அல்லாஹ் யார்?

நாம் அல்லாஹ்வைப் பற்றி பலவாறு மக்களிடம் செவியுறுகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் புரிதலுக்கு ஏற்ப பேசுகிறார்கள். அவர்களின் பேச்சின் அடிப்படையில் அல்லாஹ்வைப் பற்றிய கருத்தை உருவாக்கிக்கொள்கிறோம். நாம் சிறந்த முறையில் அல்லாஹ்வை அறிந்துகொள்ள முயல்வோம். அல்லாஹ்வைப் பற்றித் தெரிந்துகொள்ள சிறந்த வழி அல்லாஹ் தனது குர்ஆனில் என்ன சொல்லியிருக்கிறான் என்பதும், அவனுடைய தூதர் அவனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதுமே ஆகும். அவற்றை நபியின் தோழர்கள் எப்படிப் புரிந்து நம்பிக்கை கொண்டார்களோ அவ்வாறே நாமும் நம்பிக்கைகொள்ள வேண்டும்.
 
எல்லா ஆற்றல்களும் கொண்டவனான அல்லாஹ் நமக்குக் குர்ஆன் வாயிலாக தூதுச்செய்தி அனுப்பியுள்ளான். இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும் என்கிற செய்தியும் மறுவுலகில் எப்படி வெற்றி பெறுவது என்கிற செய்தியும் அக்குர்ஆனில் அடங்கியுள்ளது. மனம் திறந்த நிலையில் அதை அணுகினால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிற முறையை நாம் அறிந்துகொள்ள முடியும். நம்மைப் படைத்தவன், வளர்ப்பவன், உணவளிப்பவன் அல்லாஹ்தான் என்பதை நாம் அறிவோம். எனவே, அவனையே வணங்கி வாழ்வது நமது கடமையாகும்.
 
மக்கள் சிலர் அல்லாஹ் எனும் வார்த்தை இறைத்தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஏக இறைவன் அல்லாத வேறு இறைவனைக் குறிப்பிடுவதாக நினைக்கின்றனர். இவ்வார்த்தை ஏதோ ஒரு சிலையையோ சந்திரனையோ குறிப்பிடுவது போல் கூறுகின்றனர். உண்மையில் அரபுமொழியில் அல்லாஹ் எனும் வார்த்தை இலாஹ் என்பதிலிருந்து வருகிறது. இதன் பொருள் வணக்கத்திற்குரியவன் என்பதாகும். உண்மையான இறைவனை வணங்கினாலும், பொய்யான தெய்வங்களை வணங்கினாலும், அறிவோடு வணங்கினாலும், அறியாமையில் வணங்கினாலும் வணங்கப்படுகின்ற ஒன்றை இலாஹ் என்றே கூறுவர். இது ஒருமை வார்த்தை. இதன் இருமை இலாஹைன். ஆலிஹா என்பது அதன் பன்மை. வழக்கத்தில் எனது இறைவன் என்பதை இலாஹி என்றும், உங்கள் இறைவன் என்பதை இலாஹுக்கும் என்றும், இப்றாஹீமின் இறைவன் என்பதை இலாஹு இப்றாஹீம் என்றும் அரபியில் கூறப்படும். பின்வரும் வசனத்தில் உங்கள் தந்தையரின் இறைவன் ஒரே இறைவனே என்பதை இலாஹ ஆபாஇக இலாஹன் வாஹிதன் என்று கூறப்பட்டுள்ளது.    
 
أَمْ كُنتُمْ شُهَدَاء إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي قَالُواْ نَعْبُدُ إِلَـهَكَ وَإِلَـهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَـهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
 
யஅகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகில் நீங்கள் இருந்தீர்களா? அவர் தம் சந்ததிகளை நோக்கி, ‘எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்” எனக் கேட்டதற்கு ‘உங்கள் இறைவனும், உங்களுடைய முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின்  இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்” என்றே கூறினார்கள்.(அல்குர்ஆன் 2:133)
 
ஒரே இறைவன் எனும் நம்பிக்கை குறித்து அரபு பல தெய்வ நம்பிக்கையாளர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு இறைத்தூதர் முஹம்மதை நோக்கிக் கேள்வி எழுப்பியதைக் குர்ஆன் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறது:
أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, ‘இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உம்மைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றார்கள்.‘என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? உண்மையாகவே, இது ஓர் ஆச்சரியமான விசயம்தான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன்38: 4-5)
 
அல்லாஹ் எனும் சொல் இறைவனுக்குரிய முறையான பெயர்ச்சொல் ஆகும். அல் எனும் குறிப்புச்சொல்லும் இலாஹ் எனும் பெயர்ச்சொல்லும் இணைந்தே இச்சொல் உருவாகிறது. அல் இலாஹ் என்பது அல்லாஹ் ஆகிறது. அல்லாஹ் என்றால் அனைத்தையும் படைத்து வளர்த்து வரும் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்று பொருள்.
 
இமாம் இப்னு தைமிய்யாவின் பார்வையில் அல்லாஹ் என்பது அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன் எனும் (உலூஹிய்யத்) கருத்தையும் கொண்டுள்ளது. எனவே, வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவன் என்பது பொருள் என்கிறார். இதுவே இஸ்லாமிய ஏகத்துவத்தின் தூதுச்செய்தியாகவும் உள்ளது. (மஜ்மூஉ அல்ஃபதாவா 2.456)
 
அல்லாஹ்வைக் குறித்து முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன?

அவனே ஒரே இறைவன். அவனுக்குப் பங்காளிகள் யாரும் இல்லை.
 
அவனுக்கு ஒப்பானது எதுவுமில்லை. அவனே படைப்பாளன், அவனை யாரும் படைக்கவில்லை. அவன் படைப்புகளில் ஒருவனாக இல்லை.
 
அவன் சர்வ வல்லமை கொண்டவன், மிகவும் நீதியானவன்.
 
இந்தப் பிரபஞ்சத்தில் அவனுக்கு இணையாக வணக்கத்திற்குரிய எந்தக் கடவுளும் இல்லை.
 
அவனே ஆதியில் இருந்தவன். அவன்தான் கடைசியிலும் இருக்கக்கூடியவன். என்றென்றும் இருக்கக்கூடியவன். ஒன்றும் இல்லாத காலத்திலும் அவன் இருந்தான். ஒன்றும் இல்லாத காலத்திலும் அவன் இருப்பான்.
 
அவன் அனைத்தையும் அறிந்தவன், எல்லையில்லா கருணை உடையவன், பேராற்றல் மிக்கவன், அதிபதி.
 
எந்த ஒன்றுக்கும் உயிர் கொடுக்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு மட்டுமே உண்டு.
 
எல்லா மனிதர்களுக்கும் நேர்வழி காட்ட அவனே தூதர்களை அனுப்பினான்.
 
அவனே முஹம்மது (ஸல்) அவர்களைத் தனது இறுதி நபியாகவும் ரசூலாகவும் முழு மனிதகுலத்திற்கும் அனுப்பினான்.
 
நமது உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் அறிந்தவன்.    
 
அல்லாஹ்வின் உள்ளமையில் உள்ள ஏகத்துவம்

அல்லாஹ்வின் ஏகத்துவத்தை தவ்ஹீது என்று கூறப்படும். இதுதான் இஸ்லாமியக் கருத்துகளில் முதன்மையானது, அடிப்படையானது. மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கிய நம்பிக்கைகளில் மிகவும் தலையாய நம்பிக்கையும் இதுவே. எல்லா நம்பிக்கைகளுக்கும் தெளிவைத் தருகிற நம்பிக்கையும் இதுவே.
 
அல்லாஹ் (எத்தகைய மகத்துவம் உடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றென்றும் நிலையானவன். (அல்குர்ஆன் 2:255, 3:2)
 
உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை.(அல்குர்ஆன் 2:163)
 
அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.(அல்குர்ஆன் 7:59, 65, 85)
 
நிச்சயமாக நானே அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாரும் இல்லை. என்னை நினைவுகூர்வதற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக.(அல்குர்ஆன் 20:14)
 
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கின்ற (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.(அல்குர்ஆன் 21:22)
 
நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன் 21:25)
 
நபியே கூறுவீராக. அல்லாஹ் ஒருவனே. (அல்குர்ஆன் 112:1)
 
அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். (அல்குர்ஆன் 39:62)
 
இத்தகைய (தகுதிகளை உடைய) அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்துப் பாதுகாத்து வருகின்ற உண்மையான இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லவே இல்லை. அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். ஆகவே, நீங்கள் (அனைவரும்) அவ(ன் ஒருவ)னையே வணங்குங்கள். எல்லாச் செயல்களையும் கண்காணிப்பவன் அவனே.(அல்குர்ஆன் 6: 102)
 
அல்லாஹ் (தனக்கென) எந்தச் சந்ததியும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வோர் இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். (அல்லாஹ்வை நிராகரித்து) இவர்கள் வர்ணிக்கின்ற இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.(அல்குர்ஆன் 23:91)
 
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் (தனக்கென) எந்தச் சந்ததியையும் எடுத்துக்கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு எந்தத் துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.(அல்குர்ஆன் 25:2)
 
வானங்கள், பூமி மற்றும் இவற்றுக்கு இடையிலுள்ள அனைத்தின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியதைப் படைக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 5: 17)
 
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை. (அல்குர்ஆன் 59:23)
 
மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறொரு படைப்பாளன் இருக்கின்றானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகின்றீர்கள்? (அல்குர்ஆன் 35:3)
 
உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 29:60)
 
நிச்சயமாக நான் உங்களுக்கு (இதனைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை.(அல்குர்ஆன் 38:65)
 
ஒரு மனிதருக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி, ‘அல்லாஹ்வை விடுத்து எனக்கே அடியார்களா(கி என்னையே வணங்)குங்கள்” என்று கூறுவதற்கு அனுமதியில்லை.(அல்குர்ஆன் 3:79)
 
‘அல்லாஹ், உங்களுடைய செவிப்புலனையும் பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வைத் தவிர எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும். (நம்முடைய ஆற்றலுக்குரிய) ஆதாரங்களை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கின்றோம் என்பதை நீர் கவனியும். (இதற்குப்) பிறகும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றார்கள். (அல்குர்ஆன் 6:46)
 
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியன. இவை அனைத்தும் அவனுக்கே கீழ்ப்படிந்து நடக்கின்றன.(அல்குர்ஆன் 30:26)
 
வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றன. வானவர்களும் அவ்வாறே. அவர்கள் (இப்லீசைப்போல் அவனுக்குச் சிரம்பணியாது) பெருமையடிக்கமாட்டார்கள்.(அல்குர்ஆன் 16:49)
 
இவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டுத் தங்கள் பாதிரிகளையும் தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரன் (இயேசு) மசீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவருக்கும் கட்டளை இடப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு எவனும் இல்லவே இல்லை.(அல்குர்ஆன் 9:31)
 
அல்லாஹ்வின் செயல்களில் உள்ள ஏகத்துவம்

அல்லாஹ் தனது முதல் வசனத்திலேயே தன்னை அகிலங்களின் இறைவன் (ரப்புல் ஆலமீன்) என்று கூறுகிறான். ரப்பு எனும் சொல்லுக்கு படைப்பாளன், உரிமையாளன், தனது தூதர்களை அனுப்புவதின் மூலம் படைப்புகளின் காரியங்களைச் சீராக்குபவன், வளர்த்தெடுப்பவன், வேதங்களை இறக்குபவன், படைப்புகளின் நற்செயல்களுக்குக் கூலி வழங்குபவன் என்று பொருளாகும். இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்: ரப்பு என்று அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் அவனுடைய கட்டளைகளை ஏற்பதும், அவன் விதித்த தடைகளை விட்டு விலகுவதும் அடங்கும். மேலும், படைப்புகளின் நற்செயல்களுக்குக் கூலி வழங்குவதும், அவர்களின் தீய செயல்களுக்குத் தண்டனை வழங்குவதும் அடங்கும். (மதாரிஜுஸ்ஸாலிகீன் 1/8) 
 
குர்ஆன் வசனங்கள் சில

அல்லாஹ்வை அவனது செயல்களைக் கொண்டு ஏகத்துவப்படுத்துவதே இங்கு நோக்கம். அனைத்தையும் படைத்தவன் அவனே என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
 
அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைத்தவன்; அவனே எல்லாப் பொருட்களின் பொறுப்பாளன்.(அல்குர்ஆன் 39: 62)
 
அவனே அனைத்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் உணவளிக்கிறான்.
 
உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை.(அல்குர்ஆன் 11: 6)
 
அவனே எல்லாக் காரியங்களையும் நிர்வகிப்பவன். அனைத்தின் ஆட்சியும் அவனிடமே உள்ளது.
 
(நபியே! பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: ‘எங்கள் அல்லாஹ்வே! எல்லா (நாடுகள் மற்றும் பிரபஞ்சங்களின்) ஆட்சிக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். நீ விரும்பியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன்.நீ இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீ பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகின்றாய்! உயிருள்ளதிலிருந்து இறந்ததை நீ வெளியாக்குகின்றாய்! நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே அளிக்கின்றாய்.(அல்குர்ஆன் 3: 26-27)
 
தனது ஆட்சியில் யாரும் தனக்குக் கூட்டாளி இல்லை என்றும் அல்லாஹ் மறுக்கிறான்.
 
இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவையாகும். அவனை விட்டுவிட்டு (நீங்கள் தெய்வங்கள் என்று கூறி வருகிற) அவை எதனைப் படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை.(அல்குர்ஆன் 31: 11)
 
அவனே தன் படைப்புக்கு உணவளிக்கிறான். அவன் கேட்கிறான்: அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன்னுடைய உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்?(அல்குர்ஆன் 67: 21)
 
தனது படைப்புகள் அனைத்தையும் ஃபித்ரா எனும் இயல்பில் அவனை ஏற்றுக்கொள்கிற நிலையில் அல்லாஹ் படைத்துள்ளான். அதன்படி அனைவருமே அவனை ஏற்றுக்கொள்கின்றனர். அவனுக்கு இணைவைக்கும் மக்கள் கூட அவனை மறுப்பதில்லை.
 
இன்னும், ‘ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?” என்று கேட்பீராக!அதற்கவர்கள், ‘அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன” என்று கூறுவார்கள். ‘அப்படியானால் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?” என்று கேட்பீராக!மேலும், ‘எல்லாப் பொருட்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக்) கூறுங்கள்” எனக் கேட்பீராக!அதற்கவர்கள், ‘(எல்லா அதிகாரங்களும்) அல்லாஹ்வுக்குத்தான் உரியது” என்று கூறுவார்கள். ‘அப்படியானால் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?” என்று கேட்பீராக. (அல்குர்ஆன் 23:86-89)
 
குர்ஆனுடைய அத்தியாயம் 27:60-64இல் தான் ஒருவனே பின்வரும் காரியங்களைச் செய்வதாகக் கூறுகிறான்:
வானங்களையும் பூமியையும் படைத்தவன்
வானத்திலிருந்து உங்களுக்கு மழையைப் பொழிவிப்பவன்
பூமியை உறுதியாகப் படைத்து அதில் பல ஆறுகளை ஓடச் செய்துள்ளவன்
பலமான மலைகளைப் படைத்தவன், கடல்களுக்கு இடையே தடுப்பை ஏற்படுத்தியவன்.
துயரத்தில் இருப்பவரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு பதிலளிப்பவன்
தரையிலும் கடலிலும் உள்ள இருள்களுக்கு மத்தியில் வழிகாட்டுபவன்
தனது கருணைக்கு முன்பாக, மழைக்கு முன்பாக, நற்செய்தி சொல்லும் காற்றை அனுப்புபவன்
வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன்
மறைவானவற்றை அறிந்தவன்.
 
அல்லாஹ்வின் பெயர்களில் உள்ள ஏகத்துவம்

அல்லாஹ்வுக்குத் தனித்தன்மை மிக்க பெயர்கள் உண்டு. அதன் எண்ணிக்கையை அவனைத் தவிர யாரும் அறிய முடியாது. சில பெயர்களையே நாம் அறிவோம். மற்ற பெயர்களை அறியமாட்டோம். இதனை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுமூலம்அறிவிக்கப்படும் பின்வரும் நபிமொழியில் தெரிய வருகிறது.
أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي
“அல்லாஹ்வே! உனக்கு நீயே சூட்டிக் கொண்ட உன் எல்லாப் பெயர்கள் பொருட்டாலும், அல்லது நீ உன் வேதத்தில் இறக்கிய, அல்லது உன் படைப்புகளில் எவருக்கேனும் நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னுடைய மறைவான அறிவில் மறைத்து வைத்துள்ள பெயர்கள் பொருட்டாலும் கேட்கிறேன். மகத்தான குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாக ஆக்கு.” (முஸ்னது அஹ்மது 3712, அஸ்ஸஹீஹா 199)
 
அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் மிக அழகானவை. அவன் கூறுகிறான்:அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.) அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுபவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள்.(அல்குர்ஆன் 7:180)
 
அல்லாஹ் எனும் பெயருக்கு படைப்புகள் கீழ்ப்படிவதற்கும் வணங்குவதற்கும் உரிய இறைவன் என்று பொருள். அல்லாஹ்வின் பண்புகள் அனைத்தும் முழுமையானவை. குறையில்லாதவை.
 
அல்லாஹ்வின் பெயர்களில் சில

அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
அர்ரஹீம் (நிகரற்ற அன்பாளன்)
அஸ்ஸமது (தன்னிறைவான தலைவன், தேவையற்றவன், படைப்புகள்தாம் அவனில் தேவையுள்ளவையாக உள்ளன, அவன் உண்ணமாட்டான், பருகமாட்டான்.)
அஸ்ஸமீஃ (நன்கு செவியுறுபவன்). அவன் அனைத்தையும் செவியுறுபவனாக உள்ளான். ஒரே சமயத்தில் எத்தனை மொழிகளில் யார் எங்கிருந்து அவனை அழைத்தாலும் அந்த எல்லாக் குரல்களையும் பிரித்தறிந்துகொள்வான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவான்.
அல்கரீம் (மிகவும் கொடையளிப்பவன்)
அல்ஜவ்வாது (மிகவும் தாராளமானவன்)
அர்ரஊஃப் (மிகவும் இரக்கமுள்ளவன்)
அல்வஹ்ஹாப் (மிகவும் அருள்புரிபவன்)
அல்அலீம் (மிகவும் அறிந்தவன்)
அல்ஹகீம் (ஞானமிக்கவன்)
 
அல்லாஹ்வின் பண்புகளில் உள்ள ஏகத்துவம்
அவன்தான் உண்மையான அரசன்; பரிசுத்தமானவன்; ஈடேற்றம் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைப்பவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். (அல்குர்ஆன் 59:23)
 
நமக்குமுன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை.
 
இதில் (எந்த ஒன்றையும்) உம் இறைவன் மறப்பவனாக இல்லை.(அல்குர்ஆன் 19:64)
 
வானங்களைத் தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அவற்றை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். மேலும், அர்ஷின் மீது அவன் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட காலத் திட்டப்படி நடந்து வருகின்றன. (அவற்றில் நடைபெறுகின்ற) எல்லா விவகாரங்களையும் அவனே திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதிகொள்வதற்காக (தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரி(த்து அறிவி)க்கிறான்.(அல்குர்ஆன் 13:2)
 
அப்படியிருக்க, ‘அவனைத் தவிர (பொய்யான தெய்வங்களைப்) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்களா? அவை தங்களுக்கே கூட எந்த நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவையாய் இருக்கின்றன’ என்று நபியே கூறும்.(அல்குர்ஆன் 13:16)
 
அவன் ஏதேனும் ஒரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை ‘ஆகு!’ எனக் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடுகின்றது.(அல்குர்ஆன் 36:82)
 
எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 76:30)
 
அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடைசெய்யும் அதிகாரமுள்ளவன். காரணம் அவனே சட்டங்களை இயற்றக்கூடியவன்.
 
எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 66:1)
 
அல்லாஹ் ஒருவனே மறைவானவற்றை நன்கு அறிந்தவன்.
நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினால் தவிர நான் எனக்கு ஏதேனும் ஒரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்குச் சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறிந்திருக்க முடியுமானால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; எந்தத் தீங்குமே என்னை அணுகி இருக்காது. (அல்குர்ஆன் 7:188)
அல்லாஹ் ஒருவனே உள்ளங்களில் உள்ள இரகசியங்களை அறிந்தவன். (அல்குர்ஆன் 67:13 14;57:4)
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரங்களை விரிவுபடுத்துகிறான், சுருக்குகிறான். (அல்குர்ஆன் 17:31, 34:36)
தான் நாடியவர்களுக்குச் சந்ததியை வழங்குகிறான். (அல்குர்ஆன் 42: 49 50)
அவன்தான் வழிநடத்துகிறான், உணவளிக்கிறான், நோயுற்றால் நிவாரணம் தருகிறான், உயிர் கொடுக்கிறான், மரணிக்கச் செய்கிறான், பாவங்களை மன்னிக்கிறான். (அல்குர்ஆன் 26: 78-82)
அவன்தான் வாழ்வாதாரத்தையும் வெற்றியையும் வழங்குபவன். (அல்குர்ஆன்11:88)
அவன்தான் இலாபத்தையோ நட்டத்தையோ அளிப்பவன். அவனே விதியை நிர்ணயிப்பவன். (அல்குர்ஆன்48:11)
அவனே வாழ்வையும் மரணத்தையும் நிர்வாகம் செய்பவன். (அல்குர்ஆன்40:68)
 
வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே

வணக்கம் (இபாதத்) என்பதின் பொருள்
இமாம் இப்னு கஸீர் வணக்கம் (இபாதத்) என்பதை “முழுமையான நேசத்தோடும், கீழ்ப்படிதலோடும், அச்சத்தோடும் உள்ள ஒரு நிலை. அல்லாஹ்வின் நேசத்திற்குரிய ஒவ்வொரு சொல்லும் செயலும் அது மறைவாகவோ வெளிப்படையாகவோ எப்படி இருப்பினும் வணக்கமாகும்” என்று வரையறுக்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இபாதத் என்பது ஒரு நிலை. அது செயல்பாடுகளாகவும் இருக்கலாம். அல்லாஹ் நமக்கு இட்ட கட்டளையை அவனுக்குப் பிடித்த விதத்தில் செய்தால் அது வணக்கமாகிவிடும்.
இபாதத்தின் இரண்டு நிபந்தனைகள்


மனத்தூய்மையாக அல்லாஹ்வின் திருப்திக்காகச் செய்தல்
நபிவழிப்படி செய்தல்


நபியவர்கள் கூறினார்கள்: யார் நமது கட்டளையில்லாமல் ஒரு விஷயத்தை நமது மார்க்கத்தில் செய்கிறார்களோ, அது நிராகரிக்கப்படும். (ஸஹீஹுல் புகாரீ)
 
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, அவனது தண்டனைகள் குறித்து அச்சமில்லாமல் இருப்பது, அவனது கருணையின் மீது நம்பிக்கை இழப்பது, அவனது உதவி குறித்து நிராசை அடைவது ஆகியவை பாவங்களில் மிகப் பெரியவையாகும்.
 
குர்ஆனிலிருந்து சில ஆதாரங்கள்

உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்குர்ஆன் 1:4)
 
ஆகவே, எவர் தம் இறைவனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தம் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!(அல்குர்ஆன் 18:110)
 
உங்கள் இறைவன் கூறுகின்றான்: ‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காமல் பெருமையடிக்கின்றார்களோ, அவர்கள் நிச்சயமாக இழிவடைந்தவர்களாக நரகம் புகுவார்கள்.(அல்குர்ஆன் 40:60)
 
நிச்சயமாகமஸ்ஜிதுகளெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்.(அல்குர்ஆன் 72:18)
 
(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய எந்த ஓர் ஆதாரமும் இல்லை. அவனுடைய (பாவக்)கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையாளனாகிய) அல்லாஹ்வை நிராகரிக்கின்ற இத்தகையவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.(அல்குர்ஆன் 23:117)
 
(நபியே!) உம்மிடம் என்னுடைய அடியார் கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘நிச்சயமாக நான் (மிக) அருகிலேயே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆகவே, அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பிக்கை கொள்ளட்டும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.(அல்குர்ஆன் 2:186)
 
(சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே.(அல்குர்ஆன் 27:62)
 
அல்லாஹ்தான் உயிரைப் படைப்பவன்

வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கின்ற மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரணத்)தவணை நெருங்கி இருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்? (அல்குர்ஆன் 7:185)
 
படைத்த வல்லவன் (நீங்கள் வணங்குகின்ற) ஒன்றையுமே படைக்க முடியாதவற்றைப் போலாவானா? இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 16:17)
 
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ்வை விட்டுவிட்டு எவர்களை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்(து முயற்சி செய்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஓர் ஈ அவர்களிடமிருந்து எந்தப் பொருளையேனும் எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென) அழைக்கின்ற அவர்கள் அவ்வளவு பலவீனமானவர்கள். ஆகவே, அவர்களை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!(அல்குர்ஆன் 22:73)
 
அல்லாஹ் அல்லாதவற்றை வணக்கத்திற்குரிய தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவர்கள். ஒன்றையும் அவர்கள் படைக்கவில்லை. எந்த நன்மையும் தீமையையும் தங்களுக்கே செய்துகொள்ளவும் அவர்கள் சக்தியற்றவர்கள். மேலும், உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தியற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன் 25:3)
 
உங்களில் மிகத் தூய்மையான செயல் புரிபவர்கள் யார் என்று உங்களைச் சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைப்பவன்; மிக மன்னிப்புடையவன்.(அல்குர்ஆன்67:2)
 
நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைக்காமல் எந்தப் படைப்பும் உருவாகவில்லை. (அறிவிப்பு: அபூசயீது, ஸஹீஹுல் புகாரீ)
 
அரபுமொழியில் ‘கலக’ என்றால் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைப்பது என்று பொருள். அது அல்லாஹ்வினால் மட்டுமே முடியும். அவனைத் தவிர யாராலும் முடியாது. கலக என்பதற்கு நிர்ணயித்தல் அல்லது விதித்தல் என்றும் பொருள் உண்டு.(ஃபத்ஹுல் பாரீ)
 
அல்லாஹ் எங்கே உள்ளான்?

அல்லாஹ் தனது வேதத்திலும், தனது தூதரின் நாவிலும் தன்னை மிக உயர்ந்தவனாக, மகத்துவம் மிக்கவனாக வருணித்துள்ளான். அவனுடைய உயர்வுக்கு குர்ஆனில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
 
அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் அல்லாஹ்வின் எல்லாப் பண்புகளையும் அப்படியே நம்பிக்கை கொள்கிறது. அதன் பொருளை மாற்றாமல், திரிக்காமல் ஏற்றுக்கொள்கிறது. அல்லாஹ் தனது ஏழு வானங்களுக்கும் மேலுள்ள அர்ஷுக்கும் மேலே இருக்கிறான். படைப்புகளை விட்டுத் தனித்து இருக்கிறான். அவனுடைய படைப்புகள் அவனைவிட்டுத் தனியாக உள்ளன.
 
உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.(அல்குர்ஆன் 10:3)
 
அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அர்ஷின் மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.(அல்குர்ஆன் 20:5)
 
ஈசாவே! நிச்சயமாக நான் உமக்கு (உம்முடைய) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை என் பக்கம் உயர்த்திக்கொள்வேன்.(அல்குர்ஆன் 3:55)
 
அந்நாளில் வானவர்களும், ஜிப்ரீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள்.(அல்குர்ஆன் 70:4)
 
நல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன. நல்ல செயல்களை அவனே உயர்த்துகின்றான்.(அல்குர்ஆன் 35:10)
 
உண்மையாகவே இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குத்ஸ்’ (என்னும் ஜிப்ரீல்)தான் இறக்கி வைத்தார் என்று நீர் கூறுவீராக!(அல்குர்ஆன் 16:102)
 
அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து, தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.(அல்குர்ஆன் 16:50)
 
இன்னும் பல ஆதாரங்கள் அல்லாஹ் தனது படைப்புகளை விட்டுத் தனித்திருக்கிறான் என்பதற்குக் குர்ஆனில் உள்ளன.
 
நபியவர்கள் கூறினார்கள்: நன்மையைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்விடம் உயர்ந்து செல்வதில்லை. (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)
 
அல்லாஹ் தன்னிடம் உள்ள புத்தகத்தில் ‘எனது கருணை என் கோபத்தை மிஞ்சிவிடும்’ என்று எழுதி வைத்துக்கொண்டான். (ஸஹீஹுல் புகாரீ)
 
ஸைனப் (ரலி) கூறுவார்கள்: அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து என்னைத் திருமணம் முடித்துக்கொடுத்தான். (ஸஹீஹுல் புகாரீ)
 
கருணை மிக்கவனான அல்லாஹ் கருணை காட்டுபவர்களுக்குக் கருணை காட்டுகிறான். நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டினால், வானத்திற்கு மேல் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். (அபூதாவூது 4941, திர்மிதீ 1924)
 
ஏகத்துவத்தைக் குறித்த நபிமொழிகள்

முஆத் இப்னுஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர் களுக்கு அழைப்புவிடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகை களைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், (அவர்களிடம் ஸகாத்தை வசூலிக்கும்போது) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமானவற்றை விடுத்து) உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன்.(ஸஹீஹ்முஸ்லிம்29)
 
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறைநான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் இருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றேன். சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத்பின் ஜபல்!!'' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன்.
 
நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது'' என்றார்கள்.
 
இன்னும் சிறிது தூரம் சென்ற பின் "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். அவர்கள், "அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்'' என்று சொன்னார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 48)
 
அல்லாஹ்வின் கருணை

அல்லாஹ் அளவற்ற அருளாளன், கருணையுள்ளவன். நாம் நரகத்திற்குப் போவதை அவன் விரும்புவதில்லை. எனவேதான் தனது கருணையால் நமது நன்மைகளைப் பல மடங்காக்குகிறான். நம் பாவங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கிறான்.
 
நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான். ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தன் அருளிலிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கின்றான்.(அல்குர்ஆன் 4: 40)
 
எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே தவிர (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.(அல்குர்ஆன் 6: 160)
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.(ஸஹீஹ் முஸ்லிம் 204)
 
மேலே கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழியிலிருந்தும் அல்லாஹ்வின் கருணையை உணருகிறோம். நமது சிறு நற்செயல்களுக்கும் அவன் அருள்புரிகிறான்.
ஒரு மனிதர் ஒரே ஒரு நற்செயலைச் செய்தாலும் அதற்கு பத்து முதல் எழுநூறு மடங்கு, இன்னும் அதிகமாகவும் அவன் கூலி வழங்குகிறான். (உச்சபட்ச அளவை அல்லாஹ்தான் அறிவான்.)
ஒருவர் ஒரு நற்செயலைச் செய்ய நினைத்து அதைச் செய்யவில்லை என்றாலும் அதற்கு ஒரு கூலி வழங்குகிறான்.
ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைக்கிறார். ஆனால் செய்யாமல் விட்டுவிட்டார் என்றால் அதற்கும் ஒரு கூலி வழங்குகிறான்.
ஒரு மனிதர் ஒரு தீய செயலைச் செய்துவிட்டால், அதை ஒரே ஒரு தீமையாக மட்டுமே பதிவு செய்கிறான்.
 
எதற்காக அல்லாஹ் நாம் ஒரு நற்செயலைச் செய்யாவிட்டாலும் அதை எண்ணியதற்காக கூலி வழங்குகிறான்? ஏன் ஒரு செயலுக்குப் பல மடங்கு கூலிகளை வழங்குகிறான்? ஏன் ஒரு தீய செயலுக்கு மட்டும் அதைச் செய்தததற்கு ஒரு தீமை என்று மட்டும் பதிவு செய்கிறான்? இவற்றுக்கு ஒரே பதில், அவனது கருணையே ஆகும். அவன் நம்மை நரகிலிருந்து காக்க விரும்புகிறான் என்பதே ஆகும்.
 
அல்லாஹ்வின் கருணை எல்லை இல்லாதது. வியாபாரி போலவோ, கணக்கு வாத்தியார் போலவோ அவன் கணக்குப் பார்ப்பதில்லை. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
 
அல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தகுதிக்குத்தக்கவாறு அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 22: 74)
 
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவனா?

அல்லாஹ் எனும் பெயர் ஒரே இறைவனுக்கான பொதுப் பெயர். எனவேதான் அரபுமொழி பைபிளில் கூட இறைவன் என்பதற்கு இவ்வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
அரபுமொழி பைபிள் ஆதியாகமம் எனும் படைப்பின் வரலாற்றுடன் தொடங்குகிறது. அதிலும் அல்லாஹ் எனும் பெயர் வருகிறது. படைப்புகளின் இறைவன் என்று குறிப்பிடப்படுகிறது. முதல் பக்கத்தில் மட்டும் 17 தடவை இப்பெயர் வந்துள்ளது. பின்வரும் சுட்டியில் அதனைக் காணலாம்.  http://www.arabicbible.com/arabic-bible.html
 
Previous Post Next Post