முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை இனிதாக!

- ஃபாத்திமா ஷஹானா

உலக மக்கள்தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர் அதேபோல் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளும், கொடுமைகளும் அதிகரித்தே காணப்படுகின்றது. இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளின், கொடுமைகளின் பின்னணியில்பெரும்பாலும் இன்னொரு பெண் இருப்பதே ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். அல்லது தாங்களே தங்களுக்கு இழைக்கப்படும்அநீதிகள், கொடுமைகளுக்கு காரணமாகவும் அமைகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனில் பெண்கள் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் கூட இருக்கின்றதென்றால் இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை உணரலாம். இன்று பெண் உரிமைக்காக வாய் கிழியப் பேசும் பெண்களின் புரட்சி பேச்சளவிலேயே உள்ளது. ஆனால், இஸ்லாம் செயல் வடிவில் காட்டவேண்டிய அத்தனை திட்டங்களையும் சீராக வகுத்துத்தந்துள்ளது.

பெண்களுக்கு கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

இஸ்லாம் ஆண்களுக்கு உரிமைகளை வழங்கியிருப்பது போல் பெண்களுக்கும் ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. இஸ்லாத்திலுள்ள பெண்களுக்கான உரிமைகள் அத்தனையும் அவளது சீரான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாகவே அமைந்திருக்கின்றது. இஸ்லாம் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சொத்துரிமை, மணமகனை தேர்வு செய்யும் உரிமை, விவாகரத்துச் செய்யும் உரிமை, மறுமணம் செய்யும் உரிமை ஆகிய ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது.

இஸ்லாத்திலுள்ள பெண்களுக்கான பாதுகாப்புத் திட்டம்.

''(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்''. (அல்குர்ஆன் 24:30)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் 24:31)

''நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' (அல்குர்ஆன் 33:59)

மேலுள்ள குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் பெண்களுக்கும், ஆண்களுக்கும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுகின்றான். பெண்கள் தங்கள் அலங்காரங்களை யாருக்கு காட்ட வேண்டும், யாருக்குக் காட்டக் கூடாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றான். பெண்கள் மார;பகங்களை மறைக்க வேண்டிய அவசியத்தையும் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

மனித இனத்தைப் படைத்த அல்லாஹ் மனித இனத்தின் பலவீனங்களையும் அறிந்திருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் சட்டங்களையும், வாழ்க்கைத் திட்டத்தையும் அமைத்துள்ளான்.



மங்கிப்போன வெட்கம் :

இன்று நம்மத்தியுள்ள ஏராளமான முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரம் அவர்கள் மத்தியில் வெட்கம் என்ற உணர்வு சிறிதும் இல்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அவரை(க் கண்டிக்காதீர்கள்) (விட்டுவிடுங் கள். ஏனெனில் வெட்கமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள். (புகாரி 24, முஸ்லிம் 36)

இம்ரான் இப்னு ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: "வெட்கம் என்பது நல்லதைத் தவிர வேறெதனையும் கொண்டு வராது" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி 6177, முஸ்லிம் 37)

இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெட்கம் என்பது இறை நம்பிக்கையில் ஒரு கிளை என்றும் அது நல்லதைத் தவிர வேறெதனையும் கொண்டு வராது என்றும் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் ஏராளமான நம் முஸ்லிம் இளம் பெண்கள் ஆடை விஷயத்தில் இறை நம்பிக்கை அற்றவர்களைப் போல்தான் நடந்து கொள்கின்றார்கள். அத்தோடு வெட்கம் இவர்களைவிட்டு விலகியதால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமாக நல்லதைத் தவிர கெடுதியையே இவர்களுக்கு ஏற்படத்தக்கவாறு இவர்களது வாழ்க்கை இவர்களுக்கே தீய வினையாக அமைந்து விடுகின்றது.



பெண்களின் சீரழிந்த ஆடைக் கலாச்சாரம் :

இன்று பெரும்பாலான நம் முஸ்லிம் இளம் பெண்களின் ஆடை அந்நிய கலாச்சாரத்தை ஒத்ததாகவும், இறுக்கமானதாகவும், தங்கள் உடல் அமைப்பு வெளியே தெரியக்கூடியதாகவும், மெல்லியதாகவும் அமைந்திருக்கின்றது. சிலர் அவர்களின் முற்தானைகளால் மார்பகங்களை மறைக்காமல் கழுத்திலேயே மாட்டி வைத்துக் கொள்கின்றனர்.

முக்காடு போடுபவர்கள் கூட மார்பகங்கள் தெரிய ஆடை அணிகின்றார்கள். நாம் எதற்காக ஆடை அணிகின்றோம் என்ற நோக்கமே இங்கு பாழ்ப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நாகரீகம் என்ற பெயரில் ஆடை அணியும் நம் முஸ்லிம் இளம் பெண்கள் தங்கள் பார்வைகளையா தாழ்த்திக்கொள்ளப் போகிறார்கள்? தங்கள் தலை முடியையும், முகத்தையும் அலங்காரம் பண்ணி சும்மா போகிறவனையும் சீண்டி இழுக்கக்கூடியவர்களாக உள்ளனர். இவர்களின் இந்த விதமான நடவடிக்கைகளினால் தங்களுக்கே பாதிப்பு ஏற்படப் போகின்றது என்று தெரியாமல் வம்பை விலை கொடுத்து வாங்குகின்றார்கள்.

ஆபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''இரண்டு கூட்டத்தினர் நரகவாசிகள். அவர்களை நான் பார்த்ததில்லை. (பிற்காலத்தில் வருவார்கள்). 1. ஒரு கூட்டத்தினரிடம் பசுமாட்டின் வால்கள் போல் சாட்டைகள் இருக்கும். அதன் மூலம் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்கள். 2. ஆடைகள் திறந்து (அரைகுறை) நிர்வாணமாக உள்ள பெண்கள். இவர்கள் பிறரைக் கவர்ந்திழுப்பர். பிறரிடம் சாய்வர். அவர்களின் கூந்தல் ஒட்டகத்தின் சாய்ந்த திமில்கள் போல் இருக்கும். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் வாடை இன்ன தூரத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளப்படும். (ஆனால் அவர்கள் அந்த வாடையை நுகரமாட்டார்கள்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (முஸ்லிம் 2128)

ஒரு முஸ்லிம் பெண் தன் ஆடைகளை இஸ்லாமிய வரையறைக்குள் அமைத்துக் கொண்டு, தன் பார்வைகளையும் தாழ்த்திக் கொண்டு வெளியே போகும் சந்தர்ப்பங்களில் எந்த அந்நிய ஆணினதும் தவறான பார்வைக்கு உள்ளாக மாட்டாள். ஆனால், இதற்கு மாற்றமாக வெளியே செல்லும் பெண்களை தவறான நோக்கத்தில் நோட்டமிட ஆயிரம் கண்கள் தயாராக இருக்கும். தவறான நோக்கத்தில் பார்ப்பது மட்டுமில்லாமல் தவறாக அப் பெண்களுடன் நடந்து கொள்ளவும் இந்த வகையான காமத் தீயுடையவர்கள் எத்தனிப்பர். இதனால் கற்பழிப்பு, கொலை என்ற பல்வேறு வகையான பாவகாரியங்கள் நடந்தேறவும் இவர்களது ஆடைக் கலாச்சாரம் வழி வகுக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளையான பார்வையைத் தாழ்த்திக் கொள்ளலானது நமது கற்பு சூறையாடப்படுவதிலிருந்து நம்மைக் காக்கின்றது.

எனவே, இஸ்லாம் பெண்களுக்கு விதித்துள்ள ஆடைக் கலாச்சாரம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்பான சூழலையே ஏற்படுத்துகின்றது. பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளல் என்ற வரம்பு ஏனைய பாவங்களிற்கு வித்திடாமல் ஒரு சிறந்த பாதுகாப்பையே ஏற்படுத்துகின்றது.



குழைந்து பேசி ஆண்களை சபலப்படுத்தும் பெண்கள் :

மேலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்: நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)

இன்று இளம் பெண்களிடையே குழைந்து பேசும் தன்மையும் ஒரு நாகரீகமாகவுள்ளது. இத் தன்மை நம் முஸ்லிம் இளம் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அந்நிய ஆணின் மனம் சஞ்சலப்படும் அளவிற்கு தொலைபேசியிலும், நேரிலும் கொஞ்சிக் குளாவுகின்றனர். ஒரு பெண்ணின் கையடக்கத் தொலைபேசியில் அந்நிய ஆடவனின் தொடர்பு தவறான அழைப்பில் (wrong number) ஆரம்பித்து தவறான உறவுமுறையைத் (wrong relationship) தோற்றவிக்கும் அளவிற்கு இந்த குழைந்து பேசும் தன்மை அமைந்துள்ளது. இஸ்லாம் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஷைத்தான் எந்த வழியில் எல்லாம் நம்மை ஊசலாட்டம் அடையச் செய்கின்றானோ அந்த வழியில் எல்லாம் கடினமான போக்கை மேற்கொள்ளுமாறு இஸ்லாம் கட்டளையிடுகின்றது.



ஒரு மனிதனின் சிறந்த சொத்து :

ஒரு மனிதன் சேமிக்கின்ற சொத்துகளில் சிறந்ததை உனக்கு அறிவிக்கட்டுமா? ஏன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டுவிட்டு அது நல்ல பெண்மணியாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1417)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4.அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5090)

ஒரு பெண்ணானவள் நல்ல பெண்மணியாக, ஆணின் வெற்றிக்கு காரணமாக அமையக்கூடியவளாக இருக்க வேண்டுமெனின் அவள் மார்க்கமுள்ளவளாக, நல்லொழுக்கமுடையவளாக இருக்க வேண்டும்.

இன்று நம் முஸ்லிம் பெண்கள் மத்தியில் இளம் வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்கள் என்ற பாகுபாடின்றி மார்க்க விஷயத்திலும், ஒழுக்க வி~யத்திலும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைக்கு மாற்றமாக நடக்கக்கூடியவர்களாகவே உள்ளனர்.



ஆண்களைப் போல் வலம் வரும் பெண்கள் :

இன்று நம் முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் பெண்களாகிய நாம் ஆண்களுக்கு சரி சமம் என்ற மனப்பாங்கு ஏற்படுத்தப்பட்டு அவர்களும் தங்கள் நடை, உடை, பாவனை அனைத்திலும் ஆணுக்கு சரி சமமாக நடந்து கொள்ள முனைகின்றனர்.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்கற்ல் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். (புகாரி 5885, 5886).

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். (அபூதாவூத் 4098)

இன்று ஆண், பெண் கலவன் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள், கல்லூரிகள் ஆகியவற்றில் ஆண், பெண் மாணவர்கள் ஒன்று கூடி தாங்கள் நண்பர்கள் என்ற தோரணையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இன்றி (முஸ்லிம் மாணவர்கள் உட்பட) தோளின் மேல் கை போடும் அளவிற்கு சினிமா, சுற்றுலா, assignment, project என வெளியில் சுற்றித் திரிகின்றனர். அது மட்டுமில்லாது தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் சார்பாக நடக்கும் இரவுக் களியாட்டங்களில் கூட நம் முஸ்லிம் இளம் பெண்கள் எந்தவித கூச்சமும் இன்றி பங்கு கொள்கின்றனர். வெளியில் மட்டுமில்லாமல் வீட்டுக்குள்ளேயும் தாங்கள் நண்பர்கள் என்ற பெயரில் ஆண்களுடன் facebook, skype ஆகிய social network மூலமும் கையடக்க தொலைபேசி (mobile phone) மூலமும் தொடர்புகளை ஏற்படுத்தி நேரத்தை வீணடிக்கின்றனர். இஸ்லாம் ஒரு ஆணும், பெண்ணும் எந்த விதத்திலும் தனித்திருப்பதைத் தடை செய்துள்ளது.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். "உங்களில் ஒருவர், ஒரு அந்நியப் பெண்ணிடம் (அவளுடன்) அவளுடைய (தந்தை, சகோதரர், மகன் போன்ற) உறவினர்கள் உடன் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி 1862, முஸ்லிம் 1341)



தரங்கெட்ட இணையதளங்களின் கைவரிசை :

எல்லாவற்றையும் விட லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்து மக்கள் செய்த வெட்கக்கேடான காரியத்தையும் செய்வதில் சில முஸ்லிம் இளம் பெண்கள் தூண்டப்பட்டுள்ளனர். அதாவது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் அவல நிலைக்கு சிலர் தள்ளப்பட்டுள்ளனர். காரணம் இணையத் தளங்களில் பார்க்கக்கூடாதவற்றை எல்லாம் பார்த்து தங்கள் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு மானக்கேடான, வெட்கக்கேடான காரியங்களையும் செய்யத் துணிந்து விட்டனர்.

அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: "ஒரு ஆண், மற்றொரு ஆணின் மறைவுறுப்பைக் பார்க்க வேண்டாம். ஒரு பெண், மற்றொரு பெண்ணின் மறைவுப் பகுதிகளைப் பார்க்க வேண்டாம். ஓர் ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம் 338)



இஸ்லாமிய தாய்மார்களின் கவனத்திற்கு :

பெரும்பாலான முஸ்லிம் இளம் பெண்களின் தரம் கெட்ட போக்கிற்கு அவர்களின் தாய்மார்களையே முதலில் கண்டிக்க வேண்டும். பெரும்பாலான தாய்மார்கள் அவர்களின் பிள்ளைகளை மேலைத்தேய கலாசார ரீதியிலேயே வளர்க்க ஆசைப்படுகின்றனர். இதற்காக பிள்ளைகளை ஆர்வமூட்டுபவர்களும் இவர்களே. கடைசியில் கைசேதப்பட்டு தங்கள் பிள்ளைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

ஆரம்பத்திலேயே களைகளை வெட்டி அகற்றாமல் ஆலமரம் போல் வளரவிட்டு பின் கவலைப்படுவதில் என்ன பயன்?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும்போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1412)

ஒரு தாய் தம் பெண் பிள்ளைகளுக்கு மார்க்கத்தையும், ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுத்து இரக்கம் கலந்த கண்டிப்புடன் வளர்ப்பாளேயானால் அந்த பெண் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கிய நல்லொழுக்கமுள்ளவர்களாக வளர்வார்கள். இதுவே, இவர்களை தங்கள் கணவனுக்குக் கட்டுப்படக்கூடிய நல்ல ஒழுக்கமுள்ள கற்பைப் பேணக்கூடிய நல்ல மனைவி ஆக மாற உதவும்.

ஒரு தாயின் சீரான மார்க்கரீதியான பிள்ளை வளர்ப்பானது சங்கிலித் தொடர் போல் சீரான நல்லொழுக்கமுள்ள , மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டே போகும். இதனால் உருவாகும் நல்லொழுக்கமுள்ள, மார்க்கப்பற்றுள்ள பெண் பிள்ளைகளால் வாழ்க்கை இனிதாகும்
Previous Post Next Post