படைத்தவனும் படைப்பினங்களும்

ஆசிரியர்: இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)

தமிழாக்கம்: எம். முஹம்மத் யூசுஃப் மிஸ்பாஹி 
வெளியிடு : புர்கான் டிரஸ்ட்


படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று சொல்லுங்கள். அல்லாஹ்வால் தேர்வு செய்திருக்கும் நல்லடியார்கள் மீது இறையருள் உண்டாகட்டும் !
இறைவா நாங்கள் உன்னைத் துதித்து விட்டோம்.
அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக ஏற்படுத்துகின்றார்களே, அவை மேலானவையா?

இருவர் பேசிக் கொண்டிருந்தபோது, நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு தொடர்பாளர் (இடைத்தரகர்) தேவை. இல்லையெனில், நாம் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கவே முடியாது என்று ஒருவர் கூற, மற்றவர் அதை மறுத்துக் கொண்டிருந்தார், அவ்விருவருக்கும் இடையில் நடந்த ஒரு விவாதம் இங்கு தரப்படுகிறது.

குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையிலான ஆதாரங்களை வைத்து இதற்குச் சரியான விடைகாண்போம்.

அப்படி ஒரு தொடர்பாளர் தேவைதான் என்று அவர் கருதினால், அல்லாஹ்வின் கட்டளைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க நிச்சயமாக ஒரு தொடர்பாளர் தேவைதான். 

அது உண்மைதான். ஏனெனில், அல்லாஹ் எதை விரும்புகிறான்? எவற்றைப் பொருந்திக் கொள்கிறான்? அவனது கட்டளைகள் என்ன? அவன் விலக்கியிருக்கின்ற காரியங்கள் எவை?
அவனது அருட்கொடையிலிருந்து தன் நேசர்களுக்கு எதை வழங்க ஏற்பாடு பண்ணியிருக்கிறான்? அவனது தண்டனைகளிலிருந்து எவற்றை அவனது விரோதிகளுக்காக வாக்களித்திருக்கின்றான் என்பவற்றையெல்லாம் படைப்பினங்களாகிய மனிதர்கள் அறிய மாட்டார்கள். 

மனித அறிவால் அறிந்து கொள்ள முடியாத அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் அவனது உயர்வான பண்புகள் ஆகியவற்றில், அவனுக்குப் பொருத்தமானது எது என்பதையும் இன்னும் இவை போன்றவற்றையும்: அல்லாஹ் தன் அடியார்களிடம் அனுப்பிய இறைத்தூதர்கள் மூலமாகவே தவிர மனிதர்கள் அறியமாட்டார்கள். 

எனவே, அந்த இறைத் தூதர்களைப் பின்பற்பற்றுவோரே நேர்வழி பெற்றவர்கள். அவர்களை அல்லாஹ் தன்பக்கம் சமீபமாக்கிக் கொள்கிறான், அவர்களது தகுதிகளை உயர்த்துகிறான். அவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும் கண்ணியப்படுத்துகின்றான்.

ஆனால், இறைத்தூதர்களுக்கு மாறு செய்வோர் சபிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் தம் இறைவனை விட்டும் விலகியவர்கள்; வழிகெட்டவர்கள்; இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே நம் தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ஆனால், எவர் நம் வசனங்களைப் பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ, அவர்கள் நரகவாசிகளேயாவார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.'' (அல்குர்ஆன் 7:35,36)
 
அல்லாஹ் கூறுகிறான்: அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். எவர் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ அவர், வழி தவறவும் மாட்டார். நற்பேற்றினை இழக்கவும் மாட்டார். எவர் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவரை (கியாமத்) மறுமை நாளில் குருடராகவே எழுப்புவோம் என்று கூறினான். அப்போது அவன், என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?'' எனக் கேட்பார், அதற்கு இறைவன், இவ்விதமே இருக்கும், நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அவற்றை நீ மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்!'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 20:123-126)

குர்ஆனை ஓதி, அதன்படி நடப்பவர் வழி தவறமாட்டார். மறுமையிலே நற்பேற்றினை இழந்தோராக மாட்டார்.

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள், யார் குர்ஆனை ஓதி, அதில் உள்ளவாறு நடக்கிறார்களோ, அவர்கள் இவ்வுலகில் வழி தவறாமல் இருக்கவும், மறுமையில் அவர்கள் நற்பேறு இழந்தவர்களாக ஆகாமல் இருக்கவும் அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

அல்லாஹ் நரகவாசிகளைப் பற்றிக் கூறுகிறான்:
அ(ந்நரகத்)தில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் (இவ்வாறு) கூறுவார்கள்: ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால், நாங்கள் அவரைப் பொய்ப்படுத்தி, அல்லாஹ் யாதொன்றையும்இறக்கி வைக்கவில்லை: நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை என்று சொன்னோம்.'' (அல்குர்ஆன் 67:8.9)

அல்லாஹ் கூறுகிறான்: அந்நாளில் நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்தவுடன், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி, உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா என்று கேட்பார்கள். இதற்கு அவர்கள், ஆம் வந்தார்கள்!'' என்று கூறுவார்கள். எனினும், இறைமறுப்பாளர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகிவிட்டது.'' (அல்குர்ஆன் 39:71)

அல்லாஹ் கூறுகிறான்: (நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி, நாம் தூதர்களை அனுப்பவில்லை. எனவே, எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ஆனால், எவர்கள் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ, அவர்களை, அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனை பிடித்துக் கொள்ளும்.''
(அல்குர்ஆன் 6:48,49)

அல்லாஹ் கூறுகிறான்: நபியே! நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த இதர நபிமார்களுக்கும் நாம் இறைச் செய்தி அருளியது போலவே, உமக்கும் நிச்சயமாக இறைச் செய்தி அருளினோம், மேலும், இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யாஃகூபுக்கும் அவர்களுடைய

சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய் யூபுக்கும், யூனுஸுக்கும் ஹாரூனுக்கும் ஸுலைமானுக்கும் நாம் இறைச் செய்தி அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (எனும் வேதத்தைக்) கொடுத்தோம்.''
இவர்களைப் போன்றே வேறு தூதர்கள் சிலரையும் நாம் அனுப்பி, அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம். இன்னும் வேறு தூதர்கள் பலரையும் நாம் அனுப்பினோம், ஆனால், அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
தூதர்கள் வந்த பின், அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்குச் சாதகமாக ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் பலரையும் நற்செய்தி கூறுபவர்களாகவும்: அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாஹ் அனுப்பினான்.''
(அல்குர்ஆன் 4:163-165)

அல்லாஹ்வின் ஏவல்களை அடியார்களிடம் அடையச் செய்யும் தொடர்பாளர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர்.

அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர் என்பதை முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகிய அனைத்துச் சமுதாயத்தினரும் உறுதிகொண்டுள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைகளையும்: செய்திகளையும் அவர்கள், மக்களிடம் அடையச் செய்தார்கள் என்பதிலும், அனைத்துச் சமுதாயத்தினருக்கும் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.'' (அல்குர்ஆன் 22:75)

யார் இந்தத் தொடர்பு இல்லை என மறுத்தார்களோ, அவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் என்பதில் எல்லாச் சமுதாயத்தினரும் ஒன்றுபட்டுள்ளனர். அல்லாஹ் மக்காவில் இறக்கியருளிய அத்தியாயங்களான அல்அன்ஆம்', அல்அஃராஃப்', ஆகியவையும் அலிப் லாம் ரா' (யூனுஸ்)' ஹாமீம்', தாஸீன்' (அந்நம்ல்) எனத் துவங்குகின்ற அத்தியாயங்களும் அல்லாஹ்வை நம்புதல், அவனது தூதர்களை நம்புதல், இறுதி நாளைநம்புதல் போன்ற மார்க்கத்தின் அடிப்படைகளை உள்ளடக்கியிருக்கின்றன. மேலும், இறைத் தூதர்களைப் பொய்ப்படுத்திய இறைமறுப்பாளர்களின் சம்பவங்களையும் எவ்வாறு அவர்களை அல்லாஹ் அழித்தான், அவனது இறைத்தூதர்களுக்கும். இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கும் எவ்வாறு உதவி செய்தான் என்பதையும் அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: தூதர்களாகிய நம் அடியார்களிடம் முன்னரே திடமாக நம் வாக்கு சென்றிருக்கிறது. அதாவது நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள். மேலும், நிச்சயமாக நம் படையினர்தான் வெற்றி பெறுவார்கள்.'' (அல்குர்ஆன் 37:171-173)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, நாம் நம்முடைய தூதர்களுக்கும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.'' (அல்குர்ஆன் 40:51)

அல்லாஹ் பின்வரும் வசனங்களில் கூறுவது போல இந்தத் தொடர்புகள் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றப்பட வேண்டியவை.
அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்காகவேயன்றி, (மனிதர்களிடம்) நாம் நம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை.'' (அல்குர்ஆன் 4:64)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
எவர், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிகிறார்.'' (அல்குர்ஆன் 4:80)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்'' என்று (நபியே) நீர் கூறும்' (அல்குர்ஆன் 3:31)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
எனவே, எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி: அவருக்கு உதவி செய்து அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான வேதத்தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள்தாம் வெற்றி பெறுவார்கள்.'' (அல்குர்ஆன் 7:157)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.'' (அல்குர்ஆன் 33:21)

அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் மத்தியில் நன்மைகளை ஏற்படுத்தவோ, தீமைகளைக்களையவோ எந்தத் தொடர்பாளர்களும் இல்லை 

இடைத்தரகர், தொடர்பாளர், நன்மைகளை அடையச் செய்பவர். தீமைகளைத் தடுப்பவர் என அவர் கருதினால் - அதாவது அடியார்களுக்கு உணவு கிடைக்கும் விஷயத்தில் அவர்களுக்கு உதவுதல், நேர்வழியை அவர்களிடம் கேட்டல், அவர்களிடம் ஆதரவு வைத்தல் ஆகிய இவற்றுக்கு ஒரு தொடர்பாளர் தேவை என, நம்பினால் - இது மாபெரும் இணைவைத்தலாகும். அல்லாஹ்வை விடுத்து யார் இறைநேசர்களை அவர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தவும் தீமைகளைக் களையவும், இன்னும் சிபாரிசு செய்யவும் எடுத்துக்கொண்டார்களோ, அந்த இணைவைப்பாளர்களை அல்லாஹ் காபிர்கள் எனக் கூறுகிறான். எனினும், யாருக்கு சிபாரிசுக்கான அனுமதி வழங்கியிருக்கிறானோ, அவர்களுக்கு சிபாரிசு செய்ய உரிமை உண்டு என, அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்தான், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்து, பின் அர்ஷின் மீது அமைந்தான். அவனையன்றி, உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?'' (அல்குர்ஆன் 32:4)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: எவர் தங்கள் இறைவனின் முன்னிலையில் மறுமையில் கொண்டு வரப்படுவது பற்றிப் பயப்படுகிறார்களோ, அவர்களுக்குப் பாவத்திலிருந்து நீங்கி அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு: இவ்வேதத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்வீராக! அந்நாளில் அவனைத் தவிர, அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.'' (அல்குர்ஆன் 6:51)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்: அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவரக் ளை அழைத்துப்பாருங்கள். அவர்கள் உங்களுடைய துன்பத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பி விடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்) அல்லாஹ்வையன்றி, இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்கள் கூட, தங்கள் இறைவன்பக்கம்(கொண்டு செல்ல) நற்கருமங்களைச் செய்து கொண்டும், அவனது அருளை எதிர்பார்த்தும், அவனது தண்டனைக்கு
அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.'' (அல்குர்ஆன் 17:56,57)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையன்றி, எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக்கொண்டிருக்கிறீர் களோ அவர்களை அழையுங்கள், வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஒர் அணுவளவும் அதிகாரமில்லை. அவற்றில் இவர்களுக்கு எத்தகையப் பங்குமில்லை. இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை. அன்றியும் அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ, அவரைத் தவிர, அவனிடத்தில் எந்தப் பரிந்துரையும் பயனளிக்காது''. (அல்குர்ஆன் 34:22,23)

வானவர்களும், நபிமார்களும் மனிதர்களுக்கு ஏற்படும் தீமையைத் தடுக்கச் சக்தி பெறமாட்டார்கள்

முன்னோர்களில் ஒரு கூட்டத்தினர் கூறினார்கள்: மஸீஹ் (ஈஸா) அவர்களிடமும், மேன்மையான பெரியார்களிடமும், வானவர்களிடமும் ஒரு கூட்டத்தினர் தம் தேவைகளைக் கேட்டனர். வானவர்களும், நபிமார்களும் மக்களின் துன்பங்களைப் போக்கவோ, அவற்றை அகற்றவோ சக்தி பெறமாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை நாடி, அவன் அருளை ஆதரவு வைக்கின்றனர். அவனது வேதனையைப் பயப்படுகின்றனர் என்று அவர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும் ஞானத்தையும் நபிப்பட்டத்தையும் கொடுக்கப்பட்ட பின்னர் அவர்,அல்லாஹ்வை விட்டு எனக்கு நீங்கள் அடியார்களாகி விடுங்கள்'' என்று மற்றவர்களிடம் கூற இயலாது. ஆனால், அவர் மற்றவர்களிடம், நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும். அவ்வேதத்தை நீங்கள் ஓதிக்கொண்டும் இருப்பதினால், ரப்பானீ' (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்'' என்று தான் சொல்வார். மேலும், அவர். மலக்குகளையும் நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றும்: உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்களாக) ஆகிவிட்ட பின்னர், நீங்கள் அவனை நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?'' (அல்குர்ஆன் 3:79,80)

வானவர்களுக்கும் நபிமார்களுக்கும் படைக்கும் ஆற்றல் அல்லது ரட்சிக்கும் ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொள்வது இறைமறுப்பாகும்,
வானவர்களையும், நபிமார்களையும் இறைவனாக எடுத்துக் கொள்ளல், குஃபர்' என்ற இறைநிராகரித்தலாகும் என, அல்லாஹ் விளக்குகிறான், எனவே, யார் வானவர்களையும் நபிமார்களையும் முழுமையாக நம்பி, ஆதரவு வைத்து, அவர்களிடம் தம் தேவைகளை வேண்டிக் கேட்டு, நன்மைகளை வேண்டித் தீமைகளைக் களைய - உதாரணமாக பாவமன்னிப்பு வேண்டியும்; உள்ளங்கள் நேர்வழி பெறவும். சிரமங்களை நீக்கவும் ஏழ்மையைப் போக்கவும் வேண்டினால், அவன் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவின்படி இறைமறுப்பாளராகி விடுகிறான். அல்லாஹ் கூறுகிறான்:

அவர்கள், அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று கூறுகிறார்கள். ஆனால், அவனோ மிகவும் தூயவன்! அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின் கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள். அவர்கள் எந்த ஒரு பேச்சையும் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவர்கள் அவன் கட்டளைப்படியே எதையும் செய்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ, அத்தகையவருக்கன்றி
- அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் மீதுள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். இன்னும் அவர்களில் எவரேனும், அவனன்றி நிச்சயமாக நானும் இறைவன் தான் என்று கூறுவாரேயானால், அத்தகையவருக்கு நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம். இவ்வாறே நாம் அநியாயக்காரக்ளுக்குக் கூலி கொடுப்போம்.'' (அல்குர்ஆன் 21:26-29)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
(ஈஸா) மஸீஹும் அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வம் கொள்கிறாரே, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.'' (அல்குர்ஆன் 4:172)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர் கள்'' இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்துப் பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும். அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று விதண்டாவாதம் செய்வதினால், ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி, வேறில்லை. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சசூழ்ந்தறிகிறான். இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். கியாமத் நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.''
(அல்குர்ஆன் 19:88-95)

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்:
தங்களுக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை இணை வைப்போர் வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை'' என்றும் கூறுகிறார்கள். நபியே! வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக்கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பனவற்றை விட அவன் மிகவும் உயர்ந்தவன்'' என்று நீர் கூறுவீராக !''. (அல்குர்ஆன் 10:18)

அல்லாஹ் கூறுகிறான்:
அன்றியும், வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி எவரைப்பற்றித் திருப்தியடைந்து: அவன் அனுமதி கொடுக்கின்றானோ, அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது..'' (அல்குர்ஆன் 53:26)

மேலும், வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?'' (அல்குர்ஆன் 2:255)

மேலும், வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் ஒரு தீமையைக் கொண்டு உம்மைத் தீண்டும்படிச் செய்தால், அதை அவனைத் தவிர வேறு எவரும் நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால், அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை.'' (அல்குர்ஆன் 10:107)

மேலும், வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருட்கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின், அதைத் தடுப்பார் எவருமில்லை அன்றியும், அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன்பின், அதனை அனுப்பக்கூடியவரும் எவரும் இல்லை.''
(அல்குர்ஆன் 35:2)

(நபியே) நீர் சொல்வீராக! அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெட்டதை செய்ய நாடினால், நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிடமுடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால், அவனது அந்த அருளை (ரஹ்மத்தை) அவை தடுத்து விட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா?' (நபியே) மேலும் நீர் கூறுவீராக: அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம் அவன் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்க வேண்டும்'' என்றும் வல்லஅல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 39:38)

திருக்குர்ஆனில் இதுபோன்ற கருத்தில் பல வசனங்கள் உள்ளன. நபிமார்கள் தவிர, ஏனைய மார்க்க அறிஞர்களையும் - பெரியார்களையும் நபி அவர்களுக்கும் அவர்களின் சமூக மக்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாக ஒருவர் ஆக்கினால், அதாவது இறைத்தூதர் அவர்களின் நேர்வழியை எடுத்துச் சொல்பவர்களாகவும் கற்பிப்பவர்களாகவும் அவர்களை அதன் மூலம் சீர்திருத்துபவர்களாகவும் அவர் அது விஷயத்தில் நேர்மையானதையே செய்தார், அது தவறாகாது.

நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்களின் சமூகத்திற்கும் இடையில் இஸ்லாத்தைப் பரப்புவதற்கான தொடர்பாளர்களே மார்க்க அறிஞர்கள்.

மார்க்க அறிஞர்கள் ஒரு சரியான கருத்தில் ஒன்றுபட்டால், அவர்களின் அந்தக் கருத்து உறுதியான ஆதாரமேயாகும். அவர்கள் எப்போதும் வழிகேட்டில் ஒன்றுபட மாட்டார்கள். நீங்கள் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால், அதை அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பி விடுங்கள் (அதாவது, அது விஷயமாக அல்லாஹ் என்ன கூறியிருக்கிறான் என்று மட்டும் பாருங்கள். அல்லது நபி(ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்றும் பாருங்கள் (பார்க்க : திருகுர் ஆன் 4 : 59) 

மார்க்க அறிஞர்களில் எவரும் பொதுவாகத் தவறுதலை விட்டும் பாதுகாப்புப் பெற்றவரல்லர். ஏனெனில், ரஸுல்(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர, மனிதர்களில் எவரது சொல்லும் ஏற்கப்படலாம் அல்லது மறுக்கப்படலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
மார்க்க அறிஞர்கள், நபிமார்களின் வாரிசுகளாவர். ஏனெனில், நபிமார்கள் தங்கத்தையோ வெள்ளியையோ வாரிசுப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. மாறாக, அவர்கள் கல்வியறிவையே வாரிசாக விட்டுச் சென்றுள்ளனர். எனவே, யார் அதிலிருந்து எடுத்துக் கொண்டாரோ, அவர்கள் மிகப் பெருஞ் செல்வத்தையே அடைந்து கொண்டவராவார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: அபூதாவூது, திர்மிதீ)

மன்னனிடம் குடிமக்களின் தேவைகளை எடுத்துச் சொல்லிப் பெற்றுத்தரும் அமைச்சர்கள் போல, படைப்பினங்களின் தேவைகளை அல்லாஹ்விடம் எடுத்துச் சொல்லி,அதைப் பெற்றுத் தருபவர்களாக அல்லாஹ்வுக்கும் அவனது படைப்பினங்களுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக (அந்த நபிமார்களையும் அவ்லியாக்களையும், பெரியார்களையும்) கருதினால், அவர் இறை நிராகரிப்பாளரும், இறைவனுக்கு இணை வைத்தவருமாவார். 

அல்லாஹ்தான் தன் அடியார்களுக்கு நேர்வழி காட்டுபவனும்: அவர்களுக்கு உணவளிப்பவனும் ஆவான். ஆனால் அந்த நபிமார்களும் அவ்லியாக்களும் பெரியார்களும் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக இருக்கிறார்கள் என நம்புகிறார். 

அதாவது மன்னருக்கு மிக நெருங்கியவர்களிடம் மக்கள் தம் தேவைகளைக் கேட்பார்கள். ஏனெனில், அவர்கள் தான் மன்னருக்கு நெருங்கியவர்கள். சாதாரணமானவர்கள் மன்னனிடம் நேரடியாகக் கேட்பதைவிட இதுதான் பணிவானது எனக் கருதுகின்றனர். நேரடியாக மன்னனிடம் கேட்பதை விட அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டு: அவர்கள் மூலம் உதவி பெறுவது அதிகப் பயன் தரக் கூடியது. என இறைத்தூதர்களையும் ஒருவர் கருதினால், அவர் இறைமறுப்பாளரும் இறைவனுக்கு இணை வைத்தவருமாவார். அப்படிப்பட்டவர் பாவமன்னிப்புத் தேட வேண்டும். இவ்வாறு படைத்த வனைப் படைப்பினங்களோடு ஒப்பிடுவோர் அல்லாஹ்வுக்கு இணைகளைக் கற்பித்துவிட்டனர். 

இப்படிப்பட்டோருக்குப் பலமான மறுப்பு திருக்குர்ஆனில் வந்துள்ளது. அதை முழுவதும் சொல்ல இந்த சிறு நூல் போதாது.

மக்களுக்கும் மன்னர்களுக்கும் மத்தியிலுள்ள தொடர்பு மூன்று வகைகளாகும்

மக்களுக்கும் மன்னர்களுக்கும் மத்தியிலுள்ள தொடர்பு மூன்று வகைளில் அடங்கும்:

முதல் வகை:
குடிமக்களின் நிலை பற்றி மன்னர்களுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாது. அதனால், அவர்கள் அதை மன்னருக்கு அறிவிக்கிறார்கள். அது போல அடியார்களின் நிலை எதுவும் அல்லாஹ்வுக்குத் தெரியாது. அதை வானவர்களோ, நபிமார்களோ, அல்லது ஷைகு போன்ற பெரியார்களோ அறிவிக்கும் வரை அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறுபவன் நிச்சயமாக இறைவனது வல்லமை பற்றி அறியாத இறைமறுப்பாளன் ஆவான். ஆனால், வல்ல அல்லாஹ் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறியக் கூடியவனாக இருக்கின்றான். வானங்களிலும், பூமியிலும் மறைவான எந்த விஷயமும் அவனுக்கு மறைவானதல்ல. அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அனைத்தையும் பார்ப்பவனாகவும் இருக்கிறான். பல்வேறுபட்ட மொழிகளில் பலர் பலவிதமான தேவைகளைக் கேட்பதால் ஏற்படும் கூச்சல் குழப்பமான சப்தத்தையும் அவன் துல்லியமாகக் கேட்கிறான். ஒன்றைக் கேட்பது மற்றொன்றைக் கேட்காமல் தடுத்து விடாது. அதிகமான கேள்விகள் அவனைத் தவறில் ஆழ்த்தி விடா. அவனை அவதூறாகப் பேசுவோரின் பேச்சுக்கள் அவனைக் கோபமடையச் செய்யா.

இரண்டாவது வகை:
மன்னனோ, தன் குடிமக்களின் காரியங்கள் அனைத்தையும் உதவியாளர்களின் உதவி கொண்டே தவிர திட்டமிட்டுச் செய்ய இயலாதவனாக இருக்கிறான். அவர்களின் பகைவர்கள் தீங்கிழைக்க வரும் போது: அவனது படைகளின் உதவி இன்றி தடுக்க இயலாதவனாக இருக்கிறான். ஆக, அவன் பலவீனமாக இருப்பதாலும், தாழ்ந்தவனாக இருப்பதாலும், உதவியாளர்கள் அவனுக்கு மிக அவசியம், ஆனால், வல்ல அல்லாஹ் எவ்விதப் பலவீனமும் அற்றவன். எந்த உதவியாளனின் தேவையுமற்றவன்.

அல்லாஹ் கூறுகிறான்:
எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை அழையுங்கள். வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஒர் அணுவளவும் அதிகாரமில்லை. அவற்றில் அவர்களுக்கு எத்தகையப் பங்குமில்லை. இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.'' (அல்குர்ஆன் 34:22)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்:
அன்றியும் தனக்குச் சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், தன் ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எவ்விதப் பலவீனத்தின் காரணத்தாலும் எந்த உதவியாளனின் தேவையற்று இருப்பவனுமான அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று நபியே நீர் கூறுவீராக! இன்னும், அவனை எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப்படுதது; வீராக !'' (அல்குர்ஆன் 17:111)

காரண காரியங்களுடன் இவ்வுலகில் தோன்றியிருக்கின்ற எல்லாவற்றிற்கும் அவனே படைப்பாளன். அவனே அவற்றைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்துபவன். அவனே அவை அனைத்திற்கும் மாமன்னனாக இருக்கின்றான். அவனைத் தவிர அனைத்தை விட்டும் அவன் தேவையற்றவன். ஆனால், மனிதன் அவனிடம் மிகமிகத் தேவையுள்ளவனாக இருக்கின்றான். இதற்கு மாற்றமாக மன்னர்களுக்கோ (அமைச்சர், படை, பட்டாளம் போன்ற) உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர், உண்மையில் அவர்கள் ஆட்சி ஆதிகாரத்தில் கூட்டுப் பொறுப்பே வகிக்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ அவனது ஆட்சி அதிகாரத்தில் எவ்விதக் கூட்டும் இணை, துணையும் அற்றவன். வணங்கத் தகுதி படைத்தவன், அவனைத் தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். இணை, துணை அற்றவன். அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் பெற்றவனாக இருக்கின்றான்.

மூன்றாவது வகை:
மன்னனை வெளியிலிருந்து இடித்துரைப்போர் இல்லாவிடில் அவன் தன் குடிமக்களின் மீது இரக்கப்படுபவனோ, அவர்களுக்கு நன்மையை நாடுபவனோ, அவர்களுக்குப் பயனளிப்பவனோ அல்லன், எனவே, நன்மையை நாடுவோரின் உபதேசத்தையும், அச்சமூட்டி எச்சரிப்பவர்களின் எச்சரிக்கைகளையும் மன்னன் கேட்கும் போதோ, அல்லது ஆதரவுடனும் அச்சத்துடனும் அவனுக்குச் சுட்டிக் காட்டும் போதோ, மன்னனின் எண்ணமும் முயற்சியும் குடிமக்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டுமென மாறிவிடுகிறது. ஒன்று, சுட்டிக் காட்டுவோரின் உபதேசத்தால் அவனது உள்ளத்தில் மாறுதல் ஏற்படலாம்; அல்லது, இடித்துரைப்போரின் வார்த்தைகளால் பயமும் ஆசையும் ஏற்பட்டு, அவனது உள்ளத்தில் மாறுதல் ஏற்படலாம். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொன்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் வல்லவனாகவும்: எல்லாவற்றுக்கும் அரசனாகவும் இருக்கின்றான். பெற்ற தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பை விட, அவன் தன் அடியார்களிடம் பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவனாக இருக்கின்றான், அனைத்துப் பொருட்களும் அவன் நாட்டப்படியே உண்டாகியுள்ளன, அவன் நாடியது நடக்கிற: அவன் நாடாதது நடக்கவே நடக்காது!. ஒரு சில மனிதர்கள் மற்றவர்களுக்குப் பயனளிக்க வேண்டுமானால், அதை அவன் தான் நடத்தி வைக்கிறான், எனவே, அவர்கள் மற்றவர்களுக்கு உபகாரம் செய்கின்றனர், மற்றவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்; பரிந்து பேசுகின்றனர், இன்னும் இது போன்ற பலவித நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்கின்றனர், அவனே இவை அனைத்தையும் ஏற்படுத்துகிறான். பிரார்த்திக்கக் கூடிய, பரிந்துரைக்கக் கூடிய உபகாரியான, அந்த நல்லமனிதரின் உள்ளத்தில் அவன் தான் பிரார்த்திக்கக் கூடிய பரிந்துரைக்கக் கூடியஉபகாரச் சிந்தனையைத் தோற்றுவித்தவன். இவ்வுலகில் உண்டான அனைத்திலும் அவனின் நாட்டத்திற்கு மாற்றமாக அவனை நிர்பந்திப்போர் இருக்கலாகாது; அல்லது அவன் அறியாதவற்றை அவனுக்குக் கற்பித்துக் கொடுப்போர் எவரும் இருக்கச் சாத்தியமில்லை; அல்லது அவனின் நாட்டமின்றி, அவனை ஆதரவு வைப்போரும் பயப்படுவோரும் இருக்க முடியாது. இதனால் தான் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், இறைவா! நீ நாடினால் என்னை மன்னித்து விடு! நீ நாடினால் எனக்குக் கிருபை செய்' என்று கூற வேண்டாம். மாறாக கேட்பதில் உறுதியாகக் கேட்கட்டும். ஏனெனில், அவனை நிர்பந்திப்போர் யாருமில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)

அவன் யாருக்கு அனுமதியளித்தானோ, அவர்களின் பரிந்துரை தான் பயன் தரும்

அவனிடத்தில் பரிந்துரைப்போர் அவனது அனுமதியின்றிப் பரிந்து பேச மாட்டார்கள் வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
அவனுடைய அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியம்? (அல்குர்ஆன் 2:255)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்.
இன்னும், எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அத்தகையவருக்கே அன்றி - அவர்கள் பரிந்து பேசமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 21:28)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை அழையுங்கள். வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஒர் அணுவளவும் அதிகாரமில்லை. அவற்றில் அவர்களுக்கு எத்தகையப் பங்குமில்லை. இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை. அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்தப் பரிந்துரையும் பயனளிக்காது.'' (அல்குர்ஆன் 34:22,23)

எனவே, அவனைத் தவிர (தெய்வங்களெனக் கருதப்பட்டு) யார் அழைக்கப்படுகின்றார்களோ, உண்மையில் அவர்களுக்கு எந்த அரசாட்சியும் இல்லை. அந்த அரசாட்சியில்கூட்டும் இல்லை. அதில் அவர் உதவியாளரும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அல்லாஹ் யாருக்கு அனுமதி வழங்கியிருக்கின்றானோ, அவர்களின் சிபாரிசைத் தவிர, மற்றவர்களின் சிபாரிசு எந்தப் பயனையும் தராது.

ஆனால், இது உலகியல் மன்னர்களுக்கு மாற்றமானது, உலகியல் மன்னர்களிடம் சிபாரிசு செய்வோருக்கு ஆட்சி இருக்கலாம், சில வேளை அந்த ஆட்சியில் அவர்கள் கூட்டானவர்களாகவும் இருக்கலாம். சிலசமயம் அந்த அரசர்களுக்கு உதவியாளர்களாகவும், துணைபுரிவோராகவும் இருக்கலாம். அவர்கள் அந்த மன்னர்களிடம் அவர்களின் அனுமதியின்றியே தமக்காகவும் பிறருக்காகவும் சிபாரிசு செய்யலாம். மன்னன் அவர்களிடம் தேவையுள்ளவனாக இருப்பதால், சிலவேளை அவர்களது சிபாரிசை ஏற்றுக் கொள்ளலாம். சில வேளை அவர்களுக்குப் பயந்தும்: அவர்களுக்குப் பிரதியுபகாரத்தின் அடிப்படையிலும், அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டியும் நேரிடலாம். எந்த அளவுக்கென்றால், அவன் தன் மனைவி மற்றும் மகனின் பக்கம் மிகத் தேவையுள்ளவனாக இருக்கின்றான். தன் மனைவி மக்கள் புறக்கணித்தால், அதனால் துன்பத்தை அனுபவிப்பான். அப்போது அவன் தன் குடிமக்களின் சிபாரிசைக் கூட ஏற்றுக் கொள்வான், அப்படி ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர்கள் அவனுக்குக் கட்டுப்படமாட்டார்கள்; அல்லது அவனுக்குத் தீங்கு செய்ய முற்படுவார்கள் என்ற ரீதியிலும் ஏற்றுக்கொள்ளலாம். அடியார்களில் சிலர,; சிலருக்காக சிபாரிசு செய்வது இது போன்றதுதான்.

எனவே, பிரதிபலன், அல்லது பயத்தின் காரணத்தினாலே தவிர, எவருடைய சிபாரிசையும் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், வல்ல ரஹ்மான் யாருக்கும் பயப்படுபவனோ, யாருடைய தயவையும் எதிர்பார்ப்பவனோ, எவரிடத்தும் தேவையானவனோ அல்லன். அவன் எவரிடத்தும் எத்தேவைகளும் அற்றவன்.

அல்லாஹ் கூறுகிறான்:
அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் ஆகிய அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை. இன்னும் அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே. நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், பொருட்களைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான். நிச்சயமாக, இதில் (அவனது வசனங்களைச்) செவிசாய்த்து, (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு அதிக அத்தாட்சிகள் இருக்கின்றன, அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள். (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்
தூய்மையானவன். அவன் எவ்விதத் தேவையும் இல்லாதவன். பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன'' (அல்குர்ஆன் 10:66-68)

அல்லாஹ்வைத் தவிர, எவை அழைக்கப்படுகின்றனவோ அவற்றால் தடுக்கவியலாது.

வானங்களிலுள்ளவையும் எந்தத் தீமையையும்
அவற்றையே தங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய இயலாத, அல்லாஹ் அல்லாதவற்றை இணைவைப்போர் வணங்குகின்றனர். இன்னும் அவர்கள், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை என்றும் கூறுகிறார்கள். நபியே! வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை இருக்கின்றன என எண்ணிக் கொண்டு, நீங்கள் அவற்றை அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன் என்று நீர் கூறுவீராக!'' (அல்குர்ஆன் 10:18)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
(அல்லாஹ்விடம் தங்களை) அண்மிக்கச் செய்யும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்துவிட்டனர். இதுவே இவர்களின் பொய்யும், இவர்கள் இட்டுக் கட்டிய கொள்கையின் விளைவுமாகும்.''
(அல்குர்ஆன் 46:28)

இணை வைப்பவர்கள் சொன்னதாக அல்லாஹ் அறிவிப்பதாவது:
அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாக்கிவைப்பார்கள் என்பதற்காகவேயன்றி, நாங்கள் அவர்களை வணங்க வில்லை (அல்குர்ஆன் 39:3) என்று அவர்கள் சொன்னார்கள்,

வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
மேலும், அவர் (இறைத்தூதர்), வானவர்களையும் , நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், உங்களுக்குக் கட்டளை இடமாட்டார்.

நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்களாக) ஆகிவிட்ட பின்னர், (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?'' (அல்குர்ஆன் 3:80)

இன்னும் அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுடைய துயரத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்) (அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன் பக்கம்(கொண்டு செல்ல) நற்கருமங்களைச் செய்து கொண்டும், அவனது அருளை எதிர்பார்த்தும், அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றார்கள். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத்தக்கதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17-:56,57)

அல்லாஹ்வையன்றி (தெய்வங்கள் எனக் கருதி) யாரெல்லாம் அழைக்கப்படுகின்றார் களோ, அவர்களால் எந்தக் துன்பத்தையும் நீக்கவோ, அல்லது மாற்றவோ முடியாது என அல்லாஹ் அறிவிக்கிறான், அவர்களே, அந்த அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தும்: அவனது தண்டனைக்கு அஞ்சியும்: அவனது நெருக்கத்தை எதிர்பார்த்தும் இருக்கின்றனர். அல்லாஹ் அவனது அனுமதியுடன் கூடிய சிபாரிசைத் தவிர, அவர்கள் மலக்குகளுக்கும் நபிமார்களுக்கும் இருப்பதாகக் கூறிய சிபாரிசை, மறுக்கிறான். சிபாரிசு என்றால் து.ஆ (பிரார்த்தனை) தான். அடியார்கள் சிலர் சிலருக்காகக் கேட்கும் து,ஆ பயனளிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவ்வாறு து,ஆ செய்யும்படி அல்லாஹ் கட்டளையிட்டும் இருக்கின்றான்.''

இணைவைப்போருக்காக சிபாரிசு செய்யவோ, பிரார்த்திக்கவோ கூடாது. 

சிபாரிசு செய்து பிரார்த்திப்பவர், இது விஷயத்தில் அல்லாஹ் யாருக்காக சிபாரிசும் பிரார்திக்க அனுமதி வழங்கியுள்ளானோ அவர்களைத் தவிர, வேறெவருக்கும் சிபாரிசோ, பிரார்த்திக்கக் கூடாது இணைவைப்போருக்காகச் சிபாரிசு செய்வது அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது போன்ற தடுக்கப்பட்ட வகையில் சிபாரிசு செய்யக்கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்:
இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின், அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. இப்ராஹீம் நபி தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி, வேறில்லை. மெய்யாகவே அவரது தந்தை அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார்.''
(அல்குர்ஆன் 9:113-114)

முனாஃபிக்கீன் எனும் நயவஞ்சகர்கள் விசயமாக அல்லாஹ் கூறுகிறான்:
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேட்டாலும், அல்லது பாவமன்னிப்புக் கேட்காவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும். அல்லாஹ் அவர்களுக்குப் பாவ மன்னிப்பு அளிக்கமாட்டான். பாவம் செய்யும் சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.''
(அல்குர்ஆன் 63:6)

புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரமான ஹதீஸ் நூல்களில் வந்துள்ளது. இணை வைப்போருக்காகவும், நயவஞ்சகர்களுக்காகவும் பாவமன்னிப்புத் தேடுவதை விட்டும் தன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை

அல்லாஹ் தடுத்துள்ளான், இணை வைப்போர் மன்னிப்பு அளிக்கப்பட மாட்டார்கள் எனவும் பின்வரும் வசனங்களில் அறிவிக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர, மற்ற எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.'' (அல்குர்ஆன் 4:48,116)

அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், அவருக்காக ஒருபோதும் (ஜனாஸா) தொழுகை தொழ வேண்டாம். இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, பாவிகளாகவே இறந்தார்கள்.'' (அல்குர்ஆன் 9:84)

பிரார்த்தனையில் வரம்பு மீறக்கூடாது

அல்லாஹ் கூறுகிறான்: ஆகவே இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 7:55)

அதாவது, பிரார்த்தனையில் வரம்பு மீறியவர்களை அவன் நேசிப்பதில்லை. அல்லாஹ் அறவே செய்ய (விரும்ப) மாட்டானே அது போன்றதை அடியான் கேட்பது பிரார்த்தனையில் வரம்பு மீறுதலாகும். உதாரணமாக, ஒருவன் நபிமார்களின் தகுதியைப் படித்தரத்தைக் கேட்பது, அல்லது இணைவைப்பாளர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்பது, அல்லது இறை நிராகரிப்பு, பாவங்கள், மாறுசெய்தல் போன்ற பாவமான காரியங்களில் அவனுக்குத் துணை செய்யுமாறு அல்லாஹ்விடம் கேட்பது. இன்னும் இவ்வாறான அனைத்தும் பிரார்த்தனையில் வரம்பு மீறுதலாகும்.

சிபாரிசு செய்ய அல்லாஹ் யாருக்கு அனுமதி வழங்கியிருக்கின்றானோ அவர், வரம்பு மீறாதவற்றில் மட்டுமே பிரார்த்தித்து, சிபாரிசு வேண்டிக் கொள்ளலாம், அவர்களில் ஒருவர் தம்மால் தீர்மானிக்க முடியாத, அவருக்குப் பொருத்தமற்ற ஒன்றைக் கேட்டால், அது விஷயத்தில் அவர் பாவமற்றவர் ஆவார். நூஹ்(அலை) அவர்கள் கேட்டதுபோல.

நூஹ்(அலை) அவர்கள் தம் இறைவனிடம், என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவனே: உன் வாக்குறுதி உண்மையானது. நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்! எனக் கூறினார். (11:45) அதற்கு அல்லாஹ் கூறினான்.
நூஹே! உண்மையாகவே அவன் உன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். ஆகவே, நீர் அறியாத விசயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். நீர் அறியாதவர்களில் ஒருவராகி விட வேண்டாம் என்று நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்
என் இறைவனே! எனக்கு எதைப்பற்றிய ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால், நான் நட்டமடைந்தவர்களில் ஒருவனாய் ஆகிவிடுவேன் என்று கூறினார்.'' (அல்குர்ஆன் 11: 46-47)

பிரார்த்தனையும் சிபாரிசும் செய்கின்ற எல்லோருமே அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் சிபாரிசும் செய்கின்றனர். ஆனால், அவர்கள் பிரார்த்தனையும் சிபாரிசும் அல்லாஹ் விதித்த விதிப்படியும், அவனுடைய நாட்டப்படியுமே நடக்கிறது. அவனே அந்த பிரார்த்தனைக்குப் பதிலளித்து, அந்த சிபாரிசை ஏற்றுக் கொள்கிறான். அவனே காரண காரியத்தைப் படைத்தவன். பிரார்த்திப்பதும் அல்லாஹ் ஏற்படுத்திய காரணங்களில் ஒன்றாகும். அந்த அடியான். பாஞ்சாட்டுதல், பிரார்த்தனை, அவனுடைய வேண்டுதல், ஆசை அனைத்தும் அல்லாஹ்வின் அளவிலே இருத்தல் வேண்டும். அடியார்களின் பிரார்த்தனையானாலும், மற்றவைகளானாலும் அல்லாஹ் தான் நாடியவற்றின் காரணங்களைத் தானே விதிக்கின்றான்.

உயிர் வாழ்கின்ற தலைவர் மற்றும் பெரியோர்களிடம் பிரார்த்தனை செய்யும்படி மக்களும், அவ்வாறே மக்களிடம் பிரார்த்தனை செய்யும்படி தலைவர்களும் கேட்டுக்கொள்வது ஆகுமாக்கப்பட்டதே

நபி(ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள், மழை வேண்டி பிரார்த்திக்கும்படி கோரினார்கள். மக்கள், நபிமார்களிடம் பிரார்த்திக்கவும் சிபாரிசு செய்யவும் வேண்டியுள்ளனர். அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்குப் பின், உமர்(ரலி) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் நபியவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ்(ரழி) அவர்களிடம் மழை வேண்டி பிரார்த்திக்கும்படிக் கோரியுள்ளனர். மக்கள் அனைவரும் மறுமைநாளில் நபிமார்களிடமும், முஹம்மது(ஸல); அவர்களிடமும் சிபாரிசு செய்ய வேண்டுவர். முஹம்மது (ஸல்) அவர்கள் தான், சிபாரிசு செய்வோருக்கெல்லாம் தலைவராவார்கள். அவர்களுக்கு மட்டுமே குறிப்பான சிபாரிசுக்கான உரிமைகளும் உண்டு.

தமக்காக பிரார்த்திக்கும்படி நபி(ஸல்) அவர்கள் தம் மக்களிடம் கேட்டுள்ளதன் கருத்து

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்:
தொழுகைக்கு அழைப்பவரின், தொழுகை அழைப்பைக் கேட்டால், அவர் சொல்வது போலவே நீங்களும் சொல்லுங்கள். பின்பு என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது ஒருவர் ஒரு ஸலவாத்துச் சொன்னால், நிச்சயமாக அல்லாஹ் அவருக்குப் பத்து அருள் புரிகிறான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது அல்லாஹ்வின் அடியார்களில் ஒரேயொரு அடியாருக்குக் கிடைக்கும் சுவர்க்கத்தின் உயர்பதவிகளில் ஒன்றாகும். அந்தப் பதவியைப் பெற்றுக் கொள்ளும் அடியாராக நான் இருக்க விரும்புகிறேன். எனக்காக அல்லாஹ்விடம் யார் வஸீலாவைக் கேட்டாரோ, அவருக்கு மறுமைநாளில் எனது (ஷஃபா அத்) சிபாரிசு உறுதியாகிவிட்டது என, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: முஸ்லிம், அபூதாவூத் , திரிமிதீ, நஸயீ, மற்றும் அஹ்மத்)

உமர்(ரலி) அவர்கள் உம்ரா செய்ய நாடி, உம்ராவுக்குப் பயணமாகும் போது, அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், என் அருமைச் சகோதரரே! உமது பிரார்த்தனையில் எம்மையும் சேர்க்க மறந்து விடாதீர் என்று கூறி, வழி அனுப்பி வைத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னுமாஜா.) 

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஆஸிம் இப்னு உபைதில்லாஹ் அல் அதவிய்யி என்பவர் இடம் பெறுகிறார். அவர் பலவீனமானவர்)

நபி(ஸல்) அவர்கள் தம் (உம்மத்) சமூகத்தவர்களிடம் - தமக்காக பிரார்த்தனை செய்யும் படி வேண்டியுள்ளனர். எனினும், வேண்டுதல் என்ற அடிப்படையிலன்றி, கட்டளை என்ற அடிப்படையில் ஏவியுள்ளனர். மற்றைய வணக்க வழிபாடுகளுக்குக் கூலி வழங்கப்படுவது போல, இதற்கும் கூலி வழங்கப்படும் என்ற நிலையில் கட்டளையிட்டுள்ளனர். அத்துடனே நபி(ஸல்) அவர்களின் சமூகத்தினர் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் அவர்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி நபி(ஸல்) அவர்களுக்கும் கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்:
நேர்வழியின் பக்கம் அழைப்பவருக்கும் அதைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைப்பது போன்ற நற்கூலி உண்டு. அதற்காகப் பின்பற்றுபவர்களின் கூலி எதுவும் குறைக்கப்படமாட்டாது. வழிகேட்டிற்கு யார்

அழைக்கின்றாரோ, அவருக்கும் அதைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைப்பது போன்ற தண்டனை கிடைக்கும். அதற்காக அவர்களின் தண்டனை சிறிதளவும் குறைக்கப்பட மாட்டாது.
(நூல்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ, அபூதா¥த், இப்னுமாஜா மற்றும் தாரமீ,)

நபி(ஸல்) அவர்கள் தம் சமூக மக்களை அனைத்து நேர்வழிகளின் பக்கமும் அழைக்கும் அழைப்பாளர் ஆவார்கள். எவற்றில் அவர்களை மக்கள் பின்பற்றுகிறார்களோ, அவை அனைத்திலும் அவர்களுக்குக் கிடைப்பது போன்ற நற்கூலி அவர்களுக்கும் உண்டு. அது போன்றே அவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னாலும். சொன்னவர்களுக்கு அல்லாஹ் பத்து அருள்புரிகிறான். நபி(ஸல்) அவர்களுக்காக அவர்களின் வழிநடப்போர் செய்யும் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளிப்பதுடன், அந்த பிரார்த்தனைக்காக அவர்களுக்குக் கிடைக்கும் கூலி போன்றது நபியவர்களுக்கும் உண்டு. அந்த பிரார்த்தனையினால், பிரார்த்திப்பவர்களின் கூலியை நபியவர்களுக்கும் அல்லாஹ் வழங்குகின்றான். பயன்களிலிருந்து எதுவெல்லாம் கிடைக்கிறதோ அதுவெல்லாம் அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடையாகும்.

பிரார்த்தனையினால், அதைக் கோருபவரும் யாருக்காக அவர் கோருகிறாரோ அவரும் பயனடைகிறார்கள்.

ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதர் தன் (முஸ்லிமான) சகோதரருக்காக அவர் அறியாத முறையில் பிரார்த்தித்தால், அல்லாஹ் ஒரு வானவரை ஏற்படுத்துகிறான். அவர் தன் சகோதரருக்காக பிரார்த்திக்கும் போதெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த வானவர், ஆமீன்! (உனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!) உனக்கும் அது போன்றது கிடைக்கட்டும் என்று கூறுகிறார். (நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்)

மற்றொரு நபிமொழியில்... ஒரு சகோதரருக்காக மற்றொரு சகோதரர் அவர் அறியாதபடி (மறைவாக) கேட்கும் பிரார்த்தனைதான் விரைந்து ஏற்றுக் கொள்ளப்படும் என்று உள்ளது,
(நூல்: அபூதாவூத், திர்மிதீ)

இதில் அப்துர்ரஹ்மான் இப்னு சியாத் இப்னி அல் அஃப்ரீகி இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே, மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும்போது, அதனால் பிரார்த்திப்பவரும் அவர் யாருக்காகப் பிரார்த்தித்தாரோ அவரும் பயன்பெறுகின்றனர். பிரார்த்தித்தவர் மட்டுமே இந்த நன்மையில் இடம் பெற்றிருந்தாலும் கூட, இருவருக்குமே நன்மை கிடைக்கிறது. தானும் பயன் பெறும் நோக்கில் ஒருவர் மற்றொருவரிடம், எனக்காக பிரார்த்தியுங்கள் என்று கூறுவாரானால், நல்லறத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்தவர்களாகவே ஆகின்றது. எப்படியெனில் பிரார்த்திப்பவருக்குத் தாம் இருவரும் பயன்பெறத் தக்க ஒன்றையே அவர் சுட்டிக் காட்டுகிறார். அவ்வாறே பிரார்த்திப்பவரும் பயன்பெறத் தக்க ஒரு காரியத்தையே செய்கிறார்.
குறிப்பாக, அடியார்கள் ஒதும்படி ஏவப்பட்ட துஆக்களுக்கு நற்கூலி வழங்கப்படுகிறது.

இன்னும் உம் பாவத்திற்காகவும், இறைநம்பிக்கையாளர்களான ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் பாவமன்னிப்புத் தேடுவீராக!'' (47:19) என்று அல்லாஹ் பிறருக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும் படி தம் நபிக்குக் கட்டளையிட்டுக் கூறுகிறான்.

ஆகவே, அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு: உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதராகிய நீரும் மன்னிப்புக்

கேட்டிருந்தால், மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்.'' (அல்குர்ஆன் 4:64)

அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்பதையும், அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் பாவமன்னிப்புக் கேட்பதையும் அல்லாஹ் அங்கே குறிப்பிடுகிறான், இறைவிசுவாசியான ஆண்களுக்காகவும், இறை விசுவாசியான பெண்களுக்காகவும் பாவமன்னிப்புக் கேட்கும்படி அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிடுகிறான், படைக்கப்பட்ட அடியார்களுக்கு எதைக் கட்டளையிட்டுள்ளானோ, அதைக் கொண்டே தவிர, ஒர் அடியார் மற்றவருக்காகக் கேட்கும்படி அல்லாஹ் கட்டளையிடவில்லை.

மாறாக, அல்லாஹ் அடியார்களுக்குக் கட்டளையிட்டது கடமையானதாகவோ அல்லது விரும்பத்தக்கதாகவோ இருக்கலாம். அதை அடியார்கள் செயல்படுத்துவார்கள். அதுவே இறைவணக்கமாகவும், இறை வழிபாடாகவும், அல்லாஹ்வின் பக்கம் சமீபமாக்கி வைக்கின்ற வணக்கமாகவும் அதைச் செயல்படுத்துபவனுக்கு நன்மையானதாகவும், பயனுள்ளதாகவும் மாறிவிடுகிறது. அதை அவன் செயல்படுத்தினால் அது அல்லாஹ் அவனுக்குச் செய்த உபகாரமாகவும் அருட்கொடையாகவும் ஆகிவிடுகிறது. எனினும், அல்லாஹ் அடியார்களுக்குச் செய்த மிகப் பெரும் அருட்கொடை அவர்களை இறைநம்பிக்கை எனும் நேர்வழியில் செலுத்தியதாகும்.

உண்மையில் மாபெரும் அருட்கொடை ஈமானே ஆகும்

சொல் மற்றும்செயல் அடங்கியதே இறைநம்பிக்கையாகும்.. அது இறைவனுக்குக் கட்டுப்படுவதன் மூலமும், நல்லறங்கள் புரிவதன் மூலமும் அதிகரிக்கிறது. அடியான் தன்னுடைய நல்லறங்களை மென்மேலும் அதிகரிப்பதால் அவனுடைய ஈமான் எனும் இறைநம்பிக்கையும் அதிகரிக்கிறது. உண்மையில் அதுவே மாபெரும் அருட்கொடையாகும்.

அல்லாஹ் அது பற்றிக் கூறுகிறான்:
(நேர்வழியான) அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவ்வழியாகும்.
(அல்குர்ஆன் 1: 6)

யார் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களுடன் இருப்பார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இணையாமல் அதன் சட்ட திட்டங்களைப் பேணாமல், வளமான உலக வாழ்வு மட்டுமே அருட்கொடையாகுமா? அல்லது ஆகாதா? என்ற கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதற்கு. விடையாக, நம் தோழர்களும் மற்றும் சிலரும் கூறியவற்றில் இரண்டு பிரபலமான பதில்கள் இங்கு தரப்படுகின்றன.
அதாவது ஒரு வகையில் பார்க்கும் போது வளமான உலகவாழ்வு பரிபூரணமான அருட்கொடை என்று சொல்ல முடியாது, அதை ஓர் அருட்கொடை என்று மட்டுமே சொல்ல முடியும். எனினும், இஸ்லாமிய மார்க்கம் எனும் அருட்கொடையைத் தேடி அடைந்து கொள்வது மிக அவசியமாகும். அல்லாஹ் இதை கடமையாகவும் ஆக்கியுள்ளான். இது விரும்பத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால் குர்ஆன் மற்றும் நபிவழியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்துடன் கூடிய வளமான உலக வாழ்வே அருட்கொடை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
கேள்விக் கணக்கு ஏதுமில்லாமல் எழுபதினாயிரம் பேர் சுவர்க்கம் நுழைவார்கள். அவர்கள் யாரென்றால் மந்திரித்தல், மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டிருந்தும், தானும் மந்திரித்துக் கொள்ளாமல், பிறரிடமும் மந்திரித்துக் கொள்ள முயல மாட்டார்களே அவர்கள்தாம்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனும் செய்தி புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் மற்றும் தாரமி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இதை நீங்கள் கவனிக்கவேண்டும்.

இறைவனுக்கும், அடியார்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்பை அரசனுக்கும், குடிமக்களுக்கும் உள்ள தொடர்பு போல் சித்தரிப்பவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாவான். அது மட்டுமின்றி, அது இணைவைத்தோர். மற்றும் சிலை வணங்கிகளின் மார்க்கமாகவும் ஆகிவிட்டது என்பதே இதன் கருத்தாகும்.

இவை நபிமார்கள், நல்லடியார்களின் சிலைகள் தாமே! இவை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கின்ற தொடர்பாளர்கள்'' என்று (அன்றைய மக்காவாசிகளான) இணைவைப்பாளர்கள் கூறினார்கள். எனவேதான், அல்லாஹ் கிறித்தவர்கள் பற்றி அவர்கள் இணைவைப்பாளர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வை விடுத்து பாதிரிமார்களையும், மார்க்கப் பெரியார்களையும் ரப்பு' (இரட்சகர்)களாக எடுத்துக் கொள்ளுதல் இறைமறுப்பாகும்.

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிமார்களையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களோ, ஒரே இறைவனைத் தவிர, வேறு எவரையும் வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி, வேறு இறைவன் இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் 9:31)

நபியே! என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் மிகச் சமீபமாகவே இருக்கின்றேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் பதிலளிக் கிறேன். ஆகவே அவர்கள் எனக்குப் பதிலளிக்கட்டும். என்னையே நம்பட்டும். அப்போது அவர்கள் நேர்வழி அடைவார்கள்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:186)

அதாவது, நான் அவர்களுக்குக் கட்டளையிட்டவற்றிலும், தடை செய்தவற்றிலும் (கட்டுப்பட்டு) எனக்கே பதிலளிக்கட்டும். அவர்கள் பணிவாக எதையேனும் கேட்டால், நான் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்' என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் எனவே, வேலைகளிலிருந்து நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும் வணக்கத்திலும்) முயல்வீராக! மேலும், முழு மனதுடன் உம் இறைவன் பக்கம் சார்ந்து விடுவீராக!''
(அல்குர்ஆன் 94:7,8)

கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி தெய்வங்களென எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவை யாவும் மறைந்து விடும்
.(அல்குர்ஆன் 17:67)

துன்பத்திற்குள்ளானவன் அ(ந்த இறை)வனை அழைத்தால், அவனுக்குப் பதில் கொடுத்து: அவனது துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு நாயன் இருக்கின்றானா? (இல்லை); எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும்.'' (அல்குர்ஆன் 27:62)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்:
வானங்களிலும் பூமியிலும் உள்ளோர் அனைவரும் தங்களுக்கு வேண்டியவற்றை அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் தன் காரியத்திலேயே இருக்கிறான்.
(அல்குர்ஆன் 55:29)

அல்லாஹ்வை மட்டுமே ஆதரவு வைத்து அவனிடமே முழு நம்பிக்கை வைப்பதே ஏகத்துவமாகும்.

அல்லாஹ் இந்த ஏகத்துவத்தைத் தன் வேதத்தில் தெளிவாக்கியுள்ளான். அவனைத் தவிர வேறெவருக்கும் பயப்படுவதோ, அவனைத் தவிர வேறெவரையும் ஆதரவு வைப்பதோ மற்றும் முழு நம்பிக்கை வைப்பதோ கூடாது என்ற அளவிற்கு இணைவைத்தலைத் தடுத்து விடுகிறான். அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுதல் ஏகத்துவத்தின் உண்மை நிலையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
இறைநம்பிக்iயாளர்களே! நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்காதீர்கள். (அல்குர்ஆன் 5:44)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
ஷைத்தான்தான், தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே, நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள்.''
நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களானால் எனக்கே அஞ்சுங்கள்.''
(அல்குர்ஆன் 3:175)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்:
உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதிலிருந்து) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக! என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ,
அவர்களை, நபியே! நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர் போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப் போல் அல்லது அதை விட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டார்கள். (அல்குர்ஆன் 4:77)

அவர்களைமுற்றாகத் தடுத்தார்கள். லாயிலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்பதன் பொருள்தான், நாம் மேலே விளக்கியது ஏனெனில், இலாஹ் என்றால் பரிபூரணப் பிரியத்துடனும், கண்ணியத்துடனும் சங்கையாகவும், உயர்வாகவும், அவனையே ஆதரவு வைத்தும், அவனை மட்டுமே பயந்தும் உள்ளத்தால் பிரியம் வைத்து வணங்கப்படும் ஒருவனாகும். எந்த அளவுக்கென்றால், நபி(ஸல்) அவர்கள் அம்மக்களிடம்,
அல்லாஹ்வும் முஹம்மதும் நாடினால் என்று (அல்லாஹ்வுடன் என்னை இணைத்துச்) சொல்லாதீர்கள். மாறாக, அல்லாஹ் நாடியது நடக்கும். அதன் பின்னர் முஹம்மது நாடினால் என்று (பிரித்துச்) சொல்லுங்கள். என்று கூறினார்கள்.
(நூல்கள்: அபூதாவூத், அஹ்மத் மற்றும் நஸயீ)

அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்' என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் சொன்னதற்கு, அல்லாஹ்வுடன் என்னை இணையாக்கி விட்டாயா?' என்று கடிந்து, அல்லாஹ் மட்டுமே நாடினால் என்று சொல்'' என்று அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அஹ்மத், இப்னுமாஜா)

ம்அல் அதபுல் முஃப்ரத் எனும் நூலில் புகாரி இமாம் அவர்களும், ஃபீ அமலி அல் யவ்மி வல் லைலாம் எனும் நூலில் இமாம் நஸயீ அவர்களும் இதனைப் பதிவு செய்துள்ளார்கள்).

யார் சத்தியம் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். இல்லையெனில், வாய் மூடி மௌனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி, முஸ்லிம், மு.அத்தா, அபூதாவூத், திர்மதி, நஸயீ மற்றும் அஹ்மத்)

அல்லாஹ் அல்லாததன் மீது சத்தியம் செய்பவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீ (உன்னுடைய தேவை) எதையும் கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேட்டுக்கொள்! உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடிக்கொள்! உனக்கு வாழ்வில் என்ன நிகழுமோ, அது பற்றிய விஷயம் முடிந்து விட்டது. படைப்பினங்கள் உனக்குப் பயனளிக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டாலும் அல்லாஹ் உனக்கு எழுதிவிட்டது தவிர, வேறெதுவும் பயனளிக்காது. அவர்கள் உனக்குத் தீங்கு செய்யப் பெருமுயற்சி செய்தாலும், அல்லாஹ் உனக்குத் தீங்காக எதை நாடியுள்ளானோ அது தவிர, வேறெதுவும் நடக்காது.'' என்று நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறினார்கள். (நூல்: திர்மிதீ, அஹ்மத்)

மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை (கிறித்தவர்கள்) அளவுக்கு மீறிப் புகழ்ந்தது போன்று, என்னைப் புகழாதீர்கள், நான் அல்லாஹ்வின் அடியானே. என்னை அல்லாஹ்வின் அடியான் என்றும், அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவா! என் மண்ணறையை, வணங்கப்படும் (இடமாக) சிலைகள் போன்றதாக ஆக்கிவிடாதே!'' என்று நபி(ஸல்) பிரார்த்தித்துள்ளார்கள். (நூல்: அஹ்மத், முஅத்தா)

என் கப்ரை (அடக்கஸ்தலத்தை) விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்! என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்! நீங்கள் எங்கிருந்து ஸலவாத்' சொன்னபோதும் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அபூதாவூத், அஹ்மத்)

யூதர்களும், கிறித்தவர்களும் செய்த செயலைக் கண்டித்து, தங்கள் நபிமார்களின் மண்ணறைகளை வணங்கும் இடமாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக'' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லியிராவிடில், அவர்களின் மண்ணறையும் கூட உயர்த்தப்பட்டிருக்கும். இன்னும் அவர்கள் தம் மண்ணறையைத் தொழும் பள்ளியாக ஆக்குவதை வெறுத்திருக்கிறார்கள்'' என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள காரண காரியங்கள் மறுக்கப்படக் கூடாது.

இது மிக விரிவானதொரு விஷயமாகும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து வளர்த்துக் காத்து இரட்சிக்கின்ற ரப்'பாகவும் அரசனாகவும் இருக்கிறான் என, அவன் அறிந்திருப்பதுடனே, எவ்வாறு மழை தாவரங்கள் வளரக் காரணமாகவும், சூரியனையும் சந்திரனையும் அவற்றினால் என்னென்ன பயன்கள் விளைகின்றனவோ அவற்றுக்கும், சிபாரிசு செய்வதையும், பிரார்த்திப்பதையும், அவற்றால் என்னென்ன பயன்கள் விளைகின்றனவோ, அவற்றுக்கும் காரணமாக ஆக்கி இருக்கிறானோ அது போல, அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள காரணகாரியங்களை மறுக்கக் கூடாது. 

உதாரணமாக, முஸ்லிம்கள் மரணமானவர்களுக்காகத் தொழவைத்து பிரார்த்திக்கின்றனர், அதன் மூலம் அல்லாஹ் அந்த மையித்திற்கு அருள்புரிகிறான். ஜனாஸா தொழுத அந்த முஸ்லிம்களுக்கும் கூலி கொடுக்கப்படுகிறது.

வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி, அதன் மூலமாக பூமி இறந்த பின், அதை உயிர்ப்பிப்பதிலும் அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும்... (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.'' (அல்குர்ஆன் 2:164)

மூன்று விஷயங்கள் காரண காரியங்களுடன் தொடர்புடையவன்.

இந்தக் காரணகாரியங்களில் மூன்று விசயங்களைக் கவனிப்பது அவசியமாகும்.

முதலாவது: குறிப்பிட்ட காரணம் தேடிப் பெற முடியாது. அத்துடன் வேறொரு காரணமும் இணைவது அவசியம். அப்படியும் அதற்குப் பல தடைகளும் இருக்கும். அந்தக் காரணங்களை அல்லாஹ் பரிபூரணப்படுத்தி: அதற்கு ஏற்பட்ட தடைகளை அகற்றாவிட்டால், நாட்டம் கைகூடாது. அல்லாஹ் நாடியது நடக்கும். மக்கள் அதை நாடாவிட்டாலும் சரியே! அதை அல்லாஹ் நாடவில்லை ஏனில், அது ஒருபோதும் நடக்காது.

இரண்டாவது: ஏதாவதொன்றை உண்டாக்க அது பற்றிய கல்வியறிவு அவசியம். ஒருவன் கல்வியறிவின்றி ஒன்றைக் காரணமாக ஆக்கினால், அல்லது ஷரீஅத்துக்கு முரணானதைச் செய்தால், அவன் வீணான ஒன்றைச் செய்தவனாவான். உதாரணமாக, தீமைகளைத் தடுப்பதற்கும் நன்மைகள் ஏற்படவும் நேர்ச்சை காரணமாக இருக்கிறது என ஒருவன் எண்ணுவது போல புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களில் வந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்வதைத் தடுத்ததுடன் மேலும் சொன்னார்கள். அது நன்மையைத் தராது. மாறாக, கஞ்சனிடம் உள்ள பொருள்தான் அதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.''

மூன்றாவது: மார்க்கம் சம்பந்தப்பட்டவை அல்லாஹ் நபி(ஸல்)மூலமாக சட்டமாக்கப்பட்டிருந்தாலே தவிர, அவற்றைக் காரணங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், வணக்க வழிபாடுகளின் அடிப்படை அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் சொன்னதை அப்படியே பின்பற்றுவதுதான். எனவே, மனிதன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து, அவனல்லாதவற்றை அழைத்து உதவி தேடக் கூடாது. அவன் தன் தேவைகளில் சில அதனால் நிறைவேறியது என, எண்ணினாலும் சரியே, எனவே, ஷரீஅத் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக, பித்அத்துகளின் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்கக் கூடாது: அதை அவன் சரியென எண்ணிச் செய்தாலும் சரியே! ஏனெனில், மனிதன் இறைவனுக்கு இணைவைக்கும்போது அவனின் சில காரியங்கள் கைகூட ஷைத்தான்கள் உதவி செய்கின்றன. அவன் இறைவனை மறுக்கும்போதும், அவன் பாவமிழைக்கும் போதும், தவறாக நடக்கும்போதும் கூட அவனுடைய தேவைகள் கூடி விடுகிறது, ஆனால், அவனுக்கு அது ஆகுமானதன்று. அதனால் விளையும் தீமை, நன்மையை விட மகாபாதகமானதும் கொடியதுமாகும்.
நபி(ஸல்) அவர்கள் நன்மைகளை ஏற்படுத்தவும்: தீமைகளைக் களையவுமே அனுப்பப்பட்டுள்ளார்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றைப் பெற்றுத் தரவும், அவற்றைப் பரிபூரணமாக்கவும், தீமைகளை அழித்தொழித்து இல்லாமலாக்கவுமே அனுப்பப் பட்டுள்ளார்கள். அல்லாஹ் நமக்கு ஏவிய அனைத்துமே உண்மையில் பரிபூரணமான நன்மையை ஏற்படுத்துபவையே. அவன் தடுத்த அனைத்துமே கொடிய தீமைகளை விளைவிப்பவையே. 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Previous Post Next Post