அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“சட்டங்களை ஆதாரங்களுடன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது (பெற்றோர்களுக்கு) அவசியமாகும். உதாரணமாக: ‘சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரை நீ கூறு; சாப்பிட்டு முடித்துவிட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்துகொள்!’ என்று உங்கள் பிள்ளைக்கு நீங்கள் சொல்ல விரும்பி, இதைச் சொல்லிக்கொடுத்தும் விட்டீர்கள் என்றால் நோக்கம் நிறைவேறி விடும். என்றாலும் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு, “சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரை நீ கூறு; சாப்பிட்டு முடித்து விட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொள்!’ ஏனெனில் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறும்படிப் பணித்திருப்பதோடு, ‘சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழும் மனிதனையும், குடிபானத்தைப் பருகிவிட்டு அதற்காகவும் அல்லாஹ்வைப் புகழ்கின்ற மனிதனையும் நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்!’ எனக் கூறினார்கள் என்று நீங்கள் சொன்னால், இரு பிரயோசனங்களை இதன் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்கின்றீர்கள்.
01) ஆதாரங்களின் அடிப்படையில் பின்பற்றி நடப்பதற்கு உங்கள் பிள்ளையை நீங்கள் பழக்கப்படுத்துகின்றீர்கள்.
02) ரசூல் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றும், பின்பற்றப்பட வேண்டிய தலைவர் அவர்தான் என்றும், அவரின் வழிகாட்டல்களை எடுத்து நடப்பது கட்டாயமாகும் என்றும் உங்கள் பிள்ளையை நீங்கள் பயிற்றுவிக்கின்றீர்கள்.
யதார்த்தத்தில், இவ்விடயம் குறித்து அதிகமாகவே அலட்சியம் காட்டப்படுகின்றது! அதிகமான பெற்றோர் தமது பிள்ளைகளை சட்டங்களின் பக்கம் மட்டுமே வழிகாட்டுகிறார்களேயொழிய, இந்த வழிகாட்டல்களை அடிப்படை மூலாதாரமாக இருக்கின்ற அல்குர்ஆனுடனும் அஸ்ஸுன்னாவுடனும் இணைத்துக் கூறுகின்றார்கள் இல்லை!”.
{ நூல்: ‘அல்கவ்லுல் முfபீத் அலா கிதாபித் தவ்ஹீத்’, 02/423 }
தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)