குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா?

هل يستطيع الإنسان أن يغير أخلاقه؟

மௌலவிய்யா எம். வை. மஸிய்யா B. A.(Hons)
மனிதன் தனது குணங்களை மற்றிக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்ற மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு விடையளிப்பதில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தென்படுகின்றன. அவை வருமாறு:

1. மனிதனால் தனது குணங்களை மாற்றிக் கொள்ள மடியாது ஏனெனில், அவை மனிதனிடம் நிரந்தரமானவை; அவை மனித இயல்புகளாகவே கருதப்படுகின்றன; அவற்றை மனிதன் தானாக மாற்றிக் கொள்ளவோ, அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ முடியாது என்பர் சில அறிஞர்கள்.

2. மனிதன் தனது குணங்களை மாற்றிக் கொள்ளலாம். அது அவனால் முடியாத, அசாத்த்தியமான விடயமன்று என்பர் அதிகமான அறிஞர்கள் இவ்விரு கருத்துக்களிலும், இரண்டாவது கருத்தே சரியானதாகும்.

பொதுவாக குணங்கள் இரு வகைப்படுகின்றன. அவை
அ. மனிதனுடைய இயல்பிலேயே குடிகொண்டுள்ள குணங்கள்.
ஆ. மனிதன் தனது முயற்சி, பழக்க வழக்கங்கள், போன்றவற்றின் அடிப்படையில் தேடி அடைந்து கொள்ளும் குணங்கள்.

மனிதனுடைய குணங்களை மாற்ற முடியாது என்றிருந்தால், வஸிய்யத்துக்கள், உபதேசங்கள், நற்குணங்களைப் போதிக்கின்ற அல்குர்ஆனிய வசனங்கள் மற்றும் நபிமொழிகள் போன்றவற்றின் பலாபலன்கள் அனைத்தும் பாழாகிவிடுமல்லவா?

மனிதன் தன்னிடம் குடிகொண்டுள்ள கெட்ட குணங்களை விட்டு விடமுடியும் என்பதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கெட்ட குணங்களை எச்சரிக்கை செய்தும், நற்குணங்களை ஆர்வமூட்டியும் உள்ளனர்.

காட்டில் வாழ்கின்ற மிருகங்களைக் கூட அவற்றின் குணங்களை மாற்றி மனிதனுடன் வாழப்பழக்க முடிகின்றது. இதற்கு வேட்டை நாய்கள், பந்தயக் குதிரைகள் போன்றவறரை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வாறு பல பயங்கரமான மிருகங்கள் அவைகளுடைய இயல்பான குணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு மனிதனுடன் சேர்ந்து வாழப்பழக்கப்பட்டுள்ளனவே!

இவை அனைத்தும் குணங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லவா?

ஐயறிவு கொடுக்கப்பட்ட மிருகங்களுடைய நிலை இதுவென்றால், ஆறறிவு வழங்கப்பட்டுள்ள மனிதன் தன்னிடம் எவ்வளவு நற்குணங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், அவற்றைத் தன்னிடம் வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். ஏனெனில், மிருகங்களை விட மனிதன் உயர்ந்த படைப்பல்லவா? 

மனிதன் தனது குணங்களை 100% மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும், குணங்களுடைய விவகாரத்தில் ஒரு நடு நிலைக்காவது தனது ஆன்மாவைக் கொண்டுவர வேண்டும். ஒரு மனிதன் தனது உள்ளத்தைப் பயிற்றுவிப்பதன் மூலமும் அதனைக் கட்டுப் படுத்துவதன் மூலமும் அந்த நல்ல நிலையை அடைய முடியும்.

மனிதனுடைய குணங்களை மாற்றிடலாம் என்பதையே அல்குர்ஆனும், நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன. அவை நற்குணங்களைத் தூண்டிக் கொண்டும், கெட்டகுணங்களை எச்சரிக்கை செய்துகொண்டும் இருக்கின்றன. குணங்களை மாற்றிக்கொள்வது அசாத்தியமானது என்றிருந்தால் அல்குர்ஆனோ, சுன்னாவோ அதனை வலியுறுத்தியிருக்கமாட்டா. அல்லாஹ் கூறுகிறான்:

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ
தூய்மையான (நற்)குணங்களைக் கொண்டவன் திட்டமாக வெற்றி பெறுகிறான். (அல் அஃலா : 14)

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا
அதை (ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். (அஷ் – ஷம்ஸ் : 9)

மனிதனுடைய குணங்களும், இயல்புகளும் மாறக் கூடியவை; நற்குணங்கள் மனிதனுக்கு வெற்றியைத் தேடித்தருபவை; ஆகவே, மனிதன் தனது குணங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளவதன் மூலமே வெற்றியடைய முடியும் என்பதை மேற்படி அல்குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி கற்பதன் மூலம் கிடைக்கும், பொறுமை, அதனைப் பேணுவதன் மூலம் கிடைக்கும். மேலும், யார் நன்மை அடைய முயற்சி செய்கின்றாறோ, அவர் நன்மை வழங்கப்படுவார், இன்னும் யார் தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ள முயற்சி செய்கினறாரோ அவர் அதிலிருந்து பாதுகாக்கப்படுவார். (அல்பானீ : அல்லஹீஹா : 342)

குணங்கள் மாறும் தான்மை கொண்டவை; பொறுமை நற்குணங்களின் தலையானது; அவ்வாறிருந்தும் கூட அதனை முயற்சி செய்தும், மனதைக்கட்டுப்படுத்தியும், பழக்கப்படுத்தியுமே மனிதன் அடைய வேண்டும்.
சிலர் கெட்டவர்களாகவும், தீய குணம் கொண்டவர்களாகவும், கடின சித்தம் உடையவர்களாகவும் இருப்பதை இன்று நாம் நிதர்சனமாகக் காண்கின்றோம்.

 இவர்களில் யாராவது தனது ஆன்மாவை நற்குணங்களுக்கு பழக்கப்படுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி, அதற்காக முயற்சி செய்தால் தனது குணங்களைத் திருத்திப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும். அவர் தனது குணங்களைத் திருத்திக் கொள்ளத் தக்க காரணிகளைக் காட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.

இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய வருகைக்கு முன்னர், ஸஹாபாக்கள் இருந்த நிலையை மிகச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். இவர்களும் ஏனைய அரபுகளைப் போலவே கடுமையான போக்கும், கடின சித்தமும், கல் நெஞ்சமும் கொண்டவர்களாகவே இருந்தனர். என்பதை நமக்கு வரலாறு சொல்கிறது.

நபி (ஸல்) அவர்களுடைய வருகையை அடுத்து அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தனர்; ஈமானின் பிரகாசம் அவர்களின் உள்ளங்களில் குடிகொண்டது; இதனால் அவர்களின் இதயங்கள் மென்மையடைந்தன; இயல்புகள் நளினமடையந்தன; குணங்கள் பரிசுத்தமாயின. எந்த அளவுக்கெனில், பின்பற்றப்படிகின்ற முன்மாதிர் மனிதர்களாகவும், பிறர் நலம் விரும்புதல், மன்னித்தல், கொடை வழங்குதல், பொறுமையைக் கையாளுதல் போன்ற நற்குணங்களில் சிறந்த வழிமுறை கொண்டவர்களாகவும் மாறினர்.

குணங்கள் மாற்றங்களுக்கு உடன்பாடானவை என்பதை அறிந்து கொண்டது போலவே தீய குணங்களை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலானவர்கள் தீயகுணங்களை அறிந்து வைத்துள்ளனர் . எனவே, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டுள்ளனர். ஆகவே, நற்குணங்களை எடுத்து நடப்பதற்கான வழிமுறைகளையும், தீய குணங்களிலிருந்த விடுபடுவதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

குணங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

Previous Post Next Post