உலகில் இவர் ஆதரவற்றவர்தான்; ஆனாலும், அல்லாஹ்விடம் இவரோ பேராதரவுக்குரியவராவார்


       இமாம் அல் - ஆஜுரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

      “நாம் வாழும் இக்காலத்தில் (மக்களால் புறக்கணிக்கப்பட்டு) ஆதரவற்றோர்களாக இருப்பவர்களில் மோசமான ஆதரவற்றவர் யாரெனில், அவர்தான்  நபியின் வழிமுறைகளான சுன்னாக்களை எடுத்து நடந்து, அதற்காகப் பொறுமையோடு இருப்பவராவார்! மார்க்கத்தின் பெயரால் புகுத்தப்பட்ட நபிவழியல்லாத நூதன அனுஷ்டானங்களை எச்சரித்து, அதனால் ஏற்படும்  தொந்தரவுகளுக்காகப் பொறுமையோடும் இருப்பவராவார். மேலும் அவர், முன் சென்ற இஸ்லாமிய அறிஞர்களின் நடைமுறைகளைப் பின்பற்றியும் நடப்பார். அத்தோடு, தான் வாழ்ந்து வரும் காலத்தையும், தனதும் தனது குடும்பத்தாரினதும் மிக மோசமான சீர்கேட்டைப்  புரிந்துகொண்டு (தீமைகளுக்குத் துணைபோகாத வகையில்) தனது உடல் உறுப்புகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்வதன் ஊடாக தன்னைச் சீர்திருத்தும் பணியிலும் அவர்  ஈடுபடுவார். மேலும், தனக்குத் தேவையில்லாத விடயங்களில் மூழ்கிப் போவதை விட்டு விட்டு தனது உடைவைச் சீர்செய்துகொள்ளும் வேலையையே அவர் செய்துகொள்வார்.

         உலகத்திலிருந்து தனக்காக அவர் தேடிக்கொள்வது, அதில் தனக்குப் போதுமான அளவு மட்டுமாகத்தான் இருக்கும்! இதில், பாவத்திற்கும் அநீதிக்கும் தன்னைக் கொண்டு செல்லும் மேலதிக சொத்துச் சேர்ப்பை அவர் விட்டு விடுவார். மேலும், தன் காலத்தவர்களோடு மென்மையாகவும் அன்பாகவும் அவர் நடந்து கொள்வார்; அதற்காக, (தவறுகளைச் செய்துகொண்டிருக்கும்) அவர்களுடன் சேர்ந்து நடிக்கமாட்டார்; (இப்படி உறுதியுடன் அவர் வாழும்போது மக்களால் அவருக்கு ஏற்படும் இன்னல்களுக்காக) பொறுமையுடன் இருப்பார்; இவர்தான் (மக்களிடம்) ஆதரவற்றவரும் அநாதரவானவருமாவார். குடும்பத்திலிருந்தும், நண்பர்களிலிருந்தும் இவரிடம் சென்று ஆறுதல் பெறுபவர்கள் மிகக் குறைவானவர்களே! இவருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தி விடாது!”.

{ நூல்: 'அல்குரபா' லில் ஆஜுரீ, பக்கம்: 79 }


          قال الإمام الآجري رحمه الله تعالى:-

      *« أغرب الغرباء في وقتنا هذا من أخذ بالسّنن وصبر عليها، وحذّر البدع وصبر عنها، واتّبع آثار من سلف من أئمّة المسلمين، وعرف زمانه وشدّة فساده وفساد أهله فاشتغل بإصلاح شأن نفسه من حفظ جوارحه، وترك الخوض فيما لا يعنيه، وعمل في إصلاح كسرته.*

         *وكان طلبه من الدنيا ما فيه كفايته وترك الفضل الذي يطغيه، ودارى أهل زمانه ولم يداهنهم وصبر على ذلك، فهذا غريب؛ من يأنس إليه من العشيرة والإخوان قليل؛ ولا يضرّه ذلك! »*

{ كتاب الغرباء للآجري، ص - ٧٩ }

☄➖➖➖➖➖➖➖➖☄

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post