ஸலபுகளின் கூற்றுக்கள் மொழிபெயர்ப்பு

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..

அரபு மொழியிலான ஸலபுகள் மற்றும் ஸலபி அறிஞர்களின் கூற்றுக்கள் மற்றும் கருத்தாளமிக்க அரபு வரிகள்

தமிழாக்கம்: அஷ்ஷெய்க் A.L நாஸிர் கனி (ஹாமி)


1. அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

"சொர்க்கம் சோம்பேறித் தனத்தாலும் தூக்கத்தாலும் ஓய்வாலும் பெறப்பட முடியாது. உண்மையில், அது நற் செயல்களில் களைப்போடு ஈடுபடுவதனாலேயே கிடைக்கப்பெறும்."

2. ஒரு மனிதரிடம் நீ படித்த அழகிய ஞானம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு அம்மனிதர் கூறினார். நான் எழுபது வருடங்களாக வாசித்து வருகிறேன். இதை விட அழகிய ஒன்றை நான் வாசிக்கவில்லை:
"வழிப்படுவதன் சிரமம் போய்விடும். அதன் பலன் நிலைத்திருக்கும். வழிபடாமையின் இன்பம் போய்விடும். அதன் தண்டனை நிலைத்திருக்கும்."

3. இமாம் ஷவ்கானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" (றமழான் என்பதன் பொருள் எரித்து விடக்கூடியது என்பதாகும்) 
றமழான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம், அது நற்கருமங்களைக் கொண்டு பாவங்களை எரித்துவிடக்கூடியது,"

4. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"றமழான் மாதம் உண்மையாக உறுதி கொண்டு, தீங்கு விளைவிக்கக்கூடிய அருவருப்பான கெட்ட புகைத்தலை விட்டும் விலக விரும்புபவருக்கு ஓர் அரிய சந்தர்ப்பமாகும்."

5. இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஒரு முஸ்லிம் றமழானை மகிழ்ச்சி, சந்தோசம், திருப்தியோடு வரவேற்பதை தவிரவும், அவனுக்கு றமழானை கிடைக்கச் செய்து அருள்புரிந்து, நல்ல ஸாலிஹான கருமங்களில் போட்டியிட்டு ஈடுபடும் உயிருள்ளவர்களில் ஆக்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதைத் தவிரவும் வேறு குறிப்பிட்டுக்கூறத்தக்க எதுவும் இருப்பதாக என்னால் அறிய முடியவில்லை. உண்மையில், றமழான் கிடைக்கப் பெறுவது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெறும் மாபெரும் அருளாகும்."

6. "இமாம் ஷுஃபா பின் அல் ஹஜ்ஜாஜ் றஹ் அவர்கள், தனது ஆசிரியர் அல் ஹகம் பின் உதைபா றஹ் அவர்களிடம் தனக்கு உபதேசிக்குமாறு கோரினார். அதற்கு அவர், முஆத் றழி அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் எதைப் போதித்தவர்களோ அதையே நான் உனக்கும் போதிக்கிறேன் எனக் கூறினார்.
நீ எங்கிருந்த போதும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்.
மனிதர்களுடன் அழகிய குணத்தோடு பழகிக்கொள்.
ஒரு தீமையை அடுத்து நன்மையைச் செய்துகொள். அந்நன்மை தீமையை அழித்துவிடும்."

7. இமாம் ஷாதிபீ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"முன்னோர்களான நல்லடியார்களின் வாழ்க்கையை அவதானிக்கும் எவருக்கும் தனது குறைபாடுகளும், ஆளுமை மிகு ஆண்களின் அந்தஸ்தை விட்டும் பின்னிலை வகிப்பதும் தெரியவரும்".

8. இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்: 
"இஸ்லாத்தின் அடிப்படைகள் நான்கு :
(சான்றுப்படுத்துனர், ஆதாரம், விளக்கமளிப்பவர், நிறுவுநர்)

1. சான்றுப்படுத்துனர் : அல்லாஹ்
2. ஆதாரம் : அல் குர்ஆன்
3. விளக்கமளிப்பவர்: முஹம்மத் (ஸல்) அவர்கள்."மனிதர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு, உன் மீது அல் குர்ஆனை இறக்கி அருளியுள்ளோம்". (அந் நஹ்ல் : 44)
4. நிறுவுனர் : நேர்வழியுடையவர்களெனவும் அறிவுடையவர்களெனவும் முஸ்லிம்கள் ஏகோபித்துக் கூறும் மார்க்க அறிஞர்கள்."

9. இமாம் ஹாதிம் அல் அஸம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நான்கு விடயங்கள் பற்றிய பெறுமானத்தை நான்கு பேரைத் தவிர வேறு எவரும் அறிந்து கொள்ளமாட்டார்.

1. வாலிபத்தின் பெறுமதி வயோதிபருக்குத்தான் தெரியும்.
2. ஆரோக்கியத்தின் மதிப்பு பாதிக்கப்பட்டவருக்கே புரியும்.
3. சுக நலம் பற்றிய பெறுமதி நோயாளிக்கே புரியும்.
4. உயிர் வாழ்வதன் பெறுமதி மரணித்தவருக்கே தெரியும்."

10. இமாம் நாஸிருத்தீன் அல் அல்பானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்:

தஃவாவுடைய அடிப்படைகள் மூன்று தூண்களில் தங்கியுள்ளது.
1. புனித அல் குர்ஆன்
2. சரியென நிறுவப்பட்ட நபியவர்களின் வழிமுறை
3. மேற்கூறப்பட்ட அல்குர்ஆன், சுன்னா ஆகிய இரண்டையும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களைத் துயர்ந்தோராகிய நல்லடியார்கள் கொடுத்துள்ள விளக்கத்தின் (திட்டத்தின்) அடிப்படையில் புரிந்து கொள்ளல். தற்போதும் முன்னரும் சகல பிரிவுகளும் வழிகெட்டுப் போனமைக்கான காரணம்,மூன்றாவது தூணைப் பேணிக் கொள்ளத் தவறியமையாகும்.

11. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இதயம் நிலத்தைப் போன்றது. அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தவும், அவனை அன்பு வைக்கவும், அவனை அறிந்து கொள்ளவும், அவனை நினைவுகூரவும், அவனிடம் பிரார்த்திக்கவும் தவறும் போது அவ்விதயம் காய்ந்து விடுகிறது."

12. இமாம் ஹஸனுல் பஸரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மறுமை நாளில் ஆதமின் மக்களுடைய வாழ்நாள் காலங்கள் காண்பிக்கப்படும். அவ்வேளை அவன் நன்மை செய்யாத ஒவ்வொரு மணித்தியாலத்துக்காகவும் அவனது ஆன்மா கைசேதப்படும்."

13. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"உனது பாவத்துக்கான தண்டனையை அந்தந்த இடத்திலேயே உன்னால் காணமுடியவில்லை என்று ஏமாந்து விடவேண்டாம். அதற்கான தண்டனையை நாற்பது வருடங்களின் பின் நீ கண்டு கோள்வாய்!"

14. "இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாறக் றஹ் அவர்களிடம் , நீங்கள் தொழுகையை முடித்த பிறகு ஏன் நீங்கள் எங்களுடன் அமர்ந்திருப்பதில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாம் அவர்கள்', ஸஹாபாக்கள், தாபியீன்களோடு நான்  அமர்ந்திருக்கின்றேன். அவர்களது நூல்களை ஆழ்ந்து படிக்கின்றேன். நான் உங்களோடு அமர்ந்திருந்து என்ன செய்வேன்? நீங்கள்தான் மனிதர்களைப் பற்றி புறம்பேசிக் கோண்டிருக்கிறீர்களே! எனக் கூறினார்."

15. அம்ர் இப்னு கைஸ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"றமழான் மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் (ஷஃபான் மாதத்தில்) தன்னை சீர்செய்து கொள்பவனுக்கு பாக்கியம் உண்டாவதாக"!

16. இமாம் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஒரு நேர்மையான முஸ்லிம், அல்லாஹ் விதித்துள்ள படி வணங்கி வழிபட்டால், குறுகிய காலத்தில் நேர்வழிக்கான பிரகாசத்தை அல்லாஹ் அவனுக்கு திறந்து விடுவான்."

17. உனக்கு முன்னால் மூடப்பட்டுள்ள வாயில்களுக்குப் பின்னால் உள்ளவற்றை நீ அறிந்து கொண்டால் அவ்வாயில்கள் அடைக்கப்பட்டுள்ளமைக்காக அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றி செலுத்துவாய்!

18. இமாம் புழைல் இப்னு இயாழ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"தன்னில் இல்லாதவற்றுக்காக புகழப்படுவதை விரும்புவதும், தன்னிலுள்ள குறைகளின் நிமித்தம் இகழப்படும் போது அதை வெறுப்பதும், தன் குறைகளை கண்டு கொள்பவனை வெறுப்பதும், தன் சகாக்களில் ஒருவரின் குறை கேட்டு மகிழ்ச்சி அடைவதும் நயவஞ்சகப் பண்பாகும்."

19. இமாம் சுப்யான் அத் தௌரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் வறுமையைப் பயப்படுவது போல வேறெந்த ஆயுதமும் ஷெய்தானிடம் இல்லை. அவனது இதயத்தில் வறுமை பற்றிய பயம் வந்துவிட்டால், அவன் சத்தியத்தை மறுப்பான்; மனோ இச்சைப்படி பேசுவான்; தன் இறைவனைப் பற்றி தப்பெண்ணம் கொள்வான்."

20. நுஃமான் பின் பஷீர் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :
"அழிவிலும் அழிவு தரும் விடயம் யாதெனில், சோதனை மிகுந்த காலத்தில் மோசமான காரியங்களைச் செய்வதாகும்."

21. இமாம், அல் ஹாபிழ் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஒரு விசுவாசி கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அதன் மூலம் நீண்ட நிம்மதியை அடைய முடியும்." 
22. இமாம் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல் குர்ஆன் ஓதாமல், திக்ர் செய்யாமல், துஆ கேட்காமல் மௌனம் காப்பது வணக்கமாகாது. அவ்வாறு கட்டளையிடப்படவுமில்லை. மாறாக, விஷமத்தனமான ஊசலாட்டத்தின் வாயல் திறந்துவிடப்படும். மௌனம் காத்திருப்பதை விடவும் அல்லாஹ்வை திக்ர் செய்வதில் ஈடுபடல் மிக மேலானது." 
23. "ஷஃபான் மாதம் வந்து விட்டால், இமாம் அம்ர் இப்னு கைஸ் றஹ் அவர்கள் தனது வர்த்தக முயற்சிகளை நிறுத்தி விட்டு, அல் குர்ஆனை ஓதுவதற்கு நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். மேலும், இமாம் அவர்கள், றமழானுக்கு முன்னதாக தன்னை சீர்படுத்திக் கொள்பவருக்கு பாக்கியம் உண்டாவதாக எனக் கூறுவார்கள்." 

24. இமாம் இப்றாஹீம் அல் ஹர்பி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்:

"ஓர் ஆடை சாயமிடப்படுவது போல், துன்பத்தில் உங்கள் குழந்தைகளை சாயமிட்டுக் கொள்வதற்கு முன் தீய நண்பர்களிடமிருந்து அவர்களை விலக்கி வையுங்கள்." 

25. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் றஹ் அவர்களின் தனயன் அப்துல்லாஹ் அவர்கள் தந்தையைப் பார்த்து, எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் எனக் கோரினார். அப்போது இமாம் அவர்கள் தன் தனயனை நோக்கி, நீ எப்போதும் நல்லதைச் செய்ய எண்ணம் கொள்.நீ நல்லதைச் செய்ய எண்ணும் போதெல்லாம் உனக்கு நல்லதே நடந்து கொண்டிருக்கும் எனப் பதிலளித்தார்கள்." 

26. இமாம் முஹம்மத் பின் சுலைமான் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஆண் குழந்தைகள் அருட் கொடைகள். பெண் குழந்தைகள் நற்கருமங்கள். அல்லாஹ் அருட் பாக்கியங்களுக்காக விசாரணை நடாத்துவான்.நற்காரியங்களுக்காக நற்கூலி வழங்குவான்." 

27. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை பங்கிட்டு வைத்துள்ளது போலவே ஒழுக்க நெறிகளையும் உங்களுக்கு மத்தியில் பங்கிட்டுள்ளான். அல்லாஹ் தான் நேசிப்பவர்களுக்கும் நேசிக்காதவர்களுக்கும் இவ்வுலகைக் கொடுக்கிறான். ஈமானை அவன் நேசிப்பவர்களுக்கு மாத்திரமே கொடுக்கிறான்."

28. இமாம் அலி அத் தயாலிஸி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" நான் எனது இரு கரங்களையும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் றஹ் அவர்கள் மீது தொட்டுத் துடைத்து விட்டு பின்னர் எனது இரு கரங்களையும் எனது மேனியில் தடவினேன்.அச்செயல் கண்டு இமாம் அவர்கள் கடுமையாக ஆத்திரமடைந்தார்கள்.அவர் தன்னைத் தானே உலுக்கிக் கொண்டு, இதை யாரிடமிருந்து எடுத்துக் கொண்டீர்கள் எனக் கேட்டார். உண்மையில், அவர் (பெரியார்களைக் கொண்டு பறக்கத் பெறும் இச்செயலை) கடுமையாக புறக்கணித்தார்." 

29. இமாம் நயீம் பின் ஹம்மாத் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"எவர் அல்லாஹ்வை அவனது படைப்பினங்களில் ஒன்றோடு ஒப்பிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்.
மேலும், அல்லாஹ் தன்னைப் பற்றி விபரித்துக் கூறியதை எவர் ஏற்க மறுக்கிறாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்."

30. இமாம் ழஹ்ஹாக் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பின்னர் ஒரு காலம், அக்காலத்தில் மனிதர்கள் சிலந்திப் பூச்சு கூடுகட்டும் அளவுக்கு அல் குர்ஆனை தொங்கவிட்டிருப்பார்கள். அதன் மூலம் எந்த பிரயோசனமும் அடையமாட்டார்கள்."


31. இமாம் அல் பர்பஹாரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் அல் குர்ஆனுக்கும் , நபி ஸல் அவர்களுடைய சுன்னாவுக்கும் முரண்பட்டு நடந்து கொள்கின்றானோ, அவன் ஒரு பித்அத்வாதியாகவே கணிக்கப்படுவான். அவனிடத்தில் எவ்வளவு அதிக அறிவும் நூல்களும் இருந்தாலும் சரியே!"

32. பறவைகள் அவற்றுக்கே உரிய தனித்துவமான தோற்றங்களோடு அமைந்துள்ளன.
பறவைகள் அவற்றை ஒத்த பறவைகளோடு மட்டுமே சேர்ந்து பறக்கின்றன.எனவே, எப்போதும் உனது கூட்டத்தைத் தேடிக்கொள். அப்போதுதான் சுதந்திரமாக உன்னால் பறக்க முடியும்.உன்னைப் போல உள்ளவன் உனது சிறகு உடைந்தால் உன்னைத் தாங்கிப் பிடிப்பான்.உனது கூட்டத்தில் இல்லாதவன் உனைப் பலவீனனாகக் கண்டால், உன்னை தின்றுவிடுவான்.!

33. யாரையும் காயப்படுத்தாதீர்கள்.மன்னிப்புக் கேட்டு வருந்துவதால் காயத்தின் அடையாளத்தை அழித்திட முடியாது. 

34. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

அல்லாஹ் ஓர் அடியானுக்கு நன்மை செய்ய நாடிவிட்டால், நேரத்தைக் கொண்டு அவனுக்கு உதவுவான். நேரத்தை அவனுக்கு துணையாக ஆக்கிவிடுவான்.
அல்லாஹ் அவ்வடியானுக்கு தீங்கு செய்ய நாடிவிட்டால், நேரத்தை அவனுக்கு பாதகமாக ஆக்கிவிடுவான். நேரம் அவனுக்கு சௌகரியமற்றதாக இருக்கும். 

35. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
உயிருள்ளவர்கள் இறந்தவர்களுக்காகச் செய்யும் மிகச் சிறந்த காரியம் துஆ - பிரார்த்தனை.

36. அஷ்ஷெய்க் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அனைத்து இரக்கமுள்ளவர்களினது இரக்கமும் ஒன்று சேர்க்கப்பட்டாலும் அல்லாஹ்வின் இரக்கத்தோடும் அருளோடும் ஒப்பிடுகையில் அவை ஒரு பொருட்டாகவே இருக்காது.

37. நீ ஒருவரின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பேனாவாக இருக்க முடியாவிட்டாலும், அவரது இதயத்திலுள்ள சோகத்தை அழிக்கும் ஒரு நல்ல அழிப்பானாக (eraser) இருக்க முயலவும்.

38. இமாம் புழைல் பின் இயாழ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வின் மீது ஆணையாக !
படைப்பினங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காது நீ இருந்தால், உனது எஜமான் நீ விரும்பும் யாவற்றையும் கொடுப்பான்."

39. உண்மையான அழகு என்பது, நீ அழகான முகத்தை வைத்திருப்பதல்ல.உண்மையில், அழகிய புத்தியையும் அழகான இதயத்தையும் அழகான ஆன்மாவையும்  கொண்டிருப்பதுதான் அழகு.
40. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஷரீஆ - மார்க்கத்தில் உள்ளபடி அதனுடன் ஒத்துப் போவது நடுநிலையான நியாயமான செயலாகும். ஷரீஆவில் உள்ளதை மீறி அதிகமாக செய்வது கடும் தீவிர போக்காகும். ஷரீஆவில் உள்ளதை விட குறைவாக செய்வது மெத்தனப் போக்காகும்."

41. இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மறுமையை நேசிப்பவர்கள் இவ்வுலகில் இழந்து போனவற்றைப் பற்றி கணக்கிலெடுக்கமாட்டார்கள். உலக நன்மைகள் அவர்களுக்குக் கிடைத்தால் அவற்றைப் பொருந்திக் கொள்வார்கள். அவர்களை விட்டும் தவறிப் போனவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ளமாட்டார்கள்."

42. ஷெய்குல் இஸ்லாம், இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"சத்தியத்தை விட்டும் ஆணவம் கொள்பவன், அசத்தியத்துக்கு வழிப்படுவதன் மூலம் சோதிக்கப்படுவான்." 

43. இமாம் அல் அவ்ஸாயி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் நல்ல, ஹலாலான உணவைக் கொண்டு நோன்பு நோற்கிறான். அவன் தனது சகோதரனை புறம் பேசுவதன் மூலம் ஹறாமான; மோசமான தன் சகோதரனின் மாமிசத்தைக் கொண்டு நோன்பு துறக்கின்றான்." 

44. இமாம் சுப்யான் அத் தௌரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"தன் வயதோடு விளையாடுபவன் உழவு நாட்களை வீணாக்கி விட்டான். உழவு நாட்களை வீணாக்கியன் அறுவடை நாட்களில் வருந்துவான்." 

45. இமாம் இப்னு அவ்ன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதர்களை நினைவுபடுத்திப் பேசுவது நோயாகும்.அல்லாஹ்வை நினைவுகூர்ந்து பிரஸ்தாபிப்பது நோய் நிவாரணியாகும்."

46. இமாம் கதாதா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ் முஃமினுடைய புனிதத்துவத்தை மேன்மைப்படுத்தியுள்ளான். அவன் உனது சகோதரனுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம் என்று தடை விதித்துள்ளான்."

47. இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்:

"றஜப் மாதத்தின் சிறப்புப் பற்றியோ, அதில் நோன்பு நோற்பது பற்றியோ, அதில் நாள் குறித்து நோன்பு நோற்பது பற்றியோ, அம்மாதத்தில் குறித்த நாட்களின் இரவுகளில் இராவணக்கத்தில் ஈடுபடுவது பற்றியோ ஆதாரபூர்வமான எந்தவொரு நபிமொழியும் வரக்கிடைக்கவில்லை." 

48. பிறரது மானத்தில் கைவைப்பதை விட்டும் தூரமாகிக் கொள்ளுங்கள். மனிதர்களை புறம்பேசுவதை விட்டும் தங்கள் நாவைக் காத்துக் கொள்ளுங்கள். இவ்வுலகம் பயங்கரமானது.எவன் பிறரை குறை குற்றம் பிடிக்கிறானோ, அவன் சோதிக்கப்படுவான். 

49. ஸஃத் பின் அபீ வக்காஸ் றழி அவர்கள், தனது மகன் உமர் றழி அவர்களிடம் கூறினார்கள் :
"என் அருமை மகனே! நீ செல்வத்தை வேண்டி நின்றால், மனத்திருப்தியோடு அதை வேண்டிநில். உனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால், செல்வம் உன்னை வளப்படுத்தாது." 

50. இமாம் முஹம்மத் பின் நாஸிர் அல் மிர்வஸி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வுடைய அதாப்- தண்டனையிலிருந்து தடுத்து நிறுத்தத்தக்க, தொழுகையைப் போன்ற ஒரு வணக்க வழிபாட்டை  நாம் கண்டறியவில்லை."

51. இமாம் ஹஸனுல் பஸரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இவ்வுலகம் அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை எதுவுமே இல்லை. அது படுத்து உறங்கி ,கனவில் தான் விரும்பிய கனவுகளை கண்டுகழித்து விழித்துக் கொண்ட ஒரு மனிதனின் நிலைக்கு ஒப்பானது."

52. மனிதர்கள் கடலைப் போன்றவர்கள். கடற்கரையை வைத்து கடலின் ஆழத்தை மதிப்பிடாதே! 

53. இமாம் கஃப் பின் அல் அஹ்பார் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் மரணத்தை பற்றி அறிந்து வைத்திருக்கிறாரோ அவருக்கு உலக பேரிடர்கள் ஒரு பொருட்டாக இருக்காது." 

54. அல்லாமா ஸாலிஹ் உதைமீன் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டுள்ளான். அதை அவன் விட்டுவிட்டால், ஷைத்தானுக்குரிய அடியானாக அவன் ஆகிவிடுவான். அத்தகைய அவன் ஷைத்தானுக்குரிய அடியானாகவே இருந்தாக வேண்டும்." 

55. ஒரு நயவஞ்சகன் பகிரங்கமாக உன்னை புகழ்ந்தும், மௌனமாக உனக்குத் துரோகமும் செய்வான். 

56. .இமாம் ஷாபிஈ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் ஒரு சுன்னாவைக் கண்டால், அதைப் பின்பற்றுங்கள்.வேறு யாரையும் நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டாம்."

57. சிலவற்றை உயரமான மலைகள் என்று நீ நினைக்கக்கூடும். ஆனால், உண்மையில் அவை வெற்றுப் பைகள். 

58. ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"தௌஹீத் எனும் ஏகத்துவத்தை விட அல்லாஹ்வுக்கு மிக விரும்பத்தக்கது வேறெதுவுமில்லை.
ஷிர்க் எனும் இணைவைத்தலை விட அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பானது வேறெதுவுமில்லை." 

59. சூழ்நிலைகள் உங்கள் தோற்றத்தை மாற்றலாம்.ஆனால், அவை உங்கள் அஸலை மாற்றாது. இதை என்றும் நினைவில் வைத்துக் கொள்.

60. இமாம் முக்பில் பின் ஹாதி அல் வாதிஈ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நாம் இப்போது குழப்பகரமான காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த குழப்பமான சூழ்நிலைகளை விட்டும் எம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வாலேயே முடியும். அதன் பின்னர் பிரயோசனம் தரக்கூடிய கல்வியால் முடியும்." 

61. கழுதைகளுடன் பந்தயத்தில் ஈடுபடாதீர். ஏனெனில், அவைகள் உன்னைத் தோற்கடித்தால் நீ ஒரு தோற்றுப்போன கழுதை. நீ அவைகளை ஜெயித்து விட்டால், நீ மிகச் சிறந்த கழுதை.! 
62. இமாம் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் : 

உனது கால்களை நகர்த்துவதற்கு இவ்வுலகம் சமமாகாது. அப்படி இருக்கையில், எப்படி நீ அதன் பின்னால் ஓடுவாய்? 
63. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"கப்ருடைய தனிமை வாழ்க்கையில் நற்செயல்கள் தவிர்த்து வேறெதுவும் துணைக்கு வராது."

64. நீ யாரையும் பரிகாசம் பண்ணவோ, யாருடனும் திமிராக நடக்கவோ, கேலிபண்ணவோ வேண்டாம். நாளை உனது நிலை என்னவாகும் என்பது உனக்குத் தெரியாது! படைப்பினங்கள் உன்னை நேசிக்கும்படி பண்பாளனாக நடந்து கொள்.

65. அலி பின் அல் ஹுஸைன் றழி அவர்கள், "தன்னிடத்தில் யாசகன் வந்தால் அவனை மனதார வரவேற்று, எனது நன்மைகளை மறுமைக்கு எடுத்துச் செல்பவருக்கு வாழ்த்துக்கள் உண்டாகட்டும் எனக் கூறுபவராக இருந்து வந்தார்."

66. அல்லாமா இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதனுக்கும் அவனது அருட்பாக்கியங்களுக்கும் இடையில் பாவங்கள் குறுக்கிடக் கூடும். அவ்விதம் பாவங்கள் செய்பவன் அருள்பாலிக்கப்படமாட்டான்; அவனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது." 

67. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வின் நினைவு இதயத்தையும், முகத்தையும், அங்க அவயவங்களையும் பிரகாசிக்கச் செய்யும். மேலும்,அது அவனது இவ்வுலகிற்கும், கப்றுடைய வாழ்க்கைக்கும், மறுவுலக வாழ்க்கைக்குமான ஒளியாகும்." 

68. அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பரம்பரைப் பெருமையும் குல கோத்திரப் பெருமையும் அறியாமைக் கால மக்களின் பண்புசார் அம்சங்களாகும்." 

69. அல்லாமா இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"உங்கள் இறைவனை உங்கள் கண்களால் காண்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இவ்வுலகம் உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவேமாட்டாது."

70. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் தான் தர்மம் செய்யும் செல்வத்தை தனது தகப்பன், தாய், சகோதரன் மற்றும் தான் விரும்பிய ஒரு முஸ்லிமின் பெயரில் கொடுப்பதாக நிய்யத் வைத்துக் கொள்ள முடியும்." 

71. இமாம் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அதிகம் பாவம் செய்து, குறைவாக அழுபவனே! உனக்கு அழுகை வராமைக்காக அழு.முன்னோர்கள் இறையச்சத்துடன் அழுது கொண்டிருந்தார்கள். நீங்களோ பாவம் செய்து கண்டு சிரித்துக் கொண்டருக்கின்றீர்கள்." 

72. கலீபா உமர் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதர்கள் பித்அத்தை நல்லதாக, அழகானதாக பார்த்த போதிலும் பித்அத் யாவும் வழிகேடுதான்."

73. நாவு ஒரு சிறிய உறுப்புதான்.ஆனாலும், வைத்தியர்கள் அந்த நாவை வைத்தே உடல் நோய்களை கண்டறிகிறார்கள்; அறிவு ஞானமுடையோர் உளநோய்களை கண்டறிகின்றனர்.

74. அறிஞர் அம்ர் பின் கைஸ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"ஒரு மனைவி மறுமை நாளில் தன் கணவன் பற்றி அல்லாஹ்விடத்தில் தர்க்கித்து சண்டைபிடித்து , அவள் அல்லாஹ்விடத்தில் முறையிடுவாள் : என் கணவர் எனக்கு ஒழுக்கத்தைப் போதிக்கவில்லை; அவர் எனக்கு எதையும் கற்றுத்தரவில்லை ;அவர் சந்தையிலிருந்து ரொட்டி (போன்ற உணவுப் பண்டங்களையே) கொண்டுவந்து தருபவராக இருந்தார்." 

75. அஷ்ஷெய்க், கலாநிதி அப்துல்லாஹ் அல் புகாரி (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :
"மக்கள் கொடுத்தாலும் மறுத்தாலும் அவர்களின் அழுக்கை நோக்கி கையை நீட்டுவதை விட, நேர்மையாகவும் மரியாதையாகவும் விறகு வெட்டியாகவோ சுமை தாங்கியாகவோ வேலைசெய்து உழைப்பது மேலானது." 

76. இப்னு அப்பாஸ் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல் குர்ஆனை ஓதிப்படித்து அதிலுள்ள படி செயல்படுபவன், இவ்வுலகில் வழிதவறாதிருப்பதையும், மறுவுலகில் துன்மடையாதிருப்பதையும் அல்லாஹ் உத்தரவாதப்படுத்தியுள்ளான்." 

77. இமாம் சுப்யான் அத் தௌரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அதிக நன்மையைச் செய்யவும். அல்லாஹ் கப்ரில் உனக்கு துணைநிற்பான்." 

78. சிலர் புத்தகத்தைப் போன்றவர்கள்.அவர்களில் ஞானத்தையும் அநேக நன்மையையும் காண்பீர்கள். வேறு சிலரில் அட்டைப் படத்தின் அழகைத் தவிர வேறு எதனையும் உங்களால் காண முடியாது.

79. இமாம் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"எத்தனையோ அல் குர்ஆன் வசனங்கள் நமக்கு மத்தியில் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆனாலும் நமது இதயங்கள் கல்லைப் போலவோ, அல்லது அதை விடக் கடிமானதாகவோ இருக்கின்றன."

80. இமாம் அபூ பக்ர் அல் மர்ரூதி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நட்பு அல்லாஹ்வுக்காக இல்லாவிடின் அது நிலைத்திருக்காது." 

81. இமாம் முக்பில் அல் வாதிஈ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"எமது இதயங்கள் இறந்து போவதை விடவும் எமது உடல்கள் இறந்து போவது எம்மிடத்தில் மிக விருப்பத்துக்குரிய விடயமாகும்."

82. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"கவனக்குறைவு என்பது இதயத்தின் தூக்கமாகும். இதனால்தான், புலனளவில் விழித்திருப்பதாக பலரை உன்னால் பார்க்க முடிகிறது.உண்மையில் அவர்கள் உறக்கத்தில் உள்ளனர்."
"அவர்கள் விழித்திருப்பதாக நீ கருதுகின்றாய். உண்மையில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்." 
(சூறதுல் கஹ்ப்) : 18 

83. கலீபா உமர் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இதர மனிதர்களைப் பற்றி பேசுவதில் மூழ்கிவிடாதீர்கள். அது ஒரு பேரழிவு மிக்க விடயம். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து அவனைப் பற்றி பேசுவதில் ஈடுபடுங்கள்.அது கருணை காட்டப்படத்தக்க விடயமாகும்."


84. ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நபி ஸல் அவர்களுக்கும் மக்காவைச் சேர்ந்த குறைஷ் குலத்தவர்களுக்குமிடையே பைஅதுர் ரிழ்வான் எனும் ஒப்பந்தம் இடம்பெற்ற மரத்தின் கீழ் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தொழ முனைகிறார்கள் என்ற செய்தி கலீபா உமர் றழி அவர்களை எட்டியது.உடனே ஏகத்துவத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொருட்டு, அம்மரத்தை வெட்டிவிடுமாறு கலீபா அவர்கள் பணித்ததை அடுத்து அம்மரம் தறிக்கப்பட்டது." 

85. ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஓரிறைக் கொள்கைதான் இஸ்லாமிய மார்க்கத்தின் ஆரம்பமும் இறுதியும் ; அவ்வாறே அம்மார்க்கத்தின் உள்ரங்கமும் வெளிரங்கமும் ஓரிறைக் கொள்கைதான்." 

86. ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"தன்னுடைய உள்ளம் பாவம் ஒன்றைச் செய்யுமாறு எடுத்துக் கூறியும் அதனை வெறுத்து, தனது உள்ளத்திலிருந்து அதனை விரட்டியடித்து, அதை அல்லாஹ்வுக்காக கைவிட்டவனுக்கு நன்மையும், புண்ணியமும், இறை பக்தியும் பெருகும்."

87. மறதி விற்கப்படுவதாக இருப்பின், அது தங்கத்தை விடவும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கும்.

88. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"வாழ்வாதாரமும் வாழ்க்கை ஆயுட் காலமும் இரண்டு இணைபிரியா நண்பர்கள். ஆயுள் நீடிக்கும் வரை வாழ்வாதாரமும் வந்து கொண்டே இருக்கும்."

89. உனக்குரிய பங்கை எவரும் உன்னை விட்டும் தடுத்து விட முடியாது.!
உனக்காக எழுதப்பட்டுள்ள வாழ்வாதாரத்தை உன்னை விட்டும் எவரும் தடுத்திட முடியாது!
உனது பதிவேட்டில் முன்கூட்டியே உனக்காக நிர்ணயிக்கப்படாதவை உன்னை விட்டும் விலகிச் சென்றுவிடும்!
எனவே, நீ குரோதம் கொள்ள வேண்டியதில்லை; நீ வெறுப்புக் காட்ட வேண்டியதில்லை; நீ பீதி அடைய வேண்டியதில்லை!
அல்லாஹ் சிறந்த திட்டமிடலாளன்;அவன் சிறந்த பொறுப்பாளன். 

90. ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"சத்தியத்தை புறந்தள்ளி பெருமையடித்து ஆணவம் கொள்பவன் அசத்தியத்துக்கு அடிபணிவதன் மூலம் சோதிக்கப்படுகின்றான்." 

91. இமாம் புழைல் இப்னு இயாழ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"தன் சகோதரனிடத்தில் வெறுக்கத்தக்க விடயமொன்றைக் கண்டு, (அதைத் தடுக்க முயஸாது அதை அங்கிகரிப்பது போல்) அவனைப் பார்த்து சிரித்தால், அவன் தன் சகோதரனுக்கு துரோகமிழைத்து விட்டான்."

92. கிணற்றில் கல்லை எறிந்தவன், அது நீரோடு மீதும் சத்தத்தைக் கேட்க காத்திருக்கிறான்.
இவ்வாறுதான் உன்னை ஏசியவன், திருப்பி நீ ஏசுவதை எதிர்பார்த்திருக்கிறான். 
கிணறு மிக ஆழமானது என்பதை அவன் அறிந்து கொள்ளும் படி அவனை நீ விட்டுவிடு.

93. முஆத் பின் ஜபல் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வை திக்ர் செய்வது அவனது வேதனையிலிருந்து காப்பாற்ற வல்லது."


94. இமாம் ஷாபிஈ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"கல்வி என்பது மனனமிட்டு வைத்திருப்பதன்று. உண்மையான கல்வி என்பது மற்றோருக்கு பயனளிப்பதாகும்."

95. உனது நாவின் நேர்த்தி என்பது உனது சிந்தனை நேர்த்தியின் மொழிபெயர்ய்பாகும். 
எனவே, உனது நாவின் சத்தத்தை உயர்த்தாதே! உனது வார்த்தைகளின் மட்டத்தையே உயர்த்து.

96. அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நீ இரட்சிப்பை அடைய விரும்பி, மகிழ்ச்சியோடு இருக்கவும் விரும்பி, வழிகேட்டிலிருந்து பாதுகாப்பு பெறவும் விரும்பினாஸ்,  நபி ஸல் அவர்களோடு இருந்த நபித் தோழர்கள் மற்றும் அவர்களை அடுத்து வந்த நல்லடியார்களின் (ஸலப்fகள்) வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்." 

97. இது அப்பாஸ் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நீ உனது கன்னத்தில் கை வைப்பது உட்பட அனைத்துமே அல்லாஹ்வின் விதிக்குட்பட்டவை."

98. நீ விரும்பாத துன்பம், நீ கனவு கண்டிராத அழகிய ஒரு விதியின் பக்கம் உன்னை வழிநடத்தலாம்.

99. அல்லாமா இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் ::

"மனிர்களின் அதிக எண்ணிக்கையை வைத்து நாம் சத்தியத்தை புரிந்து கொள்வதில்லை.
அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி ஸல் அவர்களின் சுன்னா என்பவற்றுக்கு முரண்படாமல் உடன்பாடாக நடந்து கொள்வதை வைத்தே சத்தியத்தை புரிந்து கொள்கிறோம்." 

100. உன்னை மகிழ்விக்க பிறரை அதட்டாதே!
உனது தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேறு எவருக்கும் அநியாயம் இழைக்காதே!
மற்றைய மனிதர்களை வேதனைப்படுத்தாமல் உனது மகிழ்ச்சியை கட்டியெழுப்ப முனைந்து பார்!

101. இமாம் ஸாலிஹ் அல் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

"குகைத் தோழர்களுடன் (அஸ்ஹாபுல் கஹ்ப்) இருந்த நாய் அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றது போல் நல்லவர்களின் சகவாசத்தால் மிருகங்கள் கூட நன்மையடையும்." 

102. இமாம் அஹ்மத் பின் ஹர்ப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நான் ஐம்பது வருடங்களாக வணங்கி வழிபட்டு வந்துள்ளேன்.மூன்று விடயங்களை கைவிடும் வரை வணக்கத்தின் சுவை எனக்குக் கிடைக்கவில்லை.
1. மனிதர்களினது திருப்தியை கைவிட்டேன். அதனால் எனக்கு சத்தியத்தை பேச முடிந்தது.
2. கெட்டவர்களின் சகவாசத்தை கைவிட்டேன்.அதன் மூலம் நல்லவர்களின் நட்பு கிடைத்தது.
3. உலக இன்பத்தை கைவிட்டேன். அதனால் எனக்கு மறுவுலக இன்பம் கிடைத்தது." 

103. உனது நேர்த்தியின் பாதி உனது வார்த்தைகளிலும் அதன் மற்றைய அரைப்பகுதி உனது நடத்தைக் குணவியல்பிலும் உள்ளது.

104. ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இந்த பூமியில் வசிப்பவர்கள் மீது அல்லாஹ் புரிந்த மிகப் பெரும் அருள், அவர்கள் மீது முஹம்மத் ஸல் அவர்களை இறைத்தூராக அனுப்பி வைத்ததுதான்!"

105. இமாம் ஹாதிம் அல் அஸம்மு றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மூன்று விடயங்களில் அவதானமாக இருந்து கொள்:
1. நீ ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ்வின் பார்வை உன் பக்கம் உள்ளது என்பதை நினைவில் கொள். 
2. நீ பேசினால் அல்லாஹ் உனது பேச்சை செவிமடுக்கிறான் என்பதை நினைவில் வைத்திரு. 
3. நீ அமைதி காத்தால் உன்னைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடத்தில் உள்ளது என்பதை ஞாபகத்தில் வைத்திரு." 

106. புறத் தோற்றத்தை மாற்றுவதில் காலம் புதுமை படைத்து வருகிறது. 
ஆனாலும் அது மனித உட்பகுதியை மாற்றுவதில் இயலுமை அற்றுப் போயுள்ளது. 

107. இமாம் றபீஃ பின் அனஸ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வின் மீது அதீத அன்பு வைத்துள்ளமைக்கான அடையாளம், அவனை அதிகம் நினைவு கூர்வதாகும்.ஏனெனில், நீ அதிகம் நேசிக்கின்ற எதையும் அதிகம் நினைவு கொள்ளாமல் இருப்பதில்லை." 

108. முட்டாள்களுடன் வாக்குவாதப்படாதீர்கள். அவர்கள் தங்களை அவர்களுடைய மட்டத்திற்கு இழுத்து, அவர்களது அனுபவத்தால் முட்டாள்தனமான விவாதத்தில் உங்களை மிகைத்து வென்றுவிடுவார்கள். 

109. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" நோயாளிக்கு சந்தோசத்தைக் கொடுப்பது நடைமுறையில் பாதி மருந்தாகும்."

110. நீ நடந்து செல்லும் பாதையில் முள்ளை விதைக்காதே! சிலவேளை நீ அப்பாதையால் வெறுங்காலோடு திரும்பி வரக்கூடும்.உண்மையில், வாழ்க்கை என்பது வளைந்து செல்லும் சாலை போன்றது. நீ செய்கின்ற எதுவும் உனக்கு எதிர்வினை காட்டக்கூடும். அதனால், நல்லதை அறுவடை செய்யும் பொருட்டு, நல்லதையே செய்! 

111. அபூ தர்தாஃ றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மரணத்தைப் பற்றி அதிகம் நினைப்பவனுடைய மகிழ்ச்சியும் பொறாமையும் வெகுவாக குறைந்து விடும்." 

112. உள்ளங்களுக்கிடையில் நெருக்கம் இல்லாது உடல்கள் மட்டும் ஒட்டி நெருங்கி இருப்பதில் எந்த நன்மையும் இல்லை. 

113. இமாம் அபூ கல்லாத் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் தொழுகையை தன் கையில் எடுக்காது அதைப் புறக்கணித்து பொடுபோக்காக நடந்து கொள்கிறாரோ, அவருக்கு கொடுக்கப்படுன்ற முதலாவது தண்டனை, வாழ்வாதாரக் குறைபாடு ஏற்படுத்தப்படுவதாகும்." 

114. பலூன் உன் முகத்தில் வெடித்துச் சிதறிவிட்டால் அதற்காக நீ கோபப்படாதே!
அதன் அளவை விட அதனை ஊதிப் பெருப்பித்தவன் நீயே!
சில மனிதர்களின் விடயத்திலும் இதே நிலைப்பாடுதான்! 

115. இமாம் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ் ஒருவனுக்கு நலவு செய்ய நாடிவிட்டால், முஹம்மத் ஸல் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை அவனது நாவின் மீது இலகுப்படுத்தி விடுவான்."

116. ஒழுக்கமானவன் தனது விழுமியம் காரணமாக மௌனம் காத்தால், ஒழுக்கயீனமானவன் தானே அவனை வாயடைக்க வைத்ததாக நினைக்கிறான்.

117. ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், தனது பெற்றோருக்கு வழிப்படுவதை விடவும் தனது கணவனுக்கு வழிப்பட்டு நடப்பதுவே மேலானது."

118. உன்னோடு உரையாடும் அநேகரின் வார்த்தைகள் உன்னை சந்தோஷப்படுத்தும்.
ஆனாலும், செயலளவில் சிலர் மாத்திரமே உன்னை சந்தோஷப்படுத்துவர்.

119. இமாம் யூசுப் பின் அல் ஹுஸைன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இவ்வுலகில் இரண்டு கொடுங்கோன்மைகள் உள்ளன.ஒன்று அறிவுக் கொடுங்கோன்மை மற்றொன்று செல்வக் கொடுங்கோன்மை.  
அறிவுக் கொடுங்கோன்மையிலிருந்து உன்னைப் பாதுகாப்பது வணக்க வழிபாடாகும். 
செல்வக் கொடுங்கோன்மையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது பற்றற்ற வாழ்வாகும்."

120. இமாம் மைமூன் பின் மிஹ்றான் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அநியாயக்காரனும் அவனது அநியாயத்துக்கு உதவுபவன், அநியாயக்காரனை நேசிப்பவன் ஆகிய அனைவருமே சமம்தான்!" 

121. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"'இதயம் இறுகிப் போவதற்கான பிரதான காரணிகளாக உள்ளவை :
அல்லாஹ்வை புறக்கணித்து வாழல்.
அல்லாஹ்வை விட்டுவிட்டு பிறர் மீது உள்ளம் தொடர்புபட்டிருத்தல்.
அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் அலட்சியமாக இருத்தல்.
அல்லாஹ் அல்லாதோரை நேசித்தல்." 

122. சில மனிதர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் நல்ல மனிதனை நேசிப்பார்கள், ஆயினும், அவனுக்கு கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கமாட்டார்கள். அவர்கள் கெட்ட மனிதனை நேசிக்கமாட்டார்கள். ஆயினும், அவனுக்கு ஆயிரம் கணிப்பு கொடுப்பார்கள். 

123. புழைல் பின் இயாழ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதர்களுக்காக குறித்த அமல் ஒன்றை  விடுவது முகஸ்துதியாகும். மனிதர்களுக்காக ஓர் அமலைச் செய்வது ஷிர்க் ஆகும். இவ்விரண்டை விட்டும் விமோசனம் பெறுவதுதான் இக்லாஸ்."

124. நம்பிக்கையாளனை விட மிக மகிழ்ச்சியாளனாக வேறு யாரும் இருப்பதில்லை. அவன் மகிழ்ச்சியை எய்தினால் அவ்விதம் வாழ்வான்.அவனை அது வந்தடையவில்லையாயின், மகிழ்ச்சியோடு அதனை அடையக் காத்திருப்பான். 

125. அல்லாமா ஸாலிஹ் அல் லஹீதான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் எவ்வளவு விவேகியாக இருந்த போதிலும், இறையச்சம், கடவுள் பய பண்புகளைக் கொண்டிருந்தாலும், அவன் தனது உள்ளத்தினாலும் பிற மனிதர்களினாலும் ஏற்படும் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி அவனிடம் பிரார்த்திக்க வேண்டும்." 

126. தவறான இடம், தவறான நபர்களைப் போல வேறெதுவும் மனிதனின் ஆன்மாவைக் கொல்வதில்லை.
தொடக்கத்தை நன்றாக தெரிவுசெய்து கொள்ளுங்கள். முடிவு உங்களுக்கு நன்றாக அமையும். 

127. இமாம் அபுல் ஜவ்ஸாஃ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் : 

" ஒரு நயவஞ்சகனுக்கு (முனாபிக்) அல் குர்ஆனை ஓதுவதை விடவும் பெரும் கல்லை சுமந்து செல்வது இலகுவானது." 

128. முஆவியா றழி அவர்கள் கூறியுள்ளார்கள் : 

"எல்லா மனிதர்களையும் என்னால் திருப்திப்படுத்த முடியும். அல்லாஹ்வின் அருள் மீது பொறாமை படுபவனைத் தவிர. அவ்வருள் விலகிப் போவதைத் தவிர வேறெதுவும் அவனைத் திருப்திப்படுத்தாது."

129. பலமுறை வெட்டி இணைக்கப்பட்ட கயிறு மறுபடியும் ஒரு கயிறாக மீளாது. ஆனால், அது ஒரு முடிச்சுக்களின் தொகுதியாகவே இருக்கும்!

130. இமாம் புழைல் இப்னு இயாழ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நீங்கள் மக்களுடன் ஒன்றித்து கலந்து வாழ்ந்தால், நற்குணத்தையும் அத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அது நல்லவற்றின் பக்கமே அழைத்துச் செல்லும்."

131. யார் அல்லாஹ்வுடைய கட்டளையை பொறுப்புடன் நிலைநிறுத்துகிறாரோ, அல்லாஹ் அவருடைய கருமங்களை பொறுப்பேற்று நிலைநாட்டுவான். 

132. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதர்களில் மிகவும் முட்டாள் யாரெனில், வீட்டை அண்மித்த நிலையில் பயணத்தின் முடிவில் வழிதவறி விடுபவனே!. 

133. மனிதனின் வாயினால் வரும் வார்த்தைகள் ஆடையைப் போன்றவை. அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு முன் அவற்றை முதலில் நம்மில் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், அவை இரண்டும் ஒரு மனிதனின் சுவை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை பிரதிபலிக்கின்றன.

134. இமாம் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனித மனங்களுக்கு துன்பம் விளைவித்து சிரமத்தை கொடுக்கும் யாவும் அவனது பாவங்களுக்கான குற்றப் பரிகாரமாகும். மனிதன் இதற்கு காரணமாக இல்லாவிட்டாலும் சரியே! நோய் முதலானவற்றை இதற்கு உதாரணப்படுத்தலாம். அநேக மார்க்க ஆதாரங்கள் இதையே குறிப்பிடுகின்றன.

135. அல்லாமா றபீஃ அல் மத்கலி அவர்கள் கூறியுள்ளார்கள் :

" சமூக வலைத்தலங்களிலும் பொது வெளிகளிலும் தர்க்கம்,தகராறு, வாக்குவாதங்களில் ஈடுபடுவதை கைவிடுமாறு உங்களுக்கு நான் உபதேசிக்கின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிப்பானாக!
அறிவுள்ளவன் அறிவோடு பேசுவான், அறிவுடன் எழுதுவான், அறிவோடு அழைப்பான், தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அழைப்பான்.
கருத்து வேறுபாட்டையும் பிரிவினைக்கான காரணங்களையும் விட்டு தவிர்த்து கொள்ளுங்கள்.அவற்றை உங்களுக்கு மத்தியில் கிளறாதீர்கள்." 

135. காலம் மனிதர்களை மாற்றி அமைக்காது. ஆனால், அவர்களின் உண்மையான வடிவத்தை அது தொடர்ந்து வெளிப்படுத்தும்.

136. இமாம் திர்மிதி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அறிவியலில் ஈடுபடுவதுதான் இளைஞனுக்கு நல்லது.!
பள்ளிவாசலில் தங்கியிருப்பதுதான் வயோதிபருக்கு நல்லது!.
வீட்டில் இருப்பதுதான் பெண்ணுக்கு உகந்தது.!
பிறருக்கு தொல்லை கொடுப்பவன் சிறையில் இருப்பதுதான் நல்லது!" 

137. வெள்ளி நாட்களில் இமாம் மிம்பரில் ஏறிய பின்னரே பள்ளிவாசல்கள் நிரம்புகின்றன. அதேவேளை, விளையாட்டு மைதானங்கள், இரு அணியினரும் மைதானத்துள் நுழைவதற்கு பல மணித்தியாலங்களுக்கு முன்னரே நிரம்பி வழிகின்றன. உண்மையில், நாம் நம்மை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

138. இமாம் இப்னு ஹன்பல் றஹ் அவர்களிடம் ஒருவர் வந்து, எனக்கு அறிவுரை பகருங்கள் என வேண்டினார்.அதற்கு இமாம் அவர்கள், " நீ எங்கிருந்த போதும் அல்லாஹ்வின் கட்டளையை மதித்து நடந்து கொள்.அல்லாஹ் உன்னை கண்ணியப்படுத்துவான்" எனக் கூறினார்கள். 

139. நீ ஒலிவ்வை அழுத்தினால் அது உயர்தரமான ஒலிவ் எண்ணையைத் தரும்.
நீ பழங்களை அழுத்தினால் அவை மிகவும் சுவையான பழச்சாறைத் தரும்.
இதிலுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்னவெனில், இவ்வுலகம் கவலைகள், சோதனைகளைக் கொண்டு உன்னை அழுத்தினால், உன்னிலிருந்து சுவை மிகுந்த ஒன்றை அல்லாஹ் வெளிப்படுத்த விரும்புகிறான் என்பதை நீ அறிந்து வைத்துக்கொள்.

140. ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதர்கள் விடயத்தில் பேசுவது அறிவு மற்றும் நீதியுடன் இருக்க வேண்டும். பித்அத் வாதிகளின் நிலைப்பாடு போல அறியாமையுடனும் அநீதியுடனும் இருந்து விடக் கூடாது." 

141. அமைதியாக இருப்பவரெல்லாம் நிம்மதியாக இருப்பதில்லை. நம்மில் சிலர் மிகுந்த வலியுடன் இருக்கின்றனர். ஆனாலும், அவர்கள் யாரிடமும் முறையிடுவதில்லை. 

142. இமாம் அப்துல் பர்  றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" யார் கல்விக்காக ஒரு மணித்தியாலம் அவமானத்தை தாங்கிக் கொள்ளவில்லையோ, அவர் அறியாமையின் அவமானத்தில் நிரந்தரமாக நிலைத்திருப்பார்."

143. இமாம் புழைல் பின் இயாழ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஓர் இறை விசுவாசி தன் சகோதரனின் குறைகளை மறைத்து, அறிவுரை கூறி உபதேசிப்பான். அதேசமயம் ஒழுக்கக் கேடான கெட்டவன் தனது சகோதரனின் குறைகளை வைத்து இழிவுபடுத்தி நிந்திப்பான்."

144. உண்மையில் உன்னை நேசிப்பவருக்கு உன் மீதுள்ள மதிப்பை, அவர் உனக்காக எடுக்கும் முயற்சிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்; வெறும் வார்தைகளால் அல்ல. 

145. உமர் இப்னுல் கத்தாப் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் : 

"அறிவுரை வழங்காத ஒரு சமூகத்தில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அவ்வாறே அறிவுரையை விரும்பாத ஒரு சமூகத்திலும் எந்த நன்மையும் ஏற்படாது." 

146. மனிதர்களில் மிகவும் பலவீனமானவர் தனது இரகசியத்தை மறைக்க முடியாதவர், 
அவர்களுள் வலிமையானவர் தன் கோபத்தை அடக்கிக்கொள்ளும் வலிமையுடையவர்,
அவர்களுள் மிகவும் பொறுமையாளர் தனது வறுமையை மறைத்துக் கொள்பவர்,
அவர்களுள் செல்வந்தர் எளிமையானவற்றைப் பொருந்திக் கொள்பவர். 

147. அப்துல்லாஹ் பின் முபாறக் றஹ் அவர்களிடம் ஒருவர் வந்து, தனக்கு உபதேசிக்குமாறு வேண்டினார். அதற்கு இமாம் அவர்கள்,  "உனது மதிப்பை நீ அறிந்து வைத்துக்கொள்" எனக் கூறினார்கள்.


148. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இவ்வுலகில் மிகவும் இலாபம் தரக்கூடிய விடயம் யாதெனில், சகல நேரங்களிலும்  மனசுக்கு ஏற்றமானதும் மறுமைக்கு பயனளிக்கக்கூடியதுமான விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகும்." 

149. உன்னைப் படைத்த அல்லாஹ்விடமிடமிருந்து யாவற்றுக்கும் இழப்பீடு உள்ளது அதனால் நீ ஒருபோதும் நஷ்டமடையமாட்டாய்!

150. இமாம் ஹஸனுல் பஸரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"தான் செய்த குற்றத்திற்காக பாவமீட்சி பெற்று திருந்திய தன் சகோதரனை இழிவுபடுத்துபவனை அல்லாஹ் சோதிப்பான்"

151. மனிதர்களின் திருப்தியைப் பெறுவதற்காக தன் வாழ்நாளின் பல வருடங்களை இழந்து நஷ்டப்படுவதைத் தவிர மற்றைய அனைத்து நஷ்டங்களும் ஈடுசெய்யப்படக் கூடியவை.

152. இமாம் ஷாதிபி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான அறிகுறிகள் :

1 அல்லாஹ்வுக்கு வழிப்படுவது இலகுவாக இருத்தல்.
2 தனது செயல்பாடுகள் ஸுன்னாவுக்கு ஒத்திசைவாக இருத்தல்.
3 நல்லவர்களோடு நட்புறவு வைத்திருத்தல்.
4 சகோதர உறவுகளுடன் அழகிய நற்குணங்கள் பிரயோகித்து வாழல். 
5 படைப்பினங்களுக்கு நன்மை செய்தல்.
6 சகோதர முஸ்லிம்களின் விவகாரங்களில் அக்கறை காட்டல்.
7 நேர முகாமைத்துவம் பேணல்."

153. கோபமாக இருக்கும் போது அதிகமாக பேசாதே! வார்த்தைகளை அடக்கிக் கொள்.அவ்வார்த்தைகள் உன்னைக் கட்டுப்படுத்தும்படி விடாதே!
கோபமாக இருக்கும் தருணங்களில் சொல்லப்படும் பெரும்பாலான வார்த்தைகளால் சொல்பவரே வருத்தப்படுவார். 

154. இமாம் அல் அவ்ஸாயி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதர்கள் மீது ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒரு நேசம்மிக்க சகோதரன், ஹலாலான ஒரு திர்ஹம் பணம், ஸுன்னாவின் அடிப்படையிலான ஓர் அமல் என்பவற்றைக் காண்பது மிக அரிதாக இருக்கும்."


155. இமாம் ஹஸனுல் பஸரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"செல்வம் அதிகம் உள்ளவரிடம் பாவங்கள் பெருகும். அதிகம் பேசுபவரிடம் பொய் அதிகரிக்கும். கெட்ட குணம் உள்ளவர் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வார்." 

156. உன்னைக் கடந்து செல்லும் எந்த நாட்களையும் நீ வெறுக்காதீர்!
ஏனெனில், அந்நாட்களுள் இனிமையானவை உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். சோகமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கும்.கடினமான நாட்கள் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்.

157. இமாம் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் தான் செழிப்பாகவும் செழுமையாகவும் இருக்கும் நிலையில் இறைபக்தியுடனும் கீழ்ப்படிதலுடனும் அல்லாஹ்வுடன் பழகுகிறாரோ, அவரது துன்பமான நேரத்தில் இரக்கத்துடனும் உதவியுடனும் அல்லாஹ் அவரை நடாத்துவான்."

158. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள் :

"உங்களில் எவரும் தனது குடும்பத்தவர்களுக்கு நன்மையையும் நேர்வழியையும் ஏவாமலும்; அவர்கள் புரியும் தீமையையும் சீரழிவையும் தடுக்காமலும் காணாமல் போன ஒருவரைப் போல் இருக்க வேண்டாம்." 

159. நன்மைகள் உட்பிரவேசிக்கும் வாயிலாக நீ இரு.
அதற்கு உன்னால் முடியாது போனால், ஒளி உட்புகுந்திடும் ஜன்னலாக இரு.
அதற்கும் உன்னால் முடியாது போனால், களைத்தோர் தலையை சாய்த்துக் கொள்ளும் சுவராக நீ இருந்து கொள். 

160. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் தனது சகோதரனுக்கு தீங்கு விளைவிக்கிறானோ, அவன் மறு உலகம் செல்லும் முன்பே இவ்வுலகில் வைத்து அல்லாஹ், அவன் விளைவித்த தீங்குக்காக பழிவாங்குவான்."

162. ஒழுக்கவியல் நோக்கில், மக்கள் சொல்வதை கவனமாக கேள். ஆயினும், முன்னெச்சரிக்கையாக அவர்கள் கூறுவதையெல்லாம் நம்பிவிடாதே !

163. அபுத் தர்தாஃ றழி அவர்கள் தனது மனைவி உம்முத் தர்தாஃ றழி அவர்களுக்கு  கூறிய உபதேசம் :

"நான் கோபப்பட்டால், பொறுமை காத்து என்னைப் பொருந்திக் கொள். உனக்குக் கோபம் வந்தால், நான் உன்னைப் பொறுத்துப் பொருந்திக் கொள்கிறேன்.இவ்விதமான புரிந்துணர்வோடு நாம் இருக்காவிட்டால் மிகவும் அவசரமாக நாம் பிரிந்துவிட வேண்டி வரும்." 

164. இமாம் ஹஸனுல் பஸ்ரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஒரு முஸ்லிமுடைய தேவையை நான்  நிவர்த்திப்பது, ஆயிரம் ரக்அத்கள் நான்  தொழுவதை விடவும் எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியது."

165. பரீட்சித்துப் பார்க்காமல் எந்தவொரு மனிதனையும் அவசரப்பட்டு புகழ்ந்திட வேண்டாம்.
மேலும், பரிசோதித்துப் பார்க்காமல் எவரையும் இகழ்ந்திடவும் வேண்டாம்.

166. இமாம் இப்னுல் ஜவ்ஸி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அறிவில்லாமல் வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதை இட்டு ஜாக்கிரதையாக இருங்கள்.ஏனெனில், அநேக பக்தியுள்ள சூபித்துவவாதிகள் அறிவின்றி அமல் செய்து நேர்வழியிலிருந்து விலகி வழிதவறிப் போயுள்ளனர்." 

167. மாலிக் பின் தீனார் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இதயத்திலிருந்து வெட்கம் கழற்றி எடுக்கப்படுவதற்கு அல்லாஹ் அவ் இதயத்துக்கு கொடுக்கும் கடும் தண்டனையை விட எதற்காகவும் அவன் அவ்வாறு  தண்டிப்பதில்லை." 

168. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"கொடையின் உச்ச எல்லை யாதெனில், அல்லாஹ் உனக்கு அருள்புரிவதும் அவ் அருளுக்காக நன்றி செலுத்தும் படி செய்வதும் அவன் உன்னை பொருந்திக் கொள்வதுமாகும்."

169. உன் வாழ்க்கையில் எவ்வளவு சூறாவளி அடித்த போதும், எப்போதுமே நலவாக இருப்பதாக காட்டிக் கொள். பிறர் உன் மீது பரிதாபப்பட்டு இரக்கம் காட்டுவதை விடவும் உன் கஷ்பங்களை காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொள்வது எவ்வளவோ மேல். 

170. இமாம் மாலிக் பின் தீனார் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"உலகத்தின் மீதான அளவுகடந்த பிரியம் அனைத்து தவறுகளுக்கம் தலையாயது. பெண்கள் ஷெய்தானின் (வேட்டை) கயிறு , மதுபானம் அனைத்து தீமைகளையும் வரவழைக்கத்தக்கது."

171. சில சந்தர்ப்பங்களில் எல்லா மனிதர்களும் உனக்கும் உனது நாவுக்கும் பயந்தே உன்னுடன் இருக்கின்றனர்; உன்னை மதித்தல்ல.

172. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"சாட்டையாலும் இரும்புக் கம்பியாலும் அடிபட்டவனுக்கு எப்படி துன்பம் ஏற்படுமோ அவ்வாறேதான் அல்லாஹ்வை திக்ர் செய்வது ஷெய்தானுக்கு தாக்குதலாகவும் நோவினை கொடுப்பதாகவும் துன்பம் விளைவிப்பதாகவும் அமைகிறது." 

173. நல்லவர்களது நிலைமைகள் எவ்வளவு மாறினாலும் அவர்களது பண்புகளும் குணாதிசயங்களும் மாறிடாது!

174. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வுடைய கருணையும் அவனது மன்னிப்பும் இல்லையென்றிருந்தால், மனிதர்களின் பாவங்களால் வானங்களும் பூமியும் அதிர்ந்து அசைந்து போயிருக்கும்." 

175. வாழ்க்கையின் முடிவு ஒரு வினாடிதான். அது எந்தத் தருணத்தில் நிகழும் என்பது நம்மில் எவருக்கும் தெரியாது.
ஆகவே, எந்நேரமும் நல்லதையே செய்யுங்கள்.

176. இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" உண்மையான பாக்கியசாலி என்பவன், நபி ஸல் அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்த  ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் முதலான 'ஸலபு'களுடைய வழியைப் கடைப்பிடிப்பவன், அத்தோடு பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த 'கலப்'கள் புதிதாக உருவாக்கியவற்றை விட்டும் விலகி வாழ்பவன்." 

177. யாருடைய தோழமை உன்னை மகிழ்விக்கிறோ அத்தகையவரைத் தோழமை கொள் !
மற்றைய மனிதர்களை நல்லபடியாக அனுசரித்து வாழ் ! 

178. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" என்னை கண்மூடித்தனமாக  பின்பற்ற வேண்டாம்; இமாம் மாலிக் றஹ், இமாம் ஷாபிஈ றஹ், இமாம் அவ்ஸாயி றஹ், இமாம் தௌரி றஹ் ஆகியோரையும் கண்மூடித்தனமாக பின்பற்றாதே! அவர்கள் ஆதாரமாக எடுத்த இடத்திலிருந்து நீயும் எடு."

"நபி ஸல் அவர்களுடைய ஹதீஸை யார் தட்டிக் கழிக்கிறாரோ அவர் அழிவின் விளிம்பில் உள்ளார்."

179. ஒவ்வொரு இருளுக்குப் பிறகும் அல்லாஹ் ஒரு புதிய வெளிச்சத்தை உருவாக்குகின்றான் என்பதை அறிந்த நிலையில், நீ விரக்தி அடையக் கூடாது!

180. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் கீழ்ப்படிதல் கொண்டு பாவத்தை மாற்றிக் கொண்டால், அல்லாஹ் அவனுக்கு தண்டனைக்குப் பதிலாக ஆரோக்கியத்தையும், அவமானத்துக்குப் பதிலாக கண்ணியத்தையும் மாற்றியமைத்துக் கொடுப்பான்." 

182. சில சமயங்களில் பேச்சை விட மௌனமே லாவகமாக இருக்கும்!

183. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பாவம் மற்றும் மாறுசெய்தலின் விளைவு என்னவென்றால், ஒரு மனிதன் கஷ்டம், துன்பம், பேராபத்துகளில் வீழ்ந்து விட்டால், மிகவும் நன்மை பயக்கும் விடயங்களை விட்டும் அவனது இதயம்,நாவு, உடல் உறுப்புகள் யாவும் அவனுக்கு துரோகம் செய்யும். இதனால், அவனது இதயம் அல்லாஹ்விடம் பாரம் சாட்டவோ, அவனிடம் மீளவோ, அவனை கெஞ்சவோ, பணிந்து போகவோ, அவன் முன்னால் உருகிப் போகவோ முன்வருவதில்லை.அவனை நினைப்பதற்கு அவனது நாவு கீழ்ப்படிவதுமில்லை."

184. வாழ்க்கையில் முதலாவது அடியிலிருந்து நீ கற்றுக் கொள்ளவில்லை என்றால், இரண்டாவது அடிக்கு நீ தகுதியானவர்!

185. இமாம் இப்னு ஹஜர் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ் தஆலா தனது நேசர்கள் துன்பப்படும் போது அதிலிருந்து வெளியேறும்படியான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றான். ஆனாலும், அவர்களை சீரமைப்பதற்காகவும், வெகுமதியை அதிகப்படுத்துவதற்காகவும் சில சமயங்களில் அவற்றை தாமதப்படுத்துகிறான்."

186. வாழ்வில் தினமும் புதுப்புது பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். அவற்றுட் சில பாடங்ஙளின் விலை மிகவும் வலி தருபவை.என்றாலும், அவை புத்தியை தட்டியெழுப்பி விடுகின்றன.!

187. அல்லாமா ஸாலிஹ் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

" அறிவின் நோக்கம் நெஞ்சில் அதனை களஞ்சியப்படுத்தி வைப்பதல்ல. அது உனக்கு மட்டும் உரியதுமல்ல. எவர் மார்க்க அறிவை அடைந்து கொள்கிறெரோ, அவர் அதனை மனிதர்களுக்கு மத்தியில் பரப்பவும் விளக்கவும் வேண்டும்."

188. மகிழ்ச்சியாக இருப்பதற்கு அற்புதங்கள் தேவையில்லை. உன்னிடம் இருக்க வேண்டியதெல்லாம் மன்னிக்கும் இதயமும், மலர்ந்த முகமும், உனக்கான பங்கை ஏற்றுக் கொண்டு திருப்தி அடைவதும், அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பதும்தான்! 

189. அறிஞர் லுக்மான் அலை அவர்கள் தன் மகனிடம் கூறினார்கள் :

" என் அருமை மகனே! நிச்சயமாக கல்வி, ஏழைகளை அரசர்களின்  அவைகளில் அமரவைத்துள்ளது."

190. மரியாதைக்குரிய ஒருவர், மனிதர்களில் சிலரை மதித்ததற்காக வருத்தப்பட வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம். 

191. அஷ்ஷெய்க், அல்லாமா ஸாலிஹ் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

" 'காலத்தை கொல்கிறோம்' என்ற அறிவிலியின் வார்த்தையைப் பொறுத்தவரை, உண்மையில் காலத்தைக் கொல்வதற்கு அது ஒன்றும் எதிரியல்ல. காலம் உனது மூலதனம்.; அல்லாஹ்விடத்தில் உனது தயாரிப்பு." 

192. உனது மரணத்துக்குப் பின்னர் உன்னை எவ்வளவு வேகமாக மனிதர்கள் மறந்து விடுகிறார்கள் என்பதை நீ புரிந்து கொண்டால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் திருப்திப்படுத்துவதற்காக நீ வாழமாட்டாய்!

- அல்லாஹ்வே! இறுதி முடிவை நல்ல முடிவாக ஆக்கித் தரும்படி உன்னை வேண்டுகின்றோம். -

193. இமாம் பைஹகி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல் குர்ஆன் பிரதி ஒன்றின் மேல் வேறொரு புத்தகமோ, துணியோ, வேறெதுவுமோ வைக்கப்படக் கூடாது. அதேவேளை, இரண்டு குர்ஆன் பிரதிகள் இருந்து, ஒன்றை மற்றொன்றின் மேல் வைப்பது ஆகுமானது." 

194. நீ ஓர் இமாமாக இருப்பதற்கு மிஹ்ராபு (தொழுகை நடாத்தும் இடம்) க்குள் நிற்க வேண்டுமென்பது நிபந்தனையல்ல. பணிவாக நடத்தல், பொறுமை காத்தல், மன்னிப்பு வழங்கல், கொடை கொடுத்தல், அன்பான முறையில் அவமதிப்பை தடுத்து நிறுத்தல் என்பவற்றிலும் இமாமாக நீ திகழ முடியும்.

- இறைவா! இறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக எங்களை நீ ஆக்கி அருள்வாயாக!-

195. இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஹலாலானது சொற்பமானதாயினும் அதில் அருள்பாலிக்கப்படும். ஹறாமானவை அதிகமாயினும் அதை அல்லாஹ் அழித்துவிடுவான்." 

196. ஒவ்வொரு காலப் பகுதிக்கும் அவ்வக் காலப் பகுதிக்கென்று ஜாஹிலிய்யத் - அறியாமை உண்டு. நாம் இருக்கும்  இந்தக் காலப் பகுதியில் எல்லாக் காலப் பகுதிக்குமான ஜாஹிலிய்யத்தையும் ஒருங்கிணைத்து வைத்துள்ளோம்.

197. "இமாம் அபூ தமீமா றஹ் அவர்களிடம், இன்று காலை எவ்விதம் எழுந்தீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இரண்டு அருள்களுக்கு மத்தியில் எழுந்துள்ளேன் எனக் கூறினார் :
1. யாரும் என்னை குற்றம் சொல்ல முடியாத படி எனது பாவங்கள் பலவற்றை அல்லாஹ் மறைத்துள்ளான்.
2. எனது அமலால் பெற முடியாத பாசத்தை மனித உள்ளங்களில் அவன் போட்டுள்ளான்."

198. இமாம் ஹஸனுல் பஸ்ரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

" ஒரு விசுவாசி சகிப்புத்தன்மை உள்ளவனாக இருப்பான். அவன் முட்டாள்தனமாக நடந்து கொள்ளமாட்டான். அவன் மீது முட்டாள்தனம் பிரயோகிக்கப்பட்டால் கூட அவன் அநியாயம் இழைக்காது அடக்கமாக இருப்பான். அவன் மீது அநியாயம் இழைக்கப்பட்டால் துண்டித்துக் கொள்ளாமல் மன்னித்து விடுவான்.அவனது உறவு துண்டிக்கப்பட்டாலும் கஞ்சத்தனம் காட்டாமல் சேர்ந்து உறவாடுவான். அவன் மீது கஞ்சத்தனம் கையாளப்பட்டால் கூட பொறுமை காப்பான்."

199. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் மனிதர்களை நல்லபடியாக மனதில் சுமந்து , அவர்களைப் பற்றி நல்லெண்ணமும் வைக்கிறாரோ, அவரது எண்ணம் ஈடேற்றம் பெறும்;  அவரது நெஞ்சம் விரிவடையும்; அவரது இதயம் சுகம் பெறும்; அல்லாஹ் அவரை தீங்கிலிருந்தும் பேராபத்துகளிலிருந்தும் பாதுகாப்பான்." 

200. சிலவேளைகளில், நீ ஒழுக்க குறைபாடுள்ளவன் என்பதை உணர்ந்தால், நீ ஒழுக்கமுள்ளவன் என்று அர்த்தம். ஏனெனில், ஒழுக்கக் குறைபாடுடையோர் தாம் ஒழுக்கக் குறைபாடுள்ளோர் என்பதை உணர்ந்து கொள்வதில்லை. 

201. இமாம் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இதயங்களை தூய்மைப்படுத்துவதில் மும்முரமாய் இருப்பது, இதயங்களை ஏமாற்றிக் கொண்டு அதிகமாக தொழுவதையும் நோன்பு பிடிப்பதையும் விட மேலானது."

202. குணம் அற்றுப் போய்விட்டால் அழகுக்கு எந்தப் பெறுமானமும் இருக்காது!

203. மைமூன் பின் மஹ்றான் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நீங்கள் செய்யும் அமல்கள் சொற்பமானவை,. அவற்றை மிகத் தூய்மையாகம் பரிசுத்தமாகவும் செய்து முடியுங்கள்."

204. ஓர் அழகிய வாழ்க்கை முறை ஒலிவ் மரத்தைப் போன்றது. அது வேகமாக வளராது.ஆயினும், அது நீண்ட காலம் வாழும். 

205. அப்துல்லாஹ் பின் அல் முபாறக் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"படைத்தவனின் திருமுகத்தைக் காண விருப்பமுள்ளவன் நல்ல காரியங்கள் செய்யட்டும், அதேவேளை அவற்றை வேறு எந்த ஒருவரிடமும் பிரஸ்தாபிக்காமல் இருக்கட்டும்."

206. இமாம் அதாஃ  பின் அபீ றபாஹ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஒரு மனிதன் கோபத்தில் பேசும் யேச்சு  அவனது அறுபது, எழுபது வருட அமலை தகர்த்தெறிந்து விடும்." 

207. உன் நாவு உனது குதிரைக்கு ஒப்பானது. நீ அதனைப் பாதுகாத்தால் அது உன்னைக் காக்கும். நீ அதனை இழிவுபடுத்தினால் அது உன்னை அவமானப்படுத்தும். 

208. இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"உயர்ந்த இடங்கள் துன்பப்படாமல் கிடைக்காது."

209. உன்னால் முடிந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்.
உனக்கு முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் அவர்களை காயப்படுத்தாதே!

210. இமாம் இப்னு ஹஸ்ம் அள் ளாஹிரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் மிகப் பெரும் அருள், அவனை நீதியிலும் அதனை நேசிப்பதிலும் மற்றும் சத்தியத்திலும் அதனை விரும்பி தேர்வு செய்வதிலும் ஆக்கிவிடுவதுதான்."

211. தடுமாற்றம் என்பது வாய்ப்புக்களின் புதை குழி. எப்போதும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்.ஏனெனில், அவை மீண்டும் மீண்டும் வருவதில்லை. புத்திசாலியாக இருந்து கொள்.

212. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் : 

"சத்தியம் மனோ இச்சையை வழிநடாத்தும் ஒரு காலத்தில் நீங்கள் உள்ளீர்கள்.
பின்னர் ஒரு காலம் வரும். அக்காலத்தில் மனோ இச்சை சத்தியத்தை வழி நடாத்தும்.
அக்காலத்தை விட்டு அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடுவோமாக!." 

213. மனிதர்களில் பாதிப் பேர் தம் வேலையைப் பார்க்கக் கற்றுக் கொண்டால், மிகுதி அரைப் பகுநியினர் சிறப்பாக வாழ்வர்.

214. பிற மனிதர்களின் வீட்டினுள் குருடனாக பிரவேசித்து , ஊமையனாக வெளியேறு. அவர்கள் பேசக் கேட்க உனக்கு எந்த சம்பந்தமுமில்லை. ஏனெனில், இரகசியங்களை வெளிப்படுத்துபவனும் மானபங்கப்படுத்துபவனும் சுவர்க்கதில் பிரவேசிப்பதில்லை.


215. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"கடும் தாகத்திலிருந்த நாய்க்கு தருணத்தில் நீர் கொடுத்தவனை அல்லாஹ் மன்னித்து விட்டானென்றால்,  தாகித்தவனுக்கு தண்ணீர் கொடுத்து, பசித்தவனுக்கு ஆகாரமளித்து, ஆடையற்றவனுக்கு உடை உடுத்தி உதவுபவனுக்கு அல்லாஹ் என்ன செய்வான்? (என்பதை நினைத்துப் பார்.)"


216. இமாம் அல் ஹாபிழ் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"எந்தவித அர்த்தமுமில்லாமல் தன் வாழ்நாளை வீணடித்தவரே! நீ தவறவிட்ட யாவற்றையும் லைலதுல் கத்ரில் அடைந்து கொள். அது வாழ்நாள் முழுவதுமாக கணக்கிடப்படுகிறது."


217. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்:

"நன்மையை நாடி நிற்கும் ஒருவர் சிறப்புமிக்க இரவுகளையும் பகல்களையும் புறக்கணித்து நிற்பது உசிதமல்ல. ஏனெனில், ஒரு வர்த்தகர் இலாப காலத்தை புறக்கணிக்க முற்பட்டால் அவரால் வேறு எந்தக் காலத்தில் இலாபமீட்ட முடியும்."


218. பிற மனிதர்களின் வீட்டினுள் குருடனாக பிரவேசித்து , ஊமையனாக வெளியேறு. அவர்கள் பேசக் கேட்டதை அம்பலப்படுத்துவது உனக்குரிய விவகாரமில்லை. ஏனெனில், இரகசியங்களை வெளிப்படுத்துபவனும் மானபங்கப்படுத்துபவனும் சுவர்க்கதில் பிரவேசிப்பதில்லை.


219. ஒவ்வொரு மௌனத்தின் பின்னாலும் புதையுண்ட பல இரகசியங்களும் சொல்ல முடியாத பல வலிகளும் உள்ளன. 


220. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இப்லீஸ் மனிதனில் அவனது அறிவுக் குறைபாட்டுக்கு ஏற்ப இடம்பிடித்துக் கொள்கிறான்.ஒரு மனிதனிடத்தில் குறைந்த அறிவு உள்ள போது அவனிடத்தில் இப்லீஸ் கூடிய இடத்தை எடுத்துக் கொள்கிறான்.அம்மனிதனிடத்தில் அறிவு அதிகரிக்கும் போது இப்லீஸ் அவனிடத்தில் இடம்பிடிப்பது குறைந்து விடுகிறது." 


221. நல்லோரிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்.
தீயோரிடமுள்ள தீயதை எடுக்காது விட்டுவிடு.


222. கலீபா உமர் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நாம் பொறுமையைக் கொண்டுதான் மிகச் சிறந்த வாழ்க்கையை அடைந்தோம்."


223. யதார்த்தமாக வாழப் பழகிக் கொள். பிறரைப் பற்றி அளவு மீறி ஆராய்ந்து திரிய வேண்டாம். அவர்கள் உன்னால் பாதையின் வளைவில் வீழ்ந்திடக் கூடாது. 
எவரையும் மனிதன் என்பதற்கு அப்பாற்பட்டு பார்க்காதே. இங்கு எவரும் மலக்குகளின் பண்புகளைக் கொண்டவரல்ல. 

224. பொறுமை, மனநிறைவு, பொருந்திக் கொள்ளல் என்பவற்றால் மகிழ்ச்சியின் வாசல்கள் திறந்து விடப்படுகின்றன. 


225. இமாம் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பாவமே செய்யாதவர்தான் மனிதர்களுக்கு போதிக்க வேண்டுமென்றிருந்தால், நபி ஸல் அவர்களுக்குப் பின்னர் எந்த ஒருவரும் போதிக்க முடியாது.ஏனெனில், நபி ஸல் அவர்ளுக்குப் பின்னர் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் எவருமில்லை."


226. உனது மனச்சாட்சிக்கு ஆறுதல் தரும் விடயம் என்னவென்றால், நிச்சயமாக அல்லாஹ் எப்போதும் உனது தூய நோக்கத்தை அறிந்தவனாக உள்ளான்.ஆதலால், பிறரது தீய எண்ணங்களை நீ பொருட்படுத்த வேண்டாம்!


227. அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

"உண்மையான ஒரு முஸ்லிம், இழிவான பேச்சையும் தன் சகோதரர்களை புண்படுத்தும் விதமான காயப்படுத்தத்தக்க பேச்சையும் விட்டு தன் நாவை தூய்மைப்படுத்திக் கொள்கிறவனாக இருப்பான்."


228. இமாம் இப்னு குதாமா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பொறாமை கொள்ளாதவனில் நன்மை ஏதுமில்லை."

இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் இக்கூற்றுக்கு பின்வருமாறு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

"பொறாமைக்கு ஓர் எல்லை உண்டு. அதை மீறி நடந்து கொண்டால் அது வெறும் குற்றச்சாட்டாகவும் நிரபராதி மீது தப்பெண்ணம் கொள்வதாகவும் ஆகிவிடும். அதேவேளை எல்லயை விட கீழிறங்கி பொறுப்பற்று நடந்து கொண்டால், அது அலட்சியமாகவும் அசிங்கம் அரங்கேற அடிப்படையாகவும் ஆகிவிடும்."

229. இமாம் சுப்யான் அத் தௌரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"வணக்க வழிபாட்டில் முதன்மையானது மௌனம் காத்தல். பின்னர் அறிவு தேடல்; பின்னர் அதனை நடைமுறைப்படுத்தல்; அதன் பின்னர் அதனைப் பேணிவருதல்; அடுத்து அதனைப் பரப்புதல்."


230. இங்கே பறவைகளைப் போன்ற சில மனிதர்கள் உள்ளனர். அவர்கள் வானிலை மோசமாக இருந்தால் அவ்விடத்தை விட்டு வெளியேறி சென்றிடுவர்.
இதேவேளை வேறு சில மனிதர்களும் இங்கு உள்ளனர். அவர்கள் உன் மீதான நட்பை நிரூபிக்கும் பொருட்டு மோசமான காலநிலைக்காக காத்திருக்கின்றனர். 


231. இமாம் அத் தௌரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"எல்லா திசைகளிலிருந்தும் ஓர் அடியானை நோக்கி துன்பமும் சோதனையும் வரும் வரை அவன் ஈமானின் சுவையை ருசிக்கமாட்டான்." 

232. ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"ஹலாலானது சொற்பமாயினும் அல்லாஹ் அதை விருத்தி செய்து ஆசிர்வதிக்கிறான். ஹறாமானது அதிகளவாயினும் அல்லாஹ் அதனை அப்பாற்படுத்தி அழித்துவிடுகிறான்." 


233. சில மனிதர்கள் போலி வாசனைத் திரவியம் போல. நீ அவ்வாசனையை விரும்பக் கூடும். ஆனாலும் அது நீண்ட நேரம் நிலைத்து நிற்பதில்லை.


234. வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே!
சில பழங்களின் தொலிகள் உன்னைக் கவர்ந்திழுக்கக் கூடும். அதன் நடுப்பகுதியில் புழுவும் பூசணமும் செழித்து வளரும். 


235. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நீ மக்களுக்கு நபி ஸல் அவர்களுடைய சுன்னா எனப்படும் நபி வழிமுறையை அறிவிப்பீராக! அதற்காக யாருடனும் வாக்குவாதப்பட்டு சண்டையிடாதே!"


236. இமாம் இப்னு மஃதான் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நன்மை செய்வதற்கான வாசல் உங்களுக்கு திறந்துவிடப்பட்டால் அதைச் செய்வதற்கு அவசரம் காட்டுங்கள். அந்த வாசல் எப்போது மூடப்பட்டுவிடும் என்பது யாருக்கும் தெரியாது."


237. இமாம் பிலால் பின் ஸஃத் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பாவம் மறைத்து செய்யப்பட்டால் அதைச் செய்தவருக்கு மட்டுமே அது தீங்கு விளைவிக்கும். அப்பாவம் பகிரங்கமாக செய்யப்பட்டு அதை மாற்றியமைக்க நீ முயலாவிட்டால் அது பொது மக்களைப் பாதிக்கும்." 


238. சிறிய எட்டுக்களின் பெறுமதியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதே!


239. 'உன் இளமையை அனுபவி' எனும் சாக்குப் போக்கின் கீழ் நரகத்திற்கு வழிகாட்டும் நபர்களுடன் நீ தோழமை கொள்வது, பொடுபோக்குத் தனத்தின் மோசமான வடிவங்களுள் ஒன்றாகும்.


240. இமாம் மாலிக் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதன் தன் காதால் கேட்பதை எல்லாம் அப்படியே பேசுவதுதான் இவ்வுலகில் இடம்பெறும் மிகப் பெரிய குழப்பம்!" 


241. இமாம் இப்னு பத்தால் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"கண்ணியம் என்பது முஃமின்கள் எனும் விசுவாசிகளின் பண்பாடாகும். அதாவது மனிதர்களுடன் பணிவாக பழகி, மிருதுவாக பேசி, கடினமான வார்த்தைப் பிரயோகங்களை கைவிட்டு நடப்பதாகும். மேலும், இது நட்பை வலுப்படுத்தவும் குரோதத்தை களையவும் வழிவகுக்கும் காரணியாகும்.


242. ஒருவர் தனது ஆடைகளின் நேர்த்தியில் கவனம் காட்டுவதைப் போலவே தனது புத்தியின் நேர்த்தியிலும் கவனம் செலுத்தினால் என்ன?


243. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அல்லாஹ்வின் விதியையும் அது படைப்பில் அமுலாவதையும் சிந்திக்கும் எவருக்கும் அது பொருத்தமான நேரத்தில் நடந்தேறும் என்பதை அறிந்து கொள்வார்." 


244. வேலைப்பாடுகள் மூலம் நாம் நேரத்தை கொல்லாது விட்டால், நேரம் அலுப்பின் மூலம் எம்மை கொன்றுவிடும். 


245. உனக்கு தீங்கு விளைவிக்காதிருக்கும் பொருட்டு, எந்தவொரு விஷயத்திலும் ஆழமாக இறங்கிவிடாதே! அதாவது இவன் வேறுபாடானவன் எனக் கருதி எந்தவொரு மனிதனையும் ஒதுக்கி வைத்திடாதே!


246. முத்தைக் கண்டெடுக்க கடலின் ஆழத்தில் மூழ்க வேண்டும். கரையில் நுரையைத் தவிர வேறெதுவுமில்லை! 


247. உனது மன அமைதியை கருத்திற் கொண்டு சகலதையும் புரிந்து கொள்ள முற்படாதே!


248. லுக்மான் அலை அவர்கள் தன் தனயனைப் பார்த்துக் கூறினார்கள் :

என் அருமை மகனே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள். மனிதர்கள் உன்னைச் சங்கைப்படுத்த வேண்டும் என்பதற்காக உனது இதயம் கெட்டதாக இருக்கும் நிலையில், நீ அல்லாஹ்வை அஞ்சி நடப்பவனாக காட்டிக் கொள்ளாதே! 


249. உலகில் மிக மோசமான மனிதன் யாரென்றால், அவன் உனக்கு தீங்கு விளைவித்துவிட்டு, நீ தான் அவனுக்கு தீங்கிழைத்தது போல் நடந்து கொள்வான்.


250. எமது ஆன்மாக்கள் பறவைகளைப் போல.அவைகள் பாதுகாப்பானது என உணரும் இடத்தில் மட்டுமே இறங்கும்.


251. இமாம் ஸல் அத்துஸ்தரி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"உலகம் முழுவதும் அறியாமைதான் அதிலுள்ள அறிவைத் தவிர!
அறிவு முழுக்க தீயதுதான் அதைக் கொண்டு செயல்படுவதைத் தவிர!
செயல் முழுவதும் சிதறிக்கப்பட்ட புழுதி போல வீணானவைதான் உளத்தூய்மையோடு செயல்படுவதைத் தவிர!" 


252. இமாம் இப்னு ஸீரீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நீ உனது சகோதரனுக்கு இழைக்கும் மிகப்பெரிய அநியாயம் என்னெவனில், அவனைப் பற்றி நீ அறிந்து வைத்துள்ள மிக மோசமான காரியத்தை பிரஸ்தாபிப்பதும், அவனில் உள்ள நல்ல அம்சங்களை கூறாது மறைப்பதுமாகும்." 


253. அநீதியின் வகைகளுள் மிகக் கொடூரமானது, அநியாயக்காரன் பாதிக்கப்பட்டவனின் பாத்திரத்தை வகிப்பதும், வஞ்சிக்கப்பட்டவன் அநியாயக்காரனாக சித்தரிக்கப்படுவதுமாகும்! 


254. அப்துல்லாஹ் பின் உமர் ழழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

" தக்வா என்னும் இறுயச்சம் என்பது மற்றோரை விட தன்னை சிறந்தவனாக கருதாதிருத்தல் ஆகும்."


255. சிலபோது நீ அவர்களின் சாக்குப்போக்குகளை கேட்க வேண்டியதில்லை. ஏனெனில்,அவர்களின் செயல்கள் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டது.


256. இமாம் ஷாபிஈ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் தன் சகோதரனுக்கு இரகசியமாக உபதேசிக்கிறானோ அவன் அறிவுரை கூறி அவனை அழகுபடுத்தி விட்டான். யார் தன் சகோதரனுக்கு பகிரங்கமாக பிரசங்கித்தனம் செய்கிறானோ அவன் தன் சகோதரனை அவமானப்படுத்தி அம்பலப்படுத்தி விட்டான்." 


257. இமாம், அல் ஹாபிழ் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மன்னிப்பை தடுக்கும் பாவங்களில் ஒன்றாக வெறுப்பும் விரோதமும் விளங்குகின்றது. அதாவது தன் சொந்த ஆசைக்காக வெறுப்புக் கொண்டு சகோதர முஸ்லிம் மீது குரோதம் கொள்வதாகும்."


258. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பொறாமைப்படுவதால் பொறாமைக் காரனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. மாறாக, அது அவனுக்கு துக்கத்தையும் மன வேதனையையும் அதிகப்படுத்துகிறது.
நீ பிறருக்கு நன்மையை விரும்பு. உனக்கு நல்லது நடக்கும்." 


259. நீ மக்களுக்கு எவ்வளவு சேவை செய்தாலும், அவர்களுக்காக எவ்வளவு அர்ப்பணம் செய்தாலும் அவர்களிடமிருந்து எந்த நன்றியையும் எதிர்பாராதே!


260. இமாம் யஹ்யா பின் முஆத் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"நீ ஒரு முஃமினுக்கு நன்மை நன்மை செய்யாவிட்டாலும் பறவாயில்லை, அவனுக்கு தீங்கு இழைக்காதே!
நீ அவனை மகிழ்விக்காவிட்டாலும் பறவாயில்லை,அவனை கவலைப்படுத்தாதே!
நீ அவனை புகழாவிட்டாலும் பறவாயில்லை, அவனை இகழாதே!" 


261. நீ ஒரு கட்டத்தை அடைந்து விட்டால் விவாதம், வாக்குவாதம், பிரயோசனமில்லாமல் சக்தியை வீணடித்தல் என்பவற்றை தவிர்த்துக் கொள். அவ்விதம் நீ நடந்து கொண்டால், உன் மீது அதிக அக்கறையும், அன்பும் வைத்துள்ளாய் என்பது அர்த்தம். அவ்வாறான உனக்கு வாழ்த்து உண்டாவதாக! 


262. அமீருல் முஃமினீன் அலி றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :

"அதிகம் குற்றம், குறை காணாதே. ஏனெனில், குற்றம் பிடித்தல், குறை காண்தல் வெறுப்பையும் கோபதாபத்தையும் ஏற்படுத்தும். குறைகாண்தல் அதிகமாக காணப்படுதல் ஒழுக்கக் கேடாகும்."


263. இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் : 

"சிறிய, எளிமையான பாவம் என்று எதையும் ஏளனமாக கருதாதே! 
சிறிய பாவம் பலவீனமான புல் போன்றது. அப்புல்லில் இருந்துதான் கப்பலை இழுத்துச் செல்லக்கூடிய கயிறு முறுக்கப்படுகிறது." 

264. அஷ்ஷெய்க் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"பஜ்ர்- அதிகாலை சுப்ஹு தொழுகையை அதற்குரிய நேரத்தில் ஜமாஅத்துடன் தொழுவதற்கு நீ உறுதி கொண்டிருந்தால்,  அல்லாஹ் தஆலா உனக்கு உதவி அளிக்கின்றான். ஏனெனில், ஓர் அடியான் தன் இறைவனை முனோக்கி வருவதை விடவும் இறைவன் தன் அடியானை நோக்கி அதிகம் முன்னோக்கி வருகின்றான்." 


265. அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் (ஹபி) அவர்கள் கூறியுள்ளார்கள் :

தற்போதெல்லாம் சில விடயங்களைப் பற்றி புகழ்வது அதிகரித்து வருகிறது.
இதன் சிறப்பால் இப்படி இப்படி நடைபெற்றது. மருத்துவத்தின் நன்றியால், இதன் இதன் நன்றியால், ஒத்துழைப்புடன் கூடிய முயற்சியின் பலனால் இப்படி நடைபெற்றது. இங்கு ஒரு போதும் அல்லாஹ் பேசப்படுவதுமில்லை; நினைவுகூரப்படுவதுமில்லை; புகழப்படுவதுமில்லை. உண்மையில், இது அகீதா ரீதியாக நடைபெறும் மிகப் பெரும் தவறாகும்."


266. இமாம் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"உடலைச் சுத்தமாக வைத்திருப்பதோ, அற்புதமாக ஆடை அணிவதோ முக்கியமான விடயமொன்றல்ல. மாறாக, இதயம் ஆரோக்கியமாகவும் சீராகவும் இருப்பதுவே மிக முக்கியம்.அது சீர்மை பெறுவதாலேயே ஏனைய உடல் பாகங்கள் சீர்மை பெறும்." 

267. மனிதர்கள் எல்லாவற்றையும் பெரிதுபடுத்த முனைகிறார்கள். ஆயினும் அவர்கள், தங்கள் தவறுகள் மட்டும் விவாதிக்கத் தகுதியற்றவை என கருதுகின்றனர். 


268. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளெர்கள்:

"தொழுகை கப்ரில் பிரகாசம் தரும். கப்ர் இருள் நிறைந்தது. அங்கு மனிதன் சூரியனையோ சந்திரனையோ காணமாட்டான். ஆனாலும், தொழுகையாளியுடைய கப்ர் பிரகாசமாக இருக்கும்."


269. ஒரு தேக்கரண்டி சர்க்கரை தேனீரின் சுவையை மாற்றிவிடுகிறது. 
அதேபோல் ஒரு நல்ல வார்த்தை மனிதனின் துயரத்தை மாற்றிவிடும்.
ஆகவே, மனிதர்களோடு நல்லவிதமாக உரையாட உலோபித்தனம் காட்டாதே!


270. இமாம் இப்னு குதைபா றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

இரண்டு காரியங்கள் ஒரு முஃமினுடைய அந்தஸ்தை உயர்த்திவிடும்:
1. பணிவு
2. பிற மனிதர்களின் தேவைகளை நிறைவு செய்தல்.

மேலும் இரண்டு காரியங்கள் துன்பங்கள் வராமல் தடுக்கும் :
1. தர்மம்
2. இரத்த உறவுகளைச் சேர்ந்து நடத்தல்.


271. மக்கள் பார்வையில் உன் மதிப்பைத் தேடாதே! சில கண்கள் மண்ணால் மட்டுமே நிரப்பப்படும்.


272. இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மனிதர்களுக்கு தீங்கு பயக்கத்தக்கவற்றை வீதியிலிருந்து அகற்றுவது தர்மமாகும்.
அதேவேளை, மனிதனுக்கு பங்கம் விளைவிக்கத்தக்கவற்றை பாதையில் போடுவது பாவச் செயலாகும்."


273. இமாம் இப்னு முப்லிஹ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

உன் விடயத்தில் மனிதர்கள் பேசிக் கொள்வதைப் பற்றி வருத்தப்படாதே!
பேசியவர் பொய்யைப் பேசியிருந்தால் நீ நன்மை செய்யாமலே உனக்கு நன்மை கிடைக்கும். பேசியவர் உண்மை பேசியிருந்தால் உன்னிடமிருந்த பாவம் ஒன்றுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது."


274. இமாம் யஹ்யா பின் முஆத் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"இவ்வுலகம் வேலைப்பாடுகள் நிரம்பிய வீடு. மறுவுலகம் திகில் நிறைந்த வீடு. சொர்க்கமா நரகமா என்று முடிவாகும் வரை மனிதன் வேலைப்பாடுகளுக்கும் அமளிதுமளிகளுக்கும் இடையில் இருக்கிறான்."


275. இமாம் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்:

"உங்கள் பிள்ளை மீதான அன்பில் சிலவற்றை மறைக்க வேண்டும்; வெளிக்காட்டக் கூடாது. ஏனெனில், அவன் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், உங்கள் பணத்தை வீணடிக்கவும், அளவுக்கு மீறி வாக்குவாதத்தில் ஈடுபடவும, கற்றலில் ஈடுபடுவதிலிருந்தும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை விட்டும் விலகிவிடுவான்."


376. இமாம் இப்னு றஜப் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"எவர் நற்செயல்களுக்கான பலனை அறியவில்லையோ, அவருக்கு சகல சந்தர்ப்பங்களிலும் அச்செயல்களில் ஈடுபடுவது கடினமாக இருக்கும்."


377. இமாம் ஷாதிபி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"மார்க்க பித்தலாட்டங்களும் முறைகேடுகளும் பெருகி, மக்களும் அவற்றுக்கு உடந்தையாக நடந்து கொண்டால், இது கண்டிக்கத்தக்கதாக இருந்திருந்தால் மக்கள் இதனை செய்து வந்திருக்கமாட்டார்கள் என அறிவிலிகள் கூறத் தலைப்பட்டுவிடுவார்கள்." 





Previous Post Next Post