புனித மக்கா முற்றுகை 1979

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது. ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று 1399 ஆண்டுகள் கழிந்து 1400 ஆவது வருடம் ஆரம்பித்த முஹர்ரம் முதலாவது நாள். அடுத்து காரணம் 1979 நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகை. இந்த மக்கா முற்றுகை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இஸ்லாமிய உலகை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிய இந்த முற்றுகையை முன்னின்று நடத்தியவன் பெயர்  ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் உதைபி. இவன் சவுதி அரேபியாவின் அல்கஸீம் மாகாணத்தை சேர்ந்த  செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன். இவன் தன் மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியை  வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்தான்.

சஜிர்-அல்கஸீம் பிரதேசத்தில் மிகவும் பலம்வாய்ந்த குடும்பத்தில் பிறந்த ஜுஹைமான் இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனாக இருந்தான். மேலும் இவன் சவுதி பாதுகாப்புப் படையின் முன்னாள் காப்ரல் ஆவான். மேலும் முஃப்தி அப்துல் அஸீஸ் பின் பாஸ் அவர்களின் முன்னாள் மாணவர்களில் ஒருவன்தான் இந்த ஜுஹைமான். பின்னாட்களில் முஃப்தி அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவன் இவன்தான்.

நடப்பில் இருக்கும் அரசாங்கம் குரைஷி வம்சத்தினர் இல்லை. எனவே, இந்த அரசு அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு மாற்றமானது. இவர்கள் காஃபிர்கள். நாம் இந்த அரபு உலகை அநீதியிலிருந்து விடுதலை பெறச்செய்து, நாம் ஆட்சி செய்வோம். மேலும் தனது மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியே எதிர்பார்க்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் அது பற்றி அல்லாஹ் தனக்கு கனவு மூலம் அறிவித்ததாகவும் அவன் கூறினான். சவுதி அரேபியர்கள் தவிர்ந்த எகிப்து, யேமன், குவைத் மற்றும் ஆபிரிக்காவின் கறுப்பின முஸ்லிம்களும் இவனது இந்த குழுவில் அடங்குவர்.

1979 நவம்பர் 20 அதாவது 1400 ஆவது ஹிஜ்ரி  ஆண்டின் முதல் நாள் கிட்டத்தட்ட 50000 தொழுகையாளிகளுக்கு தொழுகை நடத்த மஸ்ஜிதுல் ஹரத்தின் இமாம் முஹம்மத் அல் சுபைல் முன்வந்தார். அப்போது தொழுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் முன்வந்து மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழையும் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகள் கொண்டு பூட்டினார்கள். இந்த நேரத்தில் அவர்களுடன் போராடிய இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த 500 பேரில் சில பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய கலகக்காரர்கள் ஹரத்துக்கும் கட்டுப்பட்டு அறைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர். பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பல தொழுகையாளிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் எல்லோரும் விடுவிக்கப்படவில்லை சிலர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக ஹரத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது, மேலும் அவர்கள் மஸ்ஜிதின் மேல்மட்டங்களை தற்காப்பு நிலைகளாகவும் மினராக்களை ஸ்னைப்பர் நிலைகளாகவும் பயன்படுத்தினர்.

புனித மஸ்ஜிதுல் ஹரம் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து ஒரு சில மணித்தியாலத்திலே மஸ்ஜிதை மீட்க களத்தில் குதித்தது சவுதி அரேபியாவின் பாதுகாப்புப் படை. அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த இளவரசர் சுல்தான் அவர்களே களத்தில் படைகளை வழிநடத்தினார். அன்றைய நாள் மாலை நேரத்துக்குள் முழு மக்கா நகரிலும் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். என்றாலும் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளதால் சவுதியின் பாதுகாப்புப் படை உலமாக்களின் பாத்வாவுக்கு காத்திருந்தனர். நிலைமையை உணர்ந்த முஃப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழைய பத்வா வழங்கினார்.

உலமாக்களின் பத்வாவை பெற்றுக்கொண்ட சவுதி பாதுகாப்புப் படை பிரதான மூன்று வாயில்கள் ஊடாக முன்னணி தாக்குதலை தொடுத்தனர். சவுதி பாதுகாப்புப் படை போன்றே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் மிகவும் கடுமையாக இருந்தது. மேலும் மினராக்களில் பதுங்கியிருந்த ஸ்நைபேர் துப்பாக்கிகளின் தாக்குதல் சவுதி பாதுகாப்புப் படைக்கு பெரும் சவாலாக இருந்தது. இறுதியில் நவம்பர் 27 ஆம் திகதியாகும் போது மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதி சவுதி பாதுகாப்புப் படை வசம் வந்தது. கிளர்ச்சியாளர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ் பாதை மட்டுமே இருந்தது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகை 255 பேருக்கு மரணத்தை தேடிக்கொடுத்து முடிவுக்கு வந்தது. இதன்போது 560 பேர் காயம் அடைந்ததனர். மேலும் இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள், 117 பேர் கிளர்ச்சியாளர்கள்.

கிளர்ச்சிக் குழுவின் தலைவன் ஜுஹைமான் உட்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சவுதியின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மக்கள் மத்தியில் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

அல்லாஹ்விக்கே எல்லாப் புகழும்.
Previous Post Next Post