நண்பர் என் கவலைகளை சுமந்துகொள்வார், எனது கஷ்டங்களை கேட்டறிந்துகொள்வார், எனது குறைகளை மறைத்துவிடுவார், எனது தவறுகளை மன்னித்துவிடுவார், என் இறைவனை எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார்' என்று கூறினார்.

'இத்தகைய ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு கைமாறு செய்வீர்கள்?' என்று மீண்டும் அறிஞரிடம் வினவ, 'அவருக்கு தெரியாமல் மறைமுகமாக அவருக்காக பிரார்த்திப்பேன்' என்று கூறினார்.

மனிதர்கள் அனைவரையும் திருப்திப்படுத்துவது அடையமுடியாத இலக்கு. அல்லாஹ்வை திருப்திப்படுத்துவது தவறவிடக்கூடாத இலக்கு. அடையமுடியாத இலக்கை விட்டுவிட்டு, தவறவிடக்கூடாத இலக்கை அடைய முயற்சிசெய்!


3. உள்ளங்களை தன் கைவசம் வைத்திருக்கும் இறைவனே உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.

ஒருவர் சினிமா தியேட்டரில் மரணித்தார். மற்றவர் மஸ்ஜிதில் மரணித்தார்.

முதலாமவரோ பிறருக்கு உபதேசிப்பதற்காக தியேட்டருக்கு சென்றார்; இரண்டாமவரோ செருப்பு திருடுவதற்காக மஸ்ஜிதுக்குள் நுழைந்தார்.

வெளிரங்கத்தை பார்த்து ஒருவர் சுவனவாதியா, நரகவாதியா என்று தீர்ப்பு வழங்க உனக்கோ, எனக்கோ அதிகாரமில்லை.


4. ஐந்து செகன்ட் கதை:

ஒரு பிரதேசவாசிகள் மழைத் தொழுகை தொழ தீர்மானித்து தொழுகைக்காக மைதானம் ஒன்றில் ஆயிரமாய் அணிதிரண்டார்கள். ஒரு சிறுவன் மாத்திரம் கையில் குடையோடு தொழுகையில் கலந்துகொண்டான்.

#நம்பிக்கை


6. ‘மறுமையின் மிகப் பெரும் கைசேதம், உனது நற்செயல்கள் மற்றொருவரின் தராசில் காணப்படுவதாகும்’


7. ஹலால் ஹராம் பேணி
வளர்க்கப்படாத மேனி
மறுமையில் நரகுக்கு தீனி


8. பணிவுத்தன்மை நிறைந்த அறிவிலிகள் பலரின் அறிவின்மையை அவர்களது பணிவு மூடிமறைத்துவிட்டது, 

அறிவில் மிகைத்திருந்த பலரின் கண்ணியத்தை அவர்களது கர்வம் தகர்த்தெறிந்து விட்டது.

உன் வாழ்வு முழுவதும் கர்வம்கொள்வதை விட்டுவிடு, கர்வம் நிறைந்தோரிடம் சகவாசம்கொள்ளாதே. 

ஒரு இளைஞனுக்கு ஏற்படும் கர்வமானது அவனுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடும் (பெரும்) குறைபாடாகும்.


9. பிறரின் திறமைகளை ஏற்றுக்கொள்வது நபிமார்களின் பண்பு.

- நபி மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள் : 'எனது சகோதரன்  ஹாரூன் என்னை விட மிகத் தெளிவாக பேசக்கூடியவர்' (28:34).

பிறரின் திறமைகளை ஏற்க மறுப்பது ஷைத்தானின் பண்பு.

- ஆதம்  நபிக்கு ஸுஜூத் செய்யுமாறு பணிக்கப்பட்ட போது ஷைத்தான் கூறினான் : 'நான் அவரை விட மிகச் சிறந்தவன்' (7:12).


10. நற்செயல் புரிவதென்பது பெரிய விடயமல்ல; அச்செயலை பாதுகாப்பதுதான் அதி முக்கியமானது.  நற்செயல் புரியும் போதே அதை பாழாக்கிவிடுகின்ற, செய்துமுடித்த பின் கூலியை இல்லாமலாக்கிவிடுகின்ற விடயங்களை அறிந்திருப்பது, அவற்றிலிருந்து தவிர்ந்திருப்பது, அதன் மூலம் செய்த நற்செயலை பாதுகாப்பது என்பதே மிக முக்கியமானது.

- இணைவைப்பு
- ஸுன்னாவை புறக்கணித்தல்
- உலக ஆதாயம்
- புகழும் பாராட்டும்
- முகஸ்துதி
- தற்பெருமை
- சொல்லிகாட்டுதல் 

நற்செயல்களை பாழாக்கி, நற்கூலியை இல்லாதொழிப்பதோடு, பாவத்தை தேடித் தருபவை


11. ‘தமது கொழுப்பை குறைப்பதற்காக இரண்டு மணித்தியாலங்கள் நடை கருவியில் பயிற்சியெடுக்கும் பலர் இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தமது பாவங்களை குறைப்பதற்காக இரண்டு நிமிடங்களேனும் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்க மாட்டார்கள். 

"நிச்சயமாக தொழுகை உள்ளச்சமுடையோருக்கே தவிர ஏனையோருக்கு மிக பாரமாக இருக்கும் " (2:45) என்று அல்லாஹ் கூறியது எத்தனை உண்மையானது!


أحدث أقدم