புனித றமழான் நோன்பு பற்றிய 35 நபிமொழிகள்.

-ஏ. ஜி.எம் ஜலீல் மதனி

புனிதமிகு றமழானை அடைந்துள்ள நாம் றமழானிய நோன்பு மற்றும் இராவணக்கங்கள் பற்றிய ஆதாரப்பூர்வமான நபியவர்களின் வழிகாட்டல்கள், பொன்மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஹதீஸ் மூலநூற்களிலிருந்து இதுபற்றிய ஹதீஸ்களைத் தொகுத்துத் தருகின்றேன். 

1. நபியவர்கள் கூறினார்கள்...

புனிதத றமழான் மாதம் தலைப்பிறை காணப்பட்டவுடன் சுவனத்து வாயில்கள்  திறக்கப்படுகின்றன. அதில் எந்தவொரு வாயிலும் மூடப்படுவதில்லை. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டடு விடுகின்றன, அதில் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை.  அட்டூழியம் புரியும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. வானிலுள்ள ஒரு மலக்கு நன்மையை விரும்புபவர்களே,, அல்லாஹ்வின் பக்கம் விரையுங்கள், தீமை புரிபவனே உன் கெட்ட செயல்களை விட்டுவிடு என்று அறைகூவல் விடுக்கின்றார். றமழானின் ஓவ்வொரு இரவிலும் நரகவாதிகள் பலர் அல்லாஹ்வால் விடுதலை செய்யப்படுகின்றனர். (திர்மிதி)

2. நபியவர்கள் கூறினார்கள்...

ஜங்காலத் தொழுகைகளும், வாராந்த ஜூம்ஆக்களும் வருடாந்த றமழான் கால நோன்புகளும், அவற்றுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் புரியப்படும் பாவங்களுக்கு குற்றப்பரிகாரங்களாகி விடுகின்றன. ஆனால் பெரும்பாவங்கள் தவிர்ந்து கொள்ளப்ட வேண்டும் என்பது நிபந்தனையாகும். (புகாரி, முஸ்லிம்.)

3. நபியவர்கள் கூறினார்கள்...

யாரொருவர் ஈமான் நம்பிக்கையோடும், நன்மை கிடைக்குமென்ற ஆர்வத்தோடும் றமழானில் நோற்குகின்றாரோ, இரவில் நின்று வணங்குகின்றாரோ, அவ்வாறே லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகின்றாரோ இவ்வொவ்வொன்றுக்காகவும் அவர் முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. (புகாரி முஸ்லிம்.)

4. நபியவர்கள் கூறினார்கள்...

நோன்புகளில் சிறந்தது றமழான் நோன்பாகும். அதற்கடுத்தது முஹர்ரம் மாத நோன்பாகும். தொழுகைகளில் சிறந்தது கடமையான ஐங்காலத் தொழுகையாகும். அதற்கடுத்தது இரவுத் தொழுகை-கியாமுல்லைல் தொழுகையாகும். (நஸாயி.)

5. றமழானில் நஷ்டமடைந்தோர்...
நபியவர்கள் கூறினார்கள்...

எனது சமூகத்தில் மூவர் நஷ்டவாளிகளாவர். அவர்களுகுகுக் கைதேதம் உண்டாகட்டும். என் பெயர் சொல்லப்பட்டும்  எனக்காக ஸலவாத்துச் சொல்லாதவனுக்கு கைசேதம் உண்டாகட்டும். றமழான் மாதத்தை அடைந்ததும் அதில் பாவமன்னிப்புப் பெறாத நிலையில் மாதத்தை கடந்து செல்ல விட்டவர் கைசேதமடையட்டுமாக.. அவ்வாறே முதிர்ந்த வயதில் பெற்றோரை அடைந்தும் அவ்விருவருக்கும் ( பணிவிடை செய்து) அவர்களின் திருப்தியைக் பெறாமல் அவர்களை மரணிக்க விட்டதால் சுவர்க்கத்தை தவற விட்டவனும் நாசமாகட்டும். (திர்மிதி)

6. றய்யான் எனும் சுவன வாயல்
நபியவர்கள் கூறினார்கள்...

சுவர்க்கத்தில் றையான் – தாகந்தீர்க்கும் வாசல் என்றொரு வாசலுண்டு. மறுமையில் நோன்பாளிகள் மட்டுமே அதனூடாக சுவனம் செல்ல முடியும். வேறெவரும் அதனூடாகசுவர்க்கம் செல்ல முடியாது. மறுமைநாளில் விசாரணை நேரத்தில் நோன்பாளிகள் எங்கே? என அழைக்கப்படும்போது அல்லாஹ்வுக்காக நோன்புநோற்றோர் எழுந்து சென்று றையான் வாசலூடாக சுவர்க்கம் சென்றுவிடுவர். அவர்களில் கடைசிநபரும் சென்று முடிந்ததும் அவ்வாயில் மூடப்படும். பின் அது திறக்கப்படவே மாட்டாது.  (புகாரி முஸ்லிம்.)

7. நோன்பின் பலாபலன்கள்
நபியவர்கள் கூறினார்கள்...

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் காத்திருக்கின்றன. ஒன்று நோன்பு திறக்கும் போது (நோன்பை பூர்த்திசெய்துவிட்ட மகிழ்ச்சி) . அடுத்தது மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும்போது (நோன்புக்கான வெகுமதியைப் போது) ஏற்படும் மகிழ்ச்சி. (திர்மிதி)

8. நபியவர்கள் கூறினார்கள்...

அல்லாஹ்வின் பாதையில் சென்று ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் அவரது முகத்தை எழுபதாயிரம் வருட தொலைதூரத்துக்கு நரகினை விட்டும் தூரமாக்கி விடுகின்றான். (புகாரி)

9. றமழானில் உம்றா
நபியவர்கள் கூறினார்கள்...

றமழான் மாதத்தில் ஒரு உம்ராச் செய்வது ஒரு ஹஜ்ஜுச் செய்வதற்கு – மற்றொரு அறிவிப்பில் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியதற்குச் சமமாகும் என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி.)

10. றமழானில் தானதர்மம்
நபியவர்கள் கூறினார்கள்...

நபியவர்கள்  இயல்பாகவே தர்மம் – நன்கொடை வழங்கும் பண்புடையவர்கள். அதிலும் றமழான் வந்துவிட்டால்  வானவர் ஜிப்ரீலை சந்திக்கவிருப்பதால் அதிகமதிகம் தர்மம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஜிப்ரீல்லவர்கள் றமழானில்தினமும் நபியவர்களை சந்தித்து அல்குர்ஆனை பரஸ்பரம் ஓதிச் சரிபார்த்துக் கொள்வார்கள். நபியவர்கள் தர்மம் செய்வதாலும் , நற் காரியங்களிலும் வீசும் காற்றைவிடவும் முந்திக் கொள்பவர்களாவார்கள். (புகாரி)

11. நபியவர்கள் கூறினார்கள்...
அல்லாஹ் சொல்வதாக நபியவர்கள் கூறினார்கள்.. 

ஆதமின் மகன் செய்யும் நல்லறங்கள் அனைத்தும் அவனது நலனுக்காகவே!! நோன்பைத் தவிர..
நோன்பு எனக்காக நோற்கப்பட்டது. அதற்கு நானே நற்கூலி வழங்குவேன், ஏனெனில் அம்மனிதன் எனக்காகவே அவனதை பசியையும் தாகத்தையும் , ஆசாபாசங்களையும் தியாகம்செய்துள்ளான். (புகாரி.) 

12 நோன்பானது ஒரு கேடயமாடும். 

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் வேளையில் எவ்வித துர்செயல்களையோ கெட்ட வார்த்தைகளையோ பேசாதிருக்கட்டும். யாரேனுமொனுவர் நோன்பாளியை வம்புக்கிழுத்தால், சண்டைக்கழைத்தால் நான் நோன்பாளி என்றுகூறி விலகிக் கொள்ளட்டும். (புகாரி.)

13. என் உயிர் எவன் வசமிருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு நோன்பாளியின் வாயிலிருந்து (பசிமிகுதியால்) வெளிப்படும் வாடையானது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடவும் சிறந்ததாடக் கருதப்படுகின்றது. (புகாரி)

14. நோன்பானது உண்மையில் ஓர் கேடயமாகும். எனவே நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் நாட்களில் வீண்பேச்சிலோ, தவறான காரியங்களிலோ ஈடுபட வேண்டாம். உங்களுடன் யாரும் சண்டையிட்டாலோ, ஏச்சுப் பேச்சில் ஈடுபட்டாலோ நான் நோன்பாளி என்றுகூறி விலகிக் கொள்ளட்டும். (புகாரி.)

15. நோன்பு மாசுறுவது எதனால்?...
நபியவர்கள் கூறினார்கள்...

சில நோன்பாளிகள் இருக்கின்றனர். அவர்கள் நோற்ற நோன்பினால் அவர்களுக்கு மிஞ்சுவது பசித்திருந்ததையும், தாகித்திருந்ததையும் தவிர வேறெதுவுமில்லை. இன்னும் சிலர் இரவுநேரத்தில் நின்று வணங்குகின்றனர், எனினும் அவர்களின் வணக்கத்தில் (கால்கடுக்க ) விழித்து நின்றதைத் தவிர வேறெதுவும் மிஞ்சுவதில்லை. (இப்னு மாஜஃ.)

16. நபியவர்கள் கூறினார்கள்...

யார் நோன்பு நோற்ற நிலையில் வீண்பேச்சையும், கெட்ட செயல்களையும், அறிவீனமான செயற்பாடுகளையும் விடவில்லையோ அவர் பசித்திருந்ததிலும் தாகித்திருந்ததிலும் அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையும் கிடையாது. (புகாரி) .

17. நோன்பில் ஸஹர் செய்தல்
நபியவர்கள் கூறினார்கள்...

நீங்கள் பின் இரவில் ஸஹர் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது. (புகாரி.)

18. முஸ்லிம்களான எமது நோன்புக்கும் யூத கிருஷ்தவர்களின் நோன்புக்குமிடையிலான வேறுபாடே ஸஹர் செய்வதுதான் என நபியவர்கள் கூறினார்கள்.

19. விரைவாக நோன்பு துறத்தல்..
நபியவர்கள் கூறினார்கள்...

நோன்பு திறப்பதை விரைவுபடுத்தும் போதெல்லாம் எனது  உம்மத்தினர் சிறப்பு நன்மையை அடைந்து கொள்கின்றனர்.

20. நபியவர்கள் கூறினார்கள்...

மேற்கிலிருந்து இரவு ஆரம்பித்து கிழக்கில் பகலும் உதயமாகி சூரியன் அஸ்தமித்தும் விட்டால் நோன்பாளி நோன்பைத் திறக்கும் நேரம் வந்துவிட்டது. (புகாரி). 

21. நபியவர்கள் நோன்பு திறக்க வந்தால் கனிந்த (ருதப் ) பேரீச்சம்பழங்களால் நோன்புதிறப்பார்கள். அது கிடைக்கவிடில் காய்ந்த பேரீச்சையைப் பயன்படுத்துவார்கள். அதுவும் கிடைக்காத பட்சத்தில் சில மிடர் தண்ணீரை அருந்தி நோன்புதிறப்பார்கள். (திர்மிதி.)

22. மறதியாக உண்ணல் பருகல் இடம்பெற்றால்....
நபியவர்கள் கூறினார்கள்...

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் மறதியாக எதையேனும் சாப்பிட்டு, குடித்து விட்டால் அவர் தொடர்ந்து நோன்பைப் பூரணப்படுத்தவும். ஏனெனில் அல்லாஹ்வே அவருக்கு உண்ணவும் பருகவும் நாடியிருக்கின்றான். (புகாரி.)

நோன்பாளி செய்யக் கூடாதவை
நபியவர்கள் கூறினார்கள்...

23.யாருக்காவது இயல்பாகவே வாந்தி வந்துவிட்டால் அவரது நோன்பு முறிந்து விடுவதில்லை. வேண்டுமென்றே ஒருவர் வாந்தியெடுத்தால் அவர் அந்த நோன்பைக் கழாச் செய்ய வேண்டும். (திர்மிதி)

24. நபியவர்கள் கூறினார்கள்...

வுழுவின் போது நன்றாக நாசிக்குத் தண்ணீர் செலுத்தி சுத்தஞ் செய்யுங்கள், எனினும்  நோன்பாளியாக இருந்தாலே தவிர. (அஹ்மத்.)

25. பயணத்தில் நோன்பு நோற்றல்

நபியவர்கள் ஒர் பயணத்திலிருந்தார்கள். அப்போது ஓரிடத்தில் ஒரு மனிதரைச் சூழ மக்கள் நின்று நிழல்கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு விசாரித்த போது அவர் நோன்பாளி, பயணத்தில் களைப்புற்று விட்டார். அதனால் அதனால் அவருக்கு நிழல்க் கொடுத்து இளைப்பாற வைக்கின்றோம் என்றதும் நபியவர்கள் “ பயணத்தில் நோன்பு நோற்பது நல்லதல்ல” என்று கூறினார்கள். (புகாரி). 

26. அனஸ் (றழி) அறிவிக்கின்றார்கள்..

நாங்கள் ஒருதடவை (றமழானில்) நபியவர்களுடன் பயணத்திலிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும், நோற்காதவர்களும் இருந்தனர். ஓரிடத்தில் நாங்கள் இளைப்பாறுவதற்காக  தங்க நேரிட்டது . அப்போது கடும் உஷ்ன காலமாகையால் மிகச்சிரமப்பட்டோம்.  போர்வையால் சிலர் தம்மை மூடிக்கொள்ள அவரின் நிழலில் மற்றொருவர் இளைப்பாறும் நிலை.  நோன்பு நோற்றிருந்த சிலர் களைப்பு மிகுதியால் மயங்கி விழும் நிலை ஏற்பட்டதும் நோன்பு நோற்காதவர்கள் விரைந்து செயற்பட்டு  இளைப்பாற கொட்டிலொன்றை அமைத்து தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தினர். இதனைப்பார்த்த நபியவர்கள் “ இன்றையதினம் நோன்பற்றோர் நோன்பாளிகளை விடவும் அதிக நன்மைகளை ஈட்டிக் கொண்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி முஸ்லிம்.)

27. ஒரு நபித்தோழர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் கூட நோன்பு நோற்க என்னால் முடியும்.  அப்படிச் செய்வது தவறா ? என வினவியதற்கு பயணத்தில் நோன்பை விடுவது அனுமதிக்கப்பட்டதாகும். அது இறை சலுகை . அதை அனுபவிப்பது நன்று. எனினும் நோன்பு நோற்பதிலும் தவறில்லை என்று நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

குறிப்பு . இவ்விடயமாக வரும் அனைத்து ஹதீஸ்களையும் பார்க்கும் போது பயணத்தில் நோன்பை விடுவது பொதுவாக ஆகுமென்பதும், தனக்கு சிரமமாயின் விடுவது சிறப்பாகும் என்பதுடன் அதேவேளை சிரமமில்லையாயின் நோற்பதே சிறந்ததென்பதும் அறிஞர்களின் முடிவாகும்.

28. நோன்பு துறக்க ஏற்பாடு செய்தல் : 
நபியவர்கள் கூறினார்கள்...

யார் நோன்பாளியொருவருக்கு நோன்புதுறக்க ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு அந் நோன்பாளி அன்று செய்தளவு அதே நன்மைகளை இவருக்கும் வழங்குகின்றான். அதனால் அவரின் நன்மைகளில் எதுவும் குறைந்துவிடுவதுமில்லை. (அஹ்மத்.)

29. நோன்பின் சிபாரிசு 
நபியவர்கள் கூறினார்கள்...

நோன்பும், குர்ஆனும் மறுமையில் ஒரு அடியானுக்காகப் பரிந்துரை செய்யும்.  நோன்பானது யாஅல்லாஹ்! நான் இம்மனிதனை  உணவு பானங்களை விட்டும் தடுத்திருந்தேன். அதனால் இவருக்காக எனது பரிந்துரையை ஏற்பாயாக என்று வாதிடும் . இவ்வாறே  அல்குர்ஆனும் யாஅல்லாஹ் நான் இம்மனிதர் இரவுநேரத்தில் என்னை ஓதியதால் அவரைத் துக்கத்தை விட்டும் தடுத்திருக்கின்றேன். எனவே அவர் விடயத்தில் என் சிபாரிசையும் நீ ஏற்க வேண்டுமென வாதிடும் . முடிவில் அவ்விரண்டுன் சிபாரிஷும் ஏற்றுக் கொள்ளப்படும். (அஹ்மத்)

இறுதிப் பத்தில் ...

30. நபியவர்கள் றமழானின் இறுதிப்பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால்  தனது கைலியை – கீழாடையை இறுகக்கட்டிக் கொள்வார்கள்.  அவ்விரவுகளை வணக்கத்தின் மூலம் உயிர்ப்பிப்பார்கள். தனது குடும்பத்தவர்களையும் துயிலெழுப்பி விடுவார்கள்.
( குறிப்பு:  கைலியை இறுக்கட்டுதல் என்பதற்கு கடின வேலைக்குத் தயாராகுதல் என்று அர்த்தமாகும். இல்லற தொடர்புகளைத் தவிர்த்தல் என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.)

31. நபியவர்கள் றமழானின் பிந்திய பத்தில் வேறெந்தக் காலப்பகுதியிலும் இல்லாதவாறு அதிகமாக இபாதத் செய்வதில் மும்முரமாக இருப்பார்கள். (முஸ்லிம்.)

32. நபியவர்கள் றமழானின் கடைசிப் பத்தில் மஸ்ஜிதில் இஃதிகாப் இருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். (புகாரி.)

லைலதுல் கத்ர் இரவு

33. நபியவரகள் “ லைலத்துல் கத்ர்  இரவை நீங்கள் பிந்திய இறுதிப்பத்தில்  தேடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (புகாரி.)

34. அன்னை ஆயிஷா (றழி)யவர்கள் நபிகளாரிடத்தில் அல்லாஹ்வின் துரரே! நான் அந்த லைலதுல் கத்ருடைய இரவை அடைந்து கொண்டால் எவ்வாறு  பிரார்த்திக்க வேண்டுமென எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று வினவியபோது நபியவர்கள் “ யாஅல்லாஹ் நீயோ அதிகம் மன்னிப்பவன். மன்னிப்பதையே நீ விரும்புகின்றாய். எனவே என்னையும் மன்னித்துவிடு “ என்று பிரார்த்திக்குமாறு நல்கினார்கள் . 

ஸக்காத்துல் பித்ர் – பெருநாள் தர்மம்.

35. நபியவர்கள் ஸகாதுல் பித்ர் எனப்படும் பெருநாள் தர்மத்தை ஒரு ஸாஉ அளவு ( இரண்டு கொத்து – 2 ½ கிலோ) ஈச்சம்பழத்தை அல்லது கோதுமை ஒவ்வொரு முஸ்லிமான ஆண்,பெண், அடிமை சுதந்திரவான் அனைவரும் கணக்கிட்டுக் கொடுத்திட வேண்டுமென்பதைக் கட்டாயமாக்கினார்கள். பெருநாளன்று தொழுகைக்குமுன் அது நிறைவேற்றப்பட வேண்டும். (புகாரி.)

ஆறு நோன்புநோற்றல்.

யார் றமழான் நோன்புகளை நோற்றுவிட்டு பின் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளையும் நோற்றால் அவர் காலம் முழுக்க நோன்பு நோற்ற நன்மையைப் பெற்றவரைப் போன்வராவார் . (முஸ்லிம்) 

இவ்வழிகாட்டல்களை நாமும் கடைப்பிடித்து நற்பேறுபெற்று சவனம்செல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக ஆமீன்
Previous Post Next Post