அல்குர்ஆன் 3:77


3:77
إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَبِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ 
الْقِيمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ 

அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களை யும் அற்ப விலைக்கு விற்றுவிட்டவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறும் கிடையாது. அவர்களுடன் அல்லாஹ் பேசமாட்டான். மறுமை நாளில் அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனை தான் கிடைக்கும்.

அவர்களுடன் அல்லாஹ் பேசமாட்டான்: 

"அவர்களுடன் அல்லாஹ் பேசமாட்டான்; மறுமை நாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்” என்கிறது இந்த வசனம். அதாவது, அவர்களிடம் கனிவாகப் பேசமாட்டான்: கருணை நிறைந்த கண் கொண்டு பார்க்கவு மாட்டான். 

அடுத்து ''அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்" அதாவது குற்றங்களிலிருந்தும் அழுக்குகளிலிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்தி நல்லவர்களாக ஆக்க மாட்டான். மாறாக, அவர்களை(க் குற்றவாளி களாக) நரகத்திற்குக் கொண்டுசெல்லுமாறு உத்தரவிடுவான். இறுதியில்,'அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்" என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது. 

இந்த வசனம் (77) தொடர்பாக ஏராளமான நபிமொழிகள் வந்துள்ளன. அவற்றில் சில வற்றை இங்கே காண்போம்: 

1. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவுமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்" என்று கூறினார்கள். இதையே (திரும்பத் திரும்ப) மூன்று முறை கூறினார்கள். 

அப்போது நான், "(அவ்வாறாயின்) அத்தகையோர் நஷ்டத்திற்கும் இழப்பிற்கும் ஆளாகிவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே(பெருமைக்காக) இறக்கிக் கட்டுபவர். (செய்த உதவியைச்) சொல்லிக் காட்டுபவர். பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்" என்று கூறினார்கள். 
(ஸஹீஹ் முஸ்லிம் 171) 

2.நபித்தோழர் அதீ பின் உமைரா அல் கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 'கிந்தா' எனும் குலத்தைச் சேர்ந்த இம்ரஉல் கைஸ் பின் ஆபிஸ் (ரலி) அவர்கள், 'ஹள்ர மவ்த்' எனும் ஊரைச் சேர்ந்த ஒருவர்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு நிலம் தொடர்பாக வழக்குத் தொடுத் தார்கள். நபி (ஸல்) அவர்கள், "(நிலம் தமக் குரியது என்பதற்கான) ஆதாரத்தை நிரூ பித்துவிட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளலாம்" என ஹள்ரமவ்த்தைச் சேர்ந்தவருக்குத் தீர்ப்பளித்தார்கள். 

ஆனால், அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை. பின்பு "(நிலம் தமக்குரியதே என்று) சத்தியம் செய்தால் நிலத்தை எடுத்துக்கொள்ளலாம்" என்று இம்ரவுல் கைஸ் பின் ஆபிஸ் (ரலி) அவர்களுக்குத் தீர்ப்பளித்தார்கள். 

உடனே ஹள்ரமவத்தைச் சேர்ந்தவர். "அல்லாஹ்வின் தூதரே! அவருக்குச் சத்தியம் செய்ய நீங்கள் வாய்ப்பளித்தால் அல்லாஹ்வின் மீது ஆணையாக'. அல்லது கஅபாவுடைய இறைவன்மீது ஆணையாக எனது நிலம் (என் கையிலிருந்து பறி போய்விடும்" என்றார். 

அப்போது நபி (ஸல்) அவர்கள். ஒருவர் தம்முடைய (முஸ்லிம்) சகோதரரின் செல்வத்தை அபகரிப்பதற்காகப் பொய்ச் சத்தியம் செய்தால், அவர்மீது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள். தொடர்ந்து "அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றவர்களுக்கு..." எனும் இந்த வசனத்தை (77) ஓதினார்கள்.

உடனே இம்ரஉல் கைஸ் (ரலி) அவர்கள். "அல்லாஹ்வின் தூதரே! அதை விட்டுக் கொடுப்பவருக்கு ஏதாவது (நன்மை) கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கம் (கிடைக்கும்)" என்றார்கள். "அப்படியானால் அந்த நிலம் முழுவதையும் அவருக்கே விட்டுக்கொடுக்கிறேன். இதற்கு நீங்களே சாட்சி" என்று இம்ரவுன் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். 

(முஸ்னத் அஹ்மத்)


பொய்ச் சத்தியம் செய்யும் வியாபாரியின் நிலை:

 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடைத்தெருவில் ஒருவர் விற்பனைச் சரக்கைப் பரப்பினார். அப்போது அவர் தாம் அப்பொருளைக் கொள்முதல் செய்யும்போது கொடுக்காத (விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். (வாங்க வந்த) ஒரு முஸ்லிமின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருந்தது. அப்போதுதான் இந்த வசனம் (77) அருளப்பெற்றது.'" 

(புகாரி 2088,2675). 

தஃப்சீர் இப்னு கஸீர்
Previous Post Next Post