உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு


*அல்குர்ஆனிய பேரறிஞர்*

*பிறப்பு:* மதீனாவில் அன்சாரிகளில் கஸ்ரஜ் கோத்திரத்தில் பிறந்தார்.
 
*இறப்பு:* ஹிஜ்ரி 32-ல் மதீனாவில் மரணமடைந்தார்.

*இஸ்லாத்திற்குப் பிறகு அவர்களின் பங்களிப்புகள் :*

ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராகவும், மதீனாவில் வாழ்ந்த அன்சாரிகளில் சிறப்புக்குரியவராகவும் திகழ்ந்தார்கள்.

*குர்ஆன் பற்றிய அவர்களின் அறிவு :*

 திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களில் முக்கியமானவர். குறிப்பாக, குர்ஆன் வசனங்களின் பொருள்கள், அது அருளப்பட்ட சூழல் (சானுன் நுஸுல்) ஆகியவற்றை ஆழமாக அறிந்திருந்தார். இதனால், இறைத்தூதர் அவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவரை 'குர்ஆனை அதிகம் அறிந்தவர்' என்று புகழ்ந்தார்கள்.

இறைத்தூதர் அவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒருமுறை உபை இப்னு கஅப் அவர்களை நோக்கி, "உபை! அல்லாஹ் உனக்கு அல்குர்ஆனை ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்" என்று கூறினார்கள். அதைக் கேட்ட உபை அவர்கள், "அல்லாஹ் என் பெயரைச் சொன்னானா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். இறைத்தூதர் அவர்கள், "ஆம்" என்று உறுதிப்படுத்தியதும், உபை அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.

*குர்ஆன் தொகுப்பில் பங்களிப்பு *

 அபூபக்கர் சித்தீக் அவர்கள் (ரழியல்லாஹு அன்ஹு) ஆட்சிக் காலத்தில் குர்ஆனை தொகுக்கும் போது, குர்ஆனின் சரியான வசனங்களை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். மேலும், அவர்களின் ஆலோசகராகவும் இருந்தார்.

*மக்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுத்தல்*

உமர் இப்னு கத்தாப் அவர்கள் (ரழியல்லாஹு அன்ஹு) ஆட்சிக்காலத்தில், மக்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கும் பணியையும் இவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

*ஸகாத் வசூலிப்பாளர்*

 இறைத்தூதரின் ஸகாத் வசூலிப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

*சிறப்புப் பெயர்: 'சைய்யிதுல் குர்ரா'*

 இவரது சிறப்புப் பெயர்களில் 'சைய்யிதுல் குர்ரா' (குர்ஆன் ஓதுபவர்களின் தலைவர்) என்பதும் ஒன்றாகும். உமர் அவர்கள் (ரழியல்லாஹு அன்ஹு) இவரை இவ்வாறுதான் அழைப்பார்கள்.

*ஹதீஸ் மற்றும் மார்க்கத் தீர்ப்புகளில் பங்களிப்பு*

பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். மார்க்கத் தீர்ப்புகளை வழங்குவதிலும் சிறந்து விளங்கினார். இவரது அறிவும், ஆழ்ந்த ஞானமும் பிற நபித்தோழர்களால் மதிக்கப்பட்டது.

*வஹீ எழுத்தாளர்:*

 வஹீ எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மற்ற ஆட்சியாளர்களுக்கும், தலைவர்களுக்கும் இறைத்தூதர் அவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அனுப்பிய கடிதங்களையும் இவர்கள் எழுதியுள்ளனர்.

*உமர் அவர்களின் பாராட்டு:*

 உமர் அவர்கள் (ரழியல்லாஹு அன்ஹு) இவர்களை, "அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் மற்றும் உபை இப்னு கஅப் ஆகிய இருவரின் பின்னால் நின்று தொழுபவன் தன் அறிவை அதிகரித்துக் கொள்கிறான்" என்று புகழ்ந்துள்ளார்கள்.

*வணக்க வழிபாடுகளில் பேணுதலானவர்:*

வணக்க வழிபாடுகளில் மிகுந்த பேணுதலுள்ளவராக இருந்தார்.இரவுத் தொழுகையில் அதிகம் குர்ஆன் ஒதுபவராக இருந்தார்கள்.

*போர்களில் பங்களிப்பு:*

 பத்ர், உஹத், அகழ், மக்கா வெற்றி, பையத்துர் ரிழ்வான், ஹுனைன், கைபர் போன்ற ஆரம்பகால அனைத்துப் போர்களிலும் வீரத்துடன் போரிட்டார்கள்.

*படிப்பினை:*

உபை இப்னு கஅப் அவர்களின் வாழ்க்கையிலிருந்து, குர்ஆனை ஆழமாகப் படிப்பதன் முக்கியத்துவத்தையும், அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் அவசியத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம். குர்ஆனை அறிந்துகொள்வதிலும், அதன்படி நடப்பதிலும் நாம் உபை இப்னு கஅப் அவர்களை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
أحدث أقدم