தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட ஒன்று. அதற்குரிய நேரங்களில் தவறாது தொழுகைகளை நிறைவேற்றி வருவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் இரு சாராரின் மீதும் கடமையாகும்.
வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறைத் தூதர் என சாட்சி கூறி தூய இஸ்லாத்திற்குள் நுழைகின்ற ஒவ்வொருவரின் மீதும் ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுது வருவது அவசியமாகும். மேலும் ஐவேளைத் தொழுகைகளை கவனத்துடனும், குறைவுகளின்றியும் பூரணமாக நிறைவேற்ற வேண்டும். எவ்விதக் குறைக ளுமின்றிப் பூரணமாகத் தொழுகைகளை நிறைவேற்றும் பொழுது அத்தொழுகைகள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. குறைகளின்றி பூரணமாகத் தொழுகைகளை நிறைவேற்ற ஆஷை கொண்டாலும் சில சமயங்களில் மறதியாக சில குறைபாடுகள் தொழுகின்றவனையும் அறியாமல் நிகழ்ந்து விடுகின்றது. அந்நேரத்தில் தன்னுடைய தொழுகை வீணாகி விடுமோ, அல்லது பலனற்றதாகி விடுமோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டு மீண்டும் அத்தொழுகையை நிறைவேற்றினால் தான் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்ற ஓர் உணர்வை அவனிடத்தில் பார்க்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னைச் சிரமப்படுத்திக் கொண்டு மீண்டும் அத்தொழுகையைத் தொழும் மக்களையும் பார்க்கின்றோம். ஆனால் புனித இஸ்லாம் மார்க்கமோ மிகவும் இலகுவானது. மறதியேற்பட்டு, குறைகள் நிகழ்ந்த தொழுகையை மீண்டும் நிறைவேற்ற வேண்டியதில்லையெனக் கூறி அதற்கு மாற்றீடாக அது நிறைவேறுவதற்குரிய வழிமுறைகளையும் இஸ்லாம் காட்டித் தந்துள்ளது. அவ்வழிமுறைதான் ஸஜ்தா ஸஹ்வாகும்.
எனவே ஒவ்வொருவரும் தங்களது தொழுகையில் ஏற்பட்ட குறைகளை, மறதிகளை நிவர்த்தி செய்ய ஸஜ்தா ஸஹ்வுடைய சட்டங்களை அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.
தொழுகையில் மறதியினால் ஏற்படும் தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக செய்ய வேண்டிய சஜ்தாக்கள் சம்பந்தமான சட்டங்கள். பெரும்பாலானவர்கள் தமது தொழுகைகளில் மறதிக்காக செய்ய வேண்டிய ஸஜ்தாக்களின் சட்டங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். எனவே அதைத் தெளி வுபடுத்துவதாக இப்புத்தகம் அமைந்துள்ளது.
ஸஜ்தா ஸஹ்வு என்றால் என்ன?
தொழுகையை நிறைவேற்றுபவன் தனது தொழுகையில் நிகழ்ந்து விடும் முறைகேடுகளை நிவர்த்தி செய்வதற்காக செய்யப்படும் இரண்டு ஸுஜூதுகளுக்கு ஸஜ்தா ஸஹ்வு எனப்படும்.
தொழுகையில் முறைகேடுகளை மூன்று காரணங்களினால் சந்திக்கின்றான்:
1-தொழுகையில் ஒன்றை அதிகமாக்குதல் அல்லது இணைத்தல்.
2-தொழுகையில் குறைவு செய்தல்.
3-தொழுகையில் சந்தேகம் ஏற்படல்.
முதலாவது வடிவம்
தொழுகையில் ஒரு விடயம் அதிகமாக்கப்படும் போது அதன் சட்டம் யாது?
ஒருவர் தனது தொழுகையில் வேண்டுமென்றே கியாம், ஸஜ்தா, ருகூவு, இருப்பு அல்லது ஒரு ஸஜ்தா ஆகியவைகளைக் கூட்டினால் அவனது தொழுகை முறிந்து (பாதிலாகி) விடும். எனினும் தன்னையும் அறியாமலே மறதியாக இவைக ளில் ஒன்றை யாரேனும் அதிகப்படுத்திச் செய்து, தொழுகையை முடிக்கும் முன் அது அவனுக்கு ஞாபகம் வந்தால் அதற்காக அவன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அப்பொழுது அவனது தொழுகை நிறைவேறி விடும்.
தொழுகையில் ஏதேனும் ஒன்றை அதிகப்படுத்திச் செய்யும் போது அது உடனே ஞாபகத்திற்கு வந்தால் அவன் உடனடியாக அச்செயலிலிருந்து விடுபடுவது அவன் மீது வாஜிபாகும். அவ்வாறு உடனே அவன் அதிலிருந்து திரும்பினாலும் அவனது மறதிக்காக அவன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ளுஹருடைய நான்கு ரக்அத் தொழுகை யை மறதியாக ஒருவன் ஐந்து ரக்அத்தாகத் தொழுகின்றான். ஐந்தாவது ரக்அத்தில் 'தஷஹ்ஹுத்' அத்தஹிய்யாத் இருப்பில் அமரும் வரை அவனுக்கு ஞாபகம் வரவில்லையானால் அவன் அந்த ரக்அத்தைப் பூரணப் படுத்திவிட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் அதற்காக இரு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். பின்னர் ஸலாம் கொடுக்க வேண்டும்.
ஐந்தாவது ரக்அத் பற்றிய நினைவு ஸலாம் கொடுத்ததன் பின்னர் அவனுக்கு ஞாபகம் வந்தால் அவன் உடனே இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். ஐந்தாவது ரக்அத்தை அவன் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது மேலதிகமாக ஒரு ரக்அத் தொழுகின்றோம் என அவனுக்கு ஞாபகம் வந்தால் (தஷஹ்ஹுத்) அத்தஹிய்யா த் இருப்பில் அமர்ந்து (தஷஹ்ஹுதை) அத்தஹிய்யாத்தை ஓத வேண்டும். பின்னர் இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. அதாவது, 'நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ளுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்தாகத் தொழுது விட்டார்கள். தொழுகையில் (ரக்அத்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளதா? என நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நான் எதை அதிகப்படுத்தினேன்? என்றார்கள். நபித்தோழர்கள், தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்கள் எனக் கூறினார்கள். உடனே நாயகம் (ஸல்) அவர்கள், ஸலாமுக்குப் பின்னால் இரண்டு ஸஜ் தாக்கள் செய்தார்கள்'.
மற்றொரு அறிவிப்பில், 'நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது கால்கள் இரண்டையும் இணைத்து கிப்லாவை முன்னோக்கி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள்' என வந்துள்ளது. அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி). ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூ தாவூத், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா.
தொழுகை நிறைவு பெற முன் ஸலாம் கொடுத்தால் அதன் சட்டம் என்ன?.
தொழுகை நிறைவு பெற முன்னால் ஸலாம் கொடுத்தால் தொழுகையில் அதிகரிப்பு செய்ததாகவே கணிக்கப்டும். (இதை அதிகரிப்பு என்று சொல்லப்படும் காரணம் யாதெனில் அவன் தொழுகையில் மேலதிகமாக ஒரு ஸலாமை இணைத்து விட்டான் என்பதினாலாகும்). ஒருவன் தனது தொழுகை பூர்த்தி பெறும் முன் அலட்சியமாக வேண்டுமென்றே ஸலாம் கொடுத்து விட்டால் அவனுடைய தொழுகை கூடாது. அது நிறைவேற மாட்டாது. ஒருவன் தனது தொழுகை பூர்த்தி பெறும் முன் மறதியான நிலையில் ஸலாம் கொடுத்து விடுகின்றான், பின்னர் சற்று நேரத்தில் அது அவனுக்கு ஞாபகம் வந்தால் உடனே தனது தொழுகையை விடுபட்டதிலிருந்து பூரணப்படுத்த வேண்டும். பின்னர் ஸலாம் கொடுக்க வேண்டும். பிறகு மறதிக்காக அவன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும். இதற்கு ஆதாரம் பின்வரும் நபி மொழியாகும். அதாவது,
'நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் ளுஹர் அல்லது அஸர் தொழுகையை நடாத்தினார்கள். அப்பொழுது இரண்டு ரக் அத்துடன் ஸலாம் கொடுத்து விட்டார்கள். மக்கள், தொழுகையில் குறைவு ஏற்பட்டு விட்டதோ என்று தங்களுக்கிடையில் கூறிய வண்ணம் பள்ளியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் ஒரு பலகையின் மீது சாய்ந்தவர்களாக தாங்கள் கோபத்துடன் இருப்பது போன்று இருந்தார்கள். ஒரு மனிதர் நபியவர்களது முன்னால் சென்று அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள், நான் மறக்கவுமில்லை, தொழுகை சுருக்கப்படவுமில்லை என்றார்கள். அம்மனிதர், தாங்கள் உறுதியாக மறந்து விட்டீர்கள் என்றார். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய நபித்தோழர்களிடம் இவர் இவ்வாறு கூறுவது சரி தானா என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றார்கள். உடனே நபியவர்கள் முன் சென்று தங்களது தொழுகையில் விடுபட்ட மீதமுள்ள ரக்அத்களைத் தொழுது விட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு மறதிக்காக இரண்டு ஸஜ்தா செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுத்தார்கள்' அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் புகாரி, முஸ்லிம்.
மஃமூம்களில் சிலருக்கு தொழுகையில் சிலது விடுபட்டிரு க்கும் நிலையில் அவர்கள் அதை நிறைவேற்ற எழுந்போது, இமாம் அவருடைய தொழுகை முடிய முன்னர் ஸலாம் கொடுத்து விடுகின்றார். உடனே இமாமுக்கு தனது தொழுகையில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது ஞாபகம் வந்தால் அவர் விடுபட்டதை நிறைவேற்ற எழுந்து நிற்பார். அச்சமயம் விடுபட்ட தங்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற எழுந்திருந்த மஃமூம்கள் தங்களுக்கு விடுபட்டதை தொடர்ந்தும் நிறைவேற்றி விட்டு ஸஜ்தா ஸஹ்வு செய்யுமாறோ, அல்லது இமாமுடன் சேர்ந்து அவரைப் பின்பற்றித் தொழுது, இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் அவர்களுக்கு விடுபட்டதை அவர்கள் நிறைவேற்றி ஸலாம் கொடுக்க முன்னர் மறதிக்காக ஸஜ்தாச் செய்யுமாறோ இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவர். இதுவே சிறந்த பேணு தலான முறையாகும்.
தொழுகையில் குறைவு நிகழும் சந்தர்ப்பத்தில் ஸஜ்தா ஸஹ்வு செய்வதன் சட்டம்.
தொழுகையின் ருக்ன்களில் ஏதாவதொன்றைக் குறைத்தல். அதாவது தொழுபவர் ஏதாவது ஒரு ருக்னைத் தவற விட்டால், தவறியது ஆரம்பத் தக்பீராக இருந்தால் அவனுடைய தொழுகை நிறைவேறாது. அவன் வேண்டுமென்றே அதை விட்டாலும், அல்லது மறதியாக விட்டாலும் அவன் தொழுகையை ஆரம்பிக்கவில்லை என்றே கருதப்படும். தொழுகையில் ஏனைய ருக்ன்களில் ஒன்றை வேண்டுமென்றே ஒருவன் விட்டால் அவனது தொழுகை கூடாது. அது வீணாகி (பாதிலாகி) விடும்.
ஒருவன் ஒரு ருக்னை மறதியாக விட்டு இரண்டாவது ரக் அத்தில் அந்த ருக்னை நிறைவேற்றும் இடத்திற்கு அவன் வந்து சேர்ந்து விட்டால் அவன் எந்த ருக்னை விட்டானோ அந்த ரக்அத் வீணாகி விடும். அவன் நிறைவேற்றிய இரண் டாவது ரக்அத் முதலாவது ரக்அத்தினுடைய இடத்தில் அமையும். அதாவது இரண்டாவது ரக்அத் முதலாவது ரக் அத்தாகக் கணிக்கப்டும். அதே நிலையில் இரண்டாவது ரக்அத்தில் அந்த ருக்னை நிறைவேற்றும் இடத்திற்கு அவன் வந்து சேர வில்லையானால் அவனுக்கு விடுபட்ட ருக்னை நிறைவேற்ற அவன் மீண்டும் அதே ருக்னுக்கு வந்து சேர்ந்து அதையும், அதற்குப் பின்னாலுள்ளவைகளையும் நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு நிலைகளிலும் ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்வது அவன் மீது வாஜிபாகும்.
உதாரணம் 1: ஒருவர் ஆரம்ப ரக்அத்தின் இரண்டாவது ஸஜ்தாவை மறந்து விட்டார். பிறகு இரண்டாவது ரக்அத்தில் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்திருக்கும் போது அது நினைவு வந்தால் அந்நிலையில் ஆரம்ப ரக்அத் நிறைவேறாது. அப்போது இரண்டாவது ரக்அத் அவனுக்கு முதல் ரக்அத்தாக கணிக்கப்படுகின்றது. அவ்வாறு கணித்து தனது தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பின்னர் அவனது மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்து மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
உதாரணம் 2: ஒருவன் முதல் ரக்அத்தில் இரண்டாவது ஸஜ்தாவையும், அதன் பின்னர் அமர்வதையும் மறந்து விட்டான். இரண்டாவது ரக்அத்தில் ருகூவுக்குப் பின் எழுந்து நின்றபோது அது அவனுக்கு ஞாபகம் வந்தால் அப்போது அவன் ஸஜ்தா செய்து தனது தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பின்னர் அவனது மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்து மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
தொழுகையின் வாஜிபுகளில் குறைவு ஏற்பட்டால்...
ஒருவன் தொழுகையின் வாஜிபுகளில் ஏதாவதொன்றை வேண்டுமென்றே விட்டால் அவனது தொழுகை முறிந்து விடும். மறந்த நிலையில் ஒரு வாஜிபை ஒருவன் விடுகின்றான். உடனே அவ்விடத்தை விட்டும் பிரிவதற்கு முன்னால் அது அவனுக்கு ஞாபகம் வந்தால் அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். அந்நேரம் அவன் மீது மறதிக்கான ஸஜ்தா செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு வாஜிபை மறதியாக விட்டு, அந்த வாஜிபுடைய இடத்தை விட்டும் அவன் பிரிந்து விடுகின்றான். ஆனால் அடுத்த ருக்னை அவன் வந்து சேர வில்லையானால் உடனே அவன் மறந்து விட்ட வாஜிபை நிறைவேற்ற மீண்டும் அதை நிறைவேற்ற வேண்டும். பிறகு அவன் தனது தொழுகையைப் பூரணப்படுத்தி விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பின்னர் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும். ஒரு வாஜிபை ஒருவன் மறதியாக விட்டு அதற்கடுத்த ருக்னுக்கு வந்து சேர்ந்தால் அவ்வாஜிபு அவனில் நின்றும் விழுந்து விடும். அவன் தனது தொழுகையைத் தொடர்ந்து தொழுது விட்டு ஸலாம் கொடுக்க முன்னர் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
உதாரணமாக: ஒருவன் இரண்டாவது ரக்அத்தின் இரண்டாவது ஸஜ்தாவுக்குப் பின்னால் (தஷஹ்ஹுத்) அத்தஹிய் யாத்தை மறந்து மூன்றாவது ரக்அத்திற்கு எழும்ப ஆரம்பிக்கும் முன்பே அவனுக்கு அது ஞாபகம் வந்தால் உடனே அப்படியே அமர்ந்து விட வேண்டும். அமர்ந்து அத்தஹிய்யா த்தை ஓதி விட்டு தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும். அவனது அந்த மறதிக்காக அவன் ஸஜ்தாச் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் அவன் அத்தஹிய்யாத்துக்கு உட்காராமல் எழுந்து விட்டால், அல்லது பூரணமாக எழுந்திருப்பதற்கு முன் அவனுக்கு ஞாபகம் வந்தால் அவன் உடனே மீண்டும் அமர்ந்து விட வேண்டும். அமர்ந்து அத்தஹிய்யாத்தை ஓதி தொழுகையைப் பூரணப்படுத்தி விட்டு ஸலாமும் கொடுக்க வேண்டும். பின்னர் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும். பூரணமாக எழுந்து நிலைக்கு வந்த பிறகு அவனுக்கு ஞாபகம் வந்தால் அவனது அத்தஹிய்யாத் அவனை விட்டும் விழுந்து விடும். அவன் மீண்டும் இருப்புக்குத் திரும்ப வேண்டியதில்லை. அவன் அப்படியே அவனது தொழுகையைப் பூரணப்படுத்தி விட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன்பே மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது. அதாவது, நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ளுஹர் தொழுகையைத் தாங்களே நடாத்தினார்கள். ஆரம்ப இரு ரக்அத்துகளின் பின்னால் (நடு அத்தஹிய்யாத்தில்) அமராமல் எழுந்து நின்று விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் அவர்களுடன் எழுந்து நின்று விட்டார்கள். அப்படியே நபியவர்கள் தங்களது தொழுகையை முடிக்கின்ற அளவுக்கு வந்து விட்டார்கள். மக்கள் அனைவரும் தொழுகையை முடிக்க ஸலாத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் நபியவர்கள் அமர்ந்தவாறே ஸலாம் கொடுக்க முன்னர் தக்பீர் சொல்லி இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி). ஆதாரம்: புகாரி.
சந்தேகமான நிலையில் ஸஜ்தா சஹ்வின் சட்டங்கள்
சந்தேகம் என்றால் என்ன?
இரண்டு விடயங்களில் எது நிகழ்ந்தது என தடுமாற்றம் ஏற்படுதல். அதாவது ஊர்ஜிதமில்லாத நிலை ஏற்படுதல். இவ்வாறான சந்தர்ப்பம் நிகழும் போது வணக்கங்களில் மூன்று நிலமைகள் சந்தேகங்களை ஏற்படுத்தும்.
1- வஸ்வாஸைப் போல் அடிப்படையில்லாத சந்தேகம் ஏற்படுதல்.
2-எந்த வணக்கத்தைச் செய்தாலும் அதில் சந்தேகம் ஏற்படுதல்.
3-ஒரு வணக்கத்தை முடித்ததன் பின்னால் அதில் சந்தேகம் ஏற்படுதல். அவ்வாறு சந்தேகம் ஏற்பட்டால் அவ்விடயம் உறுதியாகாத வரையில் அவன் அதைச் செய்ய மீளக்கூடாது. அவ்வாறு அது உறுதியாகும் பட்சத்தில் அதை நிறைவேற்ற வேண்டும்.
உதாரணமாக: ஒருவன் ளுஹர் தொழுகின்றான். அவன் தனது தொழுகையை முடித்த பிறகு மூன்று ரக்அத் தொழு தோமா அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டால் மூன்று ரக்அத் தான் தொழுதோம் என்று அவனுக்கு நன்கு உறுதியாகாத வரையில் அவன் அச்சந்தேகத்தை திரும்பியும் பார்க்கக் கூடாது. அதாவது மீண்டும் அதைத் தொழக் கூடாது. மூன்று ரக்அத் தொழுதோம் என்பது குறுகிய நேரத்தில் அவனுக்கு உறுதியாக ஞாபகம் வந்தால் அவன் விடுபட்ட அந்த ரக்அத்தைப் பூரணப்படுத்த வேண்டும். பின்னர் ஸலாம் கொடுத்து விட்டு மீண்டும் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். பின்னர் ஸலாம் கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் சென்ற பின்னால் அவனுக்கு அது ஞாபகம் வந்தால் அவன் தொழுகையை முழுமையாக, புதிதாக மீட்டித் தொழ வேண்டும்.
மேற்கூறப்பட்ட மூன்று முறைகளுமல்லாமல் ஏற்படக்கூடிய சந்தேகங்களை இரு நிலமைகளின் அடிப்படையில் நோக்கலாம்.
முதலாவது நிலமை: அவனுக்கு இரண்டில் ஒன்று சற்று உறுதியானால் அவ்வுறுதியின் அடிப்படையில் அமல் செய்ய வேண்டும். பிறகு தனது தொழுகையைப் பூரணப்படுத்தி விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பிறகு மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக: ஒருவன் ளுஹர் தொழும்போது அது இரண்டாவது ரக்அத்தா அல்லது மூன்றாவது ரக்அத்தா என ஒரு ரக்அத்தில் இருக்கும் போது சந்தேகம் ஏற்படுகின்றது. என்றாலும் அவனுக்கு அது மூன்றாவது என சற்று உறுதி ஏற்பட்டால் அதை மூன்றாவதாகவே அவன் கருதி அதற்குப் பிறகுள்ள ரக்அத்தை நிறைவேற்றி விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பிறகு மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
அதற்குரிய ஆதாரம் பின்வருமாறு: அதாவது,
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் தனது தொழுகையில் மறந்தால் அவர் அதில் சரியானதை எடுத்துக் கொள்ளட்டும். சரியானதன் அடிப்படையிலேயே தொழுகையைப் பூரணப்படுத்தட்டும். பின்னர் ஸலாம் கொடுத்து விட்டு (மறதிக்காக) இரு ஸஜ்தாக்கள் செய்து (மீண்டும் ஸலாம் கொடுத்துக்) கொள்ள வேண்டும்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி). ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
இரண்டாவது நிலமை: இரண்டில் ஒன்று கூட அவனுக்கு உறுதியற்றதாக ஆகுதல். அந்நேரத்தில் தனக்கு உறுதியாக எது இருக்கின்றதோ அதன்படி அமல் செய்ய வேண்டும். அதாவது குறைந்த எண்ணிக்கையில் தனது உறுதியை அமைத்துக் கொண்டு தனது தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க முன்னால் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக: ஒருவன் அஸர் தொழுகின்றான். இது இரண்டாவது ரக்அத்தா அல்லது மூன்றாவது ரக்அத்தா என ஒரு ரக்அத்தில் இருக்கும் போது அவனுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. இரண்டா அல்லது மூன்றா என்பதில் அவனுக்கு உறுதியும் கிடையாது என்றால் அவன் அவனுக்கு சந்தே கம் ஏற்பட்ட குறைந்த எண்ணிக்கையான இரண்டாவது ரக்அத்தாக அதை ஆக்கிக் கொண்டு முதல்; அத்தஹிய்யாத்தை ஓத வேண்டும். அதன் பிறகு இரண்டு ரக்அத் தொழுது விட்டு கடைசியில் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும். அதற்குரிய ஆதாரம் பின்வருமாறு: அதாவது,
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவருக்கு அவருடைய தொழுகையில் சந்தேகம் ஏற்படுகின்றது. இது மூன்று ரக்அத்தா அல்லது நான்கு ரக்அத்தா என அவரால் அறிய முடியவில்லை என்றால் சந்தேகத்தை அவர் விட்டு விட்டு, எதில் அவருக்கு உறுதியிருக்கின்றதோ அதிலே அத்தொழுகையை அமைத்துக் கொள்ளட்டும். பிறகு ஸலாம் கொடுக்க முன் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்...' அறிவிப்பவர்: அபூ ஸஈத் அல் குத்ரி (ரலி). ஆதாரம்: முஸ்லிம்.
சந்தேகங்கள் எவ்வாறு நிகழும் என்பதைத் தெளிவுபடுத்தும் உதாரணங்கள்
ஒரு மனிதன் தொழுகைக்கு வரும் போது இமாம் ருகூஉ வில் இருந்தால் அவன் நின்ற நிலையிலேயே ஆரம்ப தக்பீராகிய தக்பீரத்துல் இஹ்ராமைக் கட்டவேண்டும். பின் உடனே ருகூஉவுக்குச் சென்று இமாமுடன் சேர்ந்து விட வேண்டும். இந்நிலையில் முன்று நிலமைகள் உள்ளது. அதாவது,
முதலாவது நிலமை: இமாம் ருகூஉவில் இருந்து தலையை உயர்த்த முன் ருகூஉவில் இமாமை அடைந்து விட்டான் என்பது உறுதியாகுதல். அவ்வாறு ருகூஉவில் அவன் இமாமை அடைந்து விட்டால் ஒரு ரக்அத்தை அடைந்தவனாக ஆகி விடுகின்றான். அந்நேரத்தில் ஸூரத்துல் பாதிஹா ஓதுவது அவனை விட்டும் விழுந்து விடும்.
இரண்டாவது நிலமை: இமாமை அவன் அடைவதற்கு முன்னால் இமாம் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி விட்டார் என்பதில் உறுதியாகுதல். அவ்வாறு அவன் ருகூஉவை அடைய முன் இமாம் தலையை உயர்த்தி விட்டால் அந்த ரக்அத் அவனுக்குத் தவறி விட்டது.
மூன்றாவது நிலமை: இமாமை ருகூஉவில் அடைந்து விட்டோமா, அல்லது அவரை அடைய முன் அவர் தலையை உயர்த்தி விட்டாரா என அவனுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. இந்நிலையில் இரண்டில் ஒன்று அவனுக்கு சற்று உறுதியானால் உறுதியானதைக் கொண்டே அமல் செய்ய வேண்டும். பிறகு தனது தொழுகையைப் பூரணப்படுத்தி ஸலாம் கொடுத்து விட்டு மீண்டும் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும். தொழுகையில் ஏதும் விடுபடவில்லையானால் அந்நேரத்தில் அவன் ஸஜ்தாச் செய்ய வேண்டிய அவசியமில்லை. இரண்டில் ஒன்றேனும் அவனுக்கு உறுதியாக வில்லையானால் அந்த ரக்அத் தவறி விட்டது என தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும். பிறகு மறதிக்காக ஸலாம் கொடுக்க முன் இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும்.
தனது தொழுகையில் ஒருவனுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. அவன் எதில் உறுதியோ அதன்படியே அமல் செய்தும் விடுகின்றான். அல்லது அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு சற்று உறுதியான ஒன்றின்படி அமல் செய்தும் விடுகின்றான். பிறகு அவன் செய்த அனைத்துமே சரியானது, அதில் கூடுதலோ, குறைவோ ஏற்படவில்லையென அவன் அறிந்தால் அவனது சந்தேகம் நீங்கியதனால் மறதிக்கான ஸஜ்தா அவன் மீது அவசியமில்லை. அது அவனைத் தொட்டும் விழுந்து விடும். மறதிக்கான ஸஜ்தா அவனைத் தொட்டும் விழாது, அவன் மறதிக்கான ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்டுகின்றது. ஏனெனில் 'பூரணமாகத் தொழுதால் ஷைத்தானுக்கு அது பதிலடியாகும்' என்ற நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்றுக்கமைய அதன் மூலம் அவன் ஷைத்தானுக்கு பதிலடி கொடுக்கின்றான். மேலும் அவன் தொழுகையில் சிலவற்றையேனும் சந்தேகத்துடன் தொழுதுள்ளா ன். ஆகவே மறதிக்கான ஸஜ்தாச் செய்வது தான் மேல் என்றும் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக: ஒரு மனிதன் தனது தொழுகையில் இது இரண்டாவது ரக்அத்தா அல்லது மூன்றாவது ரக்அத்தா என ஒரு ரக்அத்தின் போது சந்தேகிக்கின்றான். அவ்விரண்டில் எதுவும் அவனுக்கு சற்று உறுதியானதாகவும் இல்லை. அந்நேரத்தில் அவன் அதை இரண்டாவது ரக்அத்தாக ஆக்கி தனது தொழுகையைப் பூரணப்படுத்துகின்றான். பிறகு அவனுக்கு அது இரண்டாவது ரக்அத் தான் என உறுதியேற்பட்டு விட்டதென்றால் அதற்காக அவன் மறதிக்குரிய ஸஜ்தாச் செய்ய வேண்டியதில்லை. ஸலாம் கொடுக்க முன் மறதிக்கான இரு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டுமெனவும் ஒரு கூற்றுள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
மஃமூம்கள் மறதிக்கான ஸஜ்தா செய்வதன் சட்டம்
இமாம் மறந்தால் மறதிக்கான ஸஜ்தாவை இமாம் செய்யும் போது அவரைப் பின்தொடர்வது மஃமூம்கள் மீது வாஜி பாகும். நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இமாம் ஆக்கப்பட்டிருப்பதெல்லாம் அவரை நீங்கள் பின் தொடரத் தான். அவரை விட்டும் நீங்கள் பிந்த வேண்டாம்... அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
இமாம் ஸலாம் கொடுக்க முன்னரோ, அல்லது அதற்குப் பின்னரோ மறதிக்காக ஸஜ்தாச் செய்தால் அதற்காக மஃமூம்களும் அவரைப் பின்தொடர்வது வாஜிபாகும். சில ரக்அத்துகள் விடுபட்டு இமாமுடன் பிந்தி சேர்ந்தவனைத் தவிர. அவன் ஸஜ்தாச் செய்ய இமாமைப் பின்தொடர மாட்டான். அவனுக்கு தொழுகையில் நிறைவேற்ற வேண்டிய பகுதிகள் இருப்பதால் இமாமுடன் ஸலாம் கொடுக்க முடியாது. எனவே அவன் எழுந்து தனது மீதமுள்ள ரக்அத்துகளைப் பூரணப்படுத்தி விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பின்னர் மறதிக்கான ஸஜ்தாச் செய்து மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக: ஒருவன் இமாமுடன் கடைசி ரக்அத்தில் நுழைகின்றான். அந்நேரத்தில் ஸலாம் கொடுத்த பின்னர் மறதிக்காக செய்ய வேண்டிய ஸஜ்தா இமாமுக்கு உள்ளது. இமாம் ஸலாம் கொடுத்ததும் உடனே (பிந்தி சேர்ந்த) மஃமூம் தனக்கு விடுபட்டிருக்கின்ற தொழுகைகளை நிறைவேற்ற எழுந்து விடவேண்டும். இமாமுடன் ஸஜ்தாச் செய்யக் கூடாது. மஃமூம் நிறைவேற்ற வேண்டியதை நிறைவேற்றிய தன் பின்னர் ஸலாம் கொடுத்து விட்டு மீண்டும் ஸஜ்தாச் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும்.
இமாமுக்கு அன்றி மஃமூமுக்கு ஏதாவதொன்று தொழுகையில் ஏதும் தவறி விடாத நிலையில் மறதி ஏற்பட்டால் அதற் காக மஃமூம் ஸஜ்தாச் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் அவன் இமாமைப் பின்பற்றித் தான் அவனது ஸஜ்தா அமைய வேண்டும். அவனாக இமாமைப் பிரிந்து செயல்பட முடியாது. நாயகம் (ஸல்) அவர்கள் நடு அத்தஹிய்யாத்தை மறந்த போது நபித் தோழர்களும் அதை விட்டு விட்டு நபியவர்களுடனேயே எழுந்து விட்டார்கள். இமாமைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும், அவரைப் பிரியக்கூடாது என்பதற்காகவும் அத்தஹிய்யாத்துக்காக அவர்கள் உட்காரவில்லை.
இமாமுடன் தொழும் பொழுதோ, அல்லது அதற்குப் பிறகு அவனுக்கு விடுபட்டதை நிறைவேற்றும் பொழுதோ அவனுக்கு தொழுகையில் ஏதாவதொன்று தவறி விட்டால் அவனைத் தொட்டும் மறதிக்கான ஸஜ்தா விழுந்து விடாது. அதை நிறைவேற்றிய பின்னர் ஸலாம் கொடுக்க முன்னரோ, அல்லது பின்னரோ மேற்கூறப்பட்ட முறைப் பிரகாரம் மறதிக்கான ஸஜ்தாச் செய்ய வேண்டும்.
உதாரணமாக: ஒரு மஃமூம் ருகூஉவில் 'ஸுப்ஹான ரப்பிய ல் அளீம்' என்று சொல்ல மறந்து விடுகின்றான். ஆனால் தொழுகையில் அவனுக்கு வேறு எதுவும் விடுபடவில்லை யென்றால் அவன் மறதிக்கான ஸஜ்தாச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு ரக்அத்தோ அல்லது அதற்கு மேற்பட்ட ரக்அத்துக்களோ அவனுக்கு விடுபட்டிருந்தால் அதை அவன் நிறைவேற்ற வேண்டும். அப்பொழுது அவன் ஸலாம் கொடுக்க முன்னர் மறதிக்கான ஸஜ்தா செய்ய வேண்டும்.
மற்றுமோர் உதாரணம்: ஒரு மஃமூம் இமாமுடன் ளுஹர் தொழுகையைத் தொழுகின்றான். இமாம் நான்காவது ரக் அத்துக்கு எழுந்த போது மஃமூம் இது தான் கடைசி ரக்அத் என எண்ணி அப்படியே உட்கார்ந்து விடுகின்றான். இமாம் எழுந்து விட்டார் என்பது அவனுக்குத் தெரிந்ததும் அவனும் உடனே எழுந்து விடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு தொழுகையில் ஏதாவது விடுபடாமல் இருந்தால் அதற்காக அவன் ஸஜ்தாச் செய்ய வேண்டியதில்லை. ஒரு ரக்அத்தோ அல்லது அதற்கு மேற்பட்ட ரக்அத்துக்களோ அவனுக்கு விடுபட்டிருந்தால் அதை அவன் நிறைவேற்றி விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பின்னர் மறதிக்காக ஸஜ்தாச் செய்து விட்டு மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட சட்டங்களில் இருந்து மறதிக்கான ஸஜ்தாச் செய்வது ஒரு முறை ஸலாம் கொடுக்க முன்னரும், இன்னுமொரு முறை ஸலாம் கொடுத்த பிறகும் அமையும் என்பது எமக்குத் தெளிவாகின்றது.
எனவே இரண்டு இடத்தில் ஸலாம் கொடுக்க முன்னர் மறதிக்கான ஸஜ்தாச் செய்வது அமைந்துள்ளது.
அதாவது,
1-தொழுகையில் குறைவு ஏற்பட்டால் ஸஜ்தாச் செய்ய வேண்டும். அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளது. அதாவது நாயகம் (ஸல்) அவர்கள் முதல் அத்தஹிய்யாத்தை விட்ட போது ஸலாம் கொடுக்க முன்னர் மறதிக்கான ஸஜ்தாச் செய்தா ர்கள். (இந்த ஹதீஸ் மேலே கூறப்பட்டுள்ளது).
2-ஒரு ரக்அத்தில் இது இரண்டாவதா அல்லது மூன்றா வதா என இரண்டில் ஒன்று சரி ஊர்ஜிதமில்லாத அளவு சந்தேகம் ஏற்பட்டு விட்டாலும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். அபூ ஸஈத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளது. அதாவது ஒருவர் தனது தொழுகையில் நான்கு ரக்அத் தொழுதோமா அல்லது மூன்று ரக்அத் தொழுதோமா என அறிந்து கொள்ள முடியாமல் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் ஸலாம் கொடுக்க முன்னால் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு ஏவி யுள்ளார்கள். (இந்த ஹதீஸ் மேலே கூறப்பட்டுள்ளது).
மேலும் இரண்டு இடத்தில் ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான ஸஜ்தாச் செய்வது அமைந்துள்ளது. அதாவது,
1-தொழுகையில் ஏதாவதொன்றை கூட்டிச் செய்தால் ஸஜ்தாச் செய்ய வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளது. அதாவது நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் ஐந்து ரக்அத் தொழுத போது ஸலாம் கொடுத்த பின்னர் நபித்தோழர்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்கள். உடனே இரு ஸஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுத்தார்கள். தொழுகையில் அதிகப்படுத்தியதற்குத் தான் ஸலாம் கொடுத்த பிறகு இந்த ஸஜ்தா என்று நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. என்றாலும் பொதுவாக சட்டம் அதைத் தான் தெளிவுபடுத்துகின்றது. எனவே தொழுகையில் அதிகப்படுத்தியதற்குரிய ஸஜ்தா ஸலாம் கொடுத்த பிறகு தான் அமைய வேண்டும். அதிகப்படுத்திய விடயம் அவனுக்கு ஸலாம் கொடுக்க முன்னர் தெரிந்தாலும் அல்லது ஸலாம் கொடுத்த பின்னர் தெரிந்தாலும் சரியே!.
மேலும் அதே போன்று ஒருவன் தனது தொழுகையைப் பூரணப்படுத்த முன்னர் மறதியாக ஸலாம் கொடுத்து விடுகின்றான். உடனே அது அவனுக்கு ஞாபகம் வந்து, விடுபட்டதைப் பூரணப்படுத்தியும் விடுகின்றான். அந்நேரத்தில் அவன் தனது தொழுகையில் ஸலாத்தை அதிகரித்திருந்தால் ஸலாம் கொடுத்த பிறகு ஸஜ்தாச் செய்ய வேண்டும். அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடைய அறிவிப்பில் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் ளுஹர், அல்லது அஸர் தொழுகையில் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விடுகின்றார்கள். உடனே நபித்தோழர்கள் அவருக்கு ஞாபகப்படுத்தியபோது தங்களது தொழுகையை நாயகம் (ஸல்) அவர்கள் பூரணப்படுத்தி விட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் மறதிக்காக ஸஜ்தாச் செய்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள் என்று வந் துள்ளது. (இந்த ஹதீஸ் மேலே கூறப்பட்டுள்ளது).
2-இரண்டில் எதைச் செய்தோம் என உறுதியற்ற நிலை யேற்பட்டு சந்தேகம் ஏற்பட்டால் ஸஜ்தாச் செய்யவேண்டும். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய அறிவிப்பில் தனது தொழுகையில் யாருக்கு சந்தேகம் ஏற்பட்டதோ அவன் சரியானதை எடுத்துக் கொண்டு தனது தொழுகையைப் பூரணப்படுத்தட்டும். பின்னர் அவன் ஸலாம் கொடுத்து விட்டு மீண்டும் ஸஜ்தாச் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும். (இந்த ஹதீஸ் மேலே கூறப்பட்டுள்ளது).
மேற்கூறப்பட்ட இரு நிலைகளிலும் இரு மறதிகள் ஏற்பட்டால் அதில் ஒன்று ஸலாம் கொடுக்க முன்னர் ஸஜ்தாச் செய் ய வேண்டிய மறதியும், மற்றது ஸலாம் கொடுத்த பிறகு ஸஜ்தாச் செய்ய வேண்டிய மறதியுமானால், ஸலாம் கொடுக்க முன்னர் செய்ய வேண்டிய ஸஜ்தாவை மாத்திரம் கவனத்தில் கொண்டு ஸலாம் கொடுக்க முதலே ஸஜ்தாச் செய்ய வேண்டும்.
உதாரணமாக: ஒருவன் ளுஹர் தொழும்போது நடு அத்தஹிய்யாத்தில் உட்காராமல் மூன்றாவது ரக்அத்திற்கு எழுந்து விடுகின்றான். மூன்றாவது ரக்அத்தில் இது இரண்டாவது ரக்அத்துத் தான் என எண்ணி அப்படியே உட்கார்ந்து விடுகின்றான். உடனே அது மூன்றாவது ரக்அத் என அவனுக்கு ஞாபகம் வந்து விடுகின்றதென்றால் அவன் எழுந்து நின்று மீதமுள்ள ஒரு ரக்அத்தைத் தொழுது விட்டு மறதிக்காக ஸஜ்தாச் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும். இந்த மனிதன் முதலாவது அத்தஹிய்யாத்தையும், ஸலாம் கொடுக்க முதல் செய்யும் ஸஜ்தாவையும் விட்டிருக்கின்றான். மேலும் மூன்றாவது ரக்அத்தில் ஒரு அமர்வை அதிகப்படுத்தியும், ஸலாம் கொடுத்த பிறகு செய்யும் ஸஜ்தாவை விட்டும் இருக்கின்றான். எனவே அவன் ஸலாம் கொடுக்க முன்னர் செய்ய வேண்டிய ஸஜ்தாவை மாத்திரம் கவனத்தில் கொண்டு ஸலாம் கொடுக்க முதலே ஸஜ்தாச் செய்ய வேண்டும்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்).
எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கும், எமது இஸ்லாமிய சகோதரர்களுக்கும், அல்லாஹ்வுடைய வேதத்தையும், அவனுடைய தூதருடைய வழிமுறைகளையும் நன்கு விளங்குவதற்கும், அவ்விரண்டைக் கொண்டும் அமல் செய்வத ற்கும் அருள் புரிய வேண்டுமெனவும், எம்மனைவருடைய இறுதி முடிவும் நல்லதாக அமைய வேண்டுமெனவும் அல்லாஹ்விடம் கேட்கின்றேன். அவன் கொடைவள்ளன், அருளாள ன். அகிலத்தாரைப் படைத்து பரிபாலனம் செய்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் சாந்தி சமாதானத்தைப் பொழிவானாக!.
ஆசிரியர் : ஷேய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)
தமிழில் : மௌலவி முஸ்ஸம்மில் ஹஸன்,
மீளாய்வு : மௌலவி எம்.எச்.சேஹுத்தீன் 'மதனி